நெஞ்சின்  நினைவலைகள்

mercy

திரு VG கிருஷ்ணன் அவர்களின் இப்பதிவைப் படிப்பதற்கு முன் என் சிறு குறிப்பு:

பத்தாண்டு காலம் ஆகியும் எல்லோர் மனங்களிலும் பலர் இல்லங்களிலும் இன்னும் உலராத ஈரத் தழும்புகள். அக்கோர சம்பவத்தில் உயிர் துறந்தது இந்தியர் மட்டுமல்ல அன்று மும்பையில் இருக்க நேரிட்ட பல அயல்நாட்டவரும் கூட. தீவிர வாதம் மிகக் கடுமையாகவும் மிகக் கொடுமையாகவும் விளையாடிய நாள். இன்றுவரை தீவிரவாதத்துக்கு சரியான ஒரு மருந்தை இந்நாடும் இவ்வுலகமும் கண்டுகொள்ளவில்லை.

இருப்பினும் இத்தகைய கோர விபத்துக்களில் சம்பவ இடத்திற்கும் சம்பவ நேரத்திற்கும் மிக அருகாமையில் இருந்தும் கூட சிலர் வியக்கத்தக்க வகையில் உயிர் பிழைத்துள்ளனர். அப்படி இறைவனால் காக்கப்பட்ட பலருள் ஒருவர் இந்த நண்பர்.

நான் நேற்றுதான் ஸ்ரீ ஞானதேவர் எழுதிய ஸ்ரீமத்பகவத்கீதையின் உரையாகிய ஞானேஸ்வரி என்னும் நூலின் தமிழாக்கத்தில் இருந்து சில பகுதிகளைப் பதிவு செய்தேன். ( https://wp.me/p41QAT-1Te) அப்பதிவில் பகவான் ஸ்ரீகிருஷ்ணன் கூறுவதாவது:

அநந்ய பக்தர்களுடைய யோகக்ஷேமத்தை பகவான் வஹித்துக் கொள்ளல்
ஸர்வவிதமாயும் மனஸால் எனக்கு விற்கப்பட்டுப் போனவர்களாய், — தாயின் கர்ப்பத்திலிருக்கும் சிசு ஸ்வரக்ஷ்ணத்திற்காக, தான் ஒருவிதமான ப்ரயத்நமும் செய்யாமல், தாயையே ஆச்ரயித்துக் கிடப்பதுபோல், என்னைக் காட்டிலும் உத்தமமான வஸ்து வேறொன்றில்லை என்று நினைத்து, என்னையே ஜீவனமாகப் பாவித்து, இப்படி மனஸுக்கு வேறோர்போக்கும் அற்றவர்களாய் – எவர்கள் என்னைச் சிந்தித்துக் கொண்டிருப்பார்களோ, அவர்களை நான் உபாஸித்துக் கொண்டிருக்கிறேன். அவர்கள் எந்த க்ஷணத்தில் என்னோடு ஒன்றுபட்டு, என்னுடைய பஜநையில் இறங்குவார்களோ, அந்த க்ஷணத்திலேயே அவர்களைப் பற்றிய சிந்தை எனக்கு ஏற்பட்டுப் போகிறது. பின்பு உலக வழக்கத்தின்படி, அவர்கள் செய்ய வேண்டியதாயிருக்கும் அனைத்தும் நானே செய்யவேண்டியதாய் விடுகிறது. இரக்கை முளைக்காத குஞ்சின் உயிரிருத்தாற் றான் பிழைத்திருக்க முடியும், என்று பாவித்திருக்கும் தாய்ப் பட்சியைப்போலும், தன்னுடைய பசிதாகங்களைப் பாராட்டாமல் குழந்தைக்கு நன்மையையே தேடிவைக்கும் தாயைப் போலும், என்னை ஸர்வசக்தியையும் கொண்டு தழுவி நிற்கும் அவர்களுக்கு, ஆகவேண்டிய அனைத்தையும் நானே செய்துவைக்கிறேன். அவர்களுக்கு என்னுடன் ஒன்றுபட்டுப் போகவேண்டுமென்ற ஆசையிருந்தால், அந்த ஆசையைப் பூர்ணம் பண்ணி வைக்கிறேன். இல்லாவிட்டால், என்னோடொன்று பட்டுப் போகாமல், எனக்கு ஸேவை செய்துகொண்டிருக்க வேண்டுமென்று, அவர்களுக்காசையிருந்தால், எங்கள் இருவருக்கும் நடுவில் பரஸ்பரம் ப்ரேமையை செய்துவைக்கிறேன். இப்படி அவர்கள் மனஸில் என்னென்ன ஆசை உண்டாகுமோ, அதையெல்லாம் பூர்த்திசெய்துவைப்பது என் கடமையாகிறது. அத்துடன் கூட, அப்படி நான் செய்துகொடுத்தது ஒருநாளும் அழிந்துபோகாவண்ணம், அதைக் காப்பாற்றியும் வைக்கிறேன். இப்படி ஸர்வபாவத்தாலும் என்னையே ஆச்ரயித்திருக்கும் அவர்கள் யோகக்ஷேமம் என் தலையிலேயே சுமந்து போகிறது, அர்ஜுநா.

மேலே குறிப்பிட்ட உறுதிப்படி, இப்பதிவை எழுதிய திரு கிருஷ்ணன் அவர்களை, சாக்ஷாத் ஸ்ரீ கிருஷ்ணபகவான் “தன்னுடைய பசிதாகங்களைப் பாராட்டாமல் குழந்தைக்கு நன்மையையே தேடிவைக்கும் தாயைப் போலும், என்னை ஸர்வசக்தியையும் கொண்டு தழுவி நிற்கும் அவர்களுக்கு, ஆகவேண்டிய அனைத்தையும் நானே செய்துவைக்கிறேன்” என்று கூறி அவரின் உயிரை 26.11.2008 அன்று நிகழ்ந்த தீவிரவாதத்தின் கோரத் தாண்டவத்திலிருந்து பகவான் ஸ்ரீகிருஷ்ணர் காத்தருளி உள்ளார்.

இனி படியுங்கள் அவர் எழுதுவதை. – N Ganapathy Subramanian

***

நெஞ்சின் நினைவலைகள்

V G Krishnan

பத்தாண்டுகளுக்கு முன்

அன்று அதாவது இன்றிலிருந்து பத்தாண்டுகளுக்கு முன் இதே நாள் (26.11.2008) தீவிரவாதத்தின் கொலை வெறி ஆட்டத்தால் இந்தியாவின் நிதித்தலைநகரான மும்பை மட்டுமன்றி ஒட்டுமொத்த உலகமே பெரும் அதிர்ச்சியில் உறைந்திருந்த நாள். என் வாழ்விலும் நான் என்றென்றும் மறக்க முடியாத சம்பவம் நிகழ்ந்த நாள்.

ஆழ்வார்கள், ஆச்சார்யர்கள், பணக்காரர்கள், ஏழைகள், படித்தவர்கள், பாமரர்கள் என அனைவரின் உள்ளங்களையும் கொள்ளை கொண்ட பெருமாயனான அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல்மங்கை உறையும் திருமார்பன்** எனை பேராபத்திலிருந்து காத்தருளிய நாள்.

இந்தியன் வங்கி, நரிமன்பாயிண்ட் கிளையில் பணிபுரிந்து வந்த நான் அன்று வழக்கம் போல் அலுவலகப்பணிகள் முடிந்த பிறகு என் அலுவலக நண்பர் திரு ஸ்ரீநிவாசனுடன் CST இரயில் நிலையத்தை சென்றடைந்த பொழுது இரவு நேரம் 9.15.

ஈடற்ற மக்கள் கூட்டம் எப்பொழுதும் நிரம்பி வழியும் CST இரயில் நிலையத்தில் அன்றும் வழக்கம் போல் கூடியிருந்த மக்கள் வெள்ளத்தில் ஊடுருவி கல்யாண் இரயில் நிலையத்திற்குச் செல்லும் இரயிலருகில் சென்றடைந்த பொழுது நேரம் 9.20.

உட்காரவோ நிற்கவோ கூட இடமில்லாத அளவிற்கு நிரம்பி வழிந்த அந்த இரயிலில் ஏறி பயணிப்பதா அல்லது அடுத்த இரயிலில் செல்வதா என்பதை தீர்மானிக்க முடியாத குழப்பத்தில் நாங்கள் அங்கே மக்கள் வெள்ளத்தில் நின்று கொண்டிருந்தோம்.

ஊர்கள் பலவற்றிற்கு செல்லும் நெடுந்தூர இரயில்கள் புறப்படும் CST யின் பிரதான இரயில் நிலையத்திலும் நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் தங்கள் இரயில்களின் வருகைக்காகக் காத்துக்கொண்டிருந்தனர்.

அறியாத குரலின் உத்தரவு

என் உள்ளத்தில்

திடீரென

தெளிவான மறுக்கமுடியாத உறுதியான குரலொன்று என்னை உடனடியாக அந்த இரயிலில் ஏறும்படி உத்தரவிட்டது.

ஏற்காமல் இருக்க முடியாத அந்த உறுதியான குரலின் ஆணையின்படி நானும் நான் கூறியதால் என் நண்பரும் அம் மக்கள் கூட்டத்தில் ஊடுருவி அந்த இரயிலில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று கொண்டோம்.

ஐந்தே நிமிடங்களில் சரியாக 9.30 மணிக்கு அந்த இரயில் இரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டது.

ஒருவாறாக காட்கோபர் இரயில் நிலையத்தை அடைந்து அங்கிருந்து இந்தியன் வங்கி அலுவலர் குடியிருப்பை நான் சென்றடைந்த பொழுது நேரம் இரவு 10.15.

ஓயாமல் காலை முதல் இல்லத்து வேலைகள் அனைத்தையும் செய்து களைப்புற்றிருந்த பொழுதிலும் இன்முகத்துடன் என்னை வரவேற்று நான் களைப்பாறியபின் இனிய உணவினை அளித்தாள் என் இல்லத்தரசி.

ஒளஷதங்களுக்கெல்லாம் ஒளஷதமான எம் சிங்கப்பிரானை உளமார சேவித்து இன்றைய பொழுது நல்ல பொழுதாக அமைந்ததிற்கு நன்றி கூறி விட்டு உறங்கச் சென்ற பொழுது இரவு மணி 10.45.

அப்படி என்னதான் நடந்தது?

அடுத்த நாள் அதிகாலை எனது நண்பர் ஸ்ரீநிவாசன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடனடியாக TVயில் செய்திகளைப் பார்க்கும்படி கூறினார்.

ஆவலுடன் TV ஐ ஆன் செய்தபொழுது உலகத்தையே உலுக்கி எடுத்த கோர சம்பவத்தை ஒளிபரப்பிக் கொண்டிருந்தது.

இரவு முழுவதும் மனிதாபிமானமற்ற பாகிஸ்தான் தீவிரவாதிகள் தெற்கு மும்பையில் மக்கள் கூட்டம் நிரம்பி வழியும் பல்வேறு இடங்களில் (CST இரயில் நிலையம் உட்பட) கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தி ஏதுமறியாத நூற்றுக்கணக்கான அப்பாவி பொது மக்களை கொன்று குவித்த மிக மிக கொடூரமான வன்முறைகள் நிகழ்ந்த சுதந்திர இந்தியாவின் மிக மிக கொடூரமான கருப்பு நாள்.

இக்கொடூரங்கள் நிகழ்ந்த பெரும்பான்மையான இடங்கள் இந்தியன் வங்கி நரிமன் பாயிண்ட் கிளைக்கு மிக அருகாமையில் உள்ள இடங்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அன்று இரவு நான் கிளையிலிருந்து தாமதமாக கிளம்பி இருந்தாலும் எனக்கு அசம்பாவிதங்கள் நிகழ்ந்திருக்க வாய்ப்புகள் அதிகம். ஏனெனில் அத்தீவிரவாதிகள் அன்று இரவு பாதசாரிகள் மீதும் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்கிறார்கள். இவை அனைத்திலிருந்தும் எனைக்காத்தது ப்ரஹ்லாத வரதனான எம் சிங்கப்பிரானே என்பதில் எனக்கு துளியும் ஐயமேதுமில்லை.

ஈவு இரக்கமற்ற அக்கொடிய தீவிரவாதிகளில் இருவர் மக்களோடு மக்களாக கலந்து CST இரயில் நிலையத்தில் அப்பாவி மக்களின் மீது துப்பாக்கிச்சூட்டை நிகழ்த்த நுழைந்த நேரம் இரவு 9.30 அதாவது நாங்கள் ஏறிய இரயில் புறப்பட்ட அதே நேரம். அன்று நான் அந்த இரயிலில் ஏறாமல் இருந்திந்தால் அல்லது அந்த இரயில் அன்று சற்றே தாமதமாக கிளம்பி இருந்தால் எனக்கும் அன்று அந்த இரயிலில் பயணம் செய்தவர்களுக்கும் அசம்பாவிதங்கள் நிகழ்ந்திருக்க வாய்ப்புகள் மிக மிக அதிகம். அச்சமயத்தில் எமைக் காத்த இறைவனின் அளவிலா கருணையை உரைக்க வார்த்தைகள் ஏதுமில்லை.

உறங்கிக்கொண்டும் விழித்துக்கொண்டும் தங்கள் தங்கள் இரயில்களின் வருகைக்காக காத்துக்கொண்டிருந்த அப்பாவி மக்கள் மற்றும் குழந்தைகள் மீதும் துளிக்கூட மனித நேயமின்றி கொலைவெறித் தாக்குதல் நடத்தி நூற்றுக்கணக்கான மக்களைக் கொன்றும் படுகாயப்படுத்தியும் உள்ளது அந்த வெறிபிடித்த தீவிரவாதிகளின் தாக்குதல்.

எனைக்காத்தருளிய சிங்கப்பிரானுக்கே வந்தனம்

ஊடகங்கள் பரபரப்பாக ஒளிபரப்பிக் கொண்டிருந்த அக்கொடூர சம்பவங்களைப் பற்றிய செய்திகள் மனதை மிகவும் உருக்கியெடுத்த அதே நேரத்தில் என்னை அந்த பேராபத்திலிருந்து காத்தருளிய என் நெஞ்சில் என்றென்றும் நிறைந்திருக்கும் ப்ரஹ்லாத வரதனான என் சிங்கப்பிரானுக்கு கோடானு கோடி நன்றிகளை ஒவ்வொரு நொடிப்பொழுதிலும் கூறி அவன் திருவடித்தாமரைகளில் பணிந்து எற்றைக்கும் ஏழேழு பிறவிக்கும் அவன் திருவடிகளுக்கே பணிபுரியும் வரத்தினை தந்தருள அனுதினமும் வேண்டுகின்றேன்.

V G Krishnan

** அகல கில்லேன் இறையும் என் றலர்மேல் மங் கை யுறைமார்பா,

நிகரில் புகழாய். உலகமூன் றுடையாய். என்னை ஆள்வானே,

நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங் கடத்தானே,

புகலொன் றில்லா அடியேனுன் அடிக்கீ ழமர்ந்து புகுந்தேனே.

திவ்யப்ரபந்தம் 3559. (பத்தாம் திருமொழி)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.