ஸ்ரீ ஞானதேவரின் ஞாநேச்வரீயில் இருந்து உயிரை உருக்கும் சில வரிகள் — 2

vishwaroop

See Part -1 of this title here: https://wp.me/p41QAT-1T8

அவனே ஸகலத்திற்கும் ப்ரபு
நானே முவ்வுலகிலுமுள்ள அனைத்துக்கும் ஸ்வாமியாய், என்னுடைய ஆஞ்ஞைக்குக் கட்டுப்பட்டு ஆகாசம் எங்கும் நிரம்பி வழிகிறது, காற்று ஒரு நிமிஷம்கூட ஓரிடத்தில் வேலைசெய்யாமல் உட்கார்ந்திருப்பதில்லை. நெருப்பு தன் ஸம்பத்தத்தை அடைந்த அனைத்தையும் எரித்துக் கொண்டிருக்கிறது, ஜலம் மழையாய்ப் பெய்து கொண்டிருக்கிறது, பர்வதங்கள் தாங்கள் கிடந்திருக்கும் இடம் விட்டுப் பெயர்வதில்லை, ஸமுத்ரம் எவ்வளவு பொங்கினாலும் தன் கரையை மீறிப் புரளுவதில்லை, பூமி பூதங்களுக்கு இடம் கொடுத்துக் கொண்டு அவைகளைத் தாங்கி இருக்கிறது. நான் பேசுங்கள் என்று ஏவின மாத்ரத்தில், வேதங்கள் பேசத் தலைப் படுகின்றன, நான் ஓட்டி வைப்பதால், ஸூர்யன் ஓடுகிறான், நான் ஆட்டிவைப்பதால் ஜகத்தை எல்லாம் ஆட்டிவைக்கும் ப்ராணவாயு, மேலும் கீழுமாய் ஓடுகிறது. நான் உத்தரவு செய்த மாத்ரத்தில் யமன் பூதங்களைத் தன் வாயில் போட்டுக் கொள்கிறான். இப்படி மூவுலகிலும் உள்ள அனைத்தும், என்னுடைய அடிமை பூண்டு, தங்கள் தங்கள் வேலையைச் செய்துகொண்டிருக்கின்றன. இவ்வளவு ஸாமர்த்யமுள்ளவனாய், ஜகத்துக்கெல்லாம் நாதனாய், நான் விளங்குகிறேன்.

அவனே கேவலம் ஸாக்ஷி
அன்றியும் இத்தனை வேலை செய்தும், ஆகாசம் போல் ஸாக்ஷிபூதனாய் இருக்கிறவனும் நானே.

அவனே நிவாஸம்
நாம ரூபங்களை இடைத்தான பூதங்களுக்குள் உயிருக்குயிராயும் நானே ஆய், ஜலத்தினிடத்தில் அலைகளும், அலைகளுக்குள் ஜலமும் இருப்பது போலும், நானே உள்ளும் புறமும் பூதங்களனைத்தையும் தாங்கிக் கொண்டிருப்பதால், நானே நிவாஸஸ்தானமா யிருக்கிறேன்.

அவனே சரணம்
அநந்யபாவத்தோடு சரணமாக அடைந்தவனுக்கு ஏற்பட்ட ஜந்ம மரணம் என்னும் ஆபத்தை, நான் ஒருவனே நிவர்த்தித்து வைக்கும் திரமை உள்ளவன், என்னும் காரணத்தைக் கொண்டு, நான் ஒருவனே சரணாகதர்களுக்கு சரண்யனாகிறேன்.

அவனே ஸகல பூதங்களுக்கும் ஸுஹ்ருத்து
பூதங்களின் வேறு வேறு ப்ரக்ருதிக்குத் தக்கபடி, ஒருவனான நான், வேறுவேறு விதப்பட்டு, பூதங்கள் தோறும் அவரவர் ஜீவனாய் ஏற்பட்டு, அவர்களுக்காகவேண்டிய ஸகல வ்யாபாரங்களையும் நடத்திவைக்கிறேன். எப்படி சமுத்ரம் என்றும், சிறு உப்புக்குட்டை என்றும், வித்யாஸம் பாராட்டாமல், ஸூர்யன் நீர் அனைத்திலும் ப்ரதிபிம்பித்து ப்ரகாசிக்கிறானோ, அப்படியே நான் ப்ரஹ்மா முதலியவாய் உள்ல சகல பூதங்களிலும் நானே ஜீவனாய் ப்ரதிபிம்பித்து, அவர்களுக்கு நான் உதவி செய்வதால், அவர்களுக்கு நான் ஸுஹ்ருத்தாகிறேன்.

அவனே ஸர்வபூதங்களுக்கும் ப்ரபவம் ப்ரளயம்
இப்படி முவ்வுலகிலுள்ள அனைவருக்கும் ஜீவனாயிருப்பதோடு கூட, அவர்கள் உண்டாவதற்கும், நிலைத்திருப்பதற்கும், லயம் அடைவதற்கும் காரணமானவன் நானே.

அவனே ஜகத்துக்கு பீஜம்
விதையினின்று கிளைகளோடு கூடிய மரம் உண்டாய், பின்பு அந்த வ்ருக்ஷ உருவானது விதையில் அடங்கிப் போவது போலும், என்னுடைய ஆதி ஸங்கல்பத்தினின்று ஸர்வஜகத்தும் உண்டாய், திரும்பவும் அந்த ஆதி சங்கல்பத்தில் லயம் அடைகின்றதால், நானே பீஜம்.

அவனே ஸ்தாநம்
இப்படி ஜகத்துக்கு பீஜமாய் இருக்கும் அவ்யக்த வாசநா ரூபமான ஸங்கல்பமும், கல்ப முடிவில், என் ஸ்வரூபத்தில் லயித்துப் போவதால், நான் அனைத்திற்கும் ஸ்தாநமாகிறேன்.

அவன் அவ்யயமானவன்
என்னுடைய நிராகாரஸ்வரூபம் ஏற்படுங்கால், இப்போது காணப்படுகின்ற நாமரூபங்கள், ஜாதி பேதங்கள், வ்யக்திகள், அனைத்தும் இல்லாமற் போவதால், நான் அவ்யயமானவன்.

அவனே நிதானம்
மறுபடியும் வேறு வேறு ரூபங்களோடு கூடிய பூதங்களை ஸ்ருஷ்டித்து வைப்பதற்கு, அவச்யம் வேண்டியதான ஸம்ஸ்காரரூபவாஸநாஸக்தி அழிந்து போகாமல், அந்த நிராகார ஸ்வரூபத்தில் மறைந்து கிடப்பதால், நான் நிதானமும் ஆகிறேன்.

தாபத்தை உண்டாக்கி நீரை வற்றச் செய்கிறவன் அவனே
நானே ஸூர்யவேஷம் பூண்டு, ஜகத்தை யெல்லாம் தபித்து, அதில் இருக்கும் நீர்களை வற்றிப்போகச் செய்கிறேன்.

பின்பு மழை பெய்து நீர்களை நிரப்புகிறவனு மவனே
பின்பு இந்த்ரனாய் மழை பெய்யச் செய்து, வற்றிப் போன ஜலாசயங்களை நிரப்பி வைக்கிறவனும் நானே.

ம்ருத்யுவும் அம்ருதமும் அவனே
அக்நி கட்டைகளைச் சாப்பிட, அக்கட்டைகளே அக்நி ஆகின்றது போலும், சாகிறவனும் கொல்கிறவனும் நானே யாகையால், கொல்கின்றதாயாவது, கொல்லப் படுவதாயாவது, ம்ருத்யுவின் ஸம்பந்தம் பெற்ற அனைத்தும் நானே. அன்றியும் சாகாமல் அம்ருதமா யிருக்கும் வஸ்துவும் இயற்கையாகவே நானே.

வ்யக்தாவ்யக்தங்க ளனைத்தும் நானே
பலவிதமாய் விஸ்தரித்துச் சொல்ல வேண்டிய தனைத்தையும் ஒரே தடவையாய்ச் சொல்வேன், கேள். இந்த்ரியங்களா லறியும்படி வ்யக்தமாயிருப்பதால், இருக்கின்றவை யென்றும், இந்த்ரியங்களால் அறிய முடியாவண்ணம் அவ்யக்தமாய் மறைந்து கிடப்பதால். இல்லாதவை யென்றும் வ்யவஹரிக்கப்பட்ட வ்யக்தாவ்யக்தங்களும் நானே என்றறி.

தொடரும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.