வாழ்வின் மூன்று படித்தரங்கள்

வாழ்வின் மூன்று படித்தரங்கள்

வென்று வாழ்தல், வகுத்து வாழ்தல், வழங்கி வாழ்தல் என்று மூன்று படித்தரங்கள் உயிர்களின் வாழ்க்கையில் வாய்த்திருக்கின்றன. அவைகளுள் வென்று வாழ்தல் (competition) கடைத்தரமானது. விலங்குகளிடத்திலும் விலங்குகள் போன்ற மக்களிடத்தும் அத்தகைய வாழ்க்கை முறையைக் காணலாம். தங்களுக்குத் தருகிற மதிப்பை மற்ற உயிர்களுக்குத் தருவதில்லை. உலகில் உள்ளவைகளையும், உள்ளவர்களையும் ஏதேனும் ஒருவிதத்தில் மடக்கித் தங்கள் நலனுக்காகவும் சுகஜீவனத்துக்காகவும் பயன்படுத்துதல் அவர்களின் குறிக்கோள் ஆகும். அவரவர் வல்லமைக்கு ஏற்றவாறு பிறர்மீது ஆக்கிரமிப்பது அவர்களது இயல்பு. அதனால், துன்பமே அதிகரிக்கிறது. போராட்டம் நிறைந்ததாகிறது பூவுலக வாழ்வு. அதை வனத்தின் வாழ்க்கைமுறை எனலாம்.

அதைவிடப் பன்மடங்கு மேலேயிருப்பது வகுத்து வாழுதல் (co-operation) என்னும் வாழ்க்கைமுறை. இதுவே சமுதாய வாழ்வு எனப்படுகிறது. பொது நன்மைக்குத் தனி நன்மை இடம் கொடுத்தாக வேண்டும். அதை மீறி நடப்பவன்மீது நடவடிக்கை எடுக்கப் படுகிறது. முறையான கட்டுமானத்தின் மூலம் நலன் நிறுவப்பெறுகிறது. நாகரிகம் நிறைந்த சமுதாயங்களில் ஒழுங்குப்பாடு ஓங்கியுள்ளது. அன்புடனும் ஆதரவுடனும் மக்களின் சமுதாய வாழ்வு இனிது நிறைவேறுகிறது. விதி வகுத்துள்ள வாழ்வின் விளைவு இதுவாம். பூவுலக வாழ்வு ஒருவாறு சுகவாழ்வாக இங்ஙனம் வகுக்கப்பட்டிருக்கிறது.

இனி இதனினும் இன்பம் நிறைந்த இனிய வாழ்க்கைமுறை ஒன்று உளது. அது வழங்குதலை (self-dedication)  அடிப்படையாகக் கொண்ட்து. யார் ஒருவன் தனக்காகவென்று பொருளை ஏற்பதைவிட அதிகமாக மற்றவர்களுக்காக வென்று அதை வழங்குகின்றானோ அவன் வேள்வி வேட்கின்றான்.

மனிதனிடத்து மட்டுமல்லாது மற்ற உயிர்களிடத்தும் இச்சீரிய கோட்பாடு மிளிர்கிறது. ஸ்தாவர உலகில் வாழையும் தென்னையும் தாம் ஏற்பதைவிட அதிகமாக உலகுக்குப் பயன்படுகின்றன. ஆகையால் அவைகளின் வாழ்வு வேள்விமயமானது. விலங்குகளுள் பசுவானது தான் ஏற்பதையெல்லாம் மக்களுக்குப் பயன்படுபவைகளாக மாற்றித் தருகிறது. அதன் வாழ்வு முழுதும் யக்ஞமயம். ஆதலால் அது தெய்விகப் பிண்டமாகவும், கோமாதாவாகவும் பாராட்டப்படுகிறது. மக்களுள் மேலோர் மன்னுயிர் நலனுக்கென்றே வாழ்ந்திருக்கின்றனர். அவர்கள் புரியும் ஆருயிர்ச்சேவையே ஆண்டவன் சேவையாகிறது. நரர்களைப் பேணுதலே  நாராயண வழிபாடு ஆகிறது. ஜீவர்களை உய்விப்பதே சிவபூஜையாகிறது. தமக்கென வாழாது பிறர்க்கென வாழ்பவர்களே யக்ஞமூர்த்திகளாகின்றனர். அவர்களின் எண்ணிக்கை அதிகரிக்குமளவு உலகம் நன்மை பெறுகிறது.

வேதத்தில் வேள்வியானது பலப்பல வடிவெடுத்திருக்கிறது.

  • மனிதனது உடல் வாழ்க்கையை உறுதிப்படுத்துவதற்கான உபாயத்தை நல்கினால் அது வேள்வியாகிறது.
  • நேர்மையான வழிகளில் மனிதனை நல்ல உழைப்பாளியாக்கினால் அது வேள்வியாகிறது.
  • ஈட்டிய செல்வத்தை நல்லார் எல்லார்க்கும் பயன்படும்படி செய்தால் அது வேள்வியாகிறது.
  • உணவைப் பக்குவப்படுத்தி, தெய்வத்தின் பெயரால் அதைப் பலரோடு பங்கிட்டுக் கொள்ளும்போது அது வேள்வியாகிறது.
  • கல்வியையும் நல்லறிவையும் ஞானத்தையும் பொதுவுடைமை ஆக்கும்போது அது வேள்வியாகிறது.
  • தெய்வவழிபாட்டில் மக்களை ஈடுபடுத்துவது வேள்வியாகிறது.

ஹோமாக்கினி அல்லது வேள்வித்தீ ஒரு வெறும் சின்னமாம். அதில் சொரியும் பொருள் உருமாறிப் பயன்படுகிறது. அதேபோன்று வாழ்வாங்கு வாழ்தல் வாயிலாக தன்னைத் தெய்வத்துக்கு ஒப்படைப்பானாகில், அவன் வேட்கும் வேள்வி முற்றுப் பெறுகிறது.

*****

  • சுவாமி சித்பவானந்தர், தனது  “திருவாசகம்” விளக்க நூலின் முகவுரையில்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.