முற்போக்கு அல்ல;பிற்போக்கு! – சா. பன்னீர்செல்வம், (தினமணி, 26.Oct.2018)

முற்போக்கு அல்ல;பிற்போக்கு!

By சா. பன்னீர்செல்வம் | Published on : 26th October 2018 01:47 AM | தினமணி

மனித இனத்தின் மாறுதல்களைப் பலவாறாகப் பட்டியலிடலாம். விலங்கு, பறவை போல ஒலியெழுப்பியவன், தமிழென்றும் ஆங்கிலமென்றும் ஆயிரமாயிரம் மொழி பேசுகிறான். சூரிய ஒளி கண்டு வியந்தவன், சூரியனுக்குச் சோதிடம் கூறுகிறான். இருளைக் கண்டஞ்சியவன், இருளை ஒளிமயமாக்குகிறான். இயற்கையில் கிடைத்தவற்றைப் பச்சையாக உண்டவன், பீட்சாவைக் கூசாமல் வாய்பிளந்து சாப்பிடுகிறான். மலைக்குகைகளில் பதுங்கியவன், வானத்திலும் வீடு கட்டுகிறான். காலால் நடந்து காடு மேடு சுற்றியவன், வான் வெளியில் வலம் வருகிறான். நோயுற்றால் மயங்கி விழுந்தவன் கருப்பையிலிருக்கும் சிசுவுக்கும் அறுவைச் சிகிச்சை செய்கிறான்.

இவையெல்லாவற்றுக்கும் மேலான இரண்டு மாறுதல் பண்புகளே மனித உயிரினத்தின் உயர்வுக்கு அடிப்படையாகின்றன. ஒன்று, மற்ற உயிரினங்களைப் போல உணர்வு உந்தும்போது எதிர்ப்படும் எதிர்ப்பாலுடன் உறவாடி விலகியவன், தாயென்றும் தங்கையென்றும் விலகியுறவாடி, அவ்வுறவின் விளைவுக்கு – அதாவது, பிறக்கும் பிள்ளைக்குப் பொறுப்பேற்றல். மற்றொன்று, ஏனைய உயிரினங்களைப் போல அம்மணமாகத் திரிந்தவன், பருவநிலைக்கேற்ப ஆடையுடுத்துதல். ஆடையென்பது நாட்டுக்கு நாடு வேறுபடலாம். ஆனால், ஆடையென்ற ஒன்றை அரைகுறையாகவாவது உடுத்துதல் கட்டாயமாகிறது. அவ்வாறே ஆண்-பெண் உறவாடலில், மாமன் மகளை மணத்தல், சிற்றப்பன் மகளை மணத்தல் என உறவு முறைகள் வேறுபடலாம். ஆனாலும், ஒவ்வொரு கூட்டத்திலும் இன்னின்னார்தாம் உறவாடலாம் எனும் கட்டுப்பாடு உண்டு. அத்தகைய கட்டுப்பாடில்லாத கூட்டத்தை நாகரிகமற்ற காட்டுமிராண்டிக் கூட்டமென்று கூறுகிறோம்.

ஆக, குறிப்பிட்ட வரையறைப்படி ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்தலும், பிறக்கும் பிள்ளைகளுக்கு இருவரும் பொறுப்பாதலுமான குடும்பம் என்பதே, மனிதக் கூட்டம் ஒரு சமூகமாக இணைந்து வாழவும், பொருள் உற்பத்தி – அறிவியல் தொழில் நுட்ப வளர்ச்சி எனச் செயற்படவுமான அடித்தளக் கட்டமைப்பாகிறது. விலங்குகள், பறவைகளில் திருமணம், குடும்பம் என்பதில்லை. விரும்புகிற ஆணும் பெண்ணும் உறவாடுகின்றன. அத்துடன் ஆண் ஒதுங்கிக் கொள்கிறது. பிறக்கின்ற பிள்ளைக்கு பெண் மட்டுமே பொறுப்பாகிறது. அதுவும் கொஞ்ச நாள்களுக்குத்தான்.

திருமணம் என்பதன் வழியாகவும், திருமணம் என்பதில்லாமலும் ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழலாம். இருவரும் அவரவர் விருப்பம் போல் உறவாடலாம். அதுவே ஆண்-பெண் சமத்துவம், தனிமனித சுதந்திரம் என்றால் பிறக்கின்ற பிள்ளைக்கு யார் பொறுப்பு? யாருக்கோ பிறக்கும் பிள்ளைக்கு கணவனானவன், அல்லது சேர்ந்து வாழ்பவன் பொறுப்பாக வேண்டுமெனல் என்ன நியாயம்?

சிக்கலின் அடிப்படை இதில்தான் அடங்கியிருக்கிறது? பிறக்கின்ற பிள்ளைக்குச் சேர்ந்து வாழும் ஆண் – பெண் மட்டும் பொறுப்பாகத் தேவையில்லை. பிறக்கும் பிள்ளைகள் அனைவரும் சமூகத்தின் ஒட்டு மொத்தப் பொறுப்பாக வேண்டும். அதுதான் முற்போக்கு எனலாம். அதற்குக் குறிப்பிட்ட ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழத் தேவையில்லையே? விலங்கு, பறவை போல உணர்வு உந்தும்போது சேர்ந்து இன்புற்று அத்துடன் பிரிந்து விடலாமே. எந்தப் பிள்ளை யாருக்குப் பிறந்தது? என்பது தெரியாமல் அனைத்துப் பிள்ளைகளும் சமூகப் பொறுப்பாவதால் கணவன், மனைவி குடும்பம் என்பதில்லாத சமூகம் உருவாகிவிடும்.

இங்கே இரண்டு கேள்விகள் எழுகின்றன. முதலாவது, காடுகளிலும், மலைப் பகுதியிலும் விலங்குகள் கூட்டம் கூட்டமாகத் திரிகின்றன. விரும்புகிற ஆணும் பெண்ணும் உறவாடுகின்றன. பிறக்கும் குட்டிகள் மந்தையோடு சேர்ந்து கொள்கின்றன. மனிதக் கூட்டமும் அவ்வாறானால் ஆறறிவு படைத்த மனிதக் கூட்டத்திற்கும் மாட்டு மந்தைக்கும் என்ன வேறுபாடு? இரண்டாவது, அப்போதும் பிள்ளை பெறும் தொல்லை பெண்ணுக்கு மட்டுமாவதால் ஆணுக்குப் பெண் நிகராதல் எப்படி?

பிள்ளை பெறும் தொல்லையிலிருந்து விடுபட்டுப் பெண்கள் ஆண்களுக்கு நிகராக ஒரு வழியிருக்கிறது. தற்போது, சோதனைக் குழாய்க் குழந்தை என்பது இரண்டுவார அளவில் மட்டுமே நடைபெறுகிறது. அதனை குழந்தை முழுவளர்ச்சி பெறும் வரையும் நீட்டிக்கலாம். அதற்கேற்றவாறு சோதனைக் குழாய் என்பதைச் செயற்கைக் கருப்பை என விரிவாக்கலாம். அதே சமயம் குழந்தை முழு வளர்ச்சியடைவதற்கான கால அளவையும் குறைக்கலாம்.

அப்படியாகிவிட்டால் குழந்தை வேண்டும் கணவன் மனைவியர் குழந்தையுற்பத்தியகம் சென்று தங்களின் உயிரணுவையும் கருமுட்டையையும் கொடுத்து குறிப்பிட்ட நாள்களுக்குப் பின்னர், குழந்தையுற்பத்தியகத்திற்குச் சென்று தங்களுக்கான குழந்தையைப் பெற்றுக் கொள்ளலாம். இதன் வழியாகப் பத்து மாதம் சுமந்து பிள்ளை பெறும் தொல்லையிலிருந்து விடுபட்டு ஆணுக்குப் பெண் நிகர் என்பது முழுமையாகிவிடும். இதன்வழி, கணவன், மனைவி, குடும்பம் என்னும் அமைப்பு நீடிக்கும்.

இது போதாது, கணவன், மனைவி, குடும்பம் என்னும் அமைப்பில்லாத பொதுமைச் சமூகமாகவும் அமைய வேண்டுமெனக் கருதினால், கணவன்-மனைவி என்பதில்லாமல், ஆண்களும், பெண்களும் குழந்தையுற்பத்தியகத்திற்குச் சென்று தங்களின் உயிரணுக்களையும், கருமுட்டைகளையும் கொடுத்து விட்டுவர, யாருடைய உயிரணுவும், யாருடைய கருமுட்டையும் இணைக்கப்படுகின்றன எனக் கண்டுபிடிக்க முடியாத நடைமுறையைப் பின்பற்றினால் உற்பத்தியாகும் குழந்தைகள் சமூகத்தின் பொதுச்சொத்தாகிவிடும். அதன்வழி, கணவன், மனைவி, குடும்பம் என்பதில்லாத பொதுமைச் சமூகம், பிள்ளை பெறும் தொல்லையிலிருந்து பெண்ணுக்கு விடுதலை இரண்டும் சாத்தியமாகிவிடும்.

ஆக, ஆண்-பெண் சமத்துவத்திற்கு மூன்று வழிமுறைகள் இருக்கின்றன. முதலாவது, கணவன்-மனைவி, குடும்பம் என்பதல்லாது ஆணும் பெண்ணும் விருப்பம் போல் உறவாடலாம். பிறக்கும் குழந்தைகள் சமூகத்தின் பொதுச்சொத்து என்றாக்கலாம். இரண்டாவது, கணவன், மனைவி, குடும்பம் எனும் அமைப்பு இருக்கட்டும். ஆனாலும், கணவனும் மனைவியும் மாற்றாருடன் உறவாடுதல் குற்றமல்ல என்றாக்குதல், மூன்றாவது, கணவன்-மனைவி என்னும் குடும்ப அமைப்பில் கணவனும் மனைவியும் மாற்றாருடன் உறவாடுதலைக் குற்றச் செயலாக்குதல். இவற்றில் முதல் இரண்டும் ஆண்-பெண் சமத்துவத்துடன் மனித இனத்தை விலங்கினத்துடன் சமத்துவப்படுத்துவன. மூன்றாவது வழிமுறை, ஆண் பெண் சமத்துவத்துடன் மனித இனத்தை விலங்கினத்திலிருந்து வேறுபடுத்தி மேலுயர்த்துவது. இவற்றில் எது முற்போக்கு? எது பிற்போக்கு?

மணவாழ்க்கை தோல்வியடைந்ததன் விளைவாகவே முறையற்ற உறவு ஏற்படுகிறதாகையால் முறையற்ற உறவு குற்றச் செயலாகாது என்பது வாதமாகிறது. குடும்ப வாழ்வில் பாலியல் தவிர வேறெந்த வகையிலும் கணவனுக்கு மனைவி மீதிலும், மனைவிக்குக் கணவன் மீதிலும் மனக்குறை ஏற்படுவதில்லையா? பாலியல் என்பது உயிரியற்கையாதலால் அதனில் கட்டுப்பாடு அவசியமல்ல என்றால், கணவன், மனைவி, குடும்பம் என்பது எதற்கு? பிள்ளை பெறுதலுக்கு, கணவன் – மனைவி என்னும் குடும்ப அமைப்பு தேவையில்லையே? குடும்பம் என்னும் அமைப்பு இல்லையானால் மாட்டு மந்தைக்கும் மனிதக் கூட்டத்திற்கும் என்னதான் வேறுபாடு?
இன்னொன்று, பாலியல் மட்டுமா உயிரியற்கை? அம்மணமாகத் திரிதலும் உயிரியற்கையாதலால், அம்மணமாகத் திரிதல் முறையற்ற செயலென்றாலும் குற்றச் செயலாகாது என அறிவிப்பார்களா? பாலியல் கட்டுப்பாடின்றி, கோட்டும் சூட்டும் குட்டைப் பாவாடையும் அணிதல் மட்டும் மனிதத் தன்மையாகாது. ஆடையணிதல், பாலியல் கட்டுப்பாடு இரண்டில் எந்த ஒன்றில்லையானாலும் மனிதன் விலங்கினின்று வேறுபட்டவனாக மாட்டான்.

இந்தியக் குற்றவியல் சட்டம் 497-ஆவது பிரிவு மாற்றான் மனைவியுடன் அவன் சம்மதமின்றி பாலியல் உறவு கொள்ளும் ஆணுக்கு மட்டுமே தண்டனை வழங்கியது. இன்னொருத்தியின் கணவனுடன் அவளின் சம்மதமின்றி உறவாடும் பெண்ணுக்குத் தண்டனையில்லை. தற்போது, அந்தப் பிரிவு நீக்கப்பட்டதன் வழியாக, மணமான ஆணும், பெண்ணும் யாருடனும் உறவாடலாம் எனச் சம உரிமை வழங்கப்பட்டிருக்கிறது.

இது மனிதத் தன்மையை மறுப்பதாகாதா என்னும் வினாவுக்கு விடையாக, வேறு பல நாடுகளில் முறைகேடாகும் பாலியல் உறவு குற்றச் செயலாவதில்லை. நாமும் அதைப் பின்பற்றுதலே முற்போக்கு என்கிறார்கள்.

சமூக ஒழுங்கு முறைகளில், உலக வழக்குகளில் எது சரியானது – எது தவறானது என்பதை நமது சுய அறிவு கொண்டு தேர்ந்து தெளிவதே மனிதனுக்கு மட்டுமாகும் ஆறாவதறிவுக்கு அடையாளமாகும். ஆக, எப்படிப் பார்த்தாலும், கணவன், மனைவி குடும்பம் என்னும் அமைப்பு குற்றச் செயலாகாதவரை, கணவன்- மனைவி இருவரின் பாலியல் முறைகேடு குற்றச் செயலாகாது எனக் கூறல், மனித இனத்தை விலங்கினத்தொடு சமநிலைப்படுத்தி மனித இனத்தை பின்னோக்கி கொண்டு செல்லும் பிற்போக்கு ஆவதன்றி மனித வாழ்வை விலங்கின வாழ்விலிருந்து மேலுயர்த்தும் முற்போக்கு ஆகாது என்பது உறுதியினும் உறுதியாகும்.

 

Courtesy: தினமணி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.