சுருக்க அநுட்டானவிதி – ஆறுமுகநாவலரவர்கள்

கணபதி துணை.

சுருக்க அநுட்டானவிதி

யாழ்ப்பாணத்து நல்லூர்

ஆறுமுகநாவலரவர்கள்

செய்தது.

இது

மேற்படியார் மருகரும்மாணாக்கரும்,

வித்துவசிரோமணியுமாகிய

ந. ச. பொன்னம்பலபிள்ளையவர்கள்

மாணாக்கர்

சுவாமிநாதபண்டிதரால்

சென்னபட்டணம்

தமது

சைவவித்தியாநுபாலனயந்திரசாலையில்

அச்சிற்பதிப்பிக்கப்பட்டது.

பிலவங்க௵ கார்த்திகை௴

1907

நித்தியகருமவிதி

 

சைவ சமய மரபிலே பிறந்தவர் எல்லாரும், எழாம் வயசிலாவது, ஒன்பதாம் வயசிலாவது, சமயதீக்ஷை பெற்று,அநுட்டானஞ் செவ்வையாகப் பழகிக்கொண்டு மரணபரியந்தம் விடாது செய்க.

நாடோறுஞ் சூரியோதயத்துக்கு முன்னே நித்திரை விட்டெழுந்து கிழக்கு முகமாகவேனும் வடக்குமுகமாவேனும் இருந்து,சிவ சிவ என்று நெற்றியில் விபூதி தரித்து, “ஓம் கணபதயே நம:” என்று குட்டி, “ஓம் குருப்பியோ நம:”  என்று  கும்பிட்டு,சிவபெருமானை இருதயத்திலே தியானித்து ஒரு தோத்திரமாவது  சொல்லிக்கொள்க.

அதன்பின் எழுந்து புறத்தேபோய், மலசலமோசனஞ் செய்து, செளசம்பண்ணி, தந்தசுத்தி செய்து, முகங்கழுவிநெற்றியில் விபூதி இட்டுக்கொள்க.

நீர்நிலையை அடைந்து ஸ்நானஞ் செய்து, ஈரத்துவட்டி, நெற்றியில் விபூதி இட்டு உலர்ந்த சுத்தவஸ்திரந்தரித்துக்கொள்க.

அநுட்டானபாத்திரத்தை வெள்ளையிட்டு, அலம்பி, சுத்தசலம் பூரித்து, சுத்தபூமியிலே சிறிது சலம் விட்டு, அதன்மேற்பாத்திரத்தை வைத்து, கிழக்குமுகமாகவேனும் வடக்குமுகமாகவேனும் இருந்து, விபூதி இட்டுக்கொண்டு அநுட்டானம்பண்ணுக.

வியாதியினாலே ஸ்நானஞ்செய்யமாட்டாதவர், கால் கழுவி, ஈரவஸ்திரத்தினால் உடம்பெங்குந் துடைத்து, உலர்ந்தசுத்தவஸ்திரத்தினால் ஈரந்துவட்டி, நெற்றியில் விபூதி இட்டு, வேறு உலர்ந்த சுத்தவஸ்திரந்தரித்து, ஆசமனஞ்செய்துகொண்டு அநுட்டானம் பண்ணுக. அதுவுஞ் செய்யமாட்டாதவர், நெற்றியில் விபூதி இட்டு, சிவபெருமானைத்தியானித்து, சிவமூலமந்திரத்தை மனசிலே சிந்தித்துக்கொண்டு கிடக்க.

வீட்டுக்கு விலக்காயுள்ள பெண்கள், மூன்று நாளுஞ் சிவமூலமந்திரத்தை மனசிலே சிந்தித்துக்கொண்டு, நான்காநாள்ஸ்நானஞ் செய்து அநுட்டானம் பண்ணுக.

மூலமந்திரம்

                சிவமூலமந்திரம்   ——————————————   நமசிவாய.

தேவிமூலமந்திரம்  —————————————–    உமாதேவயை நம:

விக்கினேசுரமூலமந்திரம் ——————————    கணபதயே நம:

சுப்பிரமணியமூலமந்திரம் —————————–    சரவணபவாய நம:

சூரியமூலமந்திரம்  —————————————–    சிவசூர்யாய நம:

 

பதினொருமந்திரம்

      ஓம் ஈசாநாய நம:

ஓம் தற்புருஷாய நம:

ஓம் அகோராய நம:                         இந்த ஐந்தும் பிரம மந்திரம்.

ஓம் வாமதேவாய நம:

ஓம் சத்தியோசாதாய நம:

ஓம் இருதயாய நம:

ஓம் சிரசே நம:

ஓம் சிகாயை நம:                          இந்த ஆறும் அங்க மந்திரம்

ஓம் கவசாய நம:

ஓம் நேத்திரேப்பியோ நம:

ஓம் அஸ்திராய நம:

 

ஆசமன மந்திரம்.

 

ஓம் ஆத்தும தத்துவாய சுவதா.

ஓம் வித்தியா தத்துவாய சுவதா.

ஓம் சிவ தத்துவாய சுவதா.

 

கலாமந்திரம்

 

ஓம் நிவிர்த்தி கலாயை நம:

ஓம் பிரதிஷ்டா கலாயை நம:

ஓம் வித்தியா கலாயை நம:

ஓம் சாந்தி கலாயை நம:

ஓம் சாந்தி யதீத கலாயை நம:

 

பூமிசுத்தி.

ஓம் அஸ்திராயபடு என்று தானிருக்கும் பூமியைச் சலத்துளியினாலே தெளிக்க.

கணபதி குரு வந்தனம்.

ஓம் கணபதயே நம: என்று குட்டி,

ஓம் குருப்பியோ நம: என்று கும்பிடுக.

சலசுத்தி.

அநுட்டான சலத்தை, –

ஓம் நமசிவாய என்று, வலக்கைச் சுட்டுவிரல் நடுவிரல்களை உள்ளே மடக்கிப் பெருவிரலுக்கும் அணிவிரலுக்கும்நடுவாக, நிரீக்ஷணமும்,

ஓம் அஸ்திராய படு என்று சுட்டுவிரனீட்டியகையினாலே தாடனமும்,

ஓம் கவசாயவெளஷடு என்று கவிழ்ந்த பதாகை முத்திரையையுடையகைத்தலத்தினாலே அப்பியுக்ஷணமும்,வலக்கைப் பெருவிரலொழிந்த விரல்களினால் இடவுள்ளங்கையிலே,

ஓம் அஸ்திராய படு என்று மூன்றுதரந் தட்டுதலாகிய தாளத்திரயமும்,

ஓம் அஸ்திராய படு என்று சோடிகைமுத்திரையினாலே திக்குப்பந்தனமும்,

ஓம் கவசாயவெளஷடு என்று சுட்டுவிரல் நீட்டிய கையினாலே அவகுண்டனமுஞ் செய்து,

ஓம் சிவாயவெளஷடு என்று தேனு முத்திரை கொடுக்க.

ஆசமனம்.

ஓம் ஆத்தும தத்துவாய சுவதா,

ஓம் வித்தியா தத்துவாய சுவதா,

ஓம் சிவ தத்துவாய சுவதா.

 

என்று, பெருவிரலடியிற் சார்ந்த உழுந்தமிழ்ந்து சலத்தினால், ஆசமனஞ் செய்து,

ஓம் அஸ்திராய படு என்று அதரங்களிரண்டையும் பெருவிரலடிகொண்டு இடமாக இரண்டுதரமும், உள்ளங்கைகொண்டு கீழாக ஒருதரமுந் துடைத்துக்கைகழுவி,

ஓம் இருதயா வெளஷடு என்று பெருவிரலோடு கூடிய அணிவிரலினாலே, முகம், வலமூக்கு, இடமூக்கு, வலக்கண்,இடக்கண், வலக்காது, இடக்காது, கொப்பூழ், மார்பு, வலத்தோள், இடத்தோள், சிரசு என்னும் இப்பன்னிரண்டிடங்களையுந்தொட்டுவிடுக.

விபூதிசுத்தி

விபூதியை வலக்கைப் பெருவிரல் நடுவிரல் அணிவிரல்களால் எடுத்து, இடக்கையில் வைத்துக்கொண்டு,

ஓம் அஸ்திராய படு என்று விபூதியிலே சலத்தைத் தெளித்து, அவ்விபூதியில் ஒரு சிறுபங்கைப் பெருவிரல்அணிவிரல்களினாலே தொட்டு,

ஓம் அஸ்திராய படு என்று, இராக்ஷதர் பொருட்டு நிருதிமூலையிலே தெறித்து,

ஓம் சிவாய நம: என்று நிரிக்ஷணமும்,

ஓம் அஸ்திராய படு என்று புரோக்ஷணமும்,

ஓம் அஸ்திராய படு என்று தாடனமும்,

ஓம் கவசாயவெளஷடு என்று அப்பியுக்ஷணமுஞ் செய்து, விபூதியை வலக்கையால் மூடிக்கொண்டு,

ஓம் ஈசாநாய நம என்பது முதலிய பதினொருமந்திரத்தாலும் அபிமந்திரிக்க.

விபூதி ஸ்நானம்.

வலக்கையின் பெருவிரலணிவிரல்களால் விபூதித் தூளியை எடுத்து,

ஓம் அஸ்திராய படு என்று தலைதொடங்கிக் காலளவும் பூசி, இடக்கையில் உள்ள விபூதியைப் பெருவிரலோடு கூடிய நடுவிரலினாலே,

ஓம் இருதாய நம: என்று சலம் விட்டு,

ஓம் கவசாய வெளஷடு என்று குழைத்து, நடுவிரன்மூன்றினாலும்,

ஓம் ஈசாநாய நம: என்று சிரசில் மூன்று தரமும்,

ஓம் தற்புருஷாய நம: என்று நெற்றியில் மூன்று தரமும்,

ஓம் அகோராய நம: என்று மார்பில் மூன்றுதரமும்,

ஓம் வாமதேவாய நம: என்று கொப்பூழில் ஒரு தரமும்,

ஓம் சத்தியோசாதாய நம: என்று வலமுழந்தாள், இடமுழந்தாள், வலப்புயம், இடப்புயம், வலமுழங்கை, இடமுழங்கை, வலமணிக்கட்டு, இடமணிக்கட்டு, வலவிலா, இடவிலா, முதுகு, கழுத்து என்னும் மற்றையிடங்களில் ஒவ்வொருதரமுந் திரிபுண்டரமாகத் தரிக்க.

நெற்றியிலும் மார்பிலும் புயங்களிலும் அவ்வாறங்குலநீளமும், மற்றையிடங்களில் ஒவ்வோரங்குலநீளமும் பொருந்தத் தரித்தல் வேண்டும். முக்குறிகளின் இடைவெளி ஒவ்வோரங்குல வளவினதாய் இருத்தல் வேண்டும்.

மந்திரஸ்நானம்.

எஞ்சிய விபூதியோடு கைநிறையைச் சலம்விட்டு, கும்பகமுத்திரையாகப் பிடித்துக்கொண்டு,

ஓம் ஈசாநாய நம: என்பது முதலிய ஐந்துமந்திரத்தை உச்சரித்துச் சிரசிலே புரோக்ஷித்துவிட்டுக் கைகழுவுக.

ஆசமனம்.

ஓம் சிரசே நம: என்று அணிவிரல்களிலும்,

ஓம் சிகாயை நம: என்று நடுவிரல்களிலும்,

ஓம் கவசாய நம: என்று சுட்டுவிரல்களிலும் நியசித்து உள்ளங்கைகளிலே,

ஓம் நேத்திரேப்பியோ நம: என்று மடக்கிய சுட்டுவிரல் நடுவிரல் அணிவிரல்களாகிய நடுவிரல்கள் மூன்றினாலும் நியசித்து,

ஓம் அஸ்திராய படு என்று, சுட்டுவிரல்களினாலே பெருவிரல்களிலே நியசித்து,

ஓம் கவசாய வெளஷடு என்று கைகளை அவகுண்டனஞ் செய்து,

ஓம் சிவாய வெளஷடு என்று இரண்டுகைகளியுங் கூட்டிக் குவிக்க [இது கரநியாசம்]

ஓம் இருதாய நம: என்று வலக்கைப்பெருவிரலோடு கூடிய சிறுவிரலினாலே இருதயத்திலும்,

ஓம் சிரசே நம: என்று பெருவிரலோடு கூடிய அணிவிரலினாலே தலையிலும்,

ஓம் சிகாயை நம: என்று பெருவிரலோடு கூடிய நடுவிரலினாலே குடுமியிலும் நியசித்து,

பிராணாயாமம்.

வலக்கையிற் சுட்டுவிரலையும் நடுவிரலையும் உள்ளே மடக்கி, பெருவிரலினால் வலமூக்கைப் பிடித்துக் கொண்டு ஒருதரமும், பெருவிரலணிவிரல்களினால் வல இட மூக்குக்களைப் பிடித்துக்கொண்டு ஒருதரமும், அணிவிரலினால் இடமூக்கைப் பிடித்துக்கொண்டு ஒருதரமுமாக,

ஓம் ஈசாநாய நம: என்பது முதலிய பதினொரு மந்திரத்தை மூன்றுதரம் உச்சரித்து,

ஓம் நமசிவாய என்று வலக்காதைப் பொத்துக.

வலமூக்கைப் பிடித்துக்கொள்ளும்பொழுது புறத்தேயுள்ள சுத்தவாயுவை இடமூக்கினாலே வாங்கி உள்ளே நிரப்புக; [இது பூரகம்] இரண்டு மூக்கையும் பிடித்துக்கொள்ளும் பொழுது உள்ளே உள்ள வாயுவை அங்கே நிறுத்துக; [இது கும்பகம்] இடமூக்கைப் பிடித்துக்கொள்ளும் பொழுது உள்ளேயுள்ள அசுத்தவாயுவை வலமூக்கினாலே புறத்தே கழிக்க. [இது இரேசகம்].

சிவதீர்த்தகரணம்.

ஓம் இருதயாய வெளஷடு என்று புருவநடுவில் உள்ள அமிர்தத்தை நுதிவளைந்த சுட்டுவிரலினால் எடுத்துச் சலத்தினிடத்தே வைத்து,

ஓம் நமசிவாய என்று அபிமந்திரித்து,

ஓம் அஸ்திராய படு என்று திக்குப்பந்தனமும்,

ஓம் கவசாய வெளஷடு என்று அவகுண்டனமுஞ் செய்க.

மந்திராபிஷேகம்.

வலக்கையினாற் சலத்தை அள்ளி இடக்கையில் விட்டுக் கும்பகமுத்திரையாகப் பிடித்துக்கொண்டு,

ஓம் ஈசாநாய நம: என்பது முதலிய பதினொரு மந்திரத்தை உச்சரித்துச் சிரசிலே புரோக்ஷிக்க.

மார்ச்சனம்.

சலத்தை வலக்கையால் மூடி,

ஓம் ஈசாநாய நம: என்பது முதலிய பதினொரு மந்திரத்தினால் அபிமந்திரித்து, வலக்கையினாலே சலத்தை எடுத்து, இடக்கையில் விட்டுவைத்துக் கொண்டு, அவ்விடக்கையினின்றுங் கீழே ஒழுகுகின்ற சலத்தை வலக்கையினாலே,

ஓம் ஈசாநாய வெளஷடு என்பது முதலிய பதினொரு மந்திரத்தினாலே சிரசின் மேலே தெளித்துவிடுக.

அகமர்ஷணம்.

எஞ்சிய சலத்தை இடக்கையினின்றும் வலக்கையில் விட்டு, மூக்குக்குச் சமீபத்திலே பிடித்துக்கொண்டு, அந்தச் சலம் வெண்ணிறமுடைய தருமவடிவமாகி இடமூக்கினாலே உள்ளே புகுந்து அங்குள்ள பாவத்தை அழித்ததாகவும், அந்தப்பாவம் மைக்குழம்பு போல வலமூக்கினாலே புறத்தே நீங்கிக் கையில் வந்ததாகவும் பாவித்து, வலக்காற் பெருவிரலிற் சுவாலிக்கும் அக்கினியிலே,

ஓம் அஸ்திராய உம் படு என்று புருவமுரிப்புடனே விட்டு, அந்தப்பாவஞ் சாம்ரானதாகப் பாவித்து,

ஓம் அஸ்திராய படு என்று கை கழுவுக.

ஆசமனம்.

முன்போல் ஆசமனஞ் செய்க.

கவசவேஷ்டனம்.

ஓம் கவசாய வெளஷடு என்று வலக்கையிற் சலத்தினாலே தன்னை வலமாகச் சுற்றுக.

தருப்பணம்.

இரண்டு கையுநிறைந்த சலத்தினாலே,

ஓம் நமசிவாய என்று மூன்றுதரந் தருப்பணஞ் செய்து,

ஓம் நமசிவாய என்று பத்துத்தரஞ் செபித்து,

ஓம் நமசிவாய என்று மீட்டும் ஒருதரந் தருப்பணஞ் செய்து,

ஓம் ஈசாநாய சுவாகா என்பது முதலிய பதினொருமந்திரத்தினால் ஒவ்வொருதரந் தருப்பணஞ் செய்து,

ஓம் உமாதேவ்யை சுவாகா என்றும்,

ஓம் கணபதயே சுவாகா என்றும்,

ஓம் சரவணபவாய சுவாகா என்றும் ஒவ்வொருதரந் தருப்பணஞ் செய்க.

ஆசமனம்.

முன்போல ஆசமனஞ் செய்க.

தீர்த்தோபசங்காரம்.

முன்னே சலத்தில் வைத்த அமிர்தத்தை,

ஓம் இருதாய வெளஷடு என்று, சங்காரமுத்திரையினால் (நுதிவளைந்த சுட்டுவிரலினால்) எடுத்துப் புருவநடுவிலே ஒடுக்கிவிடுக.

சூரியோபஸ்தானம்.

இரண்டுகையுநிறையச் சலம்விட்டுப் பிடித்துக்கொண்டு,

ஓம் ஈசாநாய நம: என்பது முதலிய பதினொருமந்திரத்தை உச்சரித்து,

ஓம் சிவாய சுவாகா என்று ஆதித்தியமூர்த்தியின் நடுவிலிருக்கும் பரசிவனிடத்தே கொடுத்து,

ஓம் சிவசூரியாய சுவாகா என்று ஒருதரந்தருப்பணஞ் செய்துவிடுக.

செபவிதி.

ஓம் அஸ்திராய படு என்று, தான் இருக்கும் பூமியைச் சலத்தினாலே புரோக்ஷித்து,

வடக்குமுகமாக ஆசனத்திருந்து, முன்போலக் குட்டிக் கும்பிட்டு, பிராணாயாமஞ் செய்து, சிவபெருமானுடைய உருவத்திருமேனியாகிய உருத்திர வடிவத்தைத் தியானிக்க.

 

உருத்திரத்தியானம்.

மைக்களமு மான்மழுவும் வரதமுட னபயமுறும்

மெய்க்கரமு நாற்புயமும் விளங்குபணிக் கொடும்பூணுஞ்

செக்கருறு மதிச்சடையுஞ் சேயிழையோர் பாகமுமாய்

முக்கணிறை யாங்காண முன்னின்றே யருள் புரிந்தான்.

இப்படித் தியானித்துக்கொண்டு, சிவமூலமந்திரத்தை நுற்றெட்டுத்தரமும், தேவிமூலமந்திரம் கணபதி மூலமந்திரம்சுப்பிரமணிய மூலமந்திரம் என்னும் இவைகளைத் தனித்தனியே பத்துத்தரமுஞ் செபித்து, பின்பு முன்போலக் குட்டிக்கும்பிட்டுப் பிராணாயாமஞ் செய்து தோத்திரம் பண்ணுக.

சிவஸ்தோத்திரம்.

முடிகொண்ட மத்தமு முக்கண்ணி னோக்கு முறுவலிப்புந்

துடிகொண்ட கையுந் துதைந்தவெண் ணீறுஞ் சுரிகுழலாள்

படிகொண்ட பாகமும் பாய்புலித் தோலுமென் பாவிநெஞ்சிற

குடிகொண்ட வாதில்லை யம்பலக் கூத்தன் குரைகழலே.

 

கடையவ னேனைக் கருணையி னாற்கலந் தாண்டுகொண்ட

விடையவ னேவிட் டிடுதிகண் டாய்விறல் வேங்கையின்றேல்

உடையவ னேமன்னு முத்தர கோசமங் கைக்கரசே

சடையவனே தளர்ந்தேனெம்பிரானென்னைத் தாங்கிக்கொள்ளே.

 

வேதநா யகனே போற்றி விண்னவர் தலைவா போற்றி

மாதொரு பாகா போற்றி மறுசம யங்கண் மாளப்

பேதகஞ் செய்வாய் போற்றி பிஞ்ஞகா போற்றி யான்செய்

பாதக மனைத்துந் தீர்க்கும் பராபரா போற்றி போற்றி.

 

சீராருஞ் சதுர்மறையுந் தில்லைவா ழந்தணரும்

பாராரும் புலிமுனியும் பதஞ்சலியுந் தொழுதேத்த

வாராருங் கடல்புடைசூழ் வையமெலா மீடேற

ஏராரு மணிமன்று ளெடுத்ததிரு வடிபோற்றி.

 

தேவி ஸ்தோத்திரம்.

 

பரந்தெழுந்த சமண்முதலாம் பரசமய விருணீங்கச்

சிரந்தழுவு சைவநெறித் திருநீற்றி னொளிவிளங்க

அரந்தைகெடப் புகலியர்கோ னமுதுசெயத் திருமுலைப்பால்

சுரந்தளித்த சிவகாம சுந்தரிபூங் கழல்போற்றி.

 

விநாயக ஸ்தோத்திரம்.

 

திருவுங் கல்வியுஞ் சீருந் தழைக்கவுங்

கருணை பூக்கவுந் தீமையைக் காய்க்கவும்

பருவ மாய்நம துள்ளம் பழுக்கவும்

பெருகு மாழத்துப் பிள்ளையைப் பேணுவாம்.

 

சுப்பிரமணிய ஸ்தோத்திரம்.

 

மூவிரு முகங்கள் போற்றி முகம்பொழி கருணை போற்றி

ஏவருந் துதிக்க நின்ற விராறுதோள் போற்றி காஞ்சி

மாவடி வைகுஞ் செவ்வேண் மலரடி போற்றி யன்னான்

சேவலு மயிலும் போற்றி திருக்கைவேல் போற்றி போற்றி.

 

சமயகுர்வர் நால்வர் தோத்திரம்.

 

பூழியர்கோன் வெப்பொழித்த புகலியர்கோன் கழல்போற்றி

ஆழிமிசைக் கன்மிதப்பி லணைந்தபிரா னடிபோற்றி

வாழிதிரு நாவலூர் வன்றொண்டர் பதம்போற்றி

ஊழிமலி திருவாத வூரர்திருத் தாள் போற்றி.

 

அறுபத்துமூவர் தோத்திரம்.

 

தத்து மூதெயின் மூன்றுந் தழலெழ

முத்து மூரன் முகிழ்த்த நிராமய

சித்து மூர்த்திதன் றானிணை சேரறு

பத்து மூவர் பதமலர் போற்றுவாம்.

 

இப்படித் தோத்திரம் பண்ணிய பின்பு எழுந்து,

ஓம் இந்திராய நம: என்று கிழக்கிலும்,

ஓம் அக்நயே நம: என்று தென்கிழக்கிலும்,

ஓம் யமாய நம: என்று தெற்கிலும்,

ஓம் நிருதயே நம என்று தென்மேற்கிலும்,

ஓம் வருணாய நம: என்று மேற்கிலும்,

ஓம் வாயவே நம: என்று வடமேற்கிலும்,

ஓம் குபேராய நம: என்று வடக்கிலும்,

ஓம் ஈசாநாய நம: என்று வடகிழக்கிலுங் கும்பிட்டு,

ஓம் பார்வதீசமேதபரமேசுவராய நம: என்று, வடக்கு நோக்கி மூன்றுதரஞ் சாட்டாங்கமாக நம்ஸ்கரித்து எழுந்துஆசமணஞ் செய்து,

ஓம் அஸ்திராய படு என்று இருக்குமிடத்தைச் சலத்தினாற்றெளித்து, அதனைத் தொட்டுக் கண்ணில் ஒற்றிக் கொண்டுசலத்தைத் தூரத்திலே கால்படாவிடத்தில் விட்டுவிடுக.

அநுட்டானவிதி

முற்றிற்று.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.