தமிழ் அறிஞர் ம.லெ.தங்கப்பா: உள்ளத்தின் உண்மை ஒளி

M.L. Thangappa

ங்க இலக்கியங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த தமிழ் அறிஞர்களுள் முக்கியமானவர் ம.லெ.தங்கப்பா. இவர், திருவருட்பா, முத்தொள்ளாயிரம், பாரதியார், பாரதிதாசன் பாடல்களைப் பரவலான வாசகர்களுக்குக் கொண்டுசேர்த்தவர். இருமுறை சாகித்ய அகாடமி விருது பெற்ற இவர், ஈழத்தமிழர் படுகொலையைக் கண்டித்து அறிக்கையிட்டு கோவையில் நடந்த உலக செம்மொழி மாநாட்டைப் புறக்கணித்தார். சிறுவர் இலக்கியம், இயற்கை மீதான பற்று என, பல தளங்களில் கடைசிவரை செயல்பட்ட தங்கப்பா, எதற்காகவும் தன்னை சமரசம் செய்துகொள்ளவில்லை. “தமிழ்ப்புலவர்கள் என்று சொல்லப்படுபவர்கள்கூட ஏதேனும் ஒரு நோக்கம் கருதி மொழியையும் இலக்கியத்தையும் பயில்பவர்களாக இருக்கிறார்களே தவிர, குளத்தில் குதித்து நீந்தும் சிறுபிள்ளைகளின் மகிழ்ச்சியோடு தமிழ் இலக்கியத்தில் முங்கித் திளைப்பவராக இல்லை” எனச் சொன்ன தங்கப்பா தன் இறுதி மூச்சுவரை சிறுபிள்ளையின் மகிழ்ச்சியோடு இலக்கியப் பணியாற்றினார். கடந்த வாரம் தன் 84-வது வயதில் இயற்கை எய்திய தங்கப்பா, தமிழ் ஆர்வலர்களுக்கு ஆகச்சிறந்த முன்னோடி.

(ஆனந்தவிகடன்)

=================================================================

ம .லெ.தங்கப்பா நேர்காணல்

.
தங்கப்பா தெளிதமிழ்வாணர். தனித் தமிழில் தமிழுலகுக்கு படைப்புகளைத் தந்த பாவாணர். பெருஞ்சித்திரனாருக்குப் பின் அத்தடத்தில் பயணிக்கும் இவரது சங்க இலக்கியப் பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புக்கு அகில இந்திய அளவில்

மொழியாக்கத்துக்கான சாகித்ய அகாதமி விருது கிடைத்துள்ளது. “கர்ஸ்ங் ள்ற்ஹய்க்ள் ஆப்ர்ய்ங்’ எனும் இந்நூலினை லண்டன் பெங்குவின் நிறுவனம் செம்பதிப்பாக வெளியிட்டுள்ளது.

படைப்பு மற்றும் மொழிபெயர்ப்புத் துறையில் தனித்துவத்துடன் திகழும் அவரது நேர்காணல் இதோ.

இந்திய அளவில் மொழியாக்கத்துக்கான விருது பெற்றதை எப்படி உணர்கிறீர்கள்?

இச்செய்தியைக் கேட்க என் நண்பர் கோவேந்தன் இல்லையே என்றுதான் உணர்கிறேன். ஏனெனில் அவர்தாம் இதில் என்னிலும் பன்மடங்கு மகிழ்ச்சி அடைவார். என்னைப் பொறுத்தவரை எதையும் வாழ்வியல் பார்வையோடு பார்ப்பவன் ஆதலால், ஒன்று கிடைத்தமைக்கு மகிழ்வதும் கிடைக்காமைக்கு வருந்துவதும் என் இயல்பில் இல்லை. ஆயினும் ஒரு சரியான மதிப்பீடு என்பது மனதுக்கு நிறைவு தருகின்றது. காய்தல், உவத்தல் அற்ற மதிப்பீட்டுக்கு நன்றியுணர்வு கொள்ளாமல் என்னால் இருக்க முடியாது. இதன் வாயிலாக, இந்த நூல் வழி, தமிழிலக்கியம் மேலும் பலர் கவனத்தை ஈர்க்க வாய்ப்புக் கிடைத்திருக்கின்றது. குடத்து விளக்காக இருந்த என்னை வெளியே கொண்டுவந்திருப்பது இவ்விருதின் செயலாகும்.

மொழிபெயர்ப்பில் உங்களுக்குத் தூண்டுகோலாயிருந்தவர் யார்- எவர்?

ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்க்க யாரும் எனக்குத் தூண்டுகோலாக இருந்ததில்லை. ஆர்வத்தால் நானே மேற்கொண்டேன். தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கத் தூண்டுகோலாயிருந்தவர்களுள் ஒருவர் என் உழுவலன்பர் பாவலர் த. கோவேந்தன் ஆவார்.

ஆங்கிலத்தில் நானே சொந்தமாகப் பாடல் எழுதத் தொடங்கியிருந்த காலம். 1957-ல் கோவேந்தனை வேலூரில், அவர் நடத்தி வந்த “வானம்பாடி’ பாட்டிதழ் தொடர்பாக நான் சென்று கண்டபொழுது “தமிழ்ப் பாடல்களை ஆங்கிலத்தில் பெயர்க்க முடியுமா?’ என்று வினவினார். “இதுவரை செய்ததில்லை. ஆயினும் செய்யலாம். முடியும்’ என்றேன். “வானம்பாடி’ இதழுக்கு பாரதிதாசன் பாடல்கள், சங்க இலக்கியப் பாடல்களை மொழிபெயர்த்து விடுக்க வேண்டினார்.

அதுவே தொடக்கம். பின்பு சங்க இலக்கியப் பாடல்கள் சிலவற்றை மொழிபெயர்த்து நூலாக வெளிக்கொணர வேண்டும் என்றார். முந்தைய மொழிபெயர்ப்பு நூல்கள் பலவற்றைக் கொடுத்து உதவினார். அவர்தம் தூண்டுதலால் வெளிவந்ததேLove stands Alone, Red Lilies and Frightened Birds என்ற என் முதல் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல்.

அந்நூலை அதோடு விட்டுவிடாமல் செம்மைப்படுத்தியும் மேலும் பல பாடல்களைச் சேர்த்தும் வெளியிடத் தூண்டுகோலாக இருந்தவர் கோவேந்தன் வாயிலாக எனக்கு அறிமுகமாகிய ஆ.இரா. வேங்கடாசலபதி அவர்கள். அவரின் இடையறாத் தூண்டுதல் இல்லையென்றால் கர்ஸ்ங் ள்ற்ஹய்க்ள் ஆப்ர்ய்ங், தங்க் கண்ப்ண்ங்ள் ஹய்க் எழ்ண்ஞ்ட்ற்ங்ய்ங்க் இண்ழ்க்ள் ஆகிய இரு நூல்களும் பெங்குவின் பதிப்பகத்தை எட்டியே பார்த்திருக்க முடியாது.

தென்மொழி இதழில் என் ஆங்கில மொழிபெயர்ப்புகள் வெளிவரத் தூண்டுகோலாயிருந்தவர் பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆவார். அதனால் தென்மொழியிலும் என் ஆங்கில மொழிபெயர்ப்புகள் வெளிவந்தன.

முதன்முதலில் உங்களால் மொழியாக்கம் செய்யப்பட்ட கவிதைநூல் எது? அது குறித்து உங்கள் அனுபவம்?

முதன்முதலில் ஆங்கிலத்திலிருந்து என்னால் தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட பாடல், ஆங்கிலத்தில் மத்தேயு ஆர்னால்டு என்பர் எழுதிய “கைவிடப்பட்ட கடல் மகன்’ (The forsaken Merman)
என்பதாகும். கல்லூரியில் பாடமாக இருந்த பாடல். அதன் அழகு என்னை ஈர்த்ததால் அதனை மொழிபெயர்த்தேன். முதலில் அது விளையாட்டாகவே மேற்கொள்ளப்பட்டது. வகுப்பறையில் தூக்கம் வந்தபொழுதெல்லாம் அதனைத் தவிர்ப்பதற்காக அவ்வப்பொழுது சிறுசிறு பகுதியாக அதனை மொழிபெயர்த்தேன். ஆயினும் அது நல்ல, சுவையான பட்டறிவு. ஆங்கிலப் பாடல்களையும் உணர்வு குன்றாமல் தமிழில் பெயர்க்க முடியும் என்ற நம்பிக்கையை அது கொடுத்தது. கல்லூரி ஆண்டு மலரில் வெளிவந்தது. ஆசிரியர்கள் பாராட்டைப் பெற்றது. அதன்படி இப்பொழுது என்னிடம் இல்லை. பேணிவைக்கத் தவறினேன்.

ஒவ்வொரு படைப்பாளியும் ஒரு கவிஞனாகவே அறிமுகமாகிறான். தங்கள் முதல் கவிதை அனுபவம் பற்றிச் சொல்லுங்கள்

மிக இளமைப் பருவத்திலேயே கம்பராமாயணம், வில்லிபாரதம், தனிப்பாடல் திரட்டு முதலிய நூல்களை என் தந்தையார் எனக்குக் கற்றுக்கொடுத்திருந்தமையால் பாட்டெழுதற்குரிய ஓசையும் பாட்டுணர்வும் என்னுள் நன்கு பதிந்திருந்தன. பின்பு கல்லூரியில் சேர்ந்த தொடக்கத்தில் பாரதிதாசன் பாடல்களும் பாட்டெழுதத் தூண்டுகோலாயின. முதலில் எழுதிய பாட்டு நினைவில் இல்லை. ஆயினும் தொடக்ககாலப் பாடல்கள் பழைய சுவடிகளில் உள்ளன. சாதி மறுப்பு, குமுகாயச் சீர்த்திருத்தம், தமிழுணர்வு முதலியன என் பாடுபொருளாயின. பாடல் எழுதத் தொடங்கிய காலத்தில் அது மகிழ்ச்சிக்குரிய செயலாக இருந்தது. ஒரு நல்ல பாட்டை எழுதி, வாயால் படிக்கையில் கிடைக்கும் இன்பம் புத்துணர்ச்சி ஊட்டுவதாகும்.

த. கோவேந்தனின் “வானம்பாடிசிற்றிதழ் மூலம் கவிதை, மொழிபெயர்ப்பு என பயணித்த அனுபவம் பற்றிச் செல்லுங்கள்?

கோவேந்தனின் வானம்பாடியே முதன்முதலில் என் பாடல்களைத் தொடர்ந்து வெளியிட்டது. மொழிபெயர்ப்புப் பாடல்களும் அதில் வெளிவந்தன. வானம்பாடியின் வாயிலாகத்தான் கோவேந்தன் எனக்கு நண்பரானார். தென்மொழி ஆசிரியர் பெருஞ்சித்திர னார் (அப்பொழுது துரை. மாணிக்கம்) தொடர்பும் வானம்பாடியின் வாயிலாகத்தான் ஏற்பட்டது. தமிழிலக்கிய உலகிற்குள் என் நுழைவு வானம் பாடியின் வாயிலாகவே என்றால் அது மிகையாகாது.

தனித்தமிழில் எழுத்துப் பயணம் தொடரக் காரணமாயிருந்தவர் யார்

துரை. மாணிக்கம் என்ற பெருஞ்சித்திரனாரே அதற்குக் காரணம் எனலாம். வானம்பாடியின் வாயிலாக அவரோடு தொடர்பு கொண்டிருந்த கோவேந்தன் எனக்கெழுதிய மடல் ஒன்றில் புதுவை சென்று துரை மாணிக்கத்தைக் கண்டதாகவும் தனித்தமிழில் அவர் இதழ் ஒன்று தொடங்கப் போவதாகவும், எங்கள் ஒத்துழைப்பை அவர் வேண்டியதாகவும் எழுதியிருந்தார். பின்பு கோவேந்தனும் நானும் அவரைக் காண புதுவை சென்றிருந்தோம்.

அப்பொழுது அவர் தனித்தமிழ் இதழ்பற்றி பேசினார். அவ்விதழ் தொடங்குமானால் அதற்கு நான் பாடல்களும் மொழிபெயர்ப்பும் விடுக்கவேண்டும் என வேண்டிக் கொண்டார்.

ஏற்கெனவே எனக்குத் தனித் தமிழில் ஈடுபாடிருந்தது. மிகமிகக் குறைவான வடசொற்களே என் நடையில் காணப் பட்டன. முழுக்க முழுக்கத் தனித்தமிழ் எழுதியது “தென்மொழி’யில் எழுதத் தொடங்கிய பின்புதான்.

தனித்தமிழில் பாடல், கட்டுரை போன்றவற்றை எழுதலாம். சிறுகதை, புதினம் இயலுமா? அதில் சிறப்புப் பெற்றவர் என யாரைக் குறிப்பிடலாம்?

தனித்தமிழில் சிறுகதை, புதினம் எழுத இயலும். ஆர்வத்தோடு முயலவேண்டும். அவ்வளவுதான். சிலவகையான கதைகள் எழுதவியலாதிருக்கலாம். ஒட்டுமொத்தமாக எழுதவே இயலாது என்று கூறுவதற்கில்லை. திண்டிவனம் புலவர், பாவலர், (மறைந்த) தி.நா. அறிவுஒளி பாடல்களோடு நிறைய சிறுகதைகளும் புதினமும் தனித்தமிழில் எழுதி வெற்றிபெற்றுள்ளார். இன்னும் சிலர் “தென்மொழி’ யிலும், புதுவையிலிருந்து வரும் “தெளிதமிழ்’, “வெல்லும் தூயதமிழ்’ ஆகிய இதழ்களிலும், தனித் தமிழில் சிறுகதை எழுதுகின்றனர். வெல்லும் தூயதமிழ் ஆசிரியர் முனைவர். தமிழ் மாலன் தனித் தமிழில் நிறைய கதை எழுதியுள்ளார்.

தனித்தமிழ் முயற்சி பயிற்சி சாத்தியப்படுமே தவிர படைப்பாக்கத்துக்குச் சாத்தியப்படாதுஎன்ற கருத்து குறித்து என்ன சொல்கிறீர்கள்?

படைப்பிலக்கியத்துக்கு தனித்தமிழ் இயலாது என்ற கருத்தை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். எழுதத் தேவையா? என்பது வேறு; எழுத முடியுமா? என்பது வேறு. முயன்றால் தனித்தமிழில் சிறந்த சிறுகதை, புதினங்கள் எழுதமுடியும். அவை படைப்பிலக்கியமாகவும் திகழமுடியும். சிறந்த படைப் பிலக்கியவாணர் தனித்தமிழில் தங்கள் படைப்புகளை வழங்க முயலவில்லை. அவ்வளவுதான்.

ஐரோப்பிய மொழிகள் பல தங்கள் தனித்தன்மை யோடு இயங்குபவையே ஆகும். அவற்றில் சிறந்த படைப்பிலக்கியங்கள் படைக்கப்படவில்லையா? சமற்கிருதத்தை அம்மொழிவாணர் தூய, தனிமொழி என்றுதானே கூறுகின்றனர். சமற்கிருதத்தில் படைப்பிலக்கியங்கள் இல்லையா? ஒருமொழியின் இயல்பு நிலை அதன் தனித்தன்மைதானே.

தனித்தமிழ் வளர்ச்சியின் பின்னடை வுக்குக் காரணமாய் இருப்பது எது? யார்? எவர்? இதனை முன்னெடுத்துச்செல்ல என்ன செய்ய வேண்டும்?

தனித்தமிழ் வளர்ச்சியில் எந்தப் பின்னடைவும் ஏற்படவில்லை. அதை முன்னெடுத்துச் செல்பவரின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. அவ்வளவுதான். எழுத்தாளர் என்பவர் வெறும் இலக்கியப் படைப்போடு தங்கள் வேலை முடிந்தது என்று நினைக்காமல் தங்கள் மொழியின், இன்றைய நிலை என்ன? அதனை அதன் சொந்த அடையாளம் அழிந்துவிடாமல் காக்கவேண்டிய தேவை என்ன? என்றும் நினைக்கவேண்டும். தனித்தமிழ் என்பது வெறும் மொழித்தூய்மைக் கொள்கையன்று. அது ஒரு மொழிக்காப்பு வேலி எனலாம்.

தமிழ்மொழி தேவை கருதி பிறமொழிச் சொற் களைக் கடன் கொள்ளவில்லை. கடன்கொள்ளத் தேவையில்லாத அளவுக்கு வளம் மிக்கது. தமிழில் தமிழரல்லாதவரால் வேண்டுமென்றே தமிழல்லாச் சொற்கள் புகுத்தப்பட்டன. இது வரலாற்று உண்மை. தமிழைச் சமற்கிருத மயமாக்குவதற்கான மிகப்பெரிய முயற்சி தமிழகத்தில் நடந்தது. தமிழின் சொந்தஅடையாளத்தை அழித்து, அதற்குச் சமற்கிருத அடையாளத்தைக் கொடுத்துவிட வேண்டும் என்ற கடுமுயற்சி அது. தனித்தமிழியக்கம் தோன்றாதிருக்குமாயின் இன்று தமிழ் தன் சொந்த அடையாளத்தையும் அழகையும் இழந்து மிகக் கடுமையான சமற்கிருதக் கலப்புடையதாய் மாறியிருக்கும்.

இன்றைக்கும் நூற்றுக்கு நூறு தனித்தமிழை மக்களிடம் எடுத்துச் செல்லத் தேவையில்லை. மிகமிக மடத்தனமான, அருவருக்கத்தக்க ஆங்கிலமொழிச் சொற்கலப்பைத் தமிழிலிருந்து அகற்றியே தீரவேண்டும்.

சமற்கிருதச் சொற்களைப் பொறுத்தவரை புதிதாக எவையும் உள் நுழையப் போவதில்லை. அதேபொழுது ஏற்கெனவே புகுத்தப்பட்ட, கலந்துவிட்ட சொற்களுள் தமிழ் மரபோடும், ஒலிப்பு முறையோடும் மாறுபடாமல் தமிழ்த்தன்மை அடைந்துவிட்ட சொற்களை ஒதுக்கத் தேவையுமில்லை. அழகிய தமிழ்ச்சொல்லை வழக்கிழக்கச் செய்யும் சமற்கிருத ஒலியோடு கூடிய சொற்களே ஒழித்துக்கட்டப்பட வேண்டியவை. தமிழ் எழுத்தாளர்களிடம் மொழியுணர்வு, மொழிக்காப்புணர்வு இல்லை. அவர்கள் படைப்பிலக்கியம் படைப் பதோடு, தமிழக அரசியல், பொருளியல் பண்பாட்டு வாழ்விலும் கவனம் செலுத்தி இவற்றிலெல்லாம் தமிழ்மக்கள் மிகக் கடுமையாகச் சுரண்டப்படுவதைத் தவிர்க்க வேண்டுமென்றால் மொழியணர்வு- மொழி உரிமை உணர்வு மிகமிகத் தேவை என அவர்கள் உணர்தல் வேண்டும். தன் சொந்தத் தாய்மொழியை முதன்மையாகக் கொள்ளாத ஓரினம் ஒருநாளும் உருப்படப் போவதில்லை.

சங்க இலக்கியம் முதல் பாரதி, பாரதிதாசன் என பாடல்களை மொழிபெயர்த்திருக்கிறீர்கள். தற்கால கவிஞர்களின் பாடல்களை மொழிபெயர்த்திருக்கிறீர்களா? இல்லையென்றால் ஏன் அம்முயற்சியில் ஈடுபடவில்லை

அடிப்படையில் நான் ஒரு மொழிபெயர்ப்பாளன் அல்லேன். ஏன், எழுத்தாளர் என்றுகூட என்னைக் கூறிக்கொள்ளமாட்டேன். நான் வாழ்வாங்கு வாழ்தலை முதன்மையாகக் கொண்டவன். அத்தகைய வாழ்க்கையை, வாழ்வு நெறியை எடுத்துரைப்பதை என் இரண்டாம் வேலையாகக் கொண்டவன்.

பாரதிதாசனுக்குப் பிறகு வாணிதாசன் பாடல்களையும் தமிழ் ஒளியின் பாடல்களையும், புதுவைச் சிவம் பாடல்களையும் ஆங்கிலமொழி பெயர்ப்பில் புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது. வாணிதாசன், தமிழ் ஒளி பாடல்கள் சிலவற்றை அந்நூலுக்காக நான் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துக் கொடுத்திருக்கிறேன்.

என் முன்னாள் மாணவன் பாவண்ணனின் சிறுகதைகள் ஒன்றிரண்டை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்திருக்கிறேன். எந்த எழுத்து வேலைகளும் என்னைப் பொறுத்தவரை என் வாழ்வியக்கத்தில் அவை இரண்டாம் நிலையினவே. ஒன்றை ஏன் மொழிபெயர்த்தேன் என்றோ ஏன் மொழிபெயர்க்கவில்லை என்றோ உள்ளார்ந்த காரணம் எதுவும் கூற முடியாது.

இக்கால படைப்புலகம் எப்படி இருக்கிறது? எத்திசையில் முன் செல்லவேண்டும்?

பல வேலைகளுக்கிடையே இக்கால படைப்புலகம் பற்றிக் கருத்து தெரிவிக்குமளவுக்கு அதில் நான் ஆழ்ந்து ஈடுபட்டதில்லை. ஆனால் அவ்வப்பொழுது நல்ல கதைகளைப் படித்திருக்கிறேன். நல்ல எழுத்தாளர்கள் நிறைய இருக்கின்றனர் என்றே கூறுவேன்.

ஒன்றை மட்டும் உறுதியாகக் கூறுவேன். பெறுதல் அன்று; கொடுத்தலே வாழ்க்கை. எழுத்தென்பது ஒரு கொடுத்தல். ஒரு தவம். எழுத்தாளன் உலகுக்கு, மக்களுக்குப் பயன் விளைப்பவனாகத் தன்னை உருவாக்கிக் கொள்ளல் வேண்டும். திறமையைக் காட்டினால் மட்டும் அது எழுத்தாகாது.

வாழ்தலின் மலர்ச்சியே இலக்கியம். இலக்கியத்துக்குத் தனி இருப்பு இல்லை.

அவ்வாறு தனி இருப்புக் கொடுத்தால் அது போலியாகி விடும். உலகில் பிறந்த ஒவ்வொருவனும் தன்னலமற்றஅன்புடையவனாக, மாந்த நேயமுடையவனாக இருந்தே தீரவேண்டும். இந்த இருத்தலின் பல்வேறுபட்ட வெளிப்பாடுகளே எல்லா வாழ்க்கைச் செயல்களுமாகும். அன்பினின்று பிறவாத எந்தச் செயலும் செயல் ஆகாது. அது செயற்போலி. எனவே நான் இளம் எழுத்தாளர்களுக்குச் சொல்வது இதுதான். முதலில் அன்புடைய, மாந்தநேயமிக்க மாந்தராயிருங்கள். அந்த அன்பிலிருந்து, மாந்த நேயத்திலிருந்து உங்கள் எழுத்துகள் பிறக்கட்டும். அப்பொழுதுதான் நீங்கள் உண்மை எழுத்தாளர் ஆவீர்கள். மாந்தநேயத்தை எழுத்தில் காட்டி சொந்த வாழ்வில் மாந்த நேயமற்றவராயிருப்போமானால் அது எவ்வளவு பெரிய முரண்பாடு.

இன்றைய கல்வியில் ஆங்கிலமும் சரியாகத் கற்றுத் தரப்படவில்லை. தமிழும் முழுமையாக கற்றுத் தருவதில்லை. இந்தப் போக்கு மாற வழி என்ன?

மக்கள் நலத்தில் அக்கறை உடையவர்கள் ஆட்சிப் பொறுப்பையும் கல்விப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டாலன்றி ஒன்றும் செய்ய இயலாது. அரசியலும், கல்வியும் முழுக்க முழுக்கத் தன்னலவாணர் கையில் மாட்டிக் கொண்டுள்ளன. தமிழகப் பெரும் பிழையான ஆங்கில வழிக்கல்வி, கொள்ளையடிக்கும் தனியார் கல்வி நிலையங்களால் மிக மிகப் பெரியதொரு வாணிகமாக நடத்தப்படுகின்றது. அரசினரும் ஆங்கிலப் பயிற்றுமொழிக்கே ஆதரவாக இருக்கின்றனர். இது ஒரு கூட்டுவாணிகம்.

ஆங்கிலம் ஒரு மொழியாக நமக்குத் தேவை என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அது பயிற்றுமொழியாக இருத்தல் கூடாது. மொழிக்கும் பயிற்றுமொழிக்கும் உள்ள வேறுபாடு யாருக்குமே தெரியவில்லை.

தமிழ் மக்களுக்குச் சரியான கல்வி வழங்க வேண்டுமென்றால், தமிழ்நாட்டில் தமிழ் மட்டுமே பயிற்றுமொழியாக வைக்கப்படல் வேண்டும். ஆங்கிலம் சிறப்பு மொழியாகக் கற்பிக்கப்பட வேண்டும்.

பயிற்றுமொழி நிலையிலிருந்து ஆங்கிலம் நீங்கிவிட்டால் கல்வி இயல்பு நிலை அடைந்துவிடும். தமிழும் தமிழிலக்கியமும் மதிக்கப்படும் நிலை ஏற்படும். அதன் விளைவாய்த் தமிழ்க்கல்வி செழுமைப்படும்.

தமிழரையும் தமிழர் பண்பாட்டையும் வியாபாரிகள் கையிலெடுப்பதால் இந்தச் சீரழிவு ஏற்பட்டதா? இது குறித்துதங்கள் கருத்து என்ன?

தமிழையும் தமிழ்ப் பண்பாட்டையும் எந்த வாணிகரும் கையில் எடுத்துக்கொள்ளவில்லையே, மாறாகக் கல்வி வாணிகர் ஆங்கிலத்தைக் கையில் எடுத்துக்கொண்டிருப்பதால்தான் இந்தச் சீரழிவு ஏற்பட்டுள்ளது. தமிழுக்கு முதன்மை வழங்கி, இரண்டாம் நிலையில் ஆங்கிலத்தை வைத்திருந்தால் எந்தப் பிழையும் நேராது.

மொழி என்ற அளவில் ஆங்கிலத்தின் சிறப்பை விட்டுவிட்டு, அதனைப் பயிற்றுமொழியாக்கி ஆங்கிலமே உயர்வு என்ற மாயையை மக்கள் உள்ளத்தில் ஏற்படுத்தி தமிழுக்குரிய இடத்தையும் மதிப்பையும் அடியோடு அழித்துவிட்டனர். சொந்தத் தாய்மொழிமீது தமிழன் பற்றற்றுப் போனதே எல்லாச் சீரழிவுகளுக்கும் காரணம். அரசு நடத்துபவரும் வாணிகருடன் சேர்ந்து கூட்டுக் கொள்ளை நடத்துகின்றனரேயன்றி மக்கள் நலம் பற்றியோ, உண்மையான கல்வி எது என்பது பற்றியோ கடுகளவும் அவர்களுக்கு அக்கறையில்லை. தமிழுக்கு எதிரான அழிவு ஆற்றல் கள் தமிழகத்துக்குள்ளேயே வேலை செய்கின்றன. அறிவியல் முன்னேற்றம், உலகளாவிய வாழ்முறை என்ற பெயர்களில் தமிழுக்கும் தமிழிலக்கியத்துக்கும் உள்ள மதிப்பைக் குறைத்து பாடத்திட்டங்களில் பண்பாட்டு வறட்சியை உண்டாக்கிவிட்டனர்.

அறிவியல் கற்பவர்களுக்கு இலக்கியக்கல்வி தேவையில்லை என்றொரு பொய்யைப் பரப்பி வந்துள்ளனர். இதனால் உண்மையான தமிழ்க்கல்வி வளரமுடியாமல் போகின்றது.

உலகமெலாம் தமிழோசை பரவ என்ன செய்யவேண்டும்?

தமிழகத்திலேயே தமிழோசை பரவவில்லையே. முதலில் இங்கே செய்ய வேண்டியவற்றைச் செய்வோம். தமிழகத்தில் தமிழ்தான் முதன்மொழி, ஆட்சிமொழி, கல்விமொழி, பண்பாட்டு மொழி, வாணிகமொழி- இது இயல்பு நிலை. இந்த இயல்பு நிலையையே திரிபடையச் செய்து தமிழை ஓரத்தில் ஒதுக்கி வைத்திருக்கிறோம். முதலில் தமிழை மீட்டெடுத்து இங்கேயே உரிய இடத்தில் அதனை வைப்போம். தமிழும் தமிழரும் தம் அழிந்துபோன அடையாளங்களை மீண்டும் பெற்று தமிழன் என்று தலைநிமிர்ந்து வாழ்வோம். அவ்வாறு வாழ்வோமா னால் வெளியுலகம் தானே வந்து நம்மை அறியும். அப்பொழுது தமிழோசை உலகமெலாம் பரவ வழிபிறக்கும். அது நடவாதவரை நம் மொழிபெயர்ப்புகள் எல்லாம் ஏதோ ஆசைக்குச் செய்வனவாகவே இருக்கும்.

மொழிபெயர்ப்புப் பணியில் இனி என்ன செய்யவிருக்கிறீர்கள்?

பல வேலைகளின் நடுவில் மொழிபெயர்ப்பும் இடம்பெறுவதால் அதற்குக் கிடைக்கும் நேரம் கொஞ்சமே. மற்ற வேலைகளுக்குத் தடையில்லாதவாறு சிலவற்றை மேற்கொள்ளலாம். நாலடியார் மொழிபெயர்ப்பை தற்பொழுது மேற்கொண்டிருக்கின்றேன்.

அவ்வையார் பாடல்களும் பிற அறவியல் பாடல்களும், விவேக சிந்தாமணியும் செய்யவிருக்கின்றேன். சித்தர் பாடல்கள், மெய்யியற் பாடல்கள் சில செய்துகொண்டு வருகிறேன். வேறெவையும் மேற்கொள்ள முடியுமென்று நினைக்கவில்லை.

சிற்றிதழ்ப் பணிகள் குறித்து உங்கள் கருத்து என்ன

சிற்றிதழ்கள் பல வருகின்றன. சிலவற்றைப் பார்த்திருக்கின்றேன். நன்றாக உள்ளன. பொய்கையில் தாமரை பூப்பதுபோலவே கொட்டியும் பூக்கும் உரிமை உடையது என்று தனிப்பாடல் பாட்டொன்று கூறுகிறது. சிறிய இதழ்களாக இருப்பினும் ஆக்கந்தரும் சிறிய பணிகளைச் செய்யலாம்.

அவை வரவேற்கத்தக்கவை. ஆயினும் தரங்குறைந்த நகைச்சுவையினவாக, பிழைகள் மலிந்த நடையினவாக இருப்பதைத் தவிர்த்து அவை மொழிப்பொறுப்போடு நடத்தப்படல் வேண்டும். கலப்படத் தமிழை ஊக்குவிக்காதிருந்தல் வேண்டும். முற்போக்கு என்ற பெயரில் தமிழ் நலனுக்கு மாறானவற்றை அவை மேற்கொள்ளாதிருத்தல் வேண்டும். குழந்தைகள், சிறுவர்களுக்கான இதழ்கள் நிறைய வரவேண்டும் கலைத்தன்மையோடு கூடியனவாக அவை அமைய வேண்டும்.

இலங்கையில் தமிழ் ஈழப் போராட்டம் தோல்வி எனச் சொல்லலாமா? வென்றெடுக்க வழியென்ன?

மிக வருத்தத்தோடு ஒப்புக்கொள்ள வேண்டிய செய்தி, தமிழகத் தமிழர்க்கு தலைகுனிவை ஏற்படுத்தும் செய்தி இதுதான். தமிழீழப் போராட்டம் தோல்விதான். ஆனால் இது போராளிகளின் தோல்வி அன்று. மாந்தத் தன்மையின் தோல்வி; மாந்த உரிமையின் தோல்வி; உண்மையின் தோல்வி; உலகமே வெட்கித் தலைகுனிய வேண்டிய ஒரு தோல்வி. மாந்தர் விடுதலையை மறுக்கும் எவனும் மாந்தன் அல்லன். எந்த அமைப்பும், மக்களாட்சி அமைப்பாகாது. மக்கள் உரிமையை அழிக்கும் எந்த நாடும் நாடாகாது. பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக விடுதலையோடு வாழ்ந்துவந்த ஒரு மக்களினத்தை அடிமைப்படுத்த, அல்லது அடியோடொழிக்க சிங்களப் பேரின வெறியர் முயன்றபொழுது அவர்களுக்குச் சரியான அறிவுரை, எச்சரிக்கை வழங்கி ஈழத்தமிழர்க்கு விடுதலையை, அல்லது நூற்றுக்கு நூறு ஒத்த உரிமை நிலையை வழங்கச் செய்திருக்க வேண்டியது உலக வல்லரசுகளின் கடன் ஆகும்.

உலக நாடுகளின் ஒன்றியம் (ஐ.நா.சபை) எதற்காக உள்ளது? மாந்த உரிமை அமைப்பு எதற்காக உள்ளது? ஒடுக்கப்பட்ட இனங்களுக்கு விடுதலை பெற்றுக் கொடுப்பதற்குத்தானே. இந்த அமைப்புகள் அறத் துணிவற்றவை, அல்லது ஒருதலைச் சார்புடன் செயல்பட்டவை. அரசியல் தன்மையுடையவை என்பதை மறுக்கமுடியுமா

மெலியாரை வலியார் வருத்தும்பொழுது நடுநின்று தடுக்க வேண்டியது உலக மனச்சான்றின் கடன் அல்லவா? இந்த மனச்சான்றை உலக நாடுகள் எங்கே கொண்டுபோய் ஒளித்துவைத்தன? குழம்பிய குட்டையில் மீன்பிடிப்பதுபோல், அமெரிக்கா, சீனா, இந்தியா ஒவ்வொன்றும் தங்கள் சொந்தத் தன்னல ஆதாயங்களுக்காக விடுதலையோடு வாழ்ந்து வந்த ஓரினத்தின் விடுதலையை அழித்தனவே. இது எவ்வளவு அருவருக்கத்தக்க செயல்!

ஈழத் தமிழ்ப் போராளியர் பிழை செய்திருக்கலாம். அவர்களிடம் எத்தனையோ தவறுகள் இருக்கத்தான் இருந்தன. ஏன் அவர்கள் நூற்றுக்கு நூறு பிழை செய்தவர்களாகவே இருக்கட்டும். அப்பிழையைச் சாக்காக வைத்துக்கொண்டு இவர்கள் விடுதலையோடு வாழ்ந்த மக்களை அழிக்கலாமா? சிங்களன் செய்த இனப்படுகொலைக்கு உடந்தையாக இருக்கலாமா?

ஓரினத்தை, ஒரு நாகரிகத்தை, ஒரு வாழ்முறையை, ஒரு மிகப்பெரிய பண்பாட்டை முழுக்க முழுக்க அழித்துவிட்டார்களே. தமிழர் மீண்டும் தலைதூக்க முடியாவாறு அவர்களை இன்னும் சிங்களன் அழித்துக் கொண்டிருக்கின்றானே.

உலக நாடுகளின் அமைப்பும் சரி, மாந்த உரிமை அமைப்பும் சரி பார்த்துக்கொண்டு சும்மாதானே இருக்கின்றன.

ஈழத் தமிழர் போராட்டத்தை வென்றெடுக்க வழி என்ன என்று வினவியிருக்கின்றீர்கள். உலகின் மனச்சான்றை விழித்தெழச் செய்தாலன்றி வேறு வழியில்லை.

ஈழத் தமிழர் விடுதலையை அழித்ததில், சிங்களர் கொடிய பெருங்குற்றவாளி என்பதையும் அவன் செய்த போர்க்குற்றங்கள் அனைத்தையும் அம்பலப்படுத்தியும், உலக நாடுகளின் அமைப்பும், மாந்த உரிமை அமைப்பும் நடந்துகொண்ட கோழைத்தனமான முறைகளைச் சுட்டிக்காட்டியும், சிற்றின விடுதலை யில் அவர்கள் நடந்துகொண்ட முரண்பாடான முறைகளைச் சுட்டிக்காட்டியும் தொடர்ந்து நூற்றுக் கணக்கான ஆயிரக்கணக்கான கட்டுரைகள் உலகஅரங்கில் இடைவிடாமல் முன்வைக்கப்பட வேண்டும்.

புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் இக்கருத்துப் போராட்டத்தை முன்னின்று நடத்துதல் வேண்டும். உலக அரசுகள், உலக நாடுகளின் அமைப்பு முதலியவை தாங்கள் செய்த பிழைக்குக் கழுவாயாக எப்படி இசரேலுக்காக அன்று முன்வந்தனரோஅப்படி இன்று ஈழத் தமிழர்களுக்காக முன் வந்து விடுதலை பெற்றுக்கொடுப்பதுதான் ஒரே வழியாகும்.

நேர்காணல்: கோ. எழில்முத்து

Nantri :நக்கீரன்

=======================================================================

Courtesy: http://www.tamilmurasuaustralia.com/2013/05/blog-post_8591.html

This is taken from Penguin Publishers website:

M.L. Thangappa

“M.L. Thangappa (b. 1934) was born in Kurumpalapperi, Tirunelveli district, Tamilnadu. Educated at St John’s College, Palayamkottai, he taught Tamil for over twenty-five years in the various colleges of the Puducherry government until his retirement in 1994. He served on the editorial board of the Tamil monthly Thenmoli (1962–67). An accomplished poet, his books in Tamil include Adichuvadukal, Uyirppin Athirvukal, Ethu Valkai? and Nunmaiyai Nokki. His translations from Tamil literature into English range from Sangam poetry and didactic poetry to the songs of St Ramalingam, Subramania Bharati, and Bharatidasan. He has won the Bharatidasan Award (1991) of the Government of Tamilnadu, and the Sirpi Literary Award (2007) for lifetime achievement in poetry. Active in the Tamil language rights movement, he is also a founding member of the Puducherry Ecological Society. His translations from the Tamil classics have appeared in Penguin as Love Stands Alone: Selections from Tamil Sangam Poetry.

 

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.