இனி யார் கேட்டாலும்,`என் மகன் பேரு அன்பழகன். அவன் மாவட்ட கலெக்டரா இருக்கான்’னு சொல்லு

கரூர் மாவட்டம், சின்னநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ராக்கம்மாள் பாட்டிக்கு வயது எண்பது. கணவர் எப்போதே மறைந்துவிட, தனது மகள்கள் இருவரும் தனது இறுதிக் காலத்தை இன்பமாக நகர்த்த பயன்படுவார்கள் என்று மலைபோல நம்பியிருக்கிறார்.

ஆனால், அவர்கள் ராக்கம்மாளைக் கண்டுகொள்ளாமல் தனித்துவிட, தனக்குச் சொந்தமான `இப்பவோ அப்பவோ’ என்று உடைந்து, ஓட்டை உடைசலாக நிற்கும் கூரை வீட்டில், தட்டுமுட்டுச் சாமான்கள் சிலவற்றோடு மல்லுக்கட்டியபடி காலத்தை கடத்தி வந்திருக்கிறார்.

கால் காணி நிலம் இல்லை இவருக்கு. ஆனால், திருமணம் செய்துகொண்டு இங்கே வந்ததிலிருந்து தனது தேகத்தை உழைப்புக்குக் கொடுத்து, அந்த வருவாயை வாயைக் கட்டி வயிற்றைக் கட்டி சேர்த்து, அதைக் கொண்டு நல்ல இடங்களில் தனது மகள்களைக் கட்டிக்கொடுத்திருக்கிறார். கணவரும் தவறிவிட, `இனி மகள்கள்தான் உலகம்’ என்று மலைபோல நம்பி இருக்கிறார். ஆனால், அந்த மகள்கள் தனது தாயைச் சுமையாகக் கருதி, தனித்துவிடப்பட்டிருக்கிறார்.

ஆரம்பத்தில், கூலி வேலைக்குப் போய், அந்த வருமானத்தில் தனது பாட்டை சமாளித்து வந்திருக்கிறார்.

ஆனால், இரண்டு வருடங்களாக வயோதிகம் வாட்ட, வருமானத்துக்கு வழியில்லாமல் ரேஷன் அரிசியை வைத்து காலத்தை `உருட்டி’ வந்திருக்கிறார். தனக்கு ஏற்படும் நோய்களைச் சமாளிக்க, இதரச் செலவுகளுக்கு என்று அரசு தரும் ஓ.ஏ.பி உதவித்தொகைக்குப் பலமுறை விண்ணப்பித்திருக்கிறார்.

ஆனால், அரசு அலுவலர்களின் இரும்பு மனதிற்குள் ராக்கம்மாளின் வறுமை நிலைமை ஈரம் சேர்க்கவில்லை.

இந்தச் சூழலில், கரூர் மாவட்ட கலெக்டராக அன்பழகன் சமீபத்தில் பொறுப்பேற்றிருக்கிறார். வந்ததிலிருந்தே பல நல்ல விசயங்களைச் செய்து வருகிறார். அரசு அலுவலர்களிடம் இணக்கம் காட்டி வருகிறார். அந்த வகையில், அந்தப் பாட்டியைப் பற்றிய தகவல் அந்த ஊர்க்காரர்கள் மூலம் கலெக்டரின் கவனத்துக்கு வருகிறது.

உடனே, அந்தப் பாட்டி ஊரின் அருகிலுள்ள மூங்கணாங்குறிச்சியில் நடக்கும் மனுநீதிநாள் முகாமுக்குப் போகும்போது, அந்தப் பாட்டியைப் பார்த்து வர ஏற்பாடு செய்கிறார். தனது மனைவியிடம் அந்தப் பாட்டிக்காக நாட்டுக்கோழி குழம்பையும், வடை பாயசத்தோடு கூடிய சைவ சாப்பாட்டையும் ரெடி செய்யச் சொல்கிறார். அதோடு, இரண்டு காட்டன் புடவையையும் தனது சொந்தக் காசில் எடுத்துக் கொள்கிறார்.

இவ்வளவையும் எடுத்துக்கொண்டு நேராக அந்தப் பாட்டி வீட்டுக்குப் போய், பாட்டியிடம் சாப்பிட சொல்லியிருக்கிறார். அதுக்கு ராக்கம்மாள், வந்திருப்பது கலெக்டர் என்று தெரியாமல்,

`யாருப்பா நீ?. எனக்குச் சாப்பாடு கொடுக்க நீ யார்?’ என்று கேட்டிருக்கிறார். அதை கேட்ட கலெக்டர்,

`நான் உனக்குத் தூரத்துச் சொந்தம். இந்தா, உனக்காக இதையெல்லாம் தயார் பண்ணிட்டு வந்தேன். வயிறாரச் சாப்பிடு’ என்று சொல்ல, அப்போதும் தயங்கியிருக்கிறார் பாட்டி.

அதற்குள், அருகிலிருந்து வந்தவர்கள், `உன்னை மதிச்சு சாப்பிட சமைச்சுக் கொண்டு வந்திருக்கிறார். தட்டாம சாப்பிடு’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

அதன்பிறகு, `நான் மட்டும் இவ்வளவையும் சாப்பிட முடியாது. பக்கத்து வூட்டு கருப்பாயி, எதுத்த வூட்டு மூக்காயியையும் கூப்புட்டு சாப்பிட வைங்க’ என்று சொல்ல, தனது ஏழ்மை நிலைமையிலும், மகள்களால் தனித்து விடபட்ட கொடுமையிலும், அக்கம்பக்கத்து வீட்டுப் பெண்களை அழைத்துச் சாப்பிட வைத்து அழகு பார்க்க நினைக்கும் அந்த மூதாட்டியின் தாயுள்ளம் ஒருகணம் கலெக்டரின் கண்களில் கண்ணீரை வரவழைத்து பார்த்தது.

`அவர்களுக்குத் தனியாக இருக்கு. நீங்க முதல்ல சாப்பிடுங்க’ என்று கலெக்டர் சொல்ல, நாலு பருக்கையை அள்ளித் தின்றுவிட்டு, நாட்டுக்கோழி கறித்துண்டை கடித்தவர் கண் கலங்கி, `நீ யாரோ தெரியலப்பா. ஆனா, இதுபோல கடைசியா நல்ல சாப்பாடு சாப்பிட்டு எத்தனை வருஷம் ஆவுதுன்னு நினைவில்கூட இல்லை தம்பி’ என்று சொல்ல, மறுபடியும் கலெக்டருக்குக் கண் கலங்கியது.

அதன்பிறகு, `இரவுக்கும் உனக்குச் சாப்பாடு இருக்கு. அதோடு, உனக்கு இரண்டு புடவைகள் கொண்டாந்திருக்கேன்’ என்று கொடுக்க, `இதெல்லாம் எதுக்குத் தம்பி’ என்று மறுத்திருக்கிறார். வற்புறுத்திதான் அதை கலெக்டர் அந்தப் பாட்டியை வாங்க வைத்திருக்கிறார். `நீயும் சாப்பிடுப்பா’ என்று பாட்டி சொன்னதோடு, தானே பரிமாற, சைவ சாப்பாட்டை அங்கேயே அமர்ந்து சாப்பிட்டார் அன்பழகன்.

அதன்பிற்கு, கூடவே வந்திருந்த அதிகாரிகளிடம், `இவரிடம் கையெழுத்து வாங்கி, ஓ.ஏ.பி பணத்துக்காக அக்கவுன்டை ஓப்பன் பண்ண வைங்க. ஒரே வாரத்துல பணம் இவர் அக்கவுன்டுல ஏற வைக்கணும்’ என்று சொல்ல, அதன்பிறகுதான் வந்திருப்பது கலெக்டர் என்று தெரிய, ராக்கம்மாளுக்கு நெஞ்சம் விம்மியது. `தம்பி, எவ்வளவு பெரிய ஆபீஸர் என் குடிசைக்கு வந்திருக்கீங்க. நானும் உங்களை மதிக்காம நடந்துக்கிட்டேன்’ என்று சொல்ல,

`அதெல்லாம் ஒண்ணுமில்லை.

இனி யார் கேட்டாலும்,`என் மகன் பேரு அன்பழகன். அவன் மாவட்ட கலெக்டரா இருக்கான்’னு சொல்லு’ என்று சொல்ல,

`தம்பி, என்ன புண்ணியம் செஞ்சேனோ, பெத்த மகள்கள் என்னைக் கண்டுக்கலை. இவ்வளவு பெரிய ஆபீஸரு என்னைப் பெத்த தாயா மதிக்கிற. இதுபோதும் தம்பி. எனக்கு வேற எந்த உதவியும் வேண்டாம்’ என்று சொல்லி,கரகரவென கண்ணீர் உகுத்தார்.

நாம் ராக்கம்மாளிடமே பேசினோம்.

“கொள்ளு விரையாட்டம் ரெண்டு பொண்ணுங்களை பெத்து, ரத்தத்தை சோறாக்கி ஊட்டி வளர்த்து, சீர் செனத்திக் கொடுத்து, நல்ல இடங்கள்ல கண்ணாலம் கட்டிக் கொடுத்தேன்.

ஆனால், திருமணத்துக்குப் பிறகு என்னைக் கண்டுக்கவே இல்லை. `எழுந்தாலும் நான்தான்; படுத்தாலும் நான்தான்’னு வாழ்ந்துகிட்டு இருக்கேன். ஓ.ஏ.பி பணம் கேட்டு நூறு தடவை அலைஞ்சுருப்பேன். எந்த ஆபீஸரும் என்னை ஒரு மனுஷியாகூட மதிச்சு பதில் சொன்னதில்லை. ஆனா, ஜில்லா கலெக்டரே என்னை வந்து பார்த்து,சோறு போட்டு, புடவை எடுத்துக் கொடுத்து, ஓ.ஏ.பி பணத்துக்கு ஏற்பாடு செஞ்சு, பத்தாதுக்கு `என்னை உன்னோட மகனா நினைச்சுக்க. ஊர்லயும் அப்படியே சொல்லு’ என்று சொல்லி, பெத்த மகள்களால் குளிராத வயித்தை குளிர வச்சுட்டார். அந்த வார்த்தை போதும் தம்பி. இன்னும் இருபது வருஷம் இழுத்துப் பிடிச்சு வாழ்ந்துடுவேன்” என்றபோதே, அவர் கண்கள் பனித்தன.

கரூர் மாவட்ட ஆட்சியர் அன்பழகனிடம்,`வாழ்த்துகள்’ சொல்லி பேசினோம்.

“பிள்ளைகளுக்காக அறுபது வயசு வரை பெற்றோர்கள் `பணம் பணம்’னு ஓடி கலைச்சுடுறாங்க. அதன்பிறகு, அவர்கள் விரும்புவது மகன் அல்லது மகள்களின் ஆதரவைதான். `நல்லா இருக்கியா?’, `சாப்புட்டியா?’ என்று அவர்கள் கேட்பது இரண்டு வாக்கியங்களைதான். ஆனால், பெரும்பாலும் அப்படி யாரும் கேட்பதில்லை. அதனால், ஒவ்வொரு மனிதருக்கும் வயோதிகம் அவ்வளவு அல்லலாகத் தெரிகிறது. அதனால், அந்த வகையில், மகள்கள் இருந்தும் ஆதரவின்றி தவித்த ராக்கம்மாளிடம் அன்பு பாராட்ட நினைத்தேன். அதனால், என்னால் முடிந்த சிறு உதவியைச் செய்தேன். ஆனால், இந்தச் சம்பவம் மூலமாக ஒவ்வொரு ஆணும்,பெண்ணும் தங்களது தாயையும், தந்தையையும் எக்காரணம் கொண்டும் தனித்து விடக் கூடாது என்கிற முடிவுக்கு வந்தால் சந்தோஷப்படுவேன். `எல்லோருமே வயோதிக நிலையை அடைய இருப்பவர்கள்தான்’ என்கிற உண்மையை ஒவ்வொருவரும் உணர்ந்து கொண்டால், இதுபோல் தாயை `தள்ளி’ வைத்து பார்க்கும் நிலை வராது” என்றார் அழுத்தமாக!.

நன்றி ஆனந்த விகடன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.