எக்கடவுளும் காசு கேட்பதில்லை

எக்கடவுளும் காசு கேட்பதில்லை

பிறரில் கடவுளைக் காணும் பேறு கிட்டாதவர்களே, கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பைக் கொச்சைபடுத்துகிறார்கள்.

பொருள் படைத்த பலரும் தாம் பொருள் சேர்த்த விதம் பற்றியோ அல்லது பொருள் சேர்க்க எண்ணியுள்ள வழிபற்றியோ கொண்டுள்ள அச்சம் மிகுதியால்தான், தமக்கு மிகவும் பிடித்த பொருளை அளித்தால் அக்கடவுள் மிகவும் மகிழ்ந்துவிடுவார் என்றெண்ணி அளிக்கின்றனர். எம்மதமாயினும் தம்மத நூல்களை சரியாகப் படித்திருப்பின், காசை உண்டியலில் இடுவது பாவத்தைத் தீர்க்காது என்பதையும், பிறரில் காணும் இறைவனை நேசிப்பதே உண்மையான பக்தி என்பதையும் அறிவர். 

பணம் கொடுத்தால் விரைவில் கடவுளைக் காணலாம் என்ற ஒரு வசதியை (வஞ்சனையை ?) ஏற்படுத்தும்போதே கடவுளை மதங்கள் மாசுபடுத்தத் தொடங்கிவிட்டன என்று பொருள். 

அறிவினாலோ, பணத்தினாலோ, பலநூறு ஆன்மீக நூல்களை ஐயமற கற்றதாலோ, வாதத்திறமையாலோ, இறைவனை ஒருபோதும் அணுகமுடியாது. அன்பு எனும் மந்திரம் ஒன்றே இறைவனை நெருங்கும் ஒரே வழி. 

அன்பைத் தம் இதயத்திலிருந்து தொலைத்தவர்கள் உண்மையான பக்தியை என்றுமே உணர்ந்ததில்லை. உணரவும் இயலாது.

கிறிஸ்தவமதம் இறைசக்தி எல்லோரிடத்தும் நிிறைந்திருக்கிறது என்றே போதிக்கிறது. இந்துமதம் ஸ்ரீமஹாவிஷ்ணு மனிதன் உட்பட எல்லா உயிரினங்களிலும், தொப்புளில் இருந்து ஒருசாண் உயரத்தில் இருக்கும் இதயகுகையில் ஒளிவிளக்காய் இருக்கிறார் என்று ஸ்ரீநாராயணஸூக்தம் என்னும் மந்திரத்தில் சொல்லியிருக்கிறது. 

எல்லாம் வல்ல இறைவன் எல்லோரிலும் இருக்கும்போது, தேடிவேறெங்கும் செல்லவேண்டாம் என்றே மரணத்தையொழித்த தமிழ் சித்தர்பெருமக்களும் கூறியிருக்கின்றனர்.

எனவே வழிபாட்டுத் தலங்களில் (எம்மதமாயினும்) பணத்துக்குத் தரும் மதிப்பு அந்த மதங்களை மாசுபடுத்தும் வாடிக்கையாகும்.

மிகச்சிலபேர் எல்லா தானத்திலும் சிறந்தது அன்னதானம் என்று சரியாக அறிந்து, அதைக் கோவிலில் சரியாகச் செய்வார்கள் என்று சரியில்லாமல் புரிந்துகொண்டு, அறியாமல் பணத்தை உண்டியலில் போட்டுவிடுகின்றனர். அத்தகைய நல்லவருக்கு இந்த உண்மையைப் புரியவைக்கவேண்டும்.

மாணிக்கவாசகரின் திருவாசகம் படித்துப் பாருங்களேன். அன்பையே அவர் கடவுள் என் கிறார். சுவாமி விவேகானந்தரைப் படித்துப் பாருங்களேன். அவர் கூறியவற்றை விட வேறு எதுவும் எவர் கூறியதும் நம் உள்ளத்தை சென்றடையும் சிறப்பான எழுத்தல்ல என்பது, இறுமாப்பு கலவாத என் கருத்து.

மனிதநேயம் ஒருவருக்கு இருப்பின் பிறர் அவரில் இறைவனைக் காண்பர். மனிதநேயம் கொண்ட அவருக்குத் தம் செருக்கின் பிடி தளர்ந்துவிட்டால், அவரும் இதை உணருவார். இறைவனுக்கு சமீபத்திலேயே இருப்பார். 

எனவே அன்பிலே திளைப்போம். இன்னும் அன்பு, இன்னும் அன்பு, இன்னும் அன்பு என்று தேடிக் கொண்டே வாழ்வோமேயானால், இறைவன் மிக அருகில் இருப்பதை உணரமுடியும்.  

இருக்கும் இடத்தை விட்டு இல்லாத இடம்தேடி எங்கெங்கோ ஓடவேண்டாம் ஞானத் தங்கமே — இது சித்தர் பாட்டு.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.