கடவுளை ஏன் வழிபட வேண்டும்?

கடவுளை ஏன் வழிபட வேண்டும்?

கடவுளை வழிபட வேண்டியதற்கு அநேக காரணங்கள் உள்ளன. 

அவை:

௧) நித்திய கடமை: முதலாவதாக, கடவுளை வழிபட வேண்டியது இந்துக்களின் ஐந்து நித்திய கடமைகளில் ஒன்றானதும் முதன்மையானதும் ஆகும். 

நாம் தினமும் கடவுளை வழிபட மறவக் கூடாது. 

அனுதினமும் காலையிலும் மாலையிலும் மறவாமல் தெய்வங்களுக்கு ஆற்றவேண்டிய கடமைகளை ஆற்றவேண்டும். 

அன்றாடம் கண்டிப்பாக இல்லத்திலோ அல்லது கோயிலிலோ, கடவுளை பூஜை அல்லது தியானம் மூலம் வழிபட வேண்டும்.

௨)கர்மாவைக்குறைக்க:  அடுத்தபடியாக, கடவுளின் மீது பக்தி வைத்து அவரை வழிபடுவதால் நம்முடைய கர்மாக்களை (வினைப்பலன்களை) குறைத்துக் கொள்ளமுடியும். 

இந்த உலகில் மனிதர்கள் மீண்டும் மீண்டும் பிறப்பதும் இறப்பதும் கர்மப்பலன்களினால்தான்.

நம்முடைய பிறப்பின் நோக்கமே, கர்மாக்களைப் போக்கிவிட்டு, இறைவனின் திருவடியை அடைந்து வீடுபேறு (மோக்ஷம்) அடைவதே ஆகும்.

கர்மாக்களைப் போக்குவதற்கு மிக எளிய மற்றும் சிறந்த வழியாக பக்தி வழிபாடு கூறப்படுகின்றது. 

ஆகையால், தினமும் மறவாமல் கடவுளை வழிபட வேண்டும்.

“இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.”

௩) நன்றியுணர்வு: இந்த பிரபஞ்சத்தின் தோற்றத்திற்கும் முடிவிற்கும் வித்தாக இருந்து, 

இந்த பிரபஞ்சத்தின் ஓர் அங்கமாகிய நமக்கு அருள்புரிந்து ஆசிர்வதிக்கும் இறைவனுக்கு நாம் எப்போதும் நன்றியுணர்வோடு இருக்க வேண்டும்.

நம்முடைய நன்றியுணர்வை நாம் வழிபாட்டின் மூலம் காட்ட முடியும். நம்முடைய பிறப்பு மற்றும் வாழ்க்கையை எண்ணி நாம் எப்போதும் கடவுளுக்கு நன்றி கூறவேண்டும்.

மற்றவரோடு ஒப்பிட்டு நம்மை நாமே தாழ்வாக எண்ணிக் கொள்ளக் கூடாது. மனிதனாகப் பிறப்பதுவே அரிது. 
இந்த அரிதான பாக்கியத்தை அளித்த கடவுளை நாம் என்றும் நன்றியுணர்வோடு வழிபட வேண்டும்.

௪) ஆசிர்வாதம் பெற: இந்த உலகத்தில் வாழும் காலங்களில் நாம் பல செயல்களில் ஈடுபடுகின்றோம். இளம் வயதில் கல்வியிலும், பின்னர் பணிகளிலும் தொழில்களிலும், திருமணம் மற்றும் இல்லற சமாச்சாரங்களிலும் ஈடுபடுகின்றோம்.

எந்தவொரு செயலில் ஈடுபட்டாலும், எல்லாவற்றிற்கும் மூலவனான இறைவனின் ஆசிர்வாதமும் அனுகிரகமும் நமக்கு அவசியமாகும்.

இறைவனின் ஆசிர்வாதம் நம்முடைய செயல்களில் ஈடுபட தேவையான பக்குவத்தையும் நுட்பத்தையும் அளிக்கும்.

நாம் மேற்கொள்ளும் செயலில் வெற்றி ஏற்பட்டாலும் தோல்வி ஏற்பட்டாலும் அதனால் பாதிக்கப்படாத முதிர்ச்சியான குணமும் ஏற்படும்.

௫) தெளிவான ஞானத்தைப் பெற: கடவுளை அனுதினமும் பக்தியோடும் எந்தவொரு எதிர்ப்பார்ப்பும் இல்லாமலும் வழிபடுவதால், நம்மால் தெளிவான அறிவைப் பெற இயலும்.

இந்த தெளிவான அறிவால் நமக்கு எது சரி, எது பிழை, எது செய்யத்தக்கது, எது செய்யத்தகாதது போன்று பகுத்தறியும் பக்குவமான ஞானம் ஏற்படும்.

இந்த பகுத்தறிவும் ஞானம் இல்லாமையே மனிதர்களின் பெரும்பாலான துன்பங்களுக்கு வித்தாகின்றது.

இவ்வாறு கடவுளிடம் இருந்து ஞானம் பெற்றவர்கள் பகுத்து கூறியதே இயம-நியமங்கள் என்று நம்முடைய தர்மத்தில் அமைந்துள்ளன.

நமக்கு தெளிவான ஞானத்தை அளிப்பதால் இறைவனே எல்லா உயிர்களுக்கும் பரமகுருவாக திகழ்கின்றார்.

௬) நன்னெறியும் நல்லொழுக்கமும் பெற: நல்ல நெறிகளும் நல்ல ஒழுக்கங்களும் உடைய மனிதனே மேன்மையான செயல்களை ஆற்றவல்லவன்.

வழிபாட்டின் மூலமாக நமக்குள் கொஞ்சம் கொஞ்சமாக நன்னெறிகளும் நல்லொழுக்கங்களும் தோன்றுகின்றன.

குறிப்பாக, 

வழிபாட்டின் போது கடைப்பிடிக்க வேண்டிய சில விதிமுறைகளும் கட்டுப்பாடுகளும் இருக்கும்.

உதாரணமாக,

நேரம். 

குறிப்பிட்ட நேரத்திலும் அவகாசத்திலும் ஒரு வழிபாட்டை (பூஜையை) துவங்கி முடித்துவிட வேண்டும் என்ற விதிமுறை வழக்கமானது.

இந்த விதிமுறையைக் கடைப்பிடிப்பதால், நாம் நேரந்தவறாத ஒருவராக உருவாக முடியும்.

நமக்கு காலத்தின் மகத்துவமும் முக்கியத்துவமும் புரியும்.

“பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார்.”

௭) தேவைகள் பூர்த்தி பெற:  மனிதர்களின் தேவைகள் எண்ணற்றது. 

எப்படி பிரபஞ்சத்திற்கு எல்லை கிடையாதோ, அதுபோல,  மனிதர்களின் தேவைகளுக்கும் எல்லை கிடையாது. 

ஒவ்வொரு மனிதருக்கும் வெவ்வேறு தேவைகள் இருக்கின்றன. எல்லோருக்கும் எப்போதும் அவர்களின் எல்லா தேவைகளும் பூர்த்தியாகி விடுவதில்லை. 

அதனால்தான் எப்போதும் எல்லா மனிதர்களும் ஏதாவது தேவை குறைபாட்டுடன் இருக்கின்றனர்.

நமக்கு எப்போது எது தேவை என்று கடவுளுக்கு நன்கு தெரியும். 
நமக்கு தேவைபடும் நேரத்தில் கிடைக்கவில்லையே என நாம் வருந்த கூடாது, 

இப்போது நம்மிடம் என்ன இருக்கின்றதோ அதை நாம் மதித்துப் போற்றக் கற்றுக் கொள்ளவேண்டும்.

அதை முறையாகப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் வேண்டும்.

கடவுள் தெய்வங்களாக இருந்து, நமக்கு தேவையானவற்றை நாமே தேடிச் சென்று ஈட்டுவதற்கு தேவையான மனவலிமையும் ஊக்கத்தையும் அளிக்கின்றார். 

அத்தகைய மனவலிமையும் ஊக்கமும் நம்மிடம் இருக்கப்பெற்றால், நம் தேவைகள் எல்லாம் பூர்த்தியாகப் பெறுகின்றன.

௮) மனநிறைவும் மகிழ்வும் பெற: இந்த உலகத்தில் பணத்தாலும் பொருளாலும் விலைக்கொடுத்து வாங்கமுடியாத சில விஷயங்கள் உள்ளன. 

அதுதான் மனநிறைவு (மனதிருப்தி), மனமகிழ்வு (சந்தோஷம்) மற்றும் மன அமைதி (ஷாந்தி).

இந்த மூன்றில், எது ஒன்று இல்லாமல் போனாலும் அந்த மனிதனின் வாழ்க்கை நரகமாகிப் போகும். 
எவ்வளவு பணம், பொருள் இருந்தாலும் இந்த மூன்றும் இல்லையென்றால் 

அந்த மனிதன் வாழும் காலத்திலே நரகவேதனையை அனுபவிக்கிறான்.

அத்தகைய அத்தியாவசியமான மூன்றை நாம் வழிபாட்டின் மூலம் பெறலாம். 

ஒரு நாளைக்கு குறைந்தது இரண்டு முறையாவது கடவுளை வழிபடுவதால் நாம் மனநிறைவு, மனமகிழ்வு மற்றும் மன அமைதி ஆகியவற்றைப் பெறலாம்.

இவை இருக்கப்பெற்றாலே, அந்த வாழ்க்கை சொர்க்கமாகின்றது.

அதனிலும் மேலான சொர்க்க லோகங்கள் இல்லை.

”மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார்.”

“தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது.”

௯) பிறப்பின் குறிக்கோளை அடைய: மனிதனின் பிறப்பின் முடிவான குறிக்கோளே பிறப்பில்லா நிலையை அடைவதே. 

பிறப்பில்லா நிலையே அமிர்த நிலை எனப்படுகின்றது. 

அதுவே பிறவாழியில் (சம்சாரத்தில்) இருந்து விடுபட்டு மோக்ஷம் அடைவது. கடவுளை வழிபடுவதால் மனிதன் இந்த நிலையை அடையக் கூடும்.

”அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்பிறவாழி நீந்தல் அரிது.”

“பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்.”

இவ்வாறு கடவுளை வழிபடுவதற்கு பல காரணங்கள் உள்ளன.

ஆயினும், கடவுளை வழிபடுவதற்கு காரணங்கள் எதுவும் தேவையில்லை. கடவுளை வழிபடுவதே பெரும் பாக்கியம்.

கடவுளை வழிபடாதவன் பயனற்றவன் எனவும் வள்ளுவநாயனார் கூறுகின்றார்.

“கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்  தாளை வணங்காத் தலை.”

ஆகையால், கடவுளை வழிபடுவோம். பயனுள்ள மற்றும் அர்த்தமுள்ள மனிதர்களாக வாழ்வோம்!

Courtesy: a post in Facebook by Shri Santhosh Kumar, Coimbatore.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.