உலகத் தலைவர்களை அமைதியில் உறையச் செய்த சிறுமி

குழந்தைகளே பெரியோர்களின் ஆசிரியர்கள்

முதல் பூமிக்கோள உச்சி மாநாடு 1992ம் ஆண்டு ரியோவில் நடைபெற்றபோது, செவெர்ன் குல்லிஸ் சுசுகி (Severn Cullis Suzuki) என்ற 12 வயது சிறுமி உலகத் தலைவர்களிடம் 6 நிமிடங்கள் பேசினார். அச்சிறுமியின் சொற்கள் உலகத் தலைவர்களின் உள்ளங்களில் அம்புகளாய் பாய்ந்தன. 20 ஆண்டுகளுக்கு முன் அச்சிறுமி சொன்ன கசப்பான உண்மைகள் இன்னும் இவ்வுலகில் நம்மை வாட்டி எடுக்கும் கேள்விகளாக ஒலிக்கின்றன.
அப்பெண் அந்த உச்சி மாநாட்டில் சொன்னவை உலகில் இன்றும் பேசப்பட்டு வருகின்றன. (The Little Girl Who Shocked World Leaders Into Silence) (https://youtu.be/f17Tc1IwWuQ) உலகத் தலைவர்களை அமைதியில் உறையச் செய்த சிறுமி’ என்ற தலைப்பில் யூட்யூபில் இந்தச் சிறுமியின் உரை இன்றும் காணக் கிடக்கிறது.

ஆர்வம் உள்ளவர்கள் நேரம் ஒதுக்கி, இவ்வுரையைக் கேளுங்கள். இதோ உரையில் இருந்து ஒரு சிலப் பகுதிகள்:
“நானும் என் நண்பர்கள் மூவரும் எங்கள் சொந்த முயற்சியில் 6000 மைல்கள் கடந்து வந்திருக்கிறோம் உங்களைச் சந்திப்பதற்கு. நான் என் எதிர்காலத்திற்காகப் போராட வந்திருக்கிறேன். இன்று உலகில் பட்டினியால் இறக்கும் என்னைப்போன்ற ஆயிரமாயிரம் குழந்தைகள் சார்பில் பேச வந்திருக்கிறேன். ஒவ்வொரு நாளும் உலகின் பல பகுதிகளில் அழிந்து வரும் உயிரினங்கள் சார்பில் நான் பேச வந்திருக்கிறேன்.

வெளியில் சென்று சூரிய ஒளியில் நிற்பதற்கோ, வெளிக் காற்றைச் சுவாசிப்பதற்கோ எனக்குப் பயமாக உள்ளது. இவைகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஒவ்வொரு நாளும் நான் கேட்டு வருகிறேன். அதனால்,எனக்குப் பயமாக உள்ளது.”
இவ்விதம் தன் உரையைச் சூடாக ஆரம்பித்த சிறுமி , அவர்களை நோக்கிச் சிலக் கேள்விகளை எழுப்பினாள். அன்று அம்புகளாய் அத்தலைவர்களை நோக்கிப் பாய்ந்த அக்கேள்விகள் இன்று நம்மையும் நோக்கி பாய்ந்து வருகின்றன.
“நீங்கள் சிறுவர்களாய் இருந்தபோது என்னைப் போல் சூரியனையும்,காற்றையும் பற்றி பயந்தீர்களா? கவலைப் பட்டீர்களா?

நான் வாழும் இந்த உலகில் நடக்கும் பயங்கரங்களுக்கு என்ன பதில் என்று சிறுமி எனக்குத் தெரியாது. உங்களுக்கும் அந்தப் பதில்கள் தெரியாது என்ற உண்மையை நீங்கள் உணர வேண்டும் என்று கூறவே நான் இங்கு வந்திருக்கிறேன்.

விண்வெளியில் ஓசோன் படலத்தில் விழுந்துள்ள ஓட்டையை அடைக்க உங்களுக்குத் தெரியாது.

இறந்து போகும் உயிரினங்களை மீண்டும் உயிர்ப்பிக்க உங்களுக்குத் தெரியாது.

காடுகள் அழிந்து பாலை நிலங்களாய் மாறிவருவதைத் தடுக்கும் வழிகள் உங்களுக்குத் தெரியாது.

உடைந்து போன இயற்கையைச் சரி செய்ய உங்களுக்குத் தெரியாதபோது, அதை மேலும் உடைக்காமல் விடுங்கள். அது போதும் எங்கள் தலைமுறைக்கு.”

அந்தச் சிறுமி பேசியபோது பல உலகத் தலைவர்களின் கண்களில் கண்ணீர் வழிந்தது. பலர் குற்ற உணர்வோடு அந்தச் சிறுமியை ஏறெடுத்துப் பார்க்கவும் துணியாமல் தலை குனிந்து அமர்ந்திருந்தனர்.

தொடர்ந்து உண்மைகளைப் பேசினாள் அச்சிறுமி.

“நான் வாழும் கனடாவில் நாங்கள் அதிகப் பொருட்களை வீணாக்குகிறோம்.

பல பொருட்களை முழுதாகப் பயன்படுத்தாமல் தூக்கி எறிகிறோம். அதே நேரத்தில், எத்தனையோ நாடுகளில் தேவைகள் அதிகம் இருக்கும் கோடிக்கணக்கானோர் வாழ வழியின்றி இறக்கின்றனர்.

தூக்கி ஏறிய எண்ணம் உள்ள எங்களுக்கு, இவற்றைப் பகிர்ந்து கொள்ள எண்ணம் எழுவதில்லை.

நான் சிறுமிதான்.

ஆனால், எனக்குத் தெரியும் சில உண்மைகள் ஏன் உங்களுக்குத் தெரிவதில்லை?

நாம் இன்று போருக்குச் செலவிடும் பணத்தைக் கொண்டு இவ்வுலகின் ஏழ்மையை முற்றிலும் ஒழிக்க முடியும், நமது இயற்கையை காக்க முடியும் என்ற பதில்கள் எனக்குத் தெரிகிறதே;

ஏன் உங்களுக்குத் தெரிவதில்லை?

குழந்தைகளாய் நாங்கள் வளரும்போது, எங்களுக்குப் பல பாடங்கள் சொல்லித் தருகிறீர்கள்:

மற்ற குழந்தைகளுடன் சண்டை போடக்கூடாது;

மற்றவர்களை மதிப்புடன் நடத்த வேண்டும்;

நாங்கள் போட்ட குப்பையை நாங்களே சுத்தம் செய்ய வேண்டும்;

மற்ற வாயில்லா உயிரினங்கள் மேல் பரிவு காட்ட வேண்டும்;

எங்களிடம் உள்ளதை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள வேண்டும்;எல்லாவற்றையும் நாங்களே வைத்துக் கொள்ளக் கூடாது…

என்று எங்களுக்கு எத்தனைப் பாடங்கள் சொல்லித் தருகிறீர்கள்.

பிறகு,நீங்கள் ஏன் இந்தப் பாடங்களுக்கு எதிராக நடந்து கொள்கிறீர்கள்?”

இறுதியாக, அச்சிறுமி அவர்கள் மனசாட்சியைத் தட்டியெழுப்பும் வகையில் பேசி முடித்தாள்.

“நீங்கள் ஏன் இந்தக் கருத்தரங்கை நடத்துகிறீர்கள் என்பதைக் கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். உங்கள் குழந்தைகளாகிய எங்களுக்கு,நல்லவைகள் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இங்கே கூடியிருக்கிறீர்கள். நாங்கள் எவ்வகையான உலகில் வாழப்போகிறோம் என்பதை நீங்கள் தீர்மானிக்க வந்திருக்கிறீர்கள்.

பயந்து கலங்கிப் போயிருக்கும் குழந்தைகளைப் பெற்றோர் அரவணைத்துத் தேற்றும்போது, ‘எல்லாம் சரியாகிப் போகும்’ என்று சொல்லி குழந்தைகளைச் சமாதானம் செய்வார்கள்.

எங்கள் தலைமுறைக்கு இந்த வார்த்தைகளை உங்களால் சொல்ல முடியுமா?

‘எல்லாம் சரியாகிப் போகும்’ என்று மனதார உங்களால், எங்களைப் பார்த்து சொல்ல முடியுமா?

எங்கள் மீது அன்பு கொண்டிருப்பதாக நீங்கள் அடிக்கடி சொல்கிறீர்கள். நீங்கள் சொல்வது உண்மையென்றால், அதைச் செயலில் காட்டுங்கள்.

இது நான் உங்கள் முன் வைக்கும் ஒரு சவால். இதுவரைப் பொறுமையுடன் எனக்குச் செவி மடுத்ததற்கு நன்றி.”

அந்த ஆறு நிமிடங்கள் உலகச் சமுதாயத்தின் மனசாட்சியைத் தட்டி எழுப்பி, சங்கடமான கேள்விகளை விட்டுச் சென்றாள் அந்தச் சிறுமி.

இது நடந்து இப்போது 20 ஆண்டுகள் கழிந்து விட்டன. அறிவுள்ள அந்தச் சிறுமி அன்று எழுப்பிய அந்தக் கேள்விகள் இன்றும் நமக்கு எழுப்பப்படுகின்றன.

இக்கேள்விக் கணைகள் நம்மீது பாயும்போது, நாமும் தலைகுனித்து நிற்க வேண்டியுள்ளது.

மனிதச்சமுதாயம் இன்னும் இயற்கைக்கு இழைத்து வரும் அழிவுகளை நிறுத்தாததால், எத்தனையோ பேரழிவுகள் நம்மை யெல்லாம் அருகிலும், நாட்டிலும், வேறு நாடுகளிலும் ஏற்பட்டிருக்கின்றன.

கேட்கச் செவி உள்ளவர்கள்தாமே நாம்… இந்த எச்சரிக்கையைச் சரியாகக் கேட்டிருக்கிறோமா?

-இந்தத் தமிழாக்கம் வாடிகன் வானொலியில் வந்ததன் தழுவல். நன்றி வாடிகன் வானொலிக்கு

=========கணபதி சுப்ரமணியன் 04/01/2016

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.