எங்கே_போய்க்_கொண்டிருக்கிறோம் ???

மறுபதிவு

இக்கட்டுரை வாசிப்பது உங்கள் மன அமைதிக்குக் கேடு விளைவிக்கும்.
எங்கே_போய்க்_கொண்டிருக்கிறோம் ???

குடியரசு நாட்டில் நாம் “குடி”மக்கள்

“மது நாட்டுக்கு வீட்டுக்கு கேடு” என்று விளம்பரத்துடன், மதுவை மக்களுக்கு மிக அருகிலேயே கிடைக்கும் வசதிக்காக, நம் அரசாங்கமே முனைந்து அதை வியாபாரம் செய்கிறது. அரசுக்கு உரிமையான எந்த தொழிற்சாலையையும், நிறுவனங்களையும் விட அதிக வேகத்துடன் வளர்ந்து வரும் இத்துறை நம் மக்களை உண்மையில் “குடி”மக்களாக மாற்றியிருக்கிறது. நலிந்த மக்களுக்கு சேவை செய்ய பெரும் நிதி திரட்ட இது ஒன்றே சரியான ஒரு வழியாக உள்ளதாக நமது அரசும் அறிஞர்களும் வாதிடுகின்றனர்.

Cigerette Smoking is GOOD for the nation

“Cigerette Smoking is Injurious to Health” என்ற எச்சரிக்கையுடன்தான், மிக அதிக அளவில் சிகரெட்டுகள் விற்கப்படுகின்றன. சென்ற வாரம் The Economic Times பத்திரிகையில் “எவ்வாறு நம்நாட்டு புகையிலைசார்ந்த பொருட்களின் தயாரிப்புக் கம்பெனிகள் சீனா நாட்டிலிருந்து வரும் விலை குறைந்த பொருட்களால் நசுக்கப்படும் நிலைக்கு நம் உள்நாட்டு வரிவிதிப்பினால் ஆளாக்கப் பட்டுள்ளன” என்ற ஒரு அங்கலாய்ப்புக் கட்டுரை வெளியாகி இருக்கிறது. அதன்படி, இந்தியாவில் 2014-15ஆம் ஆண்டில் 102 பில்லியன் சிகரட்டுகள் ஊதித் தள்ளப்பட்டன என்றும், இந்திய வரி விதிப்பு 40 முதல் 60 விழுக்காடு உள்ளதால்தான், சீனா, இந்தோனேசியா நாடுகளின் தயாரிப்புக்கள் திருட்டுத் தனமாக நாட்டுக்குள் வந்து தங்கள் தொழிலை சீர்குலைக்கின்றன என்று இத்துறையின் இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான ITC வருத்தம் தெரிவித்துள்ளது.

பார்க்க வேண்டாத காட்சிகளை, “பார்க்க வேண்டாம்” என்ற அறிவிப்பு இருந்தால் மட்டுமே பார்க்கலாம்

“Viewer/ Parent discretion is required” என்ற அறிவிப்புடன், மிக முரட்டுத்தனமான வன்முறைக் காட்சிகள், மிக விரசமான காட்சிகள் கொண்ட நிகழ்ச்சிகளை, நம் நாட்டில் இயங்கும் வெளிநாட்டு தொலைக்காட்சிகள் ஒளிபரப்புச் செய்து வருகின்றன. இத்தகைய காட்சிகள் நிறைய இடம் பெற்றிருக்கும் நமது திரைப்படங்களையும் நம் தொலைக்காட்சியினர் எந்த எச்சரிக்கையும் இல்லாது ஒளிபரப்புகின்றனர்.

திரைப் படங்கள் அதிகபட்சம் 3 மணிநேரம்தானே என்ற வருத்தத்தில், வீட்டில் உள்ள நம் முழு நேரத்தையும் கொள்ளைகொள்ள, நன்றாய் நடந்துகொண்டிருக்கும் குடும்பத்தில், சூழ்ச்சியும் எண்ணவிகாரமும் கொண்ட பாத்திரங்களுக்கும், அப்பாத்திரங்களின் வக்கிர சிந்தனைக்கும் முக்கியத்துவம் கொடுத்துத் தயாரிக்கும் தொலைக்காட்சித் தொடர்கள் நம் குடும்பத்தின் ஒற்றுமையை நிச்சயமாக கெடுக்கக் கூடிய அளவில் வெளியாகின்றன.

விரசம் நிறைந்த பாடல்/ நடனக் காட்சிகளுக்கு, சிறு பெண் குழந்தைகள் பங்குபெற்று பாடுவதும், அதற்கு அக்குழந்தைகள் நடனமாடுவதும் பெற்றோருக்கு மிகப் பெருமையான விஷயமாக ஆகிவிட்டது.

தாம் வளரும் சமுதாயத்தில் கல்வி நிறுவனங்களின் பொறுப்பு என்று ஒன்றுமே இல்லை

தனிமனித நேயம் என்ற சிந்தனை பரவலாக குறைந்துகொண்டே வருகிறது. அண்மையில் சென்னையில் ஒரு மனித நேயத்தைப் பறைசாற்றும் நிகழ்ச்சி ஒன்று நடந்தது. தென் தமிழ் நாட்டிலிருந்து அண்ணா பல்கலைக் கழக நேர்காணலுக்கு வந்திருந்த ஒரு மாணவியும் அவரின் தாயும், சென்னையில் பல்கலைக் கழக வளாகத்துக்கு அருகில் நின்றுகொண்டு வருவோர்போவோரை விசாரிப்பதைப் பார்த்த, நல்லுள்ளம் படைத்த சிலர் அவர்களிடம் இருந்த தாள்களை வாங்கிப் படித்துப் பார்த்து, அப்பெண் போகவேண்டிய இடம் கோவையில் உள்ள விவசாய பல்கலைக்கழகம் அதுவும் அன்றே 12 மணிக்குள் செல்லவேண்டும் என்றும் அறிந்து, உடனே ஒரு தயையுள்ள இதயத்தினரான ஒருவர் தன் செலவில் விமானம் ஏற்றி இருவரையும் கோவைக்கு அனுப்பி, கோவையில் உள்ள பல்கலைக்கழக அதிகாரியிடம் அனுமதி வாங்கி, அப்பெண்ணை துணையுடன் மதியம் 1 மணிக்குள் அனுப்பி, பிரத்தியேக நேர்காணல் செய்யப் பட்டு, பொன்னான ஒருவருடத்தை இழக்கத் தேவையில்லாமல் உடனே கல்லூரியில் அனுமதி வழங்கப் பெற்றாள். முக நூலில் முதலில் பிரவேசித்து, பின் பிரபலமடைந்த இந்நிகழ்வு அன்று மாலையும் அடுத்த நாள் காலையும் செய்தித்தாள்களில் வெளியானது.

ஆனால் இத்தகைய நிகழ்வுகளைப் பற்றி பெரும்பாலான தமிழ்நாட்டுத் தொலைக்காட்சிகளுக்கு அக்கறையில்லை.

அறிவிப்புத் தாள்களை தமிழிலும் அச்சடிக்க இந்த பல்கலைக்கழகம் ஏன் முன்வரவில்லை ?

சாதனையாளர்கள் உருவாக நாட்டின் அரசுகள் உதவி செய்வது ஒன்றும் அவர்கள் கடமை இல்லை – ஆனாலும் சாதித்தவர்கள் யாராயிருப்பினும் அவர்களைக் கொண்டாடும் உரிமை மட்டும் உண்டு – சாதித்தவர்கள் இந்த அரசுத் திட்டங்களாலேதான் சாதித்தனர் என்ற மஹா மஹா மஹா பெரிய பொய்யையும் கூறி, சாதனையாளர்களிடமிருந்து எதை பிடுங்கலாம் என்று காத்திருக்கும் அரசியல் வாதிகள்

தற்காலத்து அரசியல்வாதிகள் எவரும் தன் சொந்த முயற்சியாலும் அறிவாலும், தாங்கள் தீட்டிய திட்டங்களாலும் உருவாக்காத எத்தனையோ சாதனைகளை நம் மக்கள் சாதித்துவருகின்றனர்.

விளையாட்டுத் துறையிலும், விஞ்ஞானத்துறையிலும், நிர்வாகத்துறையிலும், மிக உச்சிக்குச் சென்று சாதிக்கும் பலருக்கும் அரசு திட்டங்களால் எந்த பாதுகாப்பும் ஊக்குவிப்பும் கிடைத்திருக்கவில்லை.

ஆனாலும் அத்தகைய சாதனையாளர்களின் சாதனைகள், தேச அளவிலும், உலக அளவிலும் பாராட்டுக்கள் பெறும்போது மட்டும், விருதுகள் பெறும்போது மட்டும் முதலில் பாராட்டு தெரிவிக்கும் தகுதியை எடுத்துக் கொள்வது அரசியல்வாதிகளே.

பெப்ஸிகோ நிறுவனத்தின் தலைவரான திருமதி இந்திரா நூயி, மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் தலைவர் திரு சத்ய நாதெள்ளா, கூகிள் குழுமத்தின் தலைவர் திரு சுந்தர் பிச்சை, இன்ஃபோசிஸ் நிறுவனத்தை நிறுவி உலக அளவில் பிரகாசிக்கச் செய்த திரு நாராயணமூர்த்தி, நமது முந்தைய ஜனாதிபதி திரு கே ஆர் நாராயணன், இப்போது ஒலிம்பிக்ஸில் விருது வாங்கி இருக்கும் சாக்ஷி மாலிக், பி வி சிந்து போன்ற விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் இவர்களெல்லாம் வளர்ந்ததற்கு எந்த அரசியல் தலைவரின் முற்போக்குச் சிந்தனையோ அல்லது அரசுத் திட்டங்களோ காரணமாயிருக்கவில்லை.

இவர்கள் பரந்த நோக்கும், சீரிய திறமையும், விடாமுயற்சியும் கொண்டுதான் சாதனை படைத்துள்ளனர்.

ஆனாலும் இத்தகையவர்கள் இயக்கும் நிறுவனங்களுக்கு, அரசியல்வாதிகள் இயக்கும் அரசின் தயவு தேவைப்படுவதால், மௌனமாக பாராட்டுக்களைப் பெற்றுக் கொள்கின்றனர்.

ஆனால் நம் நாட்டை நடத்தும் அரசியல்வாதிகள் பங்கேற்க வேண்டிய பாராளுமன்றங்கள் பலவருடங்களாக ஒவ்வொருவருடமும் நீண்ட நாட்கள் இயங்குவதில்லை,

ஆளுங்கட்சியாகவும் பின்னர் ஆளாத கட்சியாகவும் மாறிமாறி இருந்துகொண்டிருக்கும் அனைத்துக் கட்சியினரும் கடைப்பிடிக்கும் நடவடிக்கையினால்.

இத்தகைய ஒரு நெறிதவறிய குறைபாடுகள் நாம் பணிபுரியும் எந்த நிறுவனத்திலும் நிகழ முடியாது என்றால், அப்படி நெறிதவறும் ஊழியருக்கு தண்டனையும், நிரந்தரபணிவிடுப்பும் விதிக்கப்படுவது என்றால், அரசியல்வாதிகளுக்கு மட்டும் அந்த உரிமை எங்கிருந்து கிடைக்கிறது ? 

யார் உழைத்தது நாட்டு முன்னேற்றத்திற்காக ?

நாடு சுதந்திரம் அடைந்த 50 வருடங்களில் கண்ட தொழில் வளர்ச்சி, அரசின் கையிலிருந்து கடந்த 20 வருடங்களில் தனியார் துறைக்கு மாறிவிட்டது. அப்போது தொழிலாளர் நலனுக்கு என்று அரசு விதித்த சட்டங்கள் தொழிற்சாலைகளில் பணிபுரியும் ஆணுக்கும் பெண்ணுக்கும் பாதுகாப்பான விதிமுறைகள் ஏற்படுத்தி இருக்கிறது. இச்சட்டங்களினால் பாதுகாப்பு அடைந்தவர்கள் நம்நாட்டுத் தொழிலாளிகள்.

ஆனால் இன்றைய காலகட்டத்திலோ, அறிவியல் முன்னேற்றத்தினால், கணினி இணப்புகள் மூலம் உலகின் தூரங்கள் மிகவும் சுருங்கிப் போக ஆரம்பித்து, அதன் விளைவாக 24மணி நேரமும் அயல்நாட்டு மக்களுக்காகவே இயங்கும் அலுவலகங்களில், இரவுபகல் வித்தியாசமின்றி, உழைத்து தொழிலாளிகள், மிக இளம் வயதிலேயே கண்கெட்டு, மதிகெட்டு, இதயநோய் வந்து, குடும்பத்தில் அமைதிகெட்டு சின்னாபின்னமாக ஆகிக் கொண்டிருக்கிறார்களே,

இந்தக் கொடுமையை நீக்க, இளைஞர்கள் ஆரோக்கியமாக பணிபுரியத் தேவையான எந்த சட்டத்தை இயற்றியிருக்கிறார்கள் நம் அரசியல்வாதிகள்?

வரலாம் எதிர்காலத்தில் அரசு போதைப் பொருள் கடை

சட்டத்தினால் ஒப்புக்கொள்ளப் படும் எல்லாமே நாட்டுக்கு நல்லதாக இருக்காது என்று ஒரு மேல்நாட்டு அறிஞர் சொல்லியிருக்கிறார்.

மதுவையும், புகையிலைப் பொருட்களையும் போல, “போதைப் பொருள் மனிதனை மயக்கி வாழ்வை சூனியமாக்கி விடும்” என்ற எச்சரிக்கையோடு போதைப் பொருள் விற்பனைகூட, நமது அரசியல்வாதிகள் சொல்லுவதைபோல , “மக்களின் நலன் கருதி” ஒரு காலத்தில் நம் நாட்டில் சட்டத்தால் அனுமதிக்கப் படலாம்.

—————————————————————-

இவைகளைப் பற்றி எழுத எழுத அது விரிவாக ஆகி முழு புத்தக அளவுக்கு நீண்டுவிடும். எனவே பல கட்டுரைகள் கொள்ளும் இத்தலைப்பில், மீண்டும் நீளமாகத் தொடராமல், சிலவற்றை மட்டும் முன்வைக்கிறேன்:

—–கல்விக்கும் அறிவுக்கும் தூரம் அதிகமாகி விட்டிருக்கிறது.

——நீதிக்கும் சட்டத்திற்கும் தூரம் அதிகமாகி விட்டிருக்கிறது.

——பதவிக்கும் பண்புக்கும் தூரம் அதிகமாகி விட்டிருக்கிறது.

——ஒளிந்து வெட்கப் பட்டுப் பார்த்த விரசப் படங்கள் தனியாகப் பார்ப்பது தடைசெய்ய வேண்டாத ஒன்று என்று நீதித் துறையே சொல்கிறது.

—-பேச்சுக்கும் சொல்லுக்கும் இடையே தூரம் மிக அதிகமாகப் போய்விட்டது

—– செந்தோல் ஒன்றே அழகு எனும் மாயை நம் குழந்தைகளிடையே பரவலாகிவிட்டது

—– ஆங்கில அறிவு ஒன்றே அறிவு, ஆங்கிலத்தை அறியாதவர் முன்னேற்றத்தை அடையாதவர் என்ற பித்து ஏறிவிட்டது.

—-திருமணங்கள் மனங்களை இணைப்பது குறைந்துகொண்டே வருகிறது.
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரைக் கண்டு” என்று தீர்க்கதரிசியான பாரதி இந்த நாட்களை நினைவில் வைத்துக் கொண்டா பாடினார் ?
(கோபம் எப்போதெல்லாம் தலைக்கு ஏறுகிறதோ, அப்போதெல்லாம் இத்தொடரின் அடுத்த கட்டுரைகள் வரும்)

பிடிக்காதவர் படிக்க வேண்டாம்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.