நாமும் இறைவனும் 1 – பரஞானம் என்றால் என்ன ?  – சுவாமி சித்பவானந்தர்

With God All things are possible

என் குறிப்பு: துறவறம் பூண்டு தன் வாழ்க்கை முழுவதையும் இறைவனுக்கு ஒப்புவித்து சேவை புரிந்த ஒருமகானின் எழுத்து இது.

இதில் உலகஅறிவு, இறைஅறிவு என்ற இரண்டையும் குறிப்பிட்டு, சுவாமிகள் இறைஅறிவே தேவை என்று குறிப்பிட்டு முடித்துள்ளார்.

உலகவாழ்வில் உழலும் நாம் பலதுறைகளில் கல்விபெற்று, உலகில் பல சாதனைகள் செய்துவருகிறோம். அறிவியல் வளர்ச்சி நம் வாழும் முறையை முற்றிலும் மாற்றிவருகிறது. கல்விக்கூடங்கள் எண்ணிக்கை எண்ணில் அடங்காது கூடிவருகின்றன.

நாம் எல்லோரும் இந்த நிலையில் துறவறம் பெறுவதையோ அல்லது புற அறிவை முற்றிலும் தவிர்ப்பதையோ கைக்கொள்ள இயலாது.

நமக்கு உள்ள குடும்பக் கடமைகளை ஆற்ற வேண்டிய பொருள் ஈட்ட, பலதுறைகளிலும் உள்ள புறஉலக அறிவும் அதில் நிபுணத்துவம் பெறுவதும் அவசியமாக இருக்கிறது.

ஆயினும், உலகில் நாம் தனிமனித வாழ்வில் மனத்துன்பம் குறைந்து உலகவாழ்வில் ஒரு நல்ல மனிதனாக வாழ்வதற்கு, நாம் பெற்றுள்ள இந்த அறிவோடு, சுவாமிகள் கூறியுள்ள அக அறிவு பெற்றுத்தான் ஆகவேண்டும்.

எனவே இதைப் படிப்பவர் யாரும் துறவறம் பூணும் எண்ணத்தை வளர்ப்பதற்காக தட்டச்சு செய்து நான் இதைப் பதிவு செய்யவில்லை.

அகஅறிவு, அதாவது தன்னை உள்ளபடியே அறியும் அறிவு நாம் பெறுவதன் அவசியத்தை உணர்த்தவே இப்பதிவு.

தன்னையறியும் முயற்சியில் நாம் இறங்கினால், அந்தப் பிரபஞ்சப் பேரறிவு நமக்கு உதவி செய்யும்; இறைவனும் நமக்கு தன்னைப்பற்றிய அறிவை உணர்த்துவான்.

இத்துடன் கூட, வேற்றுமைகளை மறந்து, எல்லோருடனும் அன்புடன் பழகும் தன்மையும் வளரும். இது சமுதாயத்தில் நமக்கு ஒரு உயர்வையும் தரும்.

— கணபதி சுப்ரமணியன்.

*******************

பரஞானம், அபரஞானம் என ஞானம் இருவகைப்படும்.

பிரபஞ்சம் அல்லது இயற்கையைப் பற்றிய ஞானத்திற்கு அபரஞானம் என்று பெயர். மெய்ப்பொருளைப் பற்றிய ஞானத்திற்கு பரஞானம் என்று பெயர். வேதங்கள், ஆகமங்கள், பௌதிக விஞ்ஞானம் ஆகிய அனைத்தும் அபரஞானத்தைச் சேரும்.

ஐம்பொறிகளின் மூலம் மனதைப் புறவுலகில் செலுத்திப் பெறுகின்ற ஞானம் அபரஞானம் ஆகும். ஐம்பொருளுக்கும் அப்பால் உள்ளதைத் தெரிவிக்கின்ற ஞானம் பரஞானம். அபரம் என்றால் கீழானது. பரம் என்றால் மேலானது.

பல ஜன்மங்களில் மனதைப் புறவுலகில் செலுத்திப் பெற்ற ஞானம் உள்ளத்தில் புதைந்து கிடக்கிறது. மனதை ஐம்பொறிகளின் மூலம் உலகில் செலுத்தி உலகில் உள்ள பொருள்களின்மீது ஒருமுகப்படுத்தும்போது அப்பொருளைப் பற்றிய இரகசியம் எல்லாம் நமக்கு விளங்குகிறது. பௌதிக விஞ்ஞான அறிவு இவ்வாறுதான் நமக்கு வந்துள்ளது. எதைப்பற்றி ஆழ்ந்து சிந்திக்கிறோமோ அதைப் பற்றிய அறிவு நமக்கு ஏற்படும். “எண்ணிய எண்ணியாங்கு எய்துவர்” என்பது இவ்வுண்மையை விளக்கும். உலக சம்பந்தமான யாவும் கீழானவை ஆகின்றன. அவற்றைப் பற்றிச் சிந்தித்துப் பெறுகின்ற ஞானமும் கீழானது ஆகின்றது. எனவே அதை அபரஞானம் என்று பகர்கின்றோம்.

உலகசம்பந்தமான பதிவுகளையெல்லாம் உள்ளத்திலிருந்து அகற்றவேண்டும். அப்போதுதான் மனதிலுள்ள உலகவாசனை அகலும். “சித்தமலம் அறுவித்து” எனத் திருவாசகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. சித்தமலம் என்பது சித்தத்திலுள்ள உலகவாசனையாகும். சித்தத்திலுள்ள உலகவாசனை நீங்க நீங்க ஆத்ம சொரூபத்தைப் பற்றிய உணர்வு உண்டாகிறது. அந்த உணர்வுக்குத்தான் பரஞானம் என்று பெயர்.

உலக விஷயங்கள் அடங்கியுள்ள நூல்களைக் கற்கும்போது உலகவாசனை உள்ளத்திலிருந்து ஒருபோதும் போகாது. எனவே உலகச் சிந்தனையை உணர்த்தும் நூல்களைக் கற்று உலகப் பொருள்களில் பற்றுதலை மிகுதிப் படுத்துகின்ற கல்விமான்களைவிட உலகப்பற்றை ஒழிக்கும் வைராக்கிய புருஷர்கள் உத்தமர்களாகிறார்கள். இதனைத் தாயுமானவர், “கல்லாத பேர்களே நல்லவர்கள், நல்லவர்கள்” என்று பகர்கின்றார். உலகப்பற்றை வளர்த்துக் கொண்டிருக்கும் கல்விமான்கள் ஒருக்காலும் பரஞானத்தைப் பெற முடியாது. உலகப்பற்றை ஒழிக்கும் ஒழுக்கம் நிறைந்த உத்தமர்களே பரஞானத்தைப் பெறமுடியும். பரஞானம் மெய்ப்பொருளைப் பற்றிய உணர்வு ஆகும். இதனை வள்ளுவர்,

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்பது அறிவு

என்று கூறியுள்ளார்.

பரஞானம் ஏற்படுகின்ற அளவு அதைப்பற்றிய சிந்தனையும் துன்பமும் அடியோடு அகலுகின்றன. உலகஞானம் அல்லது அபரஞானம் உலக இன்ப துன்பத்தை வளர்த்துக் கொண்டேயிருக்கும். மெய்ப்பொருளைப் பற்றிய பரஞானம் உண்டாகும்போது உலக இன்பமும் துன்பமும் நமக்கு இல்லை. “ஞானிக்கு இல்லை இன்பமும் துன்பமும்” என்னும் கோட்பாடு இதனை விளக்குகிறது.

பரஞானம் நமது பாரதத்திற்குரிய சொத்தாகும். நம் பாரதத்திலிருந்துதான் பரஞானம் மற்ற நாடுகளுக்குச் சென்றிருக்கிறது. சுவாமி விவேகானந்தர் பரஞானத்தைத்தான் மேநாட்டினருக்கு எடுத்து வழங்கினார்.

பரஞானம் ஒற்றுமையை வளர்க்கிறது. உலக உயிர்கள் யாவும் ஒன்றின் தோற்றமே என்பதைப் பரஞானத்தின் மூலம்தான் அறியமுடியும்.

உலகியல் ஞானம் வேற்றுமையை வளர்த்துக்கொண்டே போகும். பரஞானத்தை ஒதுக்கிவிட்டு அபரஞானம் என்னும் உலகியல் அறிவை வளர்ப்பவர் உள்ளத்தில் புதைந்துள்ள சிறுமைகள் யாவும் தலையெடுக்கின்றன. அதன்மூலம் காமமும் குரோதமும் பொறாமையும் வளர்ந்து மனித சமுதாயம் அல்லல்படுகிறது.

பரஞானத்தை உண்டாக்கும் ஒழுக்கம் நிறைந்த உயர்கல்வியே நமக்கு வேண்டப்படுவது ஆகின்றது.

ஐயம் தெளிதல் (முதல் பகுதி), ஸ்ரீ ராமகிருஷ்ண தபோவனம், 2007

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.