ஒரு சாமானியனின் வரலாறு – 30

*யாருக்கு கண் தெரியவில்லை ? *

உண்மை நிகழ்ச்சி – கணபதி சுப்ரமணியன்

*************

என் நண்பர் கண்ணன் என் கல்லூரித்தோழன், பின்னர் இந்தியன் வங்கியிலும் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். அவர் திருமணத்திற்கு நானும், என் திருமணத்திற்கு அவரும்  சென்று பங்கேற்றோம்.

நான் 1976இலும் கண்ணன் அனேகமாக 1978இலும் இந்தியன் வங்கியில் சேர்ந்தாலும், கல்லூரிக்குப்பின் தொடர்பு விட்டுப்போயிற்று. நான் 1990இல் இரண்டாம் முறை வட இந்தியா பணிக்குப்பின் திரும்பிவந்தபோது அவர் இந்தியன் வங்கியில்தான் இருக்கிறார் என்று அறிந்தேன். இருப்பினும் எந்தக்கிளையில் உள்ளார் என்பது தெரியாததால் சந்திக்க இயலவில்லை.

2009ஆம் ஆண்டு சென்னையில் இந்த்பாங்க் ஹவுஸிங் பணிக்குப்பிறகு இந்தியன்பாங்க் சீர்காழி கிளைக்கு மாற்றல் வந்தது. அப்போதுதான் 2010ல் ஒருமுறை கும்பகோணம் வட்டார அலுவலகத்தில் மேனேஜர் கூட்டத்துக்குப் போனபோது அவர் வட்டார அலுவலகத்துக்கீழ் இயங்கிவரும் கும்பகோணம் மெயின் கிளையில்தான் லோன் ஆஃபீஸராக இருக்கிறார் என்று தெரிந்து சென்று சந்தித்தேன்.

என்னிடம் மிகவும் அன்பாகப் பழகினார். அவரது மனைவி எப்போது இறந்தார் என விசாரித்தபோது அவருக்கு இரு குழந்தைகள் –ஒரு ஆண், ஒரு பெண் உள்ளனர் என்று தெரிவித்தார். ஒருமுறை அவர்களைக் காண நான் அவர்வீட்டுக்கு வரலாமா என்று வினவியபோது, “வாயேன், எப்போ வேண்ணாலும் வரலாம், அடுத்த மீட்டிங் நீ அட்டெண்ட் செய்யும்போது நீ என்னிடம் தெரிவி என்றார்.”

இந்தமுறை அவர் வீட்டுக்கு செல்லவேண்டும் என்று தீர்மானித்து ஒருநாள் சென்றபோது அவர் லீவ். அட்ரஸ் விசாரித்துக்கொண்டு வீட்டுக்குச் சென்றேன். நல்லவேளை வீட்டில்தான் இருந்தார். சிறிது ஜுரத்துடன் இருந்தார். வரவேற்று உட்காரச் சொன்னார். நான் உட்கார்ந்த இடத்திலிருந்து பார்த்தால் அவர் வீட்டு சமையலறை தெரிந்தது. உள்ளே ஒரு பெண் இருந்தார். யார் அது பெண்ணா என்றேன். ஆமாம் என்றவர் பெண்ணிடம் ‘அங்கிள் வந்திருக்கிறார் வா’ என்றார். உள்ளேயிருந்தே அப்பெண் ‘சரி அப்பா. அங்கிளுக்குக் காபி போடுகிறேன். எடுத்துக்கொண்டு வருகிறேன்’ என்றார். அதெல்லாம் வேண்டாம் அம்மா, நான் உங்களைப் பார்க்கத்தான் வந்தேன் என்றதற்கு, உள்ளேயிருந்தே அப்பெண் நான் போடும் காப்பியைக் குடித்தால்தான் நீங்கள் என்னைப்பார்த்துப்பேசலாம் அங்கிள்” என்று இனிமையான குரலில் பதில் சொன்னார்.

ஒரு பத்து நிமிடத்தில் அங்குவந்த அந்தப்பெண் வணக்கம் அங்கிள் என்றாள். நானும் வணக்கம் சொன்னேன். தான் கொண்டுவந்த ப்ளாஸ்டிக் ட்ரேயில் இருந்த இரண்டு காபி கப்புகளில், “அங்கிள் உங்களுக்கு காபியில் சுகர் இருக்கலாமா. இதோ இந்தக் கப்பில் சுகர் போட்டிருக்கேன். இதை நீங்கள் வாங்கிக் கொள்ளுங்கள்” என்று சொல்லிக் கொண்டே என் எதிரில் நீட்டிய கையில் ஏந்தியிருந்த கப்பை வாங்கிக் கொண்டே, முதன்முதலாய் அப்பெண் முகம் பார்த்தேன். ஆனால் அவளால் என்னைப் பார்க்க முடியவில்லை.

அனேகமாக என் பெண் வயதோ அல்லது ஓரிரு வருடம் குறைவாக இருக்கலாம். “செல்லமே, நீயும் என் பெண்தானம்மா’. எனது இந்தப்பெண்ணுக்குக் கண் தெரியாது என்று அறிந்துகொள்ளவே இந்தத் தந்தைக்கு இவ்வளவு வருஷம் ஆகிவிட்டது. என்னை மன்னித்துவிடு தாயே” என்று சொல்லிக் கதறிவிட்டேன்.

நான் மட்டும் அந்தப் பெண்ணின் முகத்தைப் பார்க்கவில்லை என்றால், என்னால் அவளுக்குக் கண்பார்வை கிடையாது என்பது தெரிந்தே இருக்காது. அவளது ஒவ்வொரு செயலும் நடையும் பாவனையும் மிக நேர்த்தியாக இருந்தன. பார்வை உள்ளவரைப் போல எந்தத் திணறலும் இல்லாமல் எல்லா வேலைகளையும் செய்வதைக் கண்டேன். அப்பெண் அப்போது MSc or MA இரண்டாம் வருடம் படித்துக்கொண்டிருந்தார். பள்ளியிலும் பல பரிசுகள், கோப்பைகள் பெற்றிருந்தார்.

சிறிதுநேரம் கழித்து நானும் உங்கள் பையன்தானப்பா என்று சொல்லிக்கொண்டே அவளது தம்பி வந்தான். ஹயர் செகண்டரி படிக்கிறாராம். அவனுக்கும் கண்பார்வை இல்லை. இருவருக்கும் பிறவிமுதல் கண் பார்வை இல்லை. மனைவி இறந்தபின் எவ்வாறு திரு கண்ணன் அவர்களை இவ்வாறு திறமையுடன் வளர்த்துவந்தார் என்பது இன்றுவரை எனக்கு விடைதெரியாத புதிர்தான்.

அன்று நான் தெரிந்துகொண்டதைப்பற்றி மறுபடி வங்கியில் விசாரித்தபோது, கண்ணன் குழந்தைகள் பார்வையற்றவர்கள் என்னும் விவரம் மிகச் சிலருக்கே தெரிந்து இருந்தது. கண்ணனும் இதை வெளியில் ஒரு குறையாகவோ, பிரச்சினையாகவோ சொன்னதில்லை. கிளையில் உள்ள நண்பர் சிலரே அறிவர். இக்குழந்தைகளும் கண்பார்வை அற்றவர் என்பதனால் எந்தவித குறையாகவும் கொள்ளாது, தன்னம்பிக்கையுடன் வாழ்ந்து சாதித்து வருகின்றனர். இருவருமே படிப்பில் சுட்டி. முதல் ராங்க் வாங்குபவர்கள்.

குடும்பம், பண்பு, குறை, நிறை, தன்னம்பிக்கை, வாழ்க்கை, அன்பு, சுகம்,சுகவீனம் இவை பற்றியெல்லாம் நான் கொண்டிருந்த பல கருத்துக்கள் என்னுள் வினோதமான பரிமாணம் அடைந்தன நான் அவர்களைச் சந்தித்த அன்று.

எப்படி குழந்தைகளை வளர்க்கவேண்டும் என்பது நாம் அனைவரும் கண்ணனைப் பார்த்துக் கற்றுக் கொள்ளவேண்டும்.

கண்பார்வை இல்லை என்றபோதிலும் அதில் குறைகாணாது வாழும் அக்குழந்தைகள், சின்னச் சின்ன விஷயங்களில் குறைகாணும் வழக்கமுள்ள நமக்கும், நாம் வளர்த்த, வளர்க்கும் குழந்தைகளுக்கும் மிகப்பெரிய பாடம்.  இரண்டு வருடத்துக்குப்பின்  நடந்த அப்பெண்ணின் திருமணத்துக்கு நான் செல்ல முடிந்தது எனக்கு மிக்க நிறைவைக் கொடுத்திருக்கிறது.

 

–  N Ganapathy Subramanian 14.10.2017

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.