ஒரு சாமானியனின் வரலாறு – 29

அன்றொரு நாள் கோபாலும் நானும்

மணி 9.20

நான் உள்ளே வரும்போதே உள்ளே சோனாவைத் தவிர இன்னொரு நபரைப் பார்த்தேன். என்றும் 10.30 க்கு மேல் வரும் கோபால்தான் இன்று சீக்கிரம் வந்து விட்டான்.

ஏதாவது ஒரு வாரம் அல்லது பத்து நாள் லீவ் கேட்பானோ, அப்படி வந்து கேட்டால் கண்டிப்பாய் இருக்க வேண்டியதுதான் என்று தோன்றியது.

அவன் மனதுக்குக் கேட்டிருக்கவேண்டும். என் அறைக்கு வந்தான்.

“சார், குட் மார்னிங் சார். நான் நீங்க சொன்ன மாதிரி சீக்கிரம் வந்துட்டேன் சார். என்னைக்கும் லேட்டா வர இந்தப்பய ஏதாவது சாக்குப்போக்கு சொல்லி லீவு கேட்றப் போறான்னு நெனச்சுக்காதீங்க சார்.”

“சரிங்க, நல்லது தானே. ஏதாவது காலையில் சாப்பிட்டீங்களா கோபால்?”

“காலெல நாஸ்தா துண்ணு ரொம்ப மாசமாச்சு சார்.”

“கோபால், ஒரு ஹெல்ப் பண்ணமுடியுமா ? நானும் சாப்பிடல. எனக்கு ஒரு நாலு இட்லி மட்டும் பார்சல் வாங்கி வரமுடியுமா ? இந்தாங்க பணம். ராமசாமி கடையில 30 ரூபாதானே 4 இட்லி?”

“ஆமா சார், 30 ரூவாதான். ஆனா ஏன் சார் 130 தர்ரீங்க, இந்தாங்க 100ரூவா”

“இல்ல கோபால், 100 ரூபா நீங்க சாப்பிடறதுக்கு.  நீங்க நல்லா சாப்டுட்டு எனக்கு 4 இட்லி வாங்கி வாங்க. மேல பணம் வேணுமா, தயங்காம கேளுங்க கோபால்.”

“ஆமா சார், இன்னொரு 100 தாங்க”

கொடுத்தேன்.

வங்கி வாடிக்கையாளர் வருகைக்கு முன் கோபால் வாங்கி வந்த இட்லி சாப்பிட்டேன்.

அதற்கப்புறம் அன்று கோபால் மிக உற்சாகமாக வேலை பார்த்தான். “என்ன கோபால், இன்னக்கு என்ன ஆச்சு ஒனக்கு. காலயில நேரத்துக்கு வந்துட்ட, வேலையெல்லாம் செய்ற, சுறுசுறுப்பா வேற செய்ற.” என்று விஜயராகவன் கேட்டார்.

“வாங்கற சம்பளத்துக்கு உழைக்கணும்ல சார்”

மாலை ஐந்து மணிக்கு என் கேபினுக்கு வந்தான். “சார் எல்லாத் தபாலும் போட்டாச்சு, வவுச்சர் எல்லாம் தச்சாச்சு முந்தாநா வரைக்கும். நேத்தி வவுச்சர் செக் பண்ணாங்களா தெரியல்ல சார், அக்கவுண்டண்ட் சார் லீவ்ல் இருக்கறதுனால தெரியல சார்.”

“சரிங்க, வீட்டுக்குப் போவணுமா. போய்ட்டு வாங்க. நாளைக்கும் சீக்கிரம் வந்துடணும். இவ்வளவு கீக்கிரம் தேவையில்ல, 9.45க்கு வந்தால் போதும். ஆமா மத்தியானம் சாப்பிட்டீங்களா?”

“இல்ல சார், காலைல சாப்ட்டதே நிறைவா இருந்துச்சு சார். மத்தியானம் பசிக்கல. நீங்கதான் 200 ரூவா கொடுத்தீங்களே சார். நான் இப்ப வீட்டுக்குப் போவேணாம் சார். 8 மணிக்கு அப்பாலே போனா போதும் சார். நீங்க இங்க இருக்கிற வரையிலும் இன்னிக்கு நான் ஆபீஸ்ல இருக்கேன் சார். உங்களுக்கு ஏதாவது வேணும்னா என்னக் கூப்பிடுங்க சார்.”

உள்ளே சென்று விட்டான். இவனுக்கு நிச்சயம் என்னமோதான் ஆகிவிட்டது. படுவித்தியாசமாய் இருக்கிறது அவன் நடவடிக்கை.

விஜயராகவன் 7.30க்கு கிளம்பினார். அவர் திருச்சி போக வேண்டும். “சார், நாளக்கு லீவுதானே சார். என்னிக்காவதுதான் நமக்கு ரெண்டு நாள் லீவு கிடக்குது. அப்பகூட நம்மாளுங்க ரெகவரி கேம்ப், ஹவுஸிங் லோன் கேம்ப் காசா கேம்பெய்ன் அது இதுன்னு சொல்லி மாசம் இருக்கிற 4 நால் லீவ் கூடகிடைக்காம ஆயிடுதே சார். சென்னைக்கு கிளம்பல்லியா சார். வீட்ல ஒங்க ஒய்ஃப், டாட்டர் கூட ஒங்களத் தண்ணி தெளிச்சு அனுப்ச்சிட்டாங்களா சார்? ஏன் சார் இந்தக் குடிகாரப்பய கோபால இருக்க வச்சீங்க. அவன் வந்து சிஎம்தான் இருக்கச் சொன்னார்ன்றான்.”

“ராகவன், எனக்கு இன்னிக்கு 3 ப்ரபோசல் ப்ராசஸ் பண்ணணும். 8.30க்குள்ளே கிளம்பிடுவேன். நான் சென்னைப் போகலே. கொஞ்சம் உடம்பு சரியில்ல. இங்கேதான் டாக்டர்ட்ட போகணும். நீங்க கெளம்புங்க. மத்த ஆஃபீஸர்ஸ்தான் இருக்காங்களே”

“எப்படித்தான் 3 மாசம், 2 மாசத்துக்கு ஒருதரம் மட்டும் சென்னைக்குப் போகமுடியுதோ ஒங்களுக்கு. என் ஃபேமிலியைப் பாக்காம என்னால ஒரு 10 நாள் கூடத் தாக்குப் பிடிக்க முடியாது. உடம்புதான் சரியில்லன்னு சொல்றீங்க. வேலையெல்லாம் முடிச்சுட்டுத்தான் கிளம்பனும்னு பாத்தா அது ஒருநாளும் முடியாது. நாம ரிடயரான அப்பறம் கூட வேலை முடிஞ்சிருக்காது. நான் வரேன் சார்.”

கோபால் உள்ளே வந்து “எப்ப கிளம்புறீங்க சார், சார் எல்லாரும் வேலயில இருக்காங்க. இன்னும் ¾ அவர் ஆவுமாம் முடிக்க. அவங்களுக்கு டீ வாங்கப் போறேன் சார். உங்களுக்கு வேணுமா” என்றான்.

“ஆமாம் கோபால், எனக்கும் வேணும். எத்தனை பேர் இருக்காங்க எல்லோருக்கும் வாங்கிவாங்க” இன்னொரு 100 ரூபாய் கொடுத்தேன். “சார் இப்படி மத்தவங்களுக்கே செலவழிச்சுதான் ஒங்க சம்பளம் பூரா தீந்துபோய் நீங்க வீடு கூட இன்னும் வாங்கல்லியாமே. இதுல வெற பன்னண்டு வருசம் நம்ம பாங்கோட ஹவுஸிங் கம்பெனில வேல பாத்திருக்கீங்க. வெளியில சொல்லாதீங்க, சரியான அசடுன்னு சொல்வாங்க. ஒவ்வொரு ஆஃப் இயருக்கும் எல்லா ஸ்டாஃபுக்கு ஒங்க சொந்த பணத்தில லஞ்ச் வேற வாங்கித் தரீங்க. அப்படிப்பாத்தா, எனக்குத் தெரிஞ்சு வருசத்துக்கு ஒரு 100-150 பேருக்கு இதுபோல சாப்பாடு வாங்கித் தர்ரீங்க. ஆனா இதுமாதிரி சம்பளம் வாங்கறவங்களுக்குப் பண்ணா புண்ணியம் சேராது சார். எல்லாம் நன்றியில்லாத ஆளுங்க. சுத்த வேஸ்ட் சார். இதுக்குப் பதிலா கோயில்ல ஏழைகளுக்கு அன்னதானம் செஞ்சா ஒங்க குழந்தக நல்லா இருக்கும் சார். சார் தயவுசெஞ்சு என்னை மன்னிச்சுடுங்க. எல்லமீறிப் பேசிட்டேன் சார், மன்னிச்சிடுங்க சார். நான் டீ வாங்கி வரேன் சார்.”

15 நிமிடம் கழித்து வந்த கோபால் என்னிடம் வந்து 270ரூபாய் கொடுத்தான். “காலைல நானும் 4 இட்லி 30ரூபாக்குதான் சாப்ட்டேன் சார். நீங்க 330 குடுத்தீங்க. 60 போக மிச்சம் குடுத்திருக்கேன் சார், நீங்களும் உள்ளே வந்து சாப்பிடுங்க சார்”

அவன் உள்ளே சென்று எல்லோருக்கும் ஸ்வீட், காரம் காபி/டீ கொண்டுவந்து பரிமாறினான். உள்ளே எல்லோரிடமும், நம்ம சிஎம்முக்கு இன்னிக்கு பர்த்டே, செப்டம்பர் 5, அதால உங்களுக்கு எல்லாம் ஸ்வீட், காரம் என்றான். அப்படின்னா  எல்லா ஸ்டாஃபுக்கும்தானே தரணும், இதென்ன இந்த மெட்ராஸ் ஆள் இப்படி இருக்கார். கொஞ்ச பேருக்கு மட்டும்? எனக்கு வேண்டாம் என்று சிஎம்கிட்ட சொல்லிடு” என்று எனக்குக் காதில் விழுகிறாற்போல சத்தம் கேட்டது.

நான் உள்ளே சென்றேன்.

“என்ன கோபால் இது, யார் ஸ்வீட் காரம் வாங்க சொன்னாங்க ? எனக்கு பர்த்டேன்னு நான் சொன்னேனா ? நான் ஒண்ணும் மெட்ராஸ் ஆள் இல்ல சார். எனக்கும் இந்த ஊர்தான். பக்கத்துல இருக்கற மாரியம்மன் கோவில் தான் நான் பிறந்த ஊர்”

“சாரி சார், இது நீங்க வாங்க சொல்லல்லே சார். என் செலவு சார். எனக்குள்ள வசதிக்கு எல்லா ஸ்டாஃபுக்கும் இப்படி வாங்கித்தரமுடியாதுன்னுதான், இன்னிக்கு யார்லாம் லேட்டா இருக்காங்களோ அவங்களுக்கு மட்டும் நான் வாங்கித்தர்லாம்னு முடிவுசெஞ்சேன் சார்.

“சார், காலைல ஃபைலெல்லாம் அடுக்கிவக்கும்போது போன வருஷத்து அட்டெண்டண்ஸ் கடைசிப்பக்கத்துல அக்கவுண்டண்ட் சார் எழுதியிருந்த எல்லா ஸ்டாஃபுகளோட பர்த்டே லிஸ்ட்ல பாத்தேன் சார்

“நான் இன்னிக்கு நடந்துக்கறது ஒங்க எல்லாருக்கும் புதுசா இருக்கும். எங்கம்மா மூணு வருசமா செங்கிப்பட்டி ஆஸ்பத்ரில இருக்காங்க. எங்கப்பா எங்கம்மா வைத்தியத்துக்கு செலவு செய்யப் பணம் கிடைக்காம, வருத்தப்பட்டு, கட்டுனவளயே காப்பாத்த முடியலியேன்னு, தற்கொல செஞ்சு செத்துட்டாரு 4 வருசத்துமுன். நேத்து நான் அம்மாவப் பாக்கப் போனபோது, புதுப்புடவை கட்டியிருந்தாங்க. யாரோ பாங்கிலிருந்து ஒருத்தர் வந்து நம்ம டாக்டரப் பார்த்துப் பணம் கொடுத்து எல்லாருக்கும் புது ட்ரெஸ் வாங்கித்தரச் சொல்லி வேண்டுனாங்களாம். அதாம்பா இந்தப் புதுச்சேல என்றாங்க. 8ம்தேதி அன்னிக்கு எல்லாருக்கும் சாப்பாடு விருந்து தர்றதா சொன்னாங்க. டாக்டரைப் பார்த்துக் கேட்டேன். யார் அது, எந்த பாங்க், அதிசயமா நல்ல காரியம் பண்றாங்களேன்னு கேட்டேன். அதாம்பா யாரோ இந்தியன் பாங்க் சிஎம்மாம். எந்த ப்ரான்சுன்னு தெரியலன்னாரு. நான் நேத்துதான் வரலியே ஆஸ்பத்ரியிலேயேதான் இருந்தேன். அங்க பில் போடற ஆளப் பாத்துக் கேட்டப்பதான், அது நம்ம சிஎம்னு தெரிஞ்சது. நானும் இந்த ஆபீஸ்ல 10 வருசமா இருக்கேன். என்னை யாரும் நீங்க வாங்கன்னு பேசுனது கிடையாது. இந்த சார்தான் எப்பவும் என்கிட்ட அப்படித்தான் பேசறாரு. இன்னிக்கிக் கூட நான் சாப்ட்டனா சாப்ட்டனான்னு ரெண்டுதரம் கேட்டாரு. நேத்தே நாம்முடிவு பண்ணிட்டேன். இனிமே இந்த சார் இந்த ப்ரான்ச்லஇருக்கறவரைக்கும் நான் இனிமே லேட்டாவே வரமாட்டேன். இவர் சொல்லிச் சொல்லி இப்ப நான் தண்ணி அடிக்கறதயும் நிறுத்திட்டேன். இந்த நல்ல மனுசன் பர்த்டேக்கு நான் இன்னிக்கு ஒங்க எல்லோருக்கும் ஸ்வீட் காரம் வாங்கிக் கொடுத்தேன், சாப்பிடுங்க”

நான் கர்ச்சீஃபை எடுத்துக் கண்ணை நீண்ட நேரம் துடைத்துக் கொண்டிருந்தேன். சந்துரு கேட்டார். “ஒங்களுக்கு என்னைக்கு ரியல் பர்த்டே சார்”

“அது செப்டம்பர் 8. அதுக்குத்தான் நாளைக்கு செங்கிப்பட்டி போய் சிலரைப் பார்க்கணும். ஆனா நான் ராகவன்ட்ட எனக்கு உடம்பு சரியில்லேன்னு சொல்லியிருக்கேன். நாளைக்கு யார்ட்டயும் இந்த விஷயம் பத்தி யாரும் தயவுசெஞ்சி சொல்லிடாதீங்க.”

அன்றைய தினத்திலிருந்து அந்தக் கிளையில் எனக்கு அன்பு மழைதான்.

————–

— இது கதையல்ல. ஏற்கனவே ஒரு எழுத்தாள நண்பர் என் ஒரு கதையைப் படித்துவிட்டுச் சொன்னார், “சார், ஒங்க கதை படிச்சேன் சார். ஒரு நல்ல கட்டுரையைப் படித்த நிறைவு ஏற்பட்டது” என்று பாராட்டி (??????) இருக்கிறார். இது அந்த வகையில் பார்த்தால் கட்டுரையும் அல்ல.

சில பெயர்களும், இடங்களும் மாற்றப்பட்டுள்ளன. மற்றபடி மற்ற எல்லாம் உண்மை.

கட்டுரையும் இல்லை, கதையும் இல்லை என்றால் என்னதான் இது. எனக்குத் தெரியாது.

சிங்கள நாட்டில் சொல்வது போல நான் கதைத்தது இது என்று வைத்துக் கொள்ளுங்கள்.

  • N Ganapathy Subramanian
  • September 15, 2017
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.