ஒரு சாமானியனின் வரலாறு – 28

மிக்க முயற்சி செய்து தவமிருந்து பெற்ற சென்னை வெள்ளம்

அன்று பகீரதன் தவம் செய்து இறங்கியது கங்கைநதி.

சென்னையில் நாங்கள் கடந்த 18 வருடங்களில் மூன்று, நான்கு வருடங்களில் தண்ணீரை விலைகொடுத்து வாங்கி ஆழ்நிலைநீர்த்தொட்டியில் சேமித்து வைக்க நேர்ந்தது. அத்தகைய நேரங்களில் தண்ணீருக்காகத் தவமிருந்த சென்னைவாசிகளின் தவம் மிகப்பெரிய அளவில் நிறைவேறியது.

மூழ்கியிருந்த வீட்டினில் ஊறிப்போன பொருட்களுடன், இருட்டில் புலம்பெயர்ந்து, உயிர்காத்து மீண்டுவந்திருக்கும் பலரில் நானும் ஒருவன்.

சிற்றளவு தண்ணீர்தான் வீடுபுகும் என்று அறிவித்த 2 மணி நேரத்தில் இடுப்பளவு நீர் வீட்டினுள்ளே.

மாடிப்படிக்கட்டில் நான்காவது படிவரை நீர் நின்றுவிட்டதனால், மனித நேயம் மிகக் கொண்ட என் வீட்டு உரிமையாளர் புகல் அளித்தார். 10 நாள் மின்சாரமில்லை, 10 நாளும் தொலைத் தொடர்புமில்லை. 3 நாள் முழுக்க நீர்மட்டம் குறையவில்லை. பின்னர் 5 நாட்கள் ஆயிரம் வாளித் தண்ணீரினால் சுத்தம் செய்தும், போகாமல் பிடிவாதம் செய்யும் நாசிக்குத் தீங்களிக்கும் அசுத்த நெடி. 5 நாட்கள் எங்கள் பகுதியில் போக்குவரத்து இல்லை. இப்போதும் வீட்டு வாசலில் வரும் குடிநீர் நாசிக்கும் வயிற்றுக்கும் பெரும் சோதனையாகவே உள்ளது.

நாங்கள் புகலிடம் தேடும்போதே எம் எதிர்வீட்டு நண்பர்கள் அவர்தம் வீட்டில் தலையளவு நீர்மட்டம் உயர்ந்ததனால், எம்முடன் சேர்ந்து ஒருநாள் மட்டும் மதத்தைமீறிய அன்புகொண்டோம்.

எதை எதையோ தொலைத்துவிட்டோம் சென்னைவாசிகள் இந்த வெள்ளச் சந்தடியில். பெற்றுவிட்டோம் ஆன்மீகவழியான பொருள்மீது பற்றொழித்தலை.

வீதிகளில் வந்த நதிகளில் எத்தனையோ விலையுயர்ந்த பொருட்கள் மிதந்து போயின. வடிந்ததும், வீடுகளிலிருந்து வெளியே போடப்பட்ட பொருட்களின் எண்ணிக்கையும் மதிப்பும் அளவிடமுடியாதது.

அறிஞர், அறியாதவர், படித்தவர், படியாதவர், இருப்பவர், இல்லாதவர் ஆகிய எல்லோருமே இல்லாதார் ஆயினர்.

ஆயினும் பாற்கடலைக் கடைந்தபோது வெளிவந்த ஆலகால நஞ்சுடன் எத்தனையோ மகத்தான பொருட்கள் வெளிவந்தனவே, அதைப்போலவே, இந்த வெள்ளத்தில் சென்ற பொருள், இழந்த பொருள் எல்லாவற்றையும் விட, காணக்கிடைத்த சில, 114 வருடங்களிலும் சென்னையில் காணக் கிடைக்காதவையே.

இவற்றுள் சில:

1. அன்பையே எல்லா மதமும் போதிக்கின்றன. ஆனால் எல்லா மதங்களையும் விட மிகத் திறமையாக சென்னைக்கு வந்த இச்சோதனை அன்பின் மகத்துவத்தை எல்லோர் மனத்திலும் இடம்பெறச் செய்தது.

2. பொருள்மீது ஆசை கொள்ளாதே என்று இந்து மதம் போதிக்கிறது. சிந்திக்க இயன்ற பலருக்கு பொருள்மேல் இருந்த ஆசை சிறிதேனும், சிலருக்கு முழுதாகவே மறைந்துவிட்டது.

3. ஆசையே துன்பத்திற்குக் காரணம் என்று புத்தமதம் போதிக்கிறது. மனிதனின் ஆசையால் விளைந்த கட்டுமான அத்துமீறல்கள் எற்படுத்திய வெள்ளப்பெருக்கு இதை சென்னைச் சமுதாயத்திற்கு நன்றாகவே இதைப் புரியவைத்துவிட்டது.

4. மதம் மீறி அன்பு காட்டிக் காப்பது என்பது ஒரு பரவலான நிகழ்ச்சியாக ஆகியது. காக்கப் பட்ட கர்ப்பிணிப்பெண்டிர் பிறந்த தம் குழவிக்கு மாற்று மதத்தைச் சார்ந்த, தங்கள் உயிர்காத்த காப்பாளரின்பெயரை அன்பு பொழிய மிக்க விருப்பத்துடன் தயங்காது வைத்துமகிழ்ந்தனர்.

5. சென்னையில் ஏற்பட்டது வளர்ச்சியல்ல, ஆபத்துகள்தான் வளர்ந்திருக்கிறது என்பது இந்த அவலமான நிலையிலும் பாதுகாப்பான தத்தமது ஊரிலிருந்து தொழில்நிமித்தம் இங்குவந்து தங்கள் பொருட்களை இழந்து, சேமிப்பை இழந்து, உயிரும் இழந்துபோனது மிக விலைகொடுத்து கற்ற பாடம்.

6. ஊடகங்கள், பத்திரிகைகள், முகநூல் குழுக்கள், பண்பலை ஒலிபரப்பும் நிறுவனங்கள் இவை மிக நன்றாக இயங்கி, ஆபத்தில் சிக்கி அச்சமுற்று ஒதுங்கிய மக்களுக்கும், நல்ல மனம் படைத்த இறைவர்களுக்கும் ஒரு பாலமாய் அமைந்து, மனிதநேயம் என்றால் என்ன என்று நம் வீட்டுக் குழந்தைகளுக்கு என்றும் அழியாத வகையில் ஏற்றிய பாடம்.

7. “தனியொருவனுக்கு உணவில்லை எனில் இந்த சகத்தினை அழித்திடுவோம்” என்றான் நம் பாரதி. சகமே அழிந்தாலும், தானே அழிந்தாலும் பிறர்க்குணவு வழங்கினர் சென்னைவாசிகள். இன்று மட்டும் அவன் உயிருடன் இருந்திருப்பின், நாட்டைப் பார்த்தே துயரம் கொண்டாலும், தன்கொள்கை பரவலாக அரங்கேறியது கண்டு பெருமை கொண்டிருப்பான்.

8. எல்லாவற்றிலும் சுயநலம் காண்பது, பணத்தாலும் பதவியினாலும், லஞ்சத்தாலும் சுயநலம் காண்பது என்பது தனக்குக் கூட கேடுவரவைக்கும் சக்திவாய்ந்தது என்பதை அப்பட்டமான சுயநலவாதிகளே உணர்ந்த ஒரு அரிய நேரமிது.

9. நீர்நிர்வாகத்துக்கு பழந்தமிழ் மன்னர்களின் அறிவியல்சார்ந்த சட்டதிட்டங்களினால், கட்டுப்பாடுகளினால் எவ்வாறு அக்கால பிரச்சினைகளுக் தீர்வு காணப்பட்டன என்பது குறித்த ஆராய்ச்சிகள் ஒருசிலரால் மேற்கொள்ளப்பட்டு, சமுதாய அளவில் வரவேற்பைப் பெற்று, ஆட்சியாளர் மனதிலும் இடம்பிடித்தன.

=======================அறிவெனப் படுவது அன்புகாட்டுவதே ஆகும். அன்பில்லாத இடத்தில் இருக்குமறிவென்பது அறிவல்ல என்பதே நிதர்சனமான உண்மை. இதைக் கற்றுக் கொள்ள சென்னைவாசிகள் கொடுத்த விலை மிக அதிகம். கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னைவாசிகளும் சென்னை நிர்வாகிகளும் செய்த தவற்றின் தொடர்ச்சியைப் பார்க்கும்போது, இயற்கையன்னையின் கோபம் நியாயமானது என்றே தோன்றுகிறது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.