விவேக சிந்தனை மாலை – 011

விவேக சிந்தனை மாலை – 011 – 23.10.2017

*கடமை என்பது என்ன ?*

(சுவாமியின் பேச்சிலிருந்து சுருக்கமான சில கருத்துக்கள் – இவை என்னால் சுருக்கி எழுதப்படுகின்றன. – கணபதிசுப்ரமணியன்.)

பல்வேறு வாழ்க்கை நிலைகளுக்கும், பல்வேறு வரலாற்று காலகட்டங்களுக்கும், பல்வேறு நாடுகளுக்கும் ஏற்ப கடமை என்ற கருத்து மாறுபடுகிறது.

சில குறிப்பிட்ட காரியங்கள் நம் முன் நிகழும்போது இயல்பாகவோ அல்லது பழக்கத்தின் காரணமாகவோ ஒருகுறிப்பிட்ட வகையில் நடந்துகொள்ளும் ஒரு உந்துதல் நம்மிடம் தோன்றுகிறது. இத்தகைய உள்ளுந்தல் (impulse) எழுந்ததும் மனம் சிந்திக்கிறது. இப்படிச் செய்யவேண்டும் அல்லது இப்படிச் செய்யக்கூடாது என்றோ தீர்மானிக்கிறது.

எந்தச் செயல் நம்மைக் கடவுளை நோக்கி அழைத்துச் செல்கிறதோ அது நற்செயல், நமது கடமை. எது நம்மை கீழ்நிலைக்கு இழுத்துச் செல்கிறதோ அது தீயது, நமது கடமை அல்ல. அகச்சார்பான இக்கோணத்தில் பார்த்தால், சில செயல்களில் நம்மை உயர்த்தவும் உன்னதமாக்குவதற்குமான போக்கு இருப்பதையும், மற்றும் சிலவற்றில் நம்மைச் சீரழித்து தீயவர்கள் ஆக்குகின்ற போக்கு இருப்பதையும் காணலாம்.

பல்வேறு சூழ்நிலைகளிலும் செயல்படுபவர்களான மனிதர்கள் அனைவரையும் பொறுத்தவரையில் இன்ன செயல் இன்ன போக்குக் கொண்டதாக இருக்கும் என்று ஆணித்தரமாக ஒருபோதும் வரையறுக்க முடியாது.

ஆனால் கடமையென்று மனிதகுலம் முழுவதுமே ஏற்றுக் கொண்ட கருத்து ஒன்று உள்ளது. *”எந்த உயிரையும் துன்புறுத்தக் கூடாது. எந்த உயிருக்கும் துன்பம் தராமல் இருப்பது புண்ணியம். எதையும் துன்புறுத்துவது பாவம்.”*

அஷ்டாச புராணேஷு வ்யாஸஸ்ய வசனத்வயம் | பரோபகார: புண்யாய பாபாய பரபீனம்.||*

மற்றவர்களின் கடமைகளை எப்போதும் அவர்களின் கண்கொண்டே பார்க்கவேண்டும். நமது சொந்த அளவுகோலால் மதிப்பிடக் கூடாது. நான் தான் உலகை அனுசரித்துப் போக வேண்டுமே தவிர, உலகம் என்னை அனுசரித்துப் போகாது.

குறிப்பிட்ட வேளைகளில் நமக்கென்று அமைந்த கடமைகளை அந்தந்த வேளைகளில் செய்வது மிகச் சிறந்தது. பிறவியால் நமக்கு ஆமைந்த கடமையைச் செய்வோம். அதை முடித்தபின் நமது வாழ்வு மற்றும் சமுதாயத்தில் நமது நிலைகளின் காரணமாக நமக்கு ஏற்படுகின்ற கடமைகளைச் செய்வோம்.

சிம்மாசனத்தில் இருந்து ஆளத் தகுந்தவனாகவே மனிதன் தன்னைப் பற்றிக் கருதிக்கொண்டாலும், தனது நிலைக்குரிய கடமைகளை முதலில் செய்து முடித்துக் காட்டவேண்டும். மேலான கடமைகள் அதன்பிறகு அவனுக்கு வந்துசேரும். உலகில் நாம் நேர்மையாக வேலை செய்யத் தொடங்கினாலே போதும், இயற்கை நமக்குத் தேவைப்படுகின்ற அடி உதைகளைக் கொடுத்து நமது நிலை எது என்பதை நாம் அறியுமாறு செய்துவிடும்.

நன்னெறி என்பதற்காக நாம் செய்தாலும் அன்புணர்வால் செய்தாலும், கடமை என்பதன் அடிப்படைத் தத்துவமும் மற்ற எல்லா யோகங்களைப் போன்றதே. நம்மில் ஜீவபாவனையைக் குறைத்து அதன்மூலம் உண்மையான மேலான ஆன்மாவைப் பிரகாசிக்கச் செய்வதே, வாழ்க்கையின் கீழ்நிலைகளில் மனிதனின் ஆற்றல் விரயமாவதைத் தடுத்து, அதன்மூலம் ஆன்மா தன்னைத் தானே உயர்நிலைகளில் வெளிப்படச் செய்வதே அதன் நோக்கம்.

நாம் உயர்வதற்குரிய ஒரே வழி நம் முன் இருக்கும் கடமைகளைச் செய்வதாகும். அப்படிச் செய்வதன்மூலம் வலிமையைப் பெருக்கிக் கொண்டே சென்று, இறுதியில் உயர்நிலையை அடைந்து விடலாம்.

என்னிடம் ஒரு மகான் கர்மத்தின் ரகசியத்தை இவ்வாறு கூறினார்: ”முடிவையும் வழியையும் ஒன்றாக்கு.”

நீங்கள் எந்த வேலையைச் செய்தாலும் அந்த வேலைக்கு அப்பாலுள்ள எதைப் பற்றியும் சிந்திக்காதீர்கள். அந்த வேலையை ஒரு வழிபாடாக, மிகவுயர்ந்த வழிபாடாக, அந்த நேரத்திற்கு உங்கள் வாழ்க்கை முழுவதையும் அதில் செலுத்திச் செய்யுங்கள்.

வாழ்க்கையில் எந்த நிலையிலுள்ள கடமைகளைச் செய்தாலும், பலனில் பற்றில்லாமல் செய்தால் அது நம்மை ஆன்ம அனுபூதி என்னும் நிலைக்கு நிச்சயம் அழைத்துச் செல்லும்.

***

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.