விவேக சிந்தனை மாலை – 010

*விவேக சிந்தனை மாலை – 010 – 19.10.2017*

*இந்துமதம்* 10 (கடைசிப் பகுதி)

இந்துவிற்கு, உலகின் எல்லா மதங்களும், பலவித நிலைகளிலும், சந்தர்ப்பங்களிலும் உள்ள பல்வேறு ஆண்களும் பெண்களும் ஒரே இலக்கை நோக்கிச் செய்கின்ற பயணம்தான். சாதாரண உலகியல் மனிதனிடம் கடவுளை வெளிப்படச் செய்வதுதான் எல்லா மதங்களின் நோக்கம். அவர்கள் அனைவருக்கும் எழுச்சியை ஊட்டுபவர் ஒரே கடவுள்தான். அப்படியானால் இத்தனை மாறுபாடுகள் இருக்கக் காரணம் என்ன ?

மாறுபாடுகள் எல்லாம் வெளித்தோற்றமே என்கிறான் இந்து. வெவ்வேறு சூழ்நிலைகளுக்கும் பல்வேறு இயல்புகளுக்கும் ஏற்பத் தன்னை மாற்றி அமைத்துக் கொள்கின்ற ஒரே உண்மையில் இருந்துதான் இந்த மாறுபாடுகள் எழுகின்றன.

ஒரே ஒளிதான் பல்வேறு வண்ணக் கண்ணாடிகளின் மூலம் பல நிறங்களில் வருகிறது, நம்மை மாற்றி அமைத்துக் கொள்ள இந்த வேறுபாடுகள் அவசியம். ஆனால் எல்லாவற்றின் மையத்திலும் அதே உண்மைதான் ஆட்சி செய்கிறது.

முத்து மாலையிலுள்ள முத்துக்களைக் கோர்க்கின்ற நூல் போல் நான் எல்லா மதங்களிலும் இருக்கிறேன். மக்களினத்தை உயர்த்திப் புனிதப் படுத்தும் அசாதாரணமான தூய்மையும் அசாதாரணமான ஆற்றலும் எங்கெல்லாம் காணப்படுகின்றனவோ அங்கெல்லாம் நான் இருக்கிறேன் என்று அறி” (பகவத்கீதை 7.7; 10.41) என்று பகவான் தன் கிருஷ்ணாவதாரத்தின்போது இந்துக்களுக்குச் சொன்னார். அதன் பலன் என்ன?

இந்துக்கள் மட்டுமே காப்பாற்றப் படுவார்கள், மற்றவர்கள் காப்பாற்றப்பட மாட்டார்கள் என்று சம்ஸ்கிருதத் தத்துவத்தில் எங்காவது கூறப்பட்டிருக்கிறதா என்று கண்டுபிடிக்கும்படி நான் உலகத்திற்குச் சவால் விடுகிறேன்.

“நமது ஜாதிக்கும் கோட்பாடுகளுக்கும் அப்பால்கூட நிறைநிலை பெற்றவர்களைக் காண்கிறோம்” என்கிறார் வியாசர்.

இன்னென்று: அனைத்து எண்ணங்களிலும் கடவுளையே மையமாகக் கொண்ட இந்து, எப்படி சூன்ய வாதம் பேசும் பௌத்தர்களையும், நாத்திகவாதம் பேசும் சமணர்களையும் நம்புவான் ? பௌத்தர்களோ சமணர்களோ கடவுளை நம்பி வாழ்வதில்லை. ஆனால் மனிதனை தெய்வமாக்க வேண்டும் என்னும் எல்லா மதங்களுடையவும் மையக்கருத்து இருக்கிறதே, அதுதான் அவர்களுடைய மதங்களின் முழு நோக்கமாகும். அவர்கள் தந்தையைப் பார்த்ததில்லை, ஆனால் மகனைப் பார்த்துள்ளார்கள். மகனைப் பார்த்தவன் தந்தையையும் பார்த்துள்ளான்.

சகோதரர்களே ! இந்து மதக் கருத்துக்களின் சுருக்கம் இதுதான். தன் திட்டங்களை எல்லாம் நிறைவேற்ற இந்துமதம் தவறியிருக்கலாம். ஆனால் *என்றாவது உலகம் தழுவிய மதம் (Universal Religion) என்று ஒன்று உருவாக வேண்டுமானால், அது இடத்தாலும் காலத்தாலும் எல்லைப் படுத்தப் படாததாக இருக்க வேண்டும். அந்த மதம் யாரைப் பற்றிப் பிரசாரம் செய்கிறதோ, அந்த கடவுளைப் போன்று எல்லையற்றதாக இருக்க வேண்டும். சூரியன், தன் ஒளிக்கிரணங்களை எல்லோர் மீதும் சமமாக வீசுவதுபோல் அது கிருஷ்ண பக்தர்கள், கிறிஸ்து பக்தர்கள், ஞானிகள், பாவிகள், எல்லோரையும் சமமாகப் பார்க்க வேண்டும். அது பிராமண மதமாகவோ, பௌத்த மதமாகவோ, கிறிஸ்தவ மதமாகவோ, முகமதிய மதமாகவோ இருக்காமல், இவற்றின் ஒட்டுமொத்தமாக இருப்பதுடன், இன்னும் வளர்ச்சியடைய எல்லையற்ற இடம் உள்ளதாக இருக்க வேண்டும்.*

*விலங்கினங்களைப் போல் உள்ள காட்டுமிராண்டி மக்களிலிருந்து, இவரும் மனிதரா என்று சமுதாயம் பயபக்தியுடன் வணங்கி நிற்கும் அளவுக்கு, அறிவாலும் இதயப் பண்பாலும் உயர்ந்து மனித இயல்புக்கு மேலோங்கி விளங்கும் சான்றோர் வரை, எல்லோருக்கும் இடம் அளித்து, தன் அளவற்ற கரங்களால் எல்லோரையும் தழுவிக்கொள்ளும் பரந்த மனப்பான்மை உள்ளதாக இருக்கவேண்டும். அந்த மதத்தில் பிற மதத்தினரைத் துன்புறுத்துதலும், சகிப்புத் தன்மையற்று நடந்து கொள்ளுதலும் இருக்காது. அது ஆண், பெண் எல்லோரிடமும் தெய்வத்தன்மை இருப்பதை ஏற்றுக்கொள்ளும். மனித இனம் தன் உண்மையான தெய்வீகத் தன்மையை உணர்வதற்கு உதவி செய்வதே அதன் நோக்கமாக இருக்கும். அதன் முழு ஆற்றலும் அதற்கே பயன்படும்.*

அத்தகைய மதத்தை அளியுங்கள். எல்லா நாடுகளும் உங்களைப் பின்பற்றும். அசோகரின் சபை பௌத்தமத சபையாக இருந்தது. அக்பரது சபை இதைவிடச் சற்று உயர்ந்த நோக்கம் கொண்டதாக இருந்தாலும் வீட்டு சபையாகவே இருந்தது. கடவுள் எல்லா மதங்களிலும் இருக்கிறார் என்று உலகம் அனைத்திற்கும் முழக்கம் செய்ய அமெரிக்கா ஒன்றுக்குத்தான் கொடுத்து வைத்திருந்தது. (இதைப்பற்றிய என் எண்ணத்தைக் கீழே பார்க்கவும் – கணபதி சுப்ரமணியன்1).

இந்துக்களுக்கு பிரம்மமாகவும் சொராஸ்டிரர்களுக்கு அஹுரா-மஸ்தாவாகவும், பௌத்தர்களுக்கு புத்தராகவும், யூதர்களுக்கு ஜெஹோவாவாகவும், கிறிஸ்தவர்களுக்கு பர மண்டலத்தில் இருக்கும் பிதாவாகவும் இருக்கின்ற ஆண்டவன் உங்கள் உன்னதமான நோக்கம் நிறைவேற உங்களுக்கு வலிமை அளிப்பானாக ! விண்மீன் கிழக்கிலே எழுந்து மேற்கு நோக்கி நேராகச் சென்றது. சிலவேளைகளில் மங்கலாகவும், சிலபொழுது ஒளிமிக்கதாகவும் உலகத்தைச் சுற்றியது. இப்போது கிழக்குத் திசையிலே சான்போ (பிரம்மபுத்ரா நதி) நதிக்கரையினில் முன்னைவிட ஆயிரம் மடங்கு ஒளியுடன் மறுபடியும் உதயமாகிக் கொண்டிருக்கிறது.

சுதந்திரத்தின் தாயகமாகிய கொலம்பியாவே2, நீ வாழ்க ! அயலாரின் இரத்தத்தில் கையினைத் தோய்க்காமல்3, அயலாரைக் கொள்ளையடிப்பதுதான் பணக்காரன் ஆகக் குறுக்குவழி என்று கண்டுபிடிக்காத உனக்குத்தான்4 சமரசக் கொடி பிடித்து, நாகரீகப் படையின் முன்னணியில் வெற்றி நடை போடும்5 பெரும்பேறு கொடுத்து வைத்திருந்தது.

சுவாமி விவேகானந்தர் இந்துமதம் பற்றி அமெரிக்காவில் நிகழ்த்திய சொற்பொழிவு இத்துடன் முடிவடைந்தது.

******

என் குறிப்புகள்:

  1. கடவுள் எல்லா மதங்களிலும் இருக்கிறார் என்று உலகம் அனைத்திற்கும் முழக்கம் செய்ய அமெரிக்கா ஒன்றுக்குத்தான் கொடுத்து வைத்திருந்தது.: என் கருத்து: தற்கால உலக வரலாறு என்பது கிரேக்க, எபிரேய, எகிப்திய, ஐரோப்பிய வரலாற்றிலிருந்தே துவங்குகிறது. ஆதிகால இந்தியா, நிலநடுக்கங்களாலும், நிலமாறுதல்களாலும் (பிரளயம்) மாறிப்போன உலக வரைபடத்துக்கு முன்னர்  இருந்த நாகரிகங்கள் (கடல்கொண்ட சங்கம் வளர்த்த தமிழ் நாகரிகம், அட்லாண்டிஸ் நாகரிகம் இவை பற்றிய எழுத்துக்கள் நெடுங்காலத்துக்குப் பிறகே வர ஆரம்பித்தன. சுவாமி பிரசங்கம் செய்தபோது அமெரிக்காவும் சுதந்திரம் அடைந்த உலகின் மிக நாகரிகப் பண்பாடுகள் கொண்ட ஒரு அரசியல் சாசனத்தை உருவாக்கி, மக்கள் அனைவருக்கும் சகோதரத்துவம், உழைக்கும் உரிமை, நேர்மை இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்த நாடு. அன்றைய காலகட்டத்தில், சுவாமி கூறுவதுபோல் அமெரிக்க நாடு மட்டுமே இத்தகைய பரந்த மனப்பான்மையைக் கொண்டிருந்தது. (ஆதிகால இந்தியாவில் வடக்கே நாளந்தா, தக்ஷசீலா, வாரணாசி, மௌர்யரின் ஆட்சிகாலம், தெற்கே பாண்டியரின் ஆட்சி, சோழர்களின் ஆட்சி காலங்களில் பல இடங்களில் பல காலக்கட்டங்களில் சர்வசமயக் கருத்தரங்குகள், அயல்நாடு மொழி கற்றல், என்பன மிவ்வும் பரவலாக நடைபெற்றன. தொழில் வளர்ச்சி, அறிவியல் வளர்ச்சி அடைந்த அக்காலம் இந்தியாவின் பொற்காலமாகும்.)
  1. சுதந்திரத்தின் தாயகமாகிய கொலம்பியாவே: என் கருத்து: கொலம்பியாவில்தான் தற்கால உலகின் முதல் சர்வசமயக் கருத்தரங்கு நிகழ்த்தப்பட்டது. தன் சுயவரலாற்றை மறந்திருந்த இந்தியாவோ, கிறிஸ்தவ குருமார்களின் வசமிருந்த ஐரோப்பியாவோ, வீரியம் கொடிகட்டிப் பறந்த இஸ்லாமிய நாடுகளோ சற்றும் யோசிக்காத காலத்தில், சமயத்தின் ஆழத்தில் ஊறிவிடாதிருந்த நாடாக அமெரிக்கா அன்று இருந்தது.
  1. அயலாரின் இரத்தத்தில் கையினைத் தோய்க்காமல்: என் கருத்து: ஐரோப்பாவில் வளர்ந்த பிரிட்டிஷ் அரசியல், அரேபியாவில் பிறந்த இஸ்லாமிய அரசியல் இவை தன் தேசத்திலும் பிற நாடுகளிலும் மதத்தின் பெயரால் செய்த போர்களில் இறந்தவர் எண்ணிக்கை கோடிக் கணக்காகும். அத்தகைய வரலாற்று அழுக்கு அமெரிக்காவுக்கு அன்று இல்லை. 
  1. அயலாரைக் கொள்ளையடிப்பதுதான் பணக்காரன் ஆகக் குறுக்குவழி என்று கண்டுபிடிக்காத உனக்குத்தான்: என் கருத்து: பிரிட்டன் எல்லா நாடுகளையும் வீரத்தாலும் பலவேளைகளில் சூழ்ச்சியாலும் வென்று, அந்நாடுகளின் பல பெருமைகளையும் சொத்துக்களையும் கொள்ளைகொண்டு, அவர்தம் நாட்டுக் கலாச்சாரத்தையும் பண்பாடுகளையும் சிதைத்திருந்தது. எல்லா வெல்த்தும் தனக்குத் தான் என்ற நிலையில் இருந்து காமன் வெல்த் என்ற கொள்கைக்கு பிரிட்டன் இறங்கிவரவே பல நூற்றாண்டுகள் ஆனது. சுவாமி விவேகானந்தர் காலத்தில் இந்தியா அடிமை நாடாகவே இருந்தது. 
  1. சமரசக் கொடி பிடித்து, நாகரீகப் படையின் முன்னணியில் வெற்றி நடை போடும்: என் கருத்து: மேற்கூறியபடி சமயவெறியின் அழுக்கு இல்லாத தேசமாகவும், எல்லோருக்கும் சம அந்தஸ்து, உழைக்கும் உரிமை, குறைவான உரிமையே உள்ள அரசு, நிறைவான உரிமை உள்ள குடிமகன் என்று நாகரிகத்தின் உச்சியைத் தொட்ட முதல் தற்கால நாடு அமெரிக்காதான்.

 

இத்தொடர் முடிந்தது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.