விவேக சிந்தனை மாலை – 009

*விவேக சிந்தனை மாலை – 009 – 18.10.2017*

*இந்துமதம்* 09

எல்லையற்றது என்ற கருத்தை நீலவானத்தின் அல்லது கடலின் தோற்றத்துடன் தொடர்புபடுத்தியே பார்க்க வேண்டியுள்ளது. மன அமைப்பு நியதிகள் அவ்வாறுதான் செயல்படுகின்றன.

அவ்வாறே புனிதம் என்றால் சர்ச், பள்ளிவாசல் அல்லது சிலுவை போன்ற உருவங்களுடன் அதனை இணைத்துப் பார்ப்பதுதான் இயல்பானது.

இந்துக்களும் தூய்மை, உண்மை, எங்கும் நிறைந்த நிலை ஆகிய கருத்துகளை பல்வேறு உருவங்களுடனும் தோற்றங்களுடனும் தொடர்புபடுத்தி உள்ளனர்.

ஆனால் ஒரு வித்தியாசம். சிலர் சர்ச்சின் உருவ வழிபாட்டுடன் தங்கள் வாழ்க்கை முழுவதையும் இணைத்துக்கொண்டு, அதற்கு மேல் வளராமல் நின்றுவிடுகிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை, மதம் என்றால் சில கோட்பாடுகளை ஒப்புக்கொள்வது, பிறருக்கு உதவி செய்வது என்பவை மட்டும்தான்.

இந்துவின் மதமோ தெய்வத்தை நேரடியாக உணர்வது. தெய்வத்தை உணர்ந்து, மனிதன் தெய்வமாக வேண்டும்.

திருவுருவங்கள், கோவில்கள், சர்ச்சுகள், நூல்கள் இவை எல்லாம் ஆன்மீக வாழ்க்கையின் குழந்தைப் பருவத்தில் இருக்கும் மனிதனுக்கு உதவிகள், ஆதாரங்கள். ஆனால் அவன் இன்னும் மேலே மேலே முன்னேற வேண்டும்.

 

அவன் எங்குமே நின்றுவிடக் கூடாது. “புற வழிபாடும் ஜடப்பொருள் வழிபாடும் கீழ்நிலை ஆகும். மேல்நிலைக்குவர முயன்று, மனத்தால் பிரார்த்தனை செய்தல், அடுத்த உயர்நிலை. ஆண்டவனை உணர்வதுதான் அனைத்திலும் மேலான நிலை” என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதே உறுதிப்பாடு கொண்டவர், விக்கிரகத்தின் முன்னால் முழந்தாளிட்டுக் கொண்டு கூறுவதைக் கேளுங்கள்: “அவனை சூரியனும் விவரிக்க முடியாது, சந்திரனும் விளக்க முடியாது. விண்மீன்களாலும் மின்னலாலும் விளக்க முடியாது. தீயும் அவனை விவரிக்காது. அவை அனைத்தும் அவனால்தான் ஒளிர்கின்றன.”

(நதத்ர ஸூர்யோ பாதி சந்த்ரதாரகம், நேமா வித்யுதோ பாந்தி குதோள்ய மக்னி: |  தமேவ பாந்தமனு பாதி ஸர்வம், தஸ்ய பாஸா ஸர்வமிம் விபாதி || – கட உபநிடதம்)

இந்து யாருடைய விக்கிரகத்தையும் இழிவுபடுத்திப் பேசுவதில்லை; எந்த வழிபாட்டையும் பாவம் என்று கூறுவதில்லை. அது வாழ்க்கையின் இன்றியமையாத படி என்று அவன் ஏற்றுக் கொள்கிறான். “குழந்தை, மனிதனின் தந்தை.” குழந்தைப் பருவம் பாவமானது, அல்லது வாலிபப்பருவம் பாவமானது என்று வயதானவர் சொல்வது சரியாகுமா ?

ஒரு விக்கிரகத்தின் மூலமாகத் தனது தெய்வீக இயல்பை ஒருவன் உணரமுடியும் என்றால், அதைப் பாவம் என்று கூறுவது சரியா ? அந்த நிலையைக் கடந்தபிறகு அவனே அதைப் பிழை என்று கூறலாமா ? இந்துவின் கொள்கைப்படி, மனிதன் தவறிலிருந்து உண்மைக்குச் செல்லவில்லை, உண்மையிலிருந்து உண்மைக்கு, அதாவது கீழ்நிலை உண்மையிலிருந்து மேல்நிலை உண்மைக்குப் பயணம் செய்கிறான். அவனைப் பொறுத்தவரை, மிகவும் தாழ்ந்த ஆவி வழிபாட்டிலிருந்து அத்வைதம் வரை எல்லாமே பரம்பொருளை உணர்வதற்காக ஆன்மா செய்யும் முயற்சிகள். ஒவ்வொன்றும் அது தோன்றிய இடத்தையும் சூழலையும் பொறுத்தது, ஒவ்வொன்றும் முன்னேற்றத்தின் ஒருபடியைக் குறிக்கிறது. ஒவ்வோர் ஆன்மாவும் மேலே மேலே பறந்து செல்லும் ஓர் இளம்பருந்தைப் போன்றது. அது உயரச் செல்லச்செல்ல மேன்மேலும் வலுவைப் பெற்று, கடைசியில் ஒளிமிக்க சூரியனை அடைகிறது.

வேறுபாட்டில் ஒருமைதான் இயற்கையின் நியதி. அதை இந்து உணர்ந்துள்ளான். பிற மதங்கள் எல்லாம் சில கோட்பாடுகளை நிர்ணயித்து அவற்றைச் சமுதாயம் ஏற்றுக் கொள்ளூமாறு கட்டாயப் படுத்துகின்றன; ஒரே ஒரு சட்டையை வத்துக்கொண்டு, சமுதாயத்திலுள்ள ஜாக், ஜான், ஹென்றி எல்லாருக்கும் அந்த ஒரு சட்டை பொருந்த வேண்டும் என்று கூறுகின்றன. ஜானுக்கோ ஹென்றிக்கோ சட்டை பொருந்தாவிட்டால் அவர்கள் சட்டையில்லாமல்தான் இருக்க வேண்டும்.

சார்புப்பொருட்கள் மூலமே எல்லையற்ற இறைவனை உணரவோ நினைக்கவோ பேசவோ முடியும்; திருவுருவங்களும் சிலுவைகளும் பிறைகளும் வெறும் சின்னங்களே, ஆன்மீகக் கருத்துக்களை மாட்டிவைப்பதற்குப் பயன்படும் ஆணிகளே என்பதை இந்துக்கள் கடுபிடித்துள்ளனர். இந்த உதவி எல்லோருக்கும் தேவை என்பது அல்ல; ஆனால், தேவைப்படாதவர்கள், அது தவறு என்று கூற உரிமையில்லை. இந்து மதத்தில் அது கட்டாயமும் அல்ல.

ஒன்று நான் சொல்லவேண்டும். இந்தியாவில் உருவ வழிபாடு என்பது பயங்கரமான ஒன்றல்ல, விலைமகளிரை உருவாக்கும் இடமும் அல்ல. உயர்ந்த ஆன்மீக உண்மைகளைப் புரிந்து கொள்வதற்கு, பக்குவப் படாதவர்களின் முயற்சிதான் உருவ வழிபாடு. இந்துக்களிடம் தவறுகள் உண்டு, சிலவேளைகளில் விதிவிலக்குகளும் உண்டு. ஆனால் ஒன்றைக் கவனியுங்கள்: அவர்கள் தங்கள் உடல்களை வருத்திக் கொள்வார்களே தவிர, அடுத்தவனின் கழுத்தை அறுக்கமாட்டார்கள். இந்து மத வெறியன் தன்னைத் தீயில் கொளுத்திக் கொள்வானே தவிரப் பிறரையல்ல. சூனியக்காரிகள் கொளுத்தப்பட்டதற்கு எப்படிக் கிறிஸ்தவ மதம் பொறுப்பில்லையோ, அதேபோல் இதற்கும் இந்துமதம் பொறுப்பல்ல.

— தொடரும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.