விவேக சிந்தனை மாலை – 008

விவேக சிந்தனை மாலை – 008 – 17.10.2017

இந்துமதம் 08

ஒருமைநிலையைக் கண்டுபிடிப்பதுதான் விஞ்ஞானம். முழுமையான ஒருமைநிலை கிட்டியதும் விஞ்ஞானம் மேலே செல்லாமல் நின்றுவிடும். ஏனெனில் அது தன் குறிக்கோளை எட்டிவிட்டது. அதுபோலவே, எந்த மூலப்பொருளிலிருந்து எல்லா பொருட்களும் படைக்கப்படுகின்றனவோ, அதைக் கண்டுபிடித்த பின்னர் வேதியியல் முன்னேற முடியாது. எந்த மூலசக்தியிலிருந்து எல்லா சக்திகளும் வெளிப்படுகின்றனவோ, அதைக் கண்டறிந்ததும் இயற்பியல் நின்றுவிடும். மரணம் நிறைந்த இந்தப் பிரபஞ்சத்தில், மரணத்தைக் கடந்து நிற்கும் ஒரே உயிரைக் கண்டுபிடித்ததும், மாறிக் கொண்டே இருக்கும் உலகில் மாறாத ஒரே அடிப்படையான அவனைக் கண்டுபிடித்ததும், எந்த ஓர் ஆன்மாவிலிருந்து பிற ஆன்மாக்கள் வெளிப்படுவது போன்று மாயையால் தோன்றுகிறதோ அந்த ஆன்மாவைக் கண்டுபிடித்ததும், மத விஞ்ஞானம் பூரணமாகிவிடும்.

விஞ்ஞானம் அனைத்தும் கடைசியில் இந்த முடிவுக்குத்தான் வரவேண்டும். ஒடுங்கி இருப்பவை வெளிப்படுகின்றனவே தவிர படைப்பு என்பதில்லை என்பதுதான் இன்றைய விஞ்ஞானத்தின் கூற்று. தான் பல்லாண்டுகளாக இதயத்தில் வைத்துப் போற்றி வந்த உண்மை, இன்னும் ஆற்றல் மிக்க மொழியில், தற்கால விஞ்ஞான முடிவுகளின் ஆதார விளக்கங்களுடன் புகட்டப்படப் போகிறது என்பதை அறிந்து இந்து பெருமகிழ்ச்சியே அடைகிறான்.

தத்துவ நாட்டத்திலிருந்து இப்போது நாம் சாதாரண மக்களின் மதத்திற்கு வருவோம். பலதெய்வ வழிபாடு (Polytheism) இந்தியாவில் இல்லை என்பதை முன்கூட்டியே சொல்லிவிடுகிறேன். ஆலயங்களில் வழிபடுபவர்கள், அங்கிருக்கும் திருவுருவங்களை, தெய்வத்தின் எல்லா குணங்களும் – எங்கும் நிறைந்த தன்மை உட்படத்தான் – இருப்பதாகக் கூறி வழிபடுவதை அருகிலிருந்து கவனித்தால் அறியலாம். அது பலதெய்வ வழிபாடாகாது; பலதெய்வங்களில் ஒருவரை ஆற்றல் மிக்கவராகக் கருதி, அவரை வழிபடுகின்ற கோட்பாடு (Henotheism) என்றும் இதனை விளக்கமுடியாது. “ரோஜா மலரை எந்தப் பெயரிட்டு அழைத்தாலும் அதே நறுமணம்தான் கமழும்.“ பெயர்கள் விளக்கங்களாக மாட்டா.

நான் சிறுவனாயிருந்தபோது, கிறிஸ்தவ பாதிரி ஒருவர், ஒரு கூட்டத்தில் பிரச்சாரம் செய்துகொண்டிருந்த நிகழ்ச்சி என் நினைவிற்கு வருகிறது. பல சுவையான செய்திகளைச் சொல்லிக்கொண்டே வந்த அவர் இடையில், “நான் உங்கள் விக்கிரகத்தை என் கைத்தடியால் ஓங்கி அடித்தால் அது என்னை என்ன செய்துவிடும் ?” என்று கேட்டார். அதனைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களுள் ஒருவர் சற்றும் தாமதியாமல், “உங்கள் ஆண்டவரை நான் ஏசினால் அவர் என்னை என்ன செய்வார் ?” என்று கேட்டார், “இறந்ததும் நீ தண்டிக்கப் படுவாய்” என்று பதிலளித்தார் பாதிரி. “அப்படியே எங்கள் விக்கிரகமும் நீர் இறந்ததும் உம்மைத் தண்டிக்கும்” என்று சொன்னார் அந்த இந்து !

பழத்தைக் கொண்டு மரம் அறியப்படுகிறது. உருவ வழிபாட்டினர் என்று கூறப்படுபவர்களுள், ஒழுக்கத்திலும், ஆன்மீகத்திலும், பக்தியிலும் ஈடிணையற்று விளங்குபவர்களை நான் காணும்போது, “பாவத்திலிருந்து புனிதம் பிறக்குமா ?” என்று என்னை நானே கேட்டுக் கொள்கிறேன்.

மூடநம்பிக்கை, மனிதனின் பெரும் பகைவன்தான். ஆனால் மதவெறி அதைவிட மோசமானது. கிறிஸ்தவன் ஏன் சர்ச்சுக்குப் போகிறான் ? சிலுவை ஏன் புனிதமானது ? பிரார்த்தனை செய்யும்போது முகம் ஏன் வானை நோக்க வேண்டும் ? கத்தோலிக்க சர்ச்சுக்களில் ஏன் அத்தனை உருவங்கள் ? பிராட்டஸ்டன்டினர் பிரார்த்தனை செய்யும்போது அவர்கள் உள்ளங்களில் ஏன் அத்தனை உருவங்கள் உள்ளன ?

என் சகோதரர்களே, சுவாசிக்காமல் உயிர்வாழ முடியாததுபோல், உள்ளத்தில் ஓர் உருவத் தோற்றமின்றி, நாம் எதனையும் நினைத்துப் பார்க்க முடியாது. தொடர்பு விதியின்படி (Law of Association) புற உருவம் அகக்கருத்தையும், அகக்கருத்து புற உருவத்தையும் நினைவுபடுத்துகிறது. அதனால்தான் இந்து வழிபடும்போது, ஒரு புறச் சின்னத்தைப் பயன் படுத்துகிறான். தான் வழிபடும் பரம்பொருளின்மீது சிந்தையைப் பதியச் செய்வதற்கு அது உதவுகிறது என்று அவன் கூறுவான். அந்த உருவம் கடவுள் அல்ல, அது எங்கும் நிறைந்தது அல்ல என்று உங்களைப்போல் அவனுக்கும் தெரியும். “எங்கும் நிறைந்தது” என்று சொல்லும்போது பெரிதாக என்னதான் புரிந்துகொள்ள முடியும் ? அது ஒரு சொல், சின்னம் மட்டுமே. இறைவனுக்குப் பரப்பு இருக்க முடியுமா என்ன ? “எங்கும் நிறைந்தவர்” என்று நாம் திரும்பத் திரும்பச் சொல்லும்போது, மிஞ்சிப் போனால், விரிந்த வானையும் பரந்த வெளியையும் நினைக்கலாம், அவ்வளவுதான்.

— தொடரும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.