விவேக சிந்தனை மாலை – 007

விவேக சிந்தனை மாலை – 007 – 17.10.2017

இந்துமதம் 07

இந்து வார்த்தைகளிலும் கொள்கைகளிலும் வாழ விரும்பவில்லை. புலன்வசப்பட்ட சாதாரண வாழ்விற்கு அப்பாற்பட்ட வாழ்வு உண்டு என்றால், அவன் அவற்றை நேருக்குநேர் காண விரும்புகிறான். ஜடப்பொருள் அல்லாத ஆன்மா என்ற ஒன்று அவனுள் இருக்குமானால் அதனிடம் நேரே செல்ல விரும்புகிறான். கருணையே வடிவான எங்கும் நிறைந்த இறைவன் ஒருவர் இருப்பாரானால் அவரை நேரே காண விழைகிறான். அவன் அவரைக் காண வேண்டும்; அதுதான் அவனது எல்லா சந்தேகங்களையும் அகற்றும். ஆன்மா இருக்கிறது, கடவுள் இருக்கிறார் என்பதற்கு ஓர் இந்து ஞானி கொடுக்கக் கூடிய சிறந்த சான்று. ‘நான் ஆன்மாவைக் கண்டுவிட்டேன், நான் கடவுளைக் கண்டுவிட்டேன்’ என்று அவர் கூறுவதுதான். நிறைநிலைக்கு அதுதான் ஒரே நியதி. இந்துமதம் என்பது ஏதோ கோட்பாட்டையோ கொள்கையையோ நம்புவதற்கான போராட்டங்களிலும் முயற்சிகளிலும் அடங்கிவிடாது. வெறும் நம்பிக்கை அல்ல, உணர்தலே, உணர்ந்து அதுவாக ஆதலே இந்துமதம்.

இடைவிடாத முயற்சியின்மூலம் நிறைநிலை பெறுவதும் தெய்வத்தன்மை அடைவதும் தெய்வத்தை அணுகுவதும் அவனைக் காண்பதுமே அவர்களது நெறியின் ஒரே நோக்கம். தெய்வத்தை அணுகி, அவனைக் கண்டு, வானில் உறையும் தந்தையைப்போல் நிறைநிலை அடைவதுதான் இந்துக்களின் மதம்.

நிறைநிலை பெறும் ஒருவன் என்ன ஆகிறான் ? அவன் எல்லையற்ற, முழுமையான பேரானந்தப் பெருக்கில் திளைத்து வாழ்கிறான். பேரின்பம் பெற எதனை அடையவேண்டுமோ, அந்த ஆண்டவனை நினைத்து அவனுடன் பேரானந்தத்தில் கலக்கிறான்.

இதுவரையில் எல்லா இந்துக்களும் ஒத்துப்போகின்றனர். இந்தியாவிலுள்ள எல்லா மதப்பிரிவினர்களுக்கும் இதுதான் பொதுவாக உள்ள மதம். நிறைநிலை என்பது எல்லையற்றது. எல்லையற்றது இரண்டாகவோ, மூன்றாகவோ இருக்க முடியாது. அதற்கு குணங்கள் இருக்கமுடியாது. அது தனிப்பட்ட ஆளாக இருக்கமுடியாது. எனவே ஆன்மா நிறைநிலையையும் எல்லையற்ற நிலையையும் அடையும்போது பிரம்மத்துடன் ஒன்றாகிய தீரவேண்டும்.

அது இறைவனை நிறைநிலையாக, ஒரே உண்மையாக, தானேயாக, தனது இயல்பாக, இருக்கின்ற ஒருவர் மட்டுமாக, தனியறிவு வடிவாக, பேரானந்த வடிவாக உணர்கிறது. தனித்தன்மையை இழந்து, ஒரு கட்டையைப் போன்றோ, கல்லைப் போன்றோ ஆகிவிடுவதுதான் இந்த நிலை என்றெல்லாம் படிக்கிறோம். ‘ காயம் படாதவன் தான் தழும்பைக் கண்டு நகைப்பான்.’

நான் சொல்கிறேன். அது அம்மாதிரி அல்ல. இந்தச் சிறிய உடலின் உணர்வை அனுபவிப்பது இன்பமானால், இரண்டு உடல்களின் உணர்வை அனுபவிப்பது இன்னும் அதிக இன்பமாகும். உடல்களின் எண்ணிக்கை பெருகப்பெருக இன்பத்தின் அளவும் பெருகுகிறது. இறுதியாக, பிரபஞ்ச உணர்வாக மாறும்போது நமது குறிக்கோளாகிய எல்லையற்ற இன்பம் கிட்டுகிறது.

எல்லையற்ற, பிரபஞ்சம் தழுவிய அந்த தனித்தன்மையைப் பெற வேண்டுமானால், துன்பம் நிறைந்த இந்த உடற்சிறை என்னும் தனித்தன்மை அகலவேண்டும். நாம் உயிருடன் ஒன்றும்போதுதான் மரணம் அகல முடியும். அறிவுடன் ஒன்றும்போதுதான் பிழைகள் அகல முடியும். இதுதான் விஞ்ஞானத்துக்குப் பொருந்துகின்ற முடிவு. உடலைச் சார்ந்த தனித்தன்மை ஒரு மாயை, இடைவெளியற்றுப் பரந்து நிற்கின்ற ஜடப்பொருளாகிய கடலில், தொடர்ந்து மாறிக்கொண்டே செல்லும் ஒரு சிறிய பொருள்தான் என் உடல் என்று விஞ்ஞானம் நிரூபித்துவிட்டது. எனவே என் இன்னொரு பாகமான ஆன்மா அத்வைதம் (ஒருமை) என்ற முடிவுக்குத்தான் வரவேண்டியிருக்கிறது.

— தொடரும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.