விவேக சிந்தனை மாலை – 006

விவேக சிந்தனை மாலை – 006 – 17.10.2017

இந்துமதம் 06

அவனது இயல்புதான் என்ன ?

அவன் எங்கும் நிறைந்தவன், புனிதமானவன், உருவற்றவன், எல்லாம் வல்லவன், பெருங்கருணையாளன். “அப்பனும் நீ, அன்னையும் நீ, அன்புடைய நண்பனும் நீ, ஆற்றல் அனைத்தின் தோற்றமும் நீ, எமக்கு வலிமை தந்தருள்வாய் ! புவனத்தின் சுமையைத் தாங்குபவனே, இந்த வாழ்க்கையின் சுமையைத் தாங்க எங்களுக்கு அருள் செய்வாய் !” வேத முனிவர்கள் இவ்வாறு பாடினர்.

அவனை எப்படி வழிபடுவது ? அன்பினால். “இம்மையிலும் மறுமையிலும் உள்ள எதையும்விட அதிக அன்பிற்கு உரியவனாக அவனை வழிபடவேண்டும்”.

வேதங்கள் முழங்குவதும் இந்த அன்பு நெறியையே. கடவுளின் அவதாரம் என்று இந்துக்கள் நம்பிப் போற்றும் ஸ்ரீகிருஷ்ணர் அதை எப்படி வளர்த்தார், எப்படி மக்களுக்குப் போதித்தார் என்று பார்ப்போம்.

மனிதன் இவ்வுலகில் தாமரை இலையைப்போல் வாழவேண்டும் என்று ஸ்ரீகிருஷ்ணர் சொன்னார். அது தண்ணீரில் வளர்கிறது, ஆனால் தண்ணீரால் நனைவதில்லை. அதுபோல் மனிதன் இந்த உலகில் வாழவேண்டும் – இதயத்தை இறைவன்பால் வைத்து கைகளால் வேலை செய்யவேண்டும்.

இவ்வுலக நன்மை அல்லது மறுவுலக நன்மை கருதி, இறைவனிடம் அன்பு செலுத்துவது நல்லதுதான். ஆனால் அன்பிற்காகவே அவனிடம் அன்பு செலுத்துவது சிறந்தது.

எம்பெருமானே, எனக்குச் செல்வமோ, பிள்ளைகளோ, கல்வியோ வேண்டாம். உனது திருவுள்ளம் அதுவானால் நான் மீண்டும் மீண்டும் பிறக்கத் தயாராக உள்ளேன். ஆனால் நான் பலன் கருதாது உன்னிடம் அன்பு கொள்ளவும், தன்னலமின்றி அன்பிற்காகவே அன்பு செய்யவும் அருள்செய் என்கிறது ஒரு பிரார்த்தனை.

ஸ்ரீகிருஷ்ணரின் சீடர்களில் ஒருவர், பாரதத்தின் அன்றைய சக்கரவர்த்தியாக விளங்கிய யுதிஷ்டிரர். அவர் பகைவர்களால் நாட்டிலிருந்து விரட்டப்பட்டு, மனைவியுடன் இமயமலைக்காட்டில் வசிக்க நேர்ந்தது. ஒருநாள் அரசி யுதிஷ்டிரரிடம், “அறத்தில் மிகச் சிறந்து விளங்கும் உங்களுக்கு ஏன் துன்பம் வரவேண்டும் ?” என்று கேட்டாள். அதற்கு யுதிஷ்டிரர், “தேவி, இதோ, இந்த இமயமலையைப் பார். எவ்வளவு எழிலோடும் மாட்சிமையோடும் காட்சியளிக்கிறது ! நான் இதனை நேசிக்கிறேன். இது எனக்கு ஒன்றும் தருவதில்லை. அழகும் கம்பீரமும் நிறைந்தவற்றில் உள்ளத்தைப் பறிகொடுப்பது என் இயல்பு. அதனால் நான் அதனை விரும்புகிறேன். அதுபோலவே இறைவனை நான் நேசிக்கிறேன். அவரே எல்லா அழகிற்கும் கம்பீரத்திற்கும் மூலகாரணம். அன்பு செலுத்தப்பட வேண்டியவர் அவர் ஒருவரே. அவரை நேசிப்பது என் இயல்பு. ஆதலால் நான் அவரை நேசிக்கிறேன். நான் எதுவும் கேட்கவில்லை. அவர் விருப்பம்போல் என்னை எங்கு வேண்டுமானாலும் வைக்கட்டும். அன்பிற்காகவே அவரிடம் நான் அன்பு செலுத்தவேண்டும். அன்பை விலைபேச என்னால் முடியாது” என்றார்.

ஆன்மா தெய்வீகமானது. ஆனால் ஜடப்பொருளின் கட்டுக்குள் அகப்பட்டுக் கொண்டிருக்கிறது என்று வேதங்கள் கூறுகின்றன. இந்தக்கட்டு அவிழும்போது ஆன்மா நிறைநிலையை அடைகிறது. அந்த நிலையே முக்தி. முக்தி என்பது விடுதலை என்ற சொல்லால் அழைக்கப்படுகிறது. விடுதலை – நிறைவுறாத நிலையிலிருந்து விடுதலை, மரணத்திலிருந்தும் துன்பத்திலிருந்தும் விடுதலை.

கடவுளின் கருணையால்தான் இந்தக் கட்டு அவிழும். அந்தக் கருணை தூயவர்களுக்குத்தான் கிடைக்கும். எனவே, அவனது கருணையைப் பெறுவதற்குத் தூய்மை அவசியம் என்றாகிறது. அந்தக் கருணை எப்படிச் செயல்படுகிறது ?

தூய உள்ளத்தில் அவன் தன்னை வெளிப்படுத்துகிறான். ஆம், தூயவர்களும் மாசற்றவர்களும் இந்தப் பிறவியிலேயே கடவுளைக் காண்கின்றனர். அப்போதுதான் இதயக்கோணல்கள் நேராகின்றன, சந்தேகங்கள் அகலுகின்றன. காரணகாரியம் என்ற பயங்கர விதி அவர்களை அணுகுவதில்லை.

இதுதான் இந்து மதத்தின் மையமும், அதன் முக்கியமான அடிப்படைக் கருத்தும் ஆகும்.

— தொடரும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.