விவேக சிந்தனை மாலை – 005

விவேக சிந்தனை மாலை – 005 – 17.10.2017

இந்துமதம் 05

இங்கு மற்றொரு கேள்வி எழுகிறது.

சூறாவளியில் சிக்கி, ஒரு கணம் அலையின் நுரைநிறைந்த உச்சிக்குத் தள்ளப்பட்டு, அடுத்த கணமே, ‘ஆ’வென்று வாயைப் பிளந்து கொண்டிருக்கும் பள்ளத்தில் வீழ்த்தப்பட்டு, நல்வினை தீவினைகளின் ஆதிக்கத்தில் மேலும் கீழுமாக உருண்டு உழன்று கொண்டிருக்கும் ஒரு சிறு படகா மனிதன் ? கடுஞ்சீற்றமும். படுவேகமும் சற்றும் விட்டுக் கொடுக்காத காரணகாரியம் என்னும் நீரோட்டத்தில் அகப்பட்டு, அழிந்து போகின்ற,. சக்தியற்ற, உதவியற்ற பொருளா மனிதன் ? அல்லது, விதவையின் கண்ணீரைக் கண்டும், அனாதையின் அழுகுரலைக் கேட்டும், சற்றும் நிற்காமல், தான் செல்லும் வழியிலுள்ள அனைத்தையும் நசுக்கிக் கொண்டு உருண்டு ஓடும் காரணம் என்னும் சக்கரத்தின் அடியில் எறியப்பட்ட புழுவைப் போன்றவனா மனிதன் ?

இதை நினைக்கும்போது நெஞ்சு தளர்கிறது. ஆனால் இதுதான் இயற்கையின் நியதி. நம்பிக்கை இழந்த நெஞ்சின் அடித்தளத்திலிருந்து ‘நம்பிக்கையே கிடையாதா ? தப்பிக்க வழியே கிடையாதா ?’ என்ற குரல் எழுந்து மேலே சென்றது. அந்தக் குரல் கருணைத் திருவுருவின் அரியாசனத்தை அடைந்தது. அங்கிருந்து நம்பிக்கையும் ஆறுதலும் அளிக்கும் சொற்கள் கீழே வந்தன. அவை ஒரு வேத முனிவரைக் கிளர்ந்தெழச் செய்ய, அவர் எழுந்து நின்று உலகோரைப் பார்த்து கம்பீர தொனியுடன் பின்வரும் செய்தியை முழங்கினார்:

ஓ அழியாத பேரின்பத்தின் குழந்தைகளே ! கேளுங்கள். உயர் உலகங்களில் வாழ்பவர்களே ! நீங்களும் கேளுங்கள். அனைத்து இருளையும், அனைத்து மாயையையும் கடந்த ஆதி முழுமுதலை நான் கண்டுவிட்டேன். அவரை அறிந்தால்தான் நீங்கள் மீண்டும் இறப்பிலிருந்து காப்பாற்றப் படுவீர்கள்.

*ச்ருண்வந்து விச்வே அம்ருதஸ்ய புத்ரா:

ஆயே தாமானி திவ்யானி தஸ்து: …

வேதாஹமேதம் புருஷம் மஹாந்தம்

ஆதித்ய வர்ணம் தமஸ: பரஸ்தாத்

தமேவ விதித்வாSதிம்ருத்யேதி

நான்ய: பந்தா வித்யதேSயனாய* — சுவேதாஸ்வர உபநிடதம்.

 

“அழியாத பேரின்பத்தின்  குழந்தைகளே !” ஆ, ஆ ! எவ்வளவு இனிமையான, எவ்வளவு நம்பிக்கை ஊட்டும் பெயர் ! அருமை சகோதரர்களே ! அந்த இனிய பெயரால் உங்களை நான் அழைக்க அனுமதி தாருங்கள். அழியாத பேரின்பத்தின் வாரிசுகளே ! ஆம், உங்களைப் பாவிகள் என்று அழைக்க இந்து மறுக்கிறான். நாம் ஆண்டவனின் குழந்தைகள், அழியாத பேரின்பத்தின் பங்குதாரர்கள், புனிதமானவர்கள், பூரணமானவர்கள். வையத்துள் வாழும் தெய்வங்களே ! நீங்கள் பாவிகளா ? மனிதர்களை அப்படிச் சொல்வது பாவம்; மனித இயல்புக்கே அது அழியாத களங்கம். சிங்கங்களே, வீறுகொண்டு எழுங்கள். நீங்கள் ஆடுகள் என்ற மாயையை உதறித் தள்ளுங்கள். நீங்கள் அழியாத ஆன்மாக்கள், சுதந்திரமான, தெய்வீகமான, நிரந்தர ஆன்மாக்கள் ! நீங்கள் ஜடப்பொருள் அல்ல, நீங்கள் உடல் அல்ல; ஜடப்பொருள் உங்கள் பணியாள், நீங்கள் ஜடப்பொருளின் பணியாளர் அல்ல.

இரக்கமற்ற விதிகளின் ஒரு பயங்கரத் தொகுதியை வேதங்கள் கூறவில்லை; காரண காரியம் என்னும் எல்லையற்ற சிறைச் சாலையை அறிவிக்கவில்லை; ஆனால் இந்த விதிகளுக்கெல்லாம் முடிவில், ஜடம், சக்தி ஆகியவற்றின் ஒவ்வொரு சிறுபகுதியின் உள்ளும் புறமும் ஒருவன் இருக்கிறான்;  “அவனது கட்டளையால்தான் காற்று வீசுகிறது, நெருப்பு எரிகிறது, வானம் பொழிகிறது, உலகில் மரணம் நடைபோடுகிறது” என்று கூறுகின்றன.

அவனது இயல்புதான் என்ன ?

— தொடரும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.