விவேக சிந்தனை மாலை – 004

விவேக சிந்தனை மாலை – 004 – 16.10.2017

இந்துமதம் 04

இன்னொரு கருத்தும் இருக்கிறது. இவையெல்லாம் சரியென்றே வைத்துக் கொள்வோம். ஆனால் ஏன் எனக்கு முற்பிறவியைப் பற்றிய எதுவும் நினைவில் இல்லை ? இதை எளிதில் விளக்க முடியும். இப்போது நான் ஆங்கிலம் பேசிக் கொண்டிருக்கிறேன். இது என் தாய்மொழி அல்ல. உண்மையில், என் தாய்மொழிச் சொற்கள் எதுவும் என் உணர்வுத்தளத்தில் இப்போது இல்லை. ஆனால் பேசுவதற்குச் சிறிது முயன்றால் போதும், அவை விரைந்து வந்து விடும். மனக்கடலின் மேற்பரப்பு மட்டுமே உணர்வுப்பகுதி, மனத்தின் ஆழத்தில்தான் அனுபவங்கள் அனைத்தும் திரண்டு கிடக்கின்றன என்பதை இது காட்டுகிறது. முயலுங்கள், போராடுங்கள், அவை மேலே வரும். முற்பிறவியையும் நீங்கள் அறியமுடியும்.

இது நேரானது, நிரூபிக்கப்படக் கூடியது. நிரூபிக்கப்படுவதுதான் ஒரு கொள்கை சரியென்பதற்குச் சான்று. உலகிற்கு ரிஷிகள் விடுக்கும் அறைகூவல் இதுவே: ’நினைவுக்கடலின் ஆழத்தைக் கிளறிவிடக்கூடிய ரகசியத்தை நாங்கள் கண்டுபிடித்துள்ளோம். முயலுங்கள், முயன்றால் நீங்களும் நிச்சயமாக முற்பிறவி நினைவுகளை முழுமையாகப் பெறுவீர்கள்.

தான் ஓர் ஆன்மா என்பதை இந்து நம்புகிறான். ஆன்மாவை வாள் வெட்ட முடியாது, நெருப்பு எரிக்க முடியாது, நீர் கரைக்க முடியாது, காற்று உலர்த்த முடியாது. ஒவ்வோர் ஆன்மாவும் சுற்றெல்லையில்லாத, ஆனால் உடலை மையமாகக் கொண்ட ஒரு வட்டம். இந்த மையம் ஓர் உடலிலிருந்து மற்றோர் உடலுக்கு மாறிச் செல்வதே மரணம் என்று இந்து நம்புகிறான். ஜடப்பொருளின் நியதிகளுக்கும் ஆன்மா கட்டுப்பட்டதல்ல. அது இயல்பாகவே சுதந்திரமானது, தளைகள் அற்றது, வரம்பற்றது, புனிதமானது, தூய்மையானது, முழுமையானது. எப்படியோ அது, தான் ஜடத்துடன் கட்டுப்பட்டதாகத் தன்னைக் காண்கிறது. எனவே தன்னை ஜடமாகக் கருதுகிறது.

சுதந்திரமான, நிறைவான, தூய்மையான ஆன்மா ஏன் இவ்வாறு ஜடத்திற்கு அடிமையாக இருக்கவேண்டும் என்பது அடுத்த கேள்வி. முழுமையான ஆன்மா, தான் முழுமையற்றது என்ற நம்பிக்கையில் எவ்வாறு மயங்கமுடியும் ?

இத்தகைய கேள்விக்கு இங்கு இடமில்லை என்று கூறி, இந்துக்கள் இதைத் தட்டிக் கழிப்பதாகச் சொல்லப்படுகிறது. சில சிந்தனையாளர்கள், முழுமை நிலைக்குச் சற்றுக்கீழே இருக்கின்ற, ஆனால் முழுமை பெறாத பல தேவதைகளைக்கூறி, பெரிய பெரிய சொற்களால் இடைவெளியை நிரப்ப முயற்சி செய்வதன்மூலம் இதற்கு விடை காண விரும்புகிறார்கள். ஆனால் பெரிய சொற்களைக் கூறுவது விளக்கமாகி விடாது. கேள்வி அப்படியேதான் இருக்கிறது. முழுமையான ஒன்று முழுமை நிலையிலிருந்து எப்படிக் கீழே வரமுடியும் ? தூய்மையானதும் முழுமையானதுமான பொருள் தன் இயல்பை எப்படி அணுவளவேனும் மாற்றிக் கொள்ள முடியும் ?

இந்து நேர்மையானவன். அவன் குதர்க்க வாதம் செய்து தப்பிக்க விரும்பவில்லை. கேள்வியை ஆண்மையுடன் எதிர்கொள்ளும் துணிவு அவனுக்கு உண்டு. அவனது பதில் இதுதான்: ’எனக்குத் தெரியாது. முழுமையான ஆன்மா, தான் முழுமையற்றது என்றும், ஜடத்துடன் இணைக்கப்பட்டு அதனால் பாதிப்படைகிறது என்றும் ஏன் தன்னைப்பற்றி நினைக்க ஆரம்பித்தது என்று எனக்குத் தெரியாது’. உண்மை அதுதான். ஒவ்வொருவரும் தன்னை உடலாக நினைத்துக் கொண்டிருப்பது உண்மைதான். தான் உடல் என எண்ணிக் கொள்வது ஏன் என்பதை விளக்க எந்த இந்துவும் முயல்வதில்லை. அது கடவுளின் திருவுளம் என்று பதில் அளிப்பது விளக்கமாகாது. ‘*எனக்குத் தெரியாது*’ என்று இந்து கூறுகிறானே, அதற்குமேல் எதுவும் சொல்ல முடியாது.

ஆகவே மனித ஆன்மா நிலையானது, அழிவற்றது, நிறைவானது, எல்லையற்றது. மரணம் என்பது ஓர் உடலிலிருந்து மற்றோர் உடலுக்கு இடம்பெயர்தலே ஆகும். கடந்தகால வினைகளால் நிகழ்காலம் தீர்மானிக்கப் படுகிறது. எதிர்காலம் நிகழ்காலத்தால் நிர்ணயிக்கப் படுகிறது. பிறப்புக்குப்பின் பிறப்பு, இறப்புக்குப்பின் இறப்பு, என்று ஆன்மா மேல்நிலைக்கு உயர்ந்தோ அல்லது கீழ்நிலைக்குத் தாழ்ந்தோ சென்று கொண்டிருக்கும்.

இங்கு மற்றொரு கேள்வி எழுகிறது.

— தொடரும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.