விவேக சிந்தனை மாலை – 003

விவேக சிந்தனை மாலை – 003 – 16.10.2017

*இந்துமதம்* 03

இங்கு நான் நிற்கிறேன். கண்களை மூடிக்கொண்டு, ‘நான், நான், நான்’ என்று என்னைப்பற்றி நினைத்தால் என்னுள் என்ன தோன்றுகிறது ? உடலைப் பற்றிய எண்ணம்தான். அப்படியானால் ஜடப்பொருள்களின் மொத்த உருவம்தானா நான் ? ‘இல்லை’ என்கின்றன வேதங்கள். நான் உடலில் உறைகின்ற ஆன்மா. நான் உடல் அல்ல. உடல் அழிந்துவிடும், ஆனால் நான் அழிய மாட்டேன். நான் இந்த உடலில் இருக்கிறேன்; இது வீழ்ந்துவிடும், ஆனால் நான் வாழ்ந்துகொண்டே இருப்பேன். நான் முன்னமும் வாழ்ந்து கொண்டுதான் இருந்தேன். ஆன்மா படைக்கப்பட்டதல்ல. படைக்கப்பட்டதானால் அது பல பொருட்களின் சேர்க்கையாகும். அப்படியானால் வருங்காலத்தில் அது கண்டிப்பாக அழிந்துபோகும். எனவே ஆன்மா படைக்கப் பட்டதானால் அது இறக்க வேண்டும்.

சிலர் பிறக்கும்போதே இன்பத்தில் பிறக்கிறார்கள்; உடல் வளத்தோடும் வனப்போடும் மனவலிமையோடும் தேவைகள் அனைத்தும் நிறைவேறப் பெற்று வாழ்கிறார்கள். சிலர் துயரத்திலேயே பிறக்கிறார்கள். சிலர் முடமாகவும் நொண்டியாகவும் இருக்கிறார்கள். சிலர் முட்டாள்களாகவே வாழ்ந்து, வாழ்க்கை முழுவதையும் ஏதோ இழுபறி நிலையிலேயே கடத்துகிறார்கள்.

இவர்கள் அனைவரும் படைக்கப்பட்டவர்கள் என்றால், நேர்மையும் கருணையும் உள்ள கடவுள், ஒருவரை இன்பத்தில் திளைப்பவராகவும், இன்னொருவரைத் துன்பத்தில் உழல்பவராகவும் ஏன் படைக்கவேண்டும் ? அவர் ஏன் இத்தனை வேறுபாடு காட்ட வேண்டும் ? இந்தப் பிறவியில் துன்பப்படுபவர்கள் அடுத்த பிறவியில் இன்பம் அடைவார்கள் என்று கூறுவது பொருந்தாது. நேர்மையும் கருணையும் கொண்ட கடவுளின் ஆட்சியில் ஏன் ஒருவர் துயருற வேண்டும் ?

ஆகவே படைப்பாளராகிய கடவுள் ஒருவர் இருக்கிறார் என்று கொள்வது இந்த முரண்பாட்டைத் தெளிவு படுத்தவில்லை; மாறாக, எல்லா வல்லமையும் வாய்ந்த ஒருவரின் கொடுங்கோன்மையையே காட்டுகிறது. அப்படியானால், ஒருவன் மகிழ்வதற்கோ துயரத்தில் உழல்வதற்கோ உரிய காரணங்கள், அவன் பிறப்பதற்கு முன்பே இருந்திருக்க வேண்டும். அவையே அவனது முற்பிறப்பின் வினைகள்.

ஒருவனுடைய உடல், உள்ளம் ஆகியவற்றின் இயல்புகள் பரம்பரையாக வருவது என்று காரணம் காட்டப்படுகிறது அல்லவா ? வாழ்க்கையில் இரண்டு இணைகோடுகள் உள்ளன – ஒன்று மனத்தைப் பற்றியது, இன்னொன்று ஜடப்பொருளைப் பற்றியது. ஜடப்பொருளும் அதன் மாற்றங்களும் மட்டுமே நமது இந்த நிலையை விளக்கிவிடும் என்றால் ஆன்மா என்ற ஒன்று இருக்கிறது என்று கொள்ளவேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ஜடத்திலிருந்து எண்ணம் தோன்றியது என்று நிரூபிக்க முடியாது. தத்துவப்படி, ஒரே ஒரு பொருள்தான் இருக்க முடியுமானால், ஆன்மா ஒன்றே ஒன்றுதான் இருக்க வேண்டும் என்று ஆகிறது. இது, ஜடப்பொருள் ஒன்றே ஒன்றுதான் இருக்கவேண்டும் என்பதைப்போல் பகுத்தறிவுக்குப் பொருந்தியதே; ஜடப்பொருள் மட்டுமே உள்ளது என்று சொல்வதைவிட உயர்வானதும்கூட. ஆனால் இவை எதுவும் இப்போது நமக்கு அவசியமில்லை.

பரம்பரையின்மூலம் உடல்கள் சில இயல்புகளைப் பெறுகின்றன என்பதை நாம் மறுக்க முடியாது. ஆனால் மனம் குறிப்பிட்ட விதமாகச் செயல்படுவதற்கு ஆதாரமாக இருக்கின்ற ஒரு தூல உருவத்தையே இந்த இயல்புகள் குறிக்கின்றன. இனி, ஆன்மாவிற்கும் கடந்தகால விளைவுகளின் காரணமாகச் சில குறிப்பிட்ட இயல்புகள் ஏற்படுகின்றன. குறிப்பிட்ட இயல்புகளுடன் கூடிய ஆன்மா குணஒற்றுமை விதிகளுக்கு (Laws of Affinity) இணங்க எந்த உடலில் பிறந்தால் அந்த இயல்புகளை வெளிப்படுத்த முடியுமோ, அந்த உடலில் பிறக்கிறது. இது விஞ்ஞானத்துக்கு ஏற்புடையது. ஏனெனில் விஞ்ஞானம் எதையும் பழக்கத்தைக் கொண்டே விளக்க விரும்புகிறது. பழக்கமோ எதையும் திரும்பத் திரும்பச் செய்வதால்தான் உண்டாகிறது. ஆகவே புதிதாகப் பிறந்த ஓர் ஆன்மாவின் இயல்புகளை விளக்குவதற்கு, அது அந்தச் செயலைத் திரும்பத் திரும்பச் செய்திருக்க வேண்டும் என்று ஆகிறது. அந்த இயல்புகள் இந்தப் பிறவியில் பெறப்பட்டவை அல்ல ஆதலால் அவை முந்தைய பிறப்புகளிலிருந்து வந்திருக்க வேண்டும்.

— தொடரும்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.