விவேக சிந்தனை மாலை – 002

விவேக சிந்தனை மாலை – 002 – 16.10.2017

*இந்துமதம்* 02

அருள் வெளிப்பாடான (Revelation) வேதங்களிலிருந்து இந்துக்கள் தங்கள் மதத்தைப் பெற்றுள்ளனர். வேதங்களுக்குத் துவக்கமும் முடிவும் இல்லை என்பது அவர்கள் கூற்று. ஒரு நூலுக்குத் துவக்கமோ முடிவோ இல்லாதிருக்குமா, அது அபத்தம் என்று உங்களுக்குத் தோன்றும். ஆனால் வேதங்கள் என்று குறிப்பிடப்படுவது நூல்கள் அல்ல. வெவ்வேறு மக்களால், வெவ்வேறு காலங்களில் திரட்டி வைக்கப்பட்ட ஆன்மீக விதிகளின் கருவூலமே வேதங்கள்.

புவியீர்ப்பு விதி, அது கண்டறியப்படும் முன்னரே இருந்தது, மனித இனம் முழுவதும் அதை மறந்து விட்டாலும் அது இருக்கும். அவ்வாறுதான் ஆன்மீக உலகின் விதிகளும். ஓர் ஆன்மாவிற்கும், தனிப்பட்ட ஆன்மாக்களுக்கும் அனைத்து ஆன்மாக்களின் தந்தைக்கும் இடையே உள்ள தார்மீக, ஆன்மீக, நீதிநெறி உறவுகள், அவை கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்னரும் இருந்தன. நாம் அவற்றை மறந்தாலும் அவை இருக்கும்.

இந்த விதிகளைக் கண்டறிந்தவர்கள் ரிஷிகள் எனப்பட்டனர். பூரணத்துவம் அடைந்தவர்கள் என்று அவர்களை நாங்கள் போற்றுகிறோம். அவர்களுள் மிகச் சிறந்த சிலர் பெண்கள் என்பதைக் கூறுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இந்த விதிகள், அவை விதிகளானதால், முடிவில்லாமல் இருக்கலாம். ஆனால் தொடக்கம் இருந்திருக்க வேண்டுமே என்று கூறலாம். படைப்பு, தொடக்கமும் முடிவும் இல்லாதது என்று வேதங்கள் போதிக்கின்றன. பிரபஞ்ச சக்தியின் மொத்த அளவு என்றும் ஒரே அளவில்தான் இருக்கிறது என்று விஞ்ஞானம் நிரூபித்திருப்பதாகச் சொல்லப்படுகின்றது.

பிரபஞ்சத்தில் ஒன்றுமே இருந்திராத ஒரு காலம் இருந்திருக்குமானால் இப்போது காணப்படும் சக்தி அனைத்தும் எங்கிருந்தது ? அது கடவுளுடன் ஒடுக்க நிலையில் இருந்தது என்று சிலர் கூறுகிறார்கள். அப்படியானால் கடவுள் சிலகாலம் ஒடுக்க நிலையிலும் சிலகாலம் இயக்க நிலையிலும் இருக்கிறார் என்றாகிறது. அதாவது, கடவுள் மாறக் கூடியவர். மாறக்கூடிய பொருள் கூட்டுப்பொருளாகத் தானிருக்க வேண்டும். எல்லா கூட்டுப் பொருட்களும் அழிவு என்னும் மாறுதலை அடைந்தே தீரவேண்டும். எனவே கடவுள் இறந்துவிடுவார் என்றாகிறது. இது அபத்தம். ஆகையால் படைப்பு இல்லாதிருந்த காலம் ஒருபோதும் இருந்ததில்லை.

இதை ஓர் உவமையால் விளக்க நினைக்கிறேன். படைப்புத் தொழிலும் படைப்பவனும், ஆரம்பமும் முடிவும் இல்லாது சமதூரத்தில் ஓடுகின்ற இரண்டு இணைக்கோடுகள். கடவுள் எப்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பரம்பொருள். அவரது சக்தியால், ஒழுங்கற்ற நிலையிலிருந்து (Chaos) பல ஒழுங்குமுறைகள் (Systems) ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றுகின்றன, சிறிது காலம் செயல்படுகின்றன, பின்னர் அழிந்துவிடுகின்றன. இதையே பிராமணச் சிறுவன் தினமும் ஓதுகிறான். _”பழைய கல்பங்களில் இருந்த சூரியர்களையும் சந்திரர்களையும் போன்றே சூரியனையும் சந்திரனையும் கடவுள் படைத்தார்.”_ (ஸூர்யாசந்த்ரமஸௌ தாதா யதாபூர்வமகல்பயத்).

— தொடரும்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.