நன்னடத்தையின் ரகசியம்

இன்று எண்ணிக்கையில் உலகில் நல்லவர்கள் பெருகி வருகிறார்கள். அவர்கள் தங்களை இடதுசாரி என்றோ, நாத்திகர் என்றோ கூறுவதில்லை. ஆனால் இவர்கள் நாடுவது பலிபீடத்திற்குப் பதிலாக ஆய்வுக்கூடம், ஆலயத்திற்குப் பதிலாக அணுஆலை, தியானத்திற்குப் பதிலாகப் பொதுநலம் பேணல், மதகோட்பாட்டிற்குப் பதிலாக தொழில்நுட்ப அறிவியல், ஜபம் அல்லது வேறு ஆன்மீகச் சாதனைகளுக்குப் பதிலாகப் புள்ளியியல் போன்றவற்றையே.

ஒழுக்கமுள்ள வாழ்க்கையை ஏற்றுக்கொள்வதில் நம்பிக்கை இருப்பினும் கடவுளின் தேவை அவசியம் என்று உணராதவர்கள் அதற்காக இறையார்ந்த அறிவின் தேவையை உணர்வதில்லை. ஒழுக்கமுறையை ஏற்பர், ஆனால் ஆன்மிகத் தேவையை ஒதுக்குவர்.

உண்மையிலேயே நமக்குத் தேவை தனிப்பட்ட முறையிலும், சமூகரீதியிலும் ஒழுங்காக நடந்து கொள்வது; நாம் நல்லவராக நடந்து கொள்கிறோமா எனக் கண்காணிக்கக் கடவுள் தேவையில்லை. ஏனெனில் கடவுள் இருக்கிறாரா இல்லையா என்றே தெரியாதே ! கடவுளை நாடிச் செல்வதில் கானல் நீரை நம்புவதுபோல் பல நடைமுறைத் தொல்லைகள் உண்டுஎன்பர்.

இந்த நல்லவர்கள் விரும்புவதும் நல்ல சமூகத்தைத்தான். நல்ல சமூகத்தின் அடித்தளம் ஒழுங்கான வாழ்க்கையே என்பதை நம்பவும் செய்கிறார்கள். ஆகத் தேவைக்கு அப்பாற்பட்டவன் இறைவன் என்பது இவர்கள் நம்பிக்கை.

இக்கட்டத்தில், ‘நன்னடத்தை என்பதின் சரியான பொருள் என்ன ?” என்ற கேள்வி இயற்கையாகவே எழலாம். கடமைகளைப் பற்றற்ற மனதுடன், மற்றவர்கள் மனம் நோகாதபடி வாழ்வில் மாறுபடும் அல்லது முரண்படும் எந்தச் சூழ்நிலையிலும் சாந்தமான வேறுபாடில்லாத ஒரே மனநிலையுடன் நடந்து கொள்வதே நன்னடத்தை எனப் பொருள் கொள்ளலாம்.

நன்னடத்தையுள்ளவனை அந்நிலையில் தக்க வைப்பது எது? அவனது நன்னடத்தையின் தூண்டுகோல் எது? எது அவனை இன்னும் பற்றற்ற நிலைக்கு இட்டுச் செல்லும்? அவனுடைய ஐயங்களையும் குழப்பங்களையும் போக்குவது எது? நல்லவனாக நடக்கப் பகுத்தறிவை அடிப்படையாகக் கொள்வதற்குக் காரணம் எது? சுயநலம் மிகும்போது ஒருவன் நல்லவனாக நடக்க முடியுமா? ஆபத்திலும், புலன் கவர்ச்சியின் முன்பும் ஒருவனால் நேர்மையையும் ஒழுக்கத்தையும் கடைப்பிடிக்க முடியுமா?

முடியாது; முடியவே முடியாது. கடவுள் நம்பிக்கை ஒன்றால்தான் எந்நிலையிலும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் ஒருவனை நன்னடத்தையிலும், அதைச் சார்ந்தவற்றிலும் நிலைகுலையாமல் நிற்கச் செய்யும்.

நமது புராணங்களும் இலக்கியங்களும் ரிஷிகளும் கூறும் தீர்வு இதுவே. “பிரம்மச்சரியம் கடைபிடிப்பதால் புலன்கள் நாடும் விஷயங்களின் மீதுள்ள பற்று நீங்கும். ஆனால் அவற்றின் சுவை போகாது. இறைவனை அடைந்தவனிடமிருந்தே அச்சுவையும் போகும்என்கிறார் ஸ்ரீகிருஷ்ணர்.

நெறி வழுவாத ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பவன் கூட புலன்களில் சுவையை விடுவதில்லை; புறத்தூண்டுதலால் மறுபடியும் அவ்வாசையில் விழ நேரிடும். இறை ஈர்ப்பு ஒன்றுதான் படிப்படியாக அவனை மீட்கும். கடவுளை உணர்ந்த பின்தான், எல்லா ஆசைகளும் எரிந்து போக அவன் அவற்றினின்று விடுபடுகிறான்.

கடவுளின் தேவையை உணராத ஒருவன் தொடர்ந்து நல்லவனாக இருப்பான் என்பதற்கு என்ன அத்தாட்சி? எதுவும் இல்லை. சிறு தூண்டுதலோ, அல்லது இடையூறோ நேர்ந்தால் அவ்வளவுதான், அவன் நன்னடத்தை நொறுங்கிவிடும். கீழான விருப்பங்களுக்கு ஆளாவான். அதனால் சமூகத்திற்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு கெட்ட பழக்கங்கள் பெருகும் ஆபத்து நேரும். அதனால்தான் பண்டைய மகானும், இந்தியாவுக்கு ஒருக்கக் கோட்பாட்டை அளித்தவருமான திருவள்ளுவர் கூறுகிறார்:

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றை

பற்றுக பற்று விடற்கு.

எதிலும் பற்றற்ற அந்த இறைவனது திருவடிகளை நன்றாகப் பற்றிக்கொள். அந்த உயர்வான பற்றினால் ஒருவன் பற்றற்றவன் ஆகிறான். அவனைப் பற்றியுள்ள மற்ற பற்றுகளி(ஆசைகளி)லிருந்து தானே விடுபடுகிறான்.

பன்னிரு ஆழ்வார்களில் ஒருவரான நம்மாழ்வார் தம் திருவாய் மொழியில் (4-1-10) பாடுகிறார்:

குறுக மிக வுணர் வத்தோடு நோக்கி யெல்லாம் விட்ட

இறுக லிறப் பென்னும் ஞானிக்கும் அப்பய னில்லை யேல்,

சிறுக நினைவதோர் பாசமுண் டாம் பின்னும் வீடில்லை,

மறுபகலில் ஈசனைப் பற்றி விடா விடில் வீட ஃதே

பற்று போய்விட்டால் முக்தி கிடைக்கும். அந்தப் பற்றற்ற தன்மை மாறாது நிலையாக அமைய வேண்டுமானால் பற்று முழுவதும் நீக்கப்பட வேண்டுமானால், கடவுளிடம் சரணாகதி அடையவேண்டும்.

யார் நல்லவராக இருக்கவேண்டுமென விரும்புகின்றனரோ, நல்ல சமுதாயத்தை உருவாக்கவேண்டுமென விழைகின்றனரோ அவர்கள் அதற்கான நடைமுறையையும் படிப்பினையையும் அறிவு மூலம் ஆராய்ந்தால் இறைவனை புறக்கணிக்க முடியாது. இப்படிக் கூறுவதால் நல்ல சமூகத்தை உருவாக்கும் புனித சிமெண்ட்என்று இறைவனை எண்ணிவிட வேண்டாம்.

ஸ்வாமி புதானந்தர்

N Ganapathy Subramanian 25082017

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.