உண்மை வழிபாடு

உண்மை வழிபாடு

27 ஜனவரி 1897 அன்று ராமேசுவரம் கோயிலில் சுவாமி விவேகானந்தர் நிகழ்த்திய சொற்பொழிவு

Source: தமிழ் மண்ணில் விவேகானந்தரின் வீரமுழக்கம்

மதம் வாழ்வது அன்பில், இதயத்தின் தூய்மையான அன்பில்தானே தவிர சடங்குகளில் அல்ல. உடலாலும் மனத்தாலும் தூய்மையாக இல்லாமல் ஒருவன் கோயிலுக்கு வருவதும் சிவபெருமானை வழிபடுவதும் பயனற்றது.

உடலாலும் மனத்தாலும் தூய்மையாக இருப்பவர்களின் பிரார்த்தனைகளை சிவபெருமான் நிறைவேற்றுகிறார். ஆனால் தாங்களே தூய்மையற்றவர்களாக இருந்துகொண்டு பிறருக்கு மத போதனை செய்பவர்கள் இறுதியில் தோல்வியையே அடைகிறார்கள்.

புற வழிபாடு என்பது அக வழிபாட்டின் அடையாளம் மட்டுமே. அக வழிபாடும் தூய்மையும்தான் உண்மையான விஷயங்கள். இவையின்றிச் செய்யப்படுகின்ற புற வழிபாடு பயனற்றது. இதனை மனத்தில் பதித்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.

தாங்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம். பிறகு ஒரு தீர்த்தத் தலத்திற்குச் சென்றால் அந்தப் பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டுவிடும் என்று நினைக்கும் கீழான நிலைக்கு இந்தக் கலியுகத்தில் மக்கள் வந்துவிட்டனர்.

தூய்மையற்ற உள்ளத்துடன் கோயிலுக்குச் செல்கின்ற ஒருவன் ஏற்கனவே இருக்கின்ற தன் பாவங்களுடன் மேலும் ஒன்றைக் கூட்டுகிறான், புறப்பட்டபோது இருந்ததைவிட மோசமானவனாக வீடு திரும்பிகிறான்.

தீர்த்தத் தலங்கள் புனிதமான பொருட்களாலும் மகான்களாலும் நிரம்பி இருப்பவை. மகான்கள் வாழ்கின்ற இடங்களில் கோயில் எதுவும் இல்லையென்றாலும், அந்த இடங்கள் தீர்த்தத் தலங்களே.

நூறு கோயில்கள் இருந்தாலும், அங்கே புனிதமற்றவர்கள் இருப்பார்களானால் தெய்வீகம் மறைந்து விடும். தீர்த்தத் தலங்களில் வாழ்வதும் மிகவும் கடினமான காரியம். சாதாரண இடங்களில் செய்யப்படும் பாவங்களை எளிதாக நீக்கிக் கொள்ள முடியும். ஆனால் தீர்த்தத் தலங்களில் செய்யப்படும் பாவத்தை நீக்கவே முடியாது.

மனத்தூய்மை, பிறருக்கு நன்மை செய்வது — இதுவே எல்லா வழிபாடுகளின் சாரமாகும். ஏழையிடமும் பலவீனரிடமும் நோயுற்றோரிடமும் சிவபெருமானைக் காண்பவனே உண்மையில் சிவபெருமானை வழிபடுகிறான்.

விக்கிரகத்தில் மட்டுமே சிவபெருமானைக் காண்பவனின் வழிபாடு ஆரம்ப நிலையில் உள்ளது.

ஒரே ஓர் ஏழைக்காயினும், அவனது ஜாதி, இனம், மதம் போன்ற எதையும் பாராமல், அவனிடம் சிவபெருமானைக் கண்டு அவனுக்கு உதவிகள் செய்து தொண்டாற்றுபவனிடம் சிவபெருமான் மிகவும் திருப்தி கொள்கிறார்; கோயிலில் மட்டுமே தம்மைக் காண்பவனைவிட, இவனிடம் அதிக மகிழ்ச்சி கொள்கிறார்.

ஒரு பணக்காரனுக்குத் தோட்டமொன்று இருந்தது. அதில் இரண்டு தோட்டக்காரர்கள் இருந்தார்கள்.

ஒருவன் சோம்பேறி, வேலையே செய்ய மாட்டான். ஆனால் எஜமான் தோட்டத்துக்கு வந்தால் போதும். உடனே எழுந்து போய் கூப்பிய கைகளுடன் அவரிடம், “ஓ, என் எஜமானனின் முகம் எவ்வளவு அழகாக இருக்கிறது” என்று புகழ்பாடி அவர் முன்னால் பல்லை இளித்துக் கொண்டு நிற்பான்.

மற்றவன் அதிகம் பேசுவதே இல்லை, ஆனால் கடினமாக உழைப்பான். பலவகையான பழங்களையும் காய்கறிகளையும் சாகுபடி செய்து, நெடுந்தொலைவில் வசிக்கின்ற அந்த எஜமானனின் வீட்டிற்குச் சுமந்து கொண்டு செல்வான்.

இந்த இரண்டு தோட்டக்காரர்களுள் யாரை எஜமான் அதிகம் விரும்புவார்?

சிவபெருமான்தான் அந்த எஜமான். இந்த உலகம் அவரது தோட்டம். இங்கே இரண்டு வகையான தோட்டக்காரர்கள் இருக்கிறார்கள்.

ஒருவகையினர் சோம்பேறிகள், ஏமாற்றுக்காரர்கள். அவர்கள் எதுவும் செய்வதில்லை; சிவபெருமானின் அழகான கண்களையும் மூக்கையும் மற்ற குணநலன்களையும் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார்கள்.

ஏழைகளான, பலவீனர்களான எல்லா மனிதர்கள், விலங்குகள் மற்றும் அவருடைய படைப்பு அனைத்தையும் மிகுந்த கவனத்தோடு பராமரிப்பவர்கள் மற்றொரு வகையினர்.

இவர்களுள் யார் சிவபெருமானின் அன்பிற்கு உரியவர்கள்? நிச்சயமாக அவரது பிள்ளைகளுக்குச் சேவை செய்பவர்களே. தந்தைக்குச் சேவை செய்ய விரும்புபவர்கள் முதலில் பிள்ளைகளுக்குச் சேவை செய்யவேண்டும்.

சிவபெருமானுக்குச் சேவை செய்ய விரும்புபவர்கள், அவரது பிள்ளைகளாகிய இந்த உலக உயிர்கள் அனைத்திற்கும் முதலில் சேவை செய்ய வேண்டும். கடவுளின் தொண்டர்களுக்குச் சேவை செய்பவர்களே அவரது மிகச் சிறந்த தொண்டர்கள் என்று சாஸ்திரங்களிலும் கூறப்பட்டுள்ளது. இந்தக் கருத்தை மனத்தில் கொள்ளுங்கள்.

மீண்டும் சொல்கிறேன்: மனத்தூய்மையுடன் இருங்கள், உங்களை நாடி வரும் ஏழைகளுக்கு உங்களால் இயன்ற உதவி செய்யுங்கள். இது நற்கர்மம். இதன் பலனாக உங்கள் இதயம் தூய்மை பெறும். எல்லோரிலும் உறைகின்ற சிவபெருமான் வெளிப்பட்டுத் தோன்றுவார். அவர் எல்லோரது இதயத்திலும் எப்போதும் இருக்கிறார். அழுக்கும் தூசியும் படிந்த கண்ணாடியில் நம் உருவத்தைப் பார்க்க முடியாது. அறியாமையும் தீய குணங்களுமே நம் இதயக் கண்ணாடியில் படிந்துள்ள தூசியும் அழுக்கும்.

நம் நன்மையை மட்டுமே நினைக்கின்ற சுயநலம், பாவங்கள் அனைத்திலும் முதற்பாவமாகும். ‘நானே முதலில் உண்பேன். மற்றவர்களைவிட எனக்கு அதிகமான பணம் வேண்டும், எல்லாம் எனக்கே வேண்டும்’, ‘மற்றவர்களுக்கு முன்னால் நான் சொர்க்கத்தை அடையவேண்டும், எல்லோருக்கும் முன்னால் நான் முக்தி பெறவேண்டும்’ என்றெல்லாம் நினைப்பவன் சுயநலவாதி. சுயநலமற்றவனோ, ‘நான் கடைசியில் இருக்கிறேன். சொர்க்கம் செல்வதைப்பற்றி எனக்குக் கவலையில்லை. நான் நரகத்துக்குச் செல்வதால் என் சகோதரர்களுக்கு உதவமுடியுமானால் அதற்கும் தயாராக இருக்கிறேன்’ என்கிறான்.

இத்தகைய சுயநலமற்ற தன்மையே மதத்திற்கான உரைகல். சுயநலம் இல்லாதவனே மேலான ஆன்மீகவாதி, அவனே சிவபெருமானுக்கு அருகில் இருக்கிறான்.

அவன் படித்தவனாக இருந்தாலும் படிக்காதவனாக இருந்தாலும், அவன் அறிந்தாலும் அறியவில்லை என்றாலும் அவனே மற்ற அனைவரையும்விட சிவபெருமானுக்கு அருகில் இருக்கிறான்.

சுயநலம் கொண்டவன் எல்லா கோயில்களையும் வழிபட்டிருந்தாலும், புண்ணியத் தலங்கள் அனைத்தையும் பார்த்திருந்தாலும், சிறுத்தையைப்போல் தன் உடம்பு முழுவதிலும் மதச் சின்னங்களைத் தீட்டிக் கொண்டிருந்தாலும் அவன் சிவபெருமானிடமிருந்து விலகியே இருக்கிறான்.

***

 

One thought on “உண்மை வழிபாடு

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.