ஒரு சாமானியனின் வரலாறு – 2

ஒரு சாமானியனின் வரலாறு – 2

எழுதுவதில் ஆர்வம் பிறந்தது:

என் ஊரிலிருந்து தினமும் பேருந்துவில் தஞ்சை வந்து புகைவண்டியில் திருச்சி சென்று கல்லூரியில் படித்தேன். நான் இளங்கலை வகுப்புக்களில் பல பரிசுகள் வென்றிருந்ததால் (வணிகவியல் இரண்டாம் வருட்த்தில் கல்லூரியின் அங்கேயே அமர்ந்து எழுதும் கட்டுரைப் போட்டியில் முதலிடம் பெற்ற “இந்தியாவில் அரசு சார்ந்த தொழிற்சாலைகள்” என்பது பற்றிய 35 பக்கக் கட்டுரையை வணிகவியல் பேராசிரியர் உயர்திரு இராஜேந்திரன் அவர்கள் கல்லூரிச் செலவில் அச்சடித்துப் பல கல்லூரிகளுக்கும் அனுப்பியிருந்தார். மூன்றாம் வருட ஆரம்பத்தின் முதல் நாளில் கல்லூரியில் என் கட்டுரை பற்றிப் பெருமையாகப் பேசப்பட்டது) எனக்கு எழுதவேண்டும் என்றும், கல்லூரிச் செலவுக்கு உதவியாக இருக்கும் என்றும் தோன்றியது.
முதலில் தமிழில் குங்குமம் மாத இதழில் என் எழுத்து அச்சேறியது. பின்னர் ஆங்கிலத்தில் அப்போது வந்துகொண்டிருந்த Onlooker என்ற மாதமிருமுறை வரும் இதழிலும், மாதமொருமுறை வரும் Gentleman இதழிலும் நான் எழுதியவை வந்தன. எனக்கு ஒருமாதத்தில் ரூபாய் 200 வரை கிடைத்தது. பின்னர் Reader’s Digest India விற்கு நகைச் சுவைத் துணுக்குகளும், ‘Life is Like That”, ‘College Rags’ என்ற பகுதிகளுக்கு என் படைப்புக்களை அனுப்ப ஆரம்பித்து சம்பாதிக்க ஆரம்பித்தேன்.

ஜமால் முகம்மது கல்லூரியில் இருந்த வணிகவியல் துறையில் இருந்த நூலகம் தமிழ் நாட்டிலேயே மிகப் பெரியது என்றும், திருச்சியில் இயங்கிவந்த ஹாட்டின் பீடி கம்பெனிக்காரர்கள், ரூபாய் இரண்டு கோடியைப் பள்ளிக்கு நூலகத்துக்கு மட்டுமே வழங்கினார்கள் என்றும், வணிகவியல் நூலகத்திற்கு அரிய புத்தகங்கள் வாங்க பேராசிரியர்கள் லண்டன், நியூயார்க் சென்று பல அரிய புத்தகங்களையும் வாங்கிவந்தனர் என்றும் அறிந்தேன்.

இதனால், ஒவ்வொரு முதுகலை மாணவனிடத்திலும் குறைவாக நூலகத்தின் 10 புத்தகங்களாவது இருந்து கொண்டிருக்கும். புரொபசர்கள் புத்தகம் வேண்டுமானால் மாணவர்களைக் கொண்டுவரச் செய்து, வகுப்பு முடிந்ததும் அந்த மாணவனிடமே கொடுத்துவிடுவர். எல்லாப் புத்தகங்களும் புத்தம் புதிதானவை, பெரும்பாலும் வெளி நாட்டில் அச்சானவை. விலை மிக உயர்ந்தவை. எப்போதும் என் வீட்டில் சராசரியாக கல்லூரியின் 10 முதல் 15 புத்தகங்களாவது இருக்கும். நான் அடிக்கடி ஒரு புத்தகத்தை வீட்டுக்குக் கொண்டுவருவேன். அது மிகவும் மேன்மையான தாளில் அச்சிடப்பட்ட 2150 பக்கமுள்ள ஒரு தடிமனான The Handbook of Management (!!!) என்ற புத்தகம். அதன் விலை அப்போதே 300 அமெரிக்க டாலர்.

என் முதுகலை வகுப்புக்கள் காலை 9.30 முதல் மதியம் 1.30 வரைதான். எனக்குத் தஞ்சை திரும்பிச் செல்ல மாலை 4 மணிக்குத்தான் புகைவண்டி. எனவே மதியம் உணவருந்திவிட்டுத் தினமும் ஒன்றரை கி.மீ. தூரத்தில் இருந்த சென்னைப் பல்கலைக் கழகத்தின் மைய நூலகத்துக்குச் சென்று வருவது வழக்கமாயிற்று. எனக்கு ஒவ்வொரு வருடமும் 4 பாடங்கள். கோடிட்ட 40 பக்கம் நோட்டுப்புத்தகங்கள் நாலும் அந்த பல்கலைக்கழக நூலகத்திலிருந்து குறிப்புகள் எடுத்துக்கொள்ளவும், வகுப்பில் குறித்துக்கொள்ள ஒரு குயர் நோட்டுகள் இரண்டும், வாராவாரம் வாங்கி எழுதுவேன்.

அவ்வமயம் பல்கலைக்கழக நூலகத்தில் பார்த்த ஒரு மாத இதழ், World Bank/IMF அமெரிக்காவிலிருந்து வெளியிடும் வருடத்திற்கு நான்கு முறை இதழான Finance and Development பத்திரிக்கை ஆகும். அது இலவசமாகப் பெறலாம் என்பது தெரிந்து, நான் எழுதி விண்ணப்பித்ததும் இரண்டுமாதம் கழித்து வீட்டிற்கு வர ஆரம்பித்துவிட்டது. அதைப் படிக்க ஆரம்பித்ததில், அதில் எவ்வகையான கட்டுரைகள் எழுதப்படுகின்றன என்று அறிந்தேன். நானே ஒரு பொருளைப் பற்றிய ஒரு தலைப்பைத் தேர்வு செய்து, குறைவாக 1000 பேரிடம் 20 முதல் 30 கேள்விகளுக்கான பதிலைப் பெற்று ஒரு ஆய்வு செய்து, அதை ஒரு கட்டுரையாக எழுதி அனுப்பிப் பார்ப்போம் என்று முடிவுசெய்தேன்.

உலகவங்கியிலிருந்து அப்போதெல்லாம் பல துறைகளில் அவர்கள் பதிப்பித்த எந்தப் புத்தகமும், ஆய்வறிக்கையும் வேண்டுமென்று நாம் எழுதினால் இலவசமாகவே அனுப்பப்படும். அவ்வகையில் நான் 50க்கும் மேல் புத்தகங்கள் பெற்றிருப்பேன். இது தவிர, International Monetary Fund மற்றும் World Bank இரு நிறுவனங்களின் Annual Report-ம் மற்றும் உலகவங்கியின் World Development Report-ம் ஒவ்வொரு வருடமும் வந்துவிடும் இலவசமாகவே. (இப்போதெல்லாம் அவை இலவசமாக அனுப்பப் படுவதில்லை. இணையத்தின் மூலம் பணம் கட்டித்தான் வாங்க வேண்டும். World Development Report இப்போதெல்லாம் லண்டனிலுள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக அச்சகக் கடையில் மட்டும் இந்தியாவில் கிடைக்கிறது.) இவற்றைப் படிக்கப் படிக்க என் ஆர்வம் மேலும் தூண்டப் பட்டது.

எழுத்துக்குக் கிடைத்த அங்கீகாரம்:

இந்தியாவில் பெண்கல்வி எந்த மாற்றத்தைச் செய்யமுடியும் என்பது குறித்து 35 கேள்விகள் தயார் செய்து, அதை Cyclostyle முறையில் 2000 பிரதிகள் எடுத்து, இந்தியாவிலிருந்த என்னிடம் விலாசமிருந்த 20 பல்கலைக் கழகங்கள், 34 கல்லூரிகளுக்கு தலா 10 அனுப்பிப் பெண்களிடம் அவர்தம் வயது, படிப்பு, செய்யும் வேலை என்ற தகவல்களுடன் பதிலைப் பெற்று அனுப்புமாறும் இது நான் உலகவங்கிக்காகச் செய்வது என்றும் எழுதியனுப்பி, 13 பல்கலைக்கழகங்களில் இருந்தும், 19 கல்லூரிகளில் இருந்தும், மொத்தம் 360 பூர்த்தி செய்த படிவங்கள் பெற்றேன்.

பின்னர் மொத்தம் ஒரு ஆயிரம் படிவங்களாவது பெறவேண்டும் என்று, தினமும் நான் எங்கள் கிராமத்திலும், பேருந்திலும், புகைவண்டி நிலையத்திலும் முடிந்த பெண்களைப் பார்த்து, இன்னும் 400 படிவங்களில் பதில்கள் பெற்றேன். படிக்காதவர்களிடமும் கேட்கவேண்டும் என்று, அந்த கேள்வித்தாளை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு ரயில் பெட்டியிலும் ரயில் நிற்கும்போதெல்லாம் ஏறி இறங்கி, பலரையும் நேரில் பேட்டி கண்டு சுமார் 450 படிவங்கள் பூர்த்தியாயின. மொத்தம் சுமார் 1200 படிவங்களில், எல்லாத் தரப்பிலும் கலந்து ஒரு ஆயிரத்தைத் தேர்ந்தெடுத்து, அந்த பதில்களை, படித்தவர், படிக்காதவர், குடும்பத்தில் எல்லோரும் படித்தவர், குடும்பத்தில் யாருமே படிக்காதவர் என்று நான்காகப் பிரித்து, எல்லா பதில்களையும் புள்ளியியல் துறையில் கற்றதை வைத்து, இந்த பதில்கள் எந்த முடிவை நமக்குக் காட்டுகின்றன என்பதை ஆராய்ந்து, 12 பக்கக் கட்டுரையொன்று எழுதி, செயல்முறையைப் பற்றியும் எழுதி அனுப்பினேன்.

இந்த முயற்சி ஆரம்பித்து நிறைவு செய்ய எனக்கு 5 மாதங்கள் ஆகியது. அனுப்பி 3 மாதம் கழித்து, என் கட்டுரை சிறிது மாற்றங்களுடன் அவர்கள் வெளியிடும் ஆசியா பற்றிய அறிக்கையில் இடம்பெறுவதாகவும் தபால் வந்தது. மாற்றம் செய்த வடிவமும் எனக்கு அனுப்பப் பட்டது. பின்னர் ஒரு மாதத்தில் ஒரு தபாலில் நான் அவர்கள் கொடுத்திருந்த 50 தலைப்புக்களில் நான் கட்டுரை எழுதி அனுப்பித்தால் பரிசீலிக்கப் படும் என்றும் தபால் வந்தது. ஒரு வருட காலத்தில் நான் 7 கட்டுரைகள் அனுப்பியிருந்தேன். ஒரு கட்டுரையின் சுருக்கம் மட்டும் Finance and Development-இன் ஒரு இதழில் வந்தது. பின்னர் எதுவும் வெளிவராததால் ஏமாற்றமடைந்து போனேன்.

முதுகலை இரண்டாம் ஆண்டு படிக்கும்போது ஒரு தபால் எனக்கு வந்திருப்பதாக கல்லூரி முதல்வர் அறையில் கூப்பிட்டிருந்தனர். அங்கு சென்றேன். கல்லூரி முதல்வர் அங்கு வந்திருந்த உலகவங்கியின் ஒரு அமைப்பிலிருந்து வந்துள்ள ஒரு கடிதத்தைக் கொடுத்தார். அதில், நான் எழுதியனுப்பிய அனைத்துமே அவர்கள் பதிப்பிலும் இணை நிறுவனங்களின் பிரசுரங்களிலும் வெளியிடப் பட்டன என்றும், அதற்கு மதிப்பாக ரூபாய் 21000 வரைவோலை மூலம் அனுப்பியதாகவும், சென்னை வந்தபோது அத்தபால் முடக்கப்பட்டு, இந்திய ரிசர்வ் வங்கியிடம் தகவல் அளிக்கப் பட்டு, நான் வெளி நாடுகளில் எழுதி சம்பாதிக்க அனுமதிக்கப் படவில்லை என்றும், அந்த வரைவோலையும் அவர்களுக்குத் திரும்பிவிட்டது என்றும், அதற்குப் பதிலாக, நான் எதேனும் ஒரு அயல் நாட்டில் குறிப்பிட்ட கல்லூரிகளில் படிக்கத் தேர்ந்தெடுக்கப் பட்டால் அதற்கு நிதியுதவி செய்வதாகவும் எழுதியிருந்தது.

பின்னர் கல்லூரி முதல்வரின் ஆலோசனையுடன், Asian Institute of Management, Phillippinesஆல் நடத்தப் பெற்ற தகுதித் தேர்வில் கலந்து, ஆசியாவில் தேர்வு செய்யப் பட்ட 50 பேரில் ஒருவனாக தேர்வு செய்யப் பட்டேன். 1975 டிசம்பர் மாதம் என்னை சென்னையிலிருந்து பிலிப்பைன்ஸ் செல்லும் கப்பலில் பயணிக்க வேண்டும் என்றும், எனக்கான தாற்காலிக பாஸ்போர்ட் மற்றும் விசா இவைகளை நான் சென்னையிலிருக்கும் USIS என்ற நிறுவனத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம், பெற்றுக் கொண்டு 14ம் தேதியன்று கப்பலில் பயணிக்க வேண்டும் என்றும் கூறப் பட்டிருந்தது. அங்கு கல்லூரியில் MBA படிப்பு சேர்ந்ததும், இரண்டுவருடம் அங்கு கல்லூரிக் கட்டணங்கள் தவிர, தங்குசெலவு, உணவுச் செலவு, உடைச் செலவு, புத்தகச் செலவுடன் வருடம் ஒருமுறை இந்தியா வந்து செல்ல விமானக் கட்டணமும் அளிக்கப் படும் என்றும், நல்லவிதமாக தேர்வு பெற்றால், உலகவங்கியின் நிறுவனங்களில் பணி செய்யப் பரிசீலிப்பதாகவும் எழுதியிருந்தது.

எங்கள் கல்லூரி முதல்வர் மிகவும் மகிழ்ந்து, கவலைப் படாமல் சென்று சேருமாறும், M Com தேர்வுகளை எழுதத் தேவையில்லை என்றும், கிடைத்திருப்பது உலகில் மிகவும் மதிக்கப் படும் படிப்பு என்றும், யாருக்கும் கிடைக்காத இத்தனை உதவிகளை வீண்செய்துவிடக் கூடாது என்றும் அறிவுறுத்தினார். நான் வீட்டில் சென்று, மெதுவாக என் பெற்றோரிடத்தில் இதைத் தெரிவித்து அவர்கள் அனுமதியைப் பெற்று வருவதாகவும், அதற்குள் இத்தகவலை என் வகுப்பில் யாரிடமும் தெரிவிக்காமல் இருக்கும்படியும், அக்கல்லூரியிலேயே படித்துவரும் என் அத்தை பிள்ளைக்கு முக்கியமாய் தெரியாமல் இருக்கவேண்டும் என்றும் சொல்லி ஒருவாரம் விடுப்பு பெற்று வந்தேன்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.