ஒரு சாமானியனின் வரலாறு – 7

ஒரு சாமானியனின் வரலாறு – 7

வேலையில் இருந்து ராஜிநாமா செய்துவிடு என்று நிர்ப்பந்திக்கப் பட்டேன்:

வேலையில் சேர்ந்த 5ம் நாள் கிளை மேலாளர் என்னைக் கூப்பிட்டு, நீ ராஜினாமா செய்துவிட்டு, பெரியவேலையில் சேர்ந்துவிடு, உன் திறமைக்கு இது சரியான வேலையில்லை என்று கூறினார். அவரே திருச்சி கல்லூரியைத் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு முதல்வரிடம் பேசினார்.

“இவன் சான்றிதழ்களைப் பார்த்தால் மிக நன்றாகப் படிப்பவனாகத் தெரிகிறானே, அவன் வாங்கிய பரிசுகளும் அவன் கருத்தின் தரமும் மிக அதிகமாயிருக்கின்றதே, நான் இவன் இக்கிளையில் சேர்ந்ததை இன்றுவரை மேலிடத்துக்குத் தெரிவிக்கவில்லை, தாங்கள் இவனுக்குத் தங்கள் கல்லூரியிலேயே ஒரு ஆசிரியர் வேலை இவன் தேர்வுக்குப் பின் கொடுக்கக் கூடாதா, தங்கள் கல்லூரியில் முஸ்லீம்களுக்குத்தான் தருவீர்களா” என்றெல்லாம் பிளந்து தள்ளிவிட்டார்.

எனக்கே அவர் பேசிய விதம் பிடிக்கவில்லை. கல்லூரி முதல்வர் இவரிடம் எல்லாவற்றையும், எனக்கு பிலிப்பைன்ஸில் வாய்ப்பு கிடைத்தது முதல், 5 நியமனக் கடிதங்கள் வைத்திருக்கிறேன் என்றும், அதில் 3 நிறுவனங்களில் சேர ஏப்ரல் மாத இறுதிவரை காலம் அளிக்கப் பட்டுள்ளது என்பது வரை இவரிடம் வெகுவேகமாக (கோபத்துடன்) கூறிவிட்டார். இதற்குப்பின் வங்கிமேலாளர் கண்களில் கண்ணீர் வந்துவிட்டது.

அவர் என்னை அருகிலிருந்த ஒரு உணவுச் சாலைக்கு அழைத்துச் சென்றார். அவருடன் எனக்கும் சிற்றுண்டி வாங்கி இருவரும் உண்டோம். நடுவில் ஒன்றுமே பேசாதிருந்த அவர், சாப்பிட்டு எழுந்ததும் என்னை விடுவிடு என்று இழுத்துக் கொண்டு அலுவலகம் வந்தடைந்தார்.

அங்கு இருந்த கார் ஓட்டுனர் கோவிந்தராஜை விரட்டி, என்னையும் காரில் ஏற்றி அவர் என் தந்தையைப் பார்ப்பதற்காக வண்டியை நான் வசிக்கும் மாரியம்மன் கோவில் கிராமத்துக்கு விடச் சொன்னார்.

நான் அன்று அடைந்த அச்சத்தை விட இது நாள் வரையில் வேறு எந்த நாளிலும் எந்த இடத்திலும் (ஒரு தடவை நல்ல மழையின்போது, தஞ்சைத் தெற்குவீதியில் வீடுகளின் ஓட்டோரமாகவே சென்றுகொண்டிருந்தபோது, ஒரு நல்ல பாம்பு என்மேல் விழுந்து என் கழுத்தைச் சுற்றிக் கொண்டபோதுகூட) அதிகமான அச்சத்தை நான் அடைந்ததில்லை.

கோவிலில் ஒரு சோதனை

ஆறு கிலோமீட்டர் தூரமும் நான் கெஞ்சக் கெஞ்ச அவர் முடியாது என, கோவிலைப் பார்த்தவுடன், “கோவிலுக்குச் செல்வோம், இந்த அம்மன் உனக்கு நல்ல புத்தியைத் தரட்டும்” என்று கூறி, கோயிலுக்குள் சென்றுவிட்டோம்.

உள்ளே சென்றதும் உள்ளூர்க்காரனான என்னைக் கண்டதும், அங்கு பூஜை செய்யும் திரு சுப்ரமணிய குருக்கள் என்னிடம் “ என்னடா, அதிசயமாகக் கோவிலுக்கு வந்திருக்கிறாய், இவர் யார், உன் ஆபீஸா, கோவிலுக்கு அழைத்துவந்தாயா, வாங்கோ, பேஷா ஸ்வாமியை தரிசனம் பண்ணுங்கோ” என்று உள்ளே அழைத்து சென்றார்.

நான் என்னுடன் வந்திருப்பவர் இந்தியன் வங்கியின் கிளை மேலாளர் என்று சொன்னதும் அவருக்கு சகல மரியாதைகளும் செய்தார். “ அங்கெ சித்த இருங்கோ, நான் பிரசாதத்தோட வரேன்” என்று போனார்.

மாலை, தேங்காய் பழத்துடன் வந்து அமர்ந்து, கோயிலின் வரலாற்றையும், அம்பாளின் சக்தியையும் பற்றிச் சொன்னார்.

என்னிடம் “ ஏண்டா, நீ தினமும் ராத்திரியிலாவது ஆபீஸ் முடிஞ்சு வரும்போது அம்மனைப் பார்த்துவேண்டிக்கொள்ளக் கூடாதோ, உன் அம்மாவை சாக்ஷாத் ஈஸ்வரிதானேடா காப்பாத்தணும், என்னடா பிள்ளை நீ,  நன்றாகப் படித்தால் மட்டும் போதுமா, இருக்கிறவரை அம்மாவைப் பார்த்துக்கோடா” என்று கூறியதும் நான் விம்ம ஆரம்பித்து என்னால் ஏது செய்தும் அழுகையை அடக்க இயலவில்லை.

என் மேலாளர் முகமும் சிவந்துவிட்டது. உடனே அவர், இவன் தன் தகுதிக்கும் கீழே உள்ள பதவியில் அம்மாவுக்காகவே சேர்ந்துவிட்டான், தனக்கு வந்திருக்கும் உயர்ந்த பதவிகளைக் கூடத் துச்சமாக மதித்து, என்று குருக்களிடம் சொல்லித் தொலைத்துவிட்டார்.

அவரிடம் அன்று வங்கி மேலாளர் எதிரிலேயே “ மாமா, நீங்க நிச்சயமாக யாருக்கும் இத்தகவல்களைச் சொல்லக் கூடாது, சொன்னால் நான் எடுத்த எல்லா முடிவுகளும் முட்டாள்தனமானவை ஆகிவிடும், அதைத் தெரிந்துகொண்டால் ஒருமணி நேரம் கூட என் அம்மா உடலில் உயிர்வைத்துகொண்டிருக்கமாட்டார்கள்” என்று அழுததும் குருக்களும் உருகிவிட்டார்.

தான் செத்தாலும் இதைப் பிறரிடம் சொல்வதில்லை என்று சொல்லிவிட்டார் மிக்க உணர்ச்சியுடன்.

வீட்டுக்கு வந்த வங்கிமேலாளர்:

வங்கிமேலாளர் மறுபடியும் என் அப்பாவைப் பார்க்கவேண்டும் என்றும் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று கூற ,நான் அவரிடம் கத்திவிட்டேன்.

இருந்தாலும் அவர் வலியுறுத்தி அழைத்துப் போய், என் தாய்தந்தை இருவரையும் நெடுஞ்சாண்கிடையாக வணங்கி, (நல்லவேளையாக வேறு எதுவும் சொல்லாமல்)  ‘வந்த 4 நாளிலேயே உங்கள் பையனை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. இவன் போன்ற புத்திரனைப் பெற்ற நீங்கள் இருவரும் தெய்வத்துக்கு சமானம். என்னையும் ஆசீர்வதியுங்கள்” என்று கண்ணில் நீருடன் கேட்டு, எங்கள் வீட்டில் காபி சாப்பிட்டுவிட்டு, “நாளை பார்க்கலாம், நீ இங்கேயே இரு. உன் பையை நாளைக்கு எடுத்துக்கலாம்” என்று சொல்லிக் கிளம்பிச் சென்றுவிட்டார்.

அந்த நிகழ்ச்சிக்குப்பிறகு தினமும் நான் காலையில் அலுவலுக்குப் புறப்படுமுன் அம்மனை வேண்டிக் கொண்டு கிளம்பி, பின்னர் இரவு வரும்போது கோயில் வாசலில் நின்று வணங்கிவிட்டுத்தான் வருவேன்.

அலுவலகத்தில் எனக்கு விடுப்பு அளிக்கப் படவில்லை. தலைமையகம் என் விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டது. நான் சென்னைக்கு சென்றதும் அங்கு தலைமையலுவலகம் கொடுத்த நம்பிக்கையும் வீண்போயின. அதுதான் என் வாழ்வில் முதன் முதலில் நான் தோற்றுப் போனது. மற்ற வாய்ப்புக்கள் எல்லாவற்றையும் நான் மனதார முடிவுசெய்துதான் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.