ஒரு சாமானியனின் வரலாறு – 6

ஒரு சாமானியனின் வரலாறு – 6

வேலையில் சேர்ந்துவிட்டேன்:

வீடு போய் சேர்ந்ததும், அப்பாவிடம் முழுதாகச் சொல்லவில்லை. “நல்ல ஆபீஸ்தான். நான் போனதற்காக, அங்கே மேனேஜர் எல்லோருக்கும் இனிப்பு, காரம், காப்பி வாங்கிக் கொடுத்தார், நாளைய தேதியில் இன்றே கையெழுத்து வாங்கிவிட்டார்கள். நாளைக்குப் போகவேண்டும்” என்று மட்டும் சொல்லிவிட்டேன்.

“அங்கே எத்தனைபேர் இருந்தார்கள். உன் வயதுக்காரன் உண்டா? உனக்கு  MCom  பரிட்சைக்கு லீவ் கிடைக்குமா?” இது அம்மாவின் கேள்வி.

வாசலில் இருந்த அப்பாவின் நண்பர் “ஏம்பா அங்கே ஸ்டாஃப் ஷார்டேஜா, அதனால்தான் எப்படியும் உன்னை வேலையில் சேர வைப்பதற்காக, மேனேஜர் இன்றே ஸ்வீட் காரம் எல்லாம் தந்து கொண்டாடி இருக்கிறார்!”

“தெரியல மாமா, ஆனால் நான் கை எழுத்து போடும்போது 27வது வரிசை எண்ணில்தான் என் பெயர் எழுதி கையெழுத்து வாங்கினார்கள்” என்றேன்.

அம்மாவிடம் “ நிறய பேர் இருந்தாங்கம்மா. என் வயசுக்காரன் உண்டா தெரியல, கவனிக்கல. ரொம்பநேரம் மேனேஜரோடவே பேசிக் கொண்டிருந்தேன். இன்னைக்கு பாங்கு அக்கவுண்ட் க்லோசிங் டே. எல்லாரும் மும்முரமா வேலையில் இருந்தாங்க. அஞ்சாறு லேடீஸ் இருந்தாங்க,” என்றேன்.

முதல் நாள் வேலைக்குச் சென்றது

“சரி, காலையில் கோவிலுக்குப் போய் அம்மனைப் பார்த்துவிட்டு பஸ் ஏறு, என்ன “ என்றார் அம்மா.

அப்பாவும் “நாளைக்கு நிச்சயம் கோவிலுக்குப் போய்ட்டு போடா” என்றார்.

காலையில் குளித்துவிட்டு 7 மணிக்கே கோவிலுக்கு சென்றேன். மணி குருக்கள்தான் சன்னதியில் இருந்தார். “வாடா, வா, கல்பூரம் காட்டறேன். பாத்துட்டு பஸ் ஏறலாம். நேரம் இருக்குல்ல” என்றார்.

“நீங்க மெதுவா பூஜை பண்ணுங்க மாமா. நான் இன்னைக்கு திருச்சி போகலே. தஞ்சாவூருக்குத்தான் போகணும். வேலையில் சேரப் போறேன் மாமா.”

அவருக்கு சந்தோஷம். “அப்ப அரைமணி நேரம் இரு. அம்மனுக்கு புதுப்புடவை சாத்தி கற்பூரம் காட்டறேன்.”

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்குச் சென்றவர்கள் அந்த அம்மன் எவ்வளவு உயரம் என்று அறிவார்கள். புதுப்புடவை சாத்தி, அம்மனுக்கு இரண்டு பெரிய ரோஜா மாலையை அணிவித்தார். கற்பூரஹாரத்தி எடுத்துக் கொண்டுவந்தார். கற்பூரம் கண்ணில் ஒற்றிக் கொண்டேன்.

“எந்த ஆபீஸுடா” என்றதற்கு “இந்தியன் பாங்க்” என்றேன்.

“ஆஃபீஸர் போஸ்ட்தானேடா” என்றதற்கு “இல்ல மாமா, ப்ரமோஷன் கிடைத்தா ஆஃபீஸர்தான்” என்றேன்.

“நல்லதுதான். யாருக்குமே எந்த ஆஃபீஸிலும் சொந்தஊருக்குப் பக்கத்தில் வேலை கிடைக்காது. இந்த வேலையை விட்டுடாதே. அம்மா அப்பாவுடன் இருக்கலாம். இந்த கோயில் அம்மாவும் ஒன்ன பாத்துப்பா. ஒன் அறிவுக்கு உனக்கு சீக்ரமே ஆஃபீஸர் ப்ரமோஷன் கிடைக்கும்” என்று கூறி பிரசாதம் கொடுத்தார்.

அம்மனை சிறிய பிரகாரத்தில் மூன்றுமுறையும், பெரிய பிரகாரத்தில் ஒரு முறையும் சுற்றிவிட்டு வணங்கினேன்.

என் வேலையைக் கொண்டாடிய ஒரு சகோதரர்

வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு, 9 மணிக்கு பஸ் ஸ்டாப் வந்தேன். கடைக்காரர் சுப்ரமணியன், “ஏன் தம்பி, இன்னிக்கு லேட்டா, காலேஜுக்கு லீவா” என்று கேட்டார். “இல்லண்ணே, இனிமேல் தஞ்சாவூர்தான். வேலைக்கு சேரப் போகிறேன், சாயங்காலம் வரும்போது விவரம் சொல்றேன்” என்றேன்.

“நல்ல காரியம் செஞ்சீங்க தம்பி. தஞ்சாவூர்லதான் வேலன்னா, இங்கே இருந்து அம்மாவை நல்லா கவனிச்சுக்கலாம். வாழ்த்துக்கள் தம்பி” என்று கூறி, தன் கடையில் இருந்து இரண்டு சாக்லேட்டுகள் எடுத்து, ஒன்று எனக்குக் கொடுத்துவிட்டு, ஒன்றைப் பிரித்துத் தன் வாயில் போட்டுக் கொண்டார்.

“என்னண்ணே இது, நான் தானே வாங்கித் தரணும்.”

“இல்ல தம்பி, நீங்களும் எனக்கு சொந்த தம்பி மாதிரிதான் ஐயா. இந்தாங்க இந்த சாக்லெட் பாக்கெட்ட ஆபீஸுக்கு எடுத்துட்டுப் போங்க. அங்கே எல்லாருக்கும் கொடுங்க. எனக்கு ரொம்ப சந்தோஷம் தம்பி” என்றார்.

இப்போது இதை எழுதும்போது எப்பேர்ப்பட்ட ஊரில் நாம் இருந்திருக்கிறோம் என்று மகிழ்ச்சியும் பெருமையும் கண்ணீரும் ஏற்படுகிறது. அன்று என் மனநிலை சந்தோஷமாக இருந்தது. அவருக்கு நன்றி சொன்னேன்.

இந்த 40 வருடத்தில் நம் ஊரும் தேசமும் அடைந்த நாகரீக வளர்ச்சி என்ன என்று எல்லோரும் அறிவோம். ஆனால் அந்தக் காலக் கட்டத்தில் இந்த நிகழ்ச்சி ஒரு ஆச்சர்யமான நிகழ்வு இல்லை என்பதை இதை வாசிப்பவர் புரிந்துகொள்ள வேண்டும்.

அக்கவுண்டன்டுடன் மோதல்

பஸ் வந்துவிட்டது. தஞ்சாவூர் பஸ் ஸ்டாண்டுக்கு போகும்போது 9.45 ஆகிவிட்டது. வேகவேகமாக நடந்து தெற்கு வீதி பாங்குக்குள் நுழைந்தேன். முதலில் மேனேஜரைப் பார்த்து வணக்கம் சொன்னவுடன், அவர் உள்ளே போகச் சொன்னார்.

உயர்திரு சத்யமூர்த்தி சார் அக்கவுண்டண்ட். (அதாவது ப்ராஞ்சின் No.2). அவரிடம் சென்றேன். “வாப்பா, இனிமே சீக்கிரம் வந்துடணும். இப்படி என் பக்கத்து சீட்டில் உட்காரு. நான் மேனேஜர்ட்ட போய் பேசிட்டு வந்துடறேன்” என்றார்.

வந்தவர் என்னிடம் “ஒன்ன எந்த சீட்ல போடலாம்னு யோசிச்சோம்பா. நீ நல்லா எழுதிவியா? கையெழுத்து நல்லா இருக்குமா? நல்லா இருந்ததானா நீ இப்ப இருக்கிற சீட்லயே இருந்து DD, MT எழுதலாம். மத்தியானம் வேற வேல உண்டு. இல்லனா, கையெழுத்து என்னை மாதிரி இருந்தா, கேஷ்ல போய் ஒக்காரு” என்று சொன்னார்.

“என்னடா இது ஆஃபீஸ், புதுசா ஒத்தன் வருவது இன்னக்குத்தான் தெரியுதா. எந்த சீட்டுன்னு முன்னமேயே யோசிக்க மாட்டாங்களா” என்று தோன்றியது.

“நான் நல்லா எழுதுவேன். கையெழுத்து நல்லா இருக்குன்னு எல்லோரும் சொல்வாங்க.” என்று சொன்னேன். (மன்னிக்கவும். 40 வருடத்தில் என் கையெழுத்து வீணாய் போய்விட்டது. என் எழுத்தை இப்போது படிப்பவருக்கு பட்டம் கொடுக்கலாம்.)

நான் அத்துடன் பேச்சை நிறுத்தி இருக்கலாம். ஆனால் அந்த வயதில் கொஞ்சம் காலேஜ் சூடு இன்னும் மூலையில் மிச்சம் இருந்ததால் “சார் ஒங்க எழுத்து எப்படி இருக்கும்னு எனக்குத் தெரியாது. எந்த சீட்னாலும் தாங்க. ஆனால் இது முதல்நாள் ஆனதால் யாராவது கைட் பண்ணணும்” என்றேன்.

“ஏம்பா, நீதான்  BComல யூனிவர்சிடி ராங்க் வாங்கி இருக்கிறாயாமே, மேலே வேற படிக்கிறியாமே. நாங்கதாம்பா அந்தக் காலத்தில் படிக்காம பாங்க்குக்குள்ள நொழஞ்சிட்டோம். மேனேஜரிடம் போய் “ அய்யா வணக்கம்”னு சொல்லி அரைமுதுகு வரை வளைஞ்சி காலையில 9 மணிக்கே போய் நிப்போம். எங்களுக்கெல்லாம் யாரும் வேல கத்துக் குடுக்கல்லேப்பா. நாங்களாவேதான் செஞ்சோம். நீ நிறய படிப்பு படிச்சு இருக்கே. இங்க எல்லா வேலையும் ஒனக்குத் தண்ணிபட்ட பாடா இருக்கணும், என்ன” என்றார்.

நான் “சார், நான் படிச்ச பாடத்தில பாங்கிங் படிச்சிருக்கேன் சார். ஆனால் பாங்குல ஒவ்வொரு சீட்லயும் என்னென்ன வேல, அத எப்படி செய்யறதுன்னு படிக்கல்ல சார். இங்கதான் படிச்சிக்கணும் சார்” என்றேன்.

“நீ பாடம் படிக்க ஒனக்கு பாங்குல சம்பளம் தரமாட்டாங்கப்பா, வேல செஞ்சாத்தான் சம்பளம் உண்டு.” என்றார்.

“சரி சார், வேலை செய்யறேன். அதுக்கு மட்டும் சம்பளம் கொடுங்க” என்று சொன்னதும் அவர் கோபம் அடைந்தார்.

“என்னப்பா ஒனக்கு மரியாதயே தெரியில்லயே. எங்க காலத்தில நாங்க ரெண்டு வருஷம் சம்பளம் இல்லாமலேயே வேலைபாத்தோம். அந்தமாதிரி சோதனை உனக்கு வேண்டாம்” என்றார்.

நான் கையில் வைத்திருந்த பேனாவை மூடிப் பையில் வைத்தேன். எழுந்தேன். அவரிடம் “சார், ஸ்டாஃப் ட்ரெய்னிங், ஸ்டாஃப் டெவெலப்மென்ட் எல்லாமே சட்டப்படி எம்ப்ளாயரோட பொறுப்பு சார். நான் இந்த வேலையில் இருக்க முடியுமான்னு யோசிக்கணும்” என்றேன். மேனேஜர் அறைபக்கம் செல்லத் திரும்பினேன்.

“அப்படின்னா அவரைப் பார்த்துவிட்டு அப்படியே போயிடு, எனக்கும் ஒரு தொல்லையும் இல்லே” என்றார்.

“சார் மன்னிக்கணும். மன்னிக்கணும். அதை நான்தான் சார் தீர்மானிக்கணும். நீங்க சொல்லமுடியாது”

“ஏன், ஏன், ஏன் நான் சொல்ல முடியாது. ப்ராஞ்ச்ல இன்டர்னல் கன்ட்ரோல் பூரா என் பொறுப்பு. நான்தான் அதச் சொல்லமுடியும்” என்றார்.

மனதுக்குள் இந்தவேலையில் இருக்கவேண்டாம் என்று நினைத்துக்கொண்டு “சார், நான் ஒரு தொழிலாளியாக ஏதாவது மன்னிக்க முடியாத தவறு செய்து அதனால் பாங்குக்கு நஷ்டமோ அவப்பெயரோ வந்தால் மட்டும்தான் சார் நீங்க அதுமாதிரி என்னிடம் சொல்லலாம், “ என்றவுடன் நிறைய பேர் (ஸ்டாஃப்) கைதட்டினார்கள். சத்தம் கேட்டு மேனேஜர் உள்ளே வந்தார். “என்ன அமளி, என்ன சொன்னான் இந்தப் பையன். எதற்குக் கைதட்டு.”

சந்திரசேகரன் சொன்னார், “சார் இந்தப் பையனை அக்கவுண்டன்ட் சாருக்குப் பிடிக்கல சார். அதான் சார். இவன் உங்கள்ட்ட சொல்லிட்டு வீட்டுக்குப் போகப் போறான்” என்றார். “சார் இவன் பக்காவா வந்த மொத நாளே லேபர் லா பேசறான் சார் இவன் எனக்கு சரிவர மாட்டான். நீங்களே அவனுக்கு சீட் கொடுங்க” என்றார் அக்கவுண்ட்டண்ட் சார்.

நான் மேனேஜரிடம் “சார் நான் உள்ளே வந்து என்ன நடந்ததுன்னு எழுதித் தரேன் சார். அதுக்கு முன்னாடி எல்லோருக்கும் சாக்லேட் தர்ரேன் சார்” என்று சொல்லிவிட்டு எல்லோருக்கும் சில வாடிக்கையாளர்களுக்கும் கொடுத்தேன்.

அதற்குள் மேனேஜர் தன் அறைக்குப் போய்விட்டார்.

நான் என் பேகை எடுத்துக் கொண்டு நடந்தபோது, அக்கவுண்டண்ட் சார் “அப்பா, இங்க கொஞ்சம் வாப்பா, இப்படி ஒக்காரு. எனக்கு BP  இருக்கு. நீ ஒண்ணும் உள்ளேபோய் எழுதித் தரவேண்டாம். நீ இன்னக்கு பூரா என் பக்கத்திலே உட்கார்ந்து  DD MT  மற்ற வேலை எல்லாம் செய். நானே சொல்லித் தர்ரேன்” என்றார். அவரிடம் “நமஸ்காரம் சார். நான் பேசினதுக்கு மன்னிச்சிடுங்க சார். இந்தாங்க சாக்லெட் சாப்பிடுங்க” என்று கொடுத்தேன்.

“தம்பி சாக்லேட் ரொம்ப நல்லா இருக்கே, இன்னும் ஒண்ணு இருந்தா கொடேன்” மிச்சம் இருந்த எல்லா சாக்லேட்டையும் அவரிடம் கொடுத்தேன்.

இப்படி இனிமையாக (!?!) ஆரம்பித்தது என் வேலை. யார் ஏப்ரல் ஃபூல் ஆனது என்று எனக்கு அப்போது தெரியவில்லை.

அது பின்னர் பலமுறை எனக்குத் தெரிந்தது. அது நான்தான் என்று.

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.