ஒரு சாமானியனின் வரலாறு – 3

ஒரு சாமானியனின் வரலாறு – 3

சோதனையும் நழுவிப்போன வாய்ப்பும்:

வீட்டுக்கு வந்து பார்த்தால், வீட்டில் அம்மாவும் அப்பாவும் இல்லை. என் தங்கைகள் அம்மாவுக்கு மிகவும் உடல் நிலை சரியில்லாமல், எங்கள் அப்பாவின் நண்பரும் ஹோமியோபதி வைத்தியரும் ஆன திரு கல்யாணசுந்தரத்தின் உதவியுடன் இருதய மருத்துவர் வாஞ்சிலிங்கத்திடம் சென்றுள்ளனர் என்று கூறினர். அடிக்கடி கோயிலுக்குப் போகாத நான் அன்று மாரியம்மன் கோவிலுக்குச் சென்று இறைவியிடம் அம்மாவை நன்றாக வைக்க வேண்டும் என்று வேண்டி வந்தேன்.

இரவு வந்த என் பெற்றோர், மறு நாள் அம்மாவை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லவேண்டும் எனவே நானும் கல்லூரிக்குச் செல்லவில்லை என்று கூறி மறு நாள் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனகள் செய்து மருந்து வாங்கித் திரும்பிவந்தோம். மறு நாள் சென்றபோது, மருத்துவர் என்னிடம் அம்மாவை நன்றாகப் பார்த்துக் கொள் என்று சொன்னார். அதற்கு நான் மூத்த மகன். என் அம்மாவை நிச்சயம் பார்த்துக் கொள்வேன் என்றேன். இல்லையப்பா, உன் அம்மா எத்தனை மாதங்கள் இருப்பார் என்று சொல்வதற்கில்லை, எனவே நீ இதை அறிந்து பக்குவமாக அவர்களைப் பார்த்துக் கொள் என்று சொல்லிவிட்டார்.

நான் மிகுந்த அதிர்ச்சிக்குள்ளாகி என்ன செய்வதென்பது அறியாமல், அந்த வாரக் கடைசியில் கல்லூரிக்குச் செல்வதாகக் கூறிவிட்டு, திருச்சி வந்து, கல்லூரிக்குப் போகாமல், முக்கொம்பு எனும் இடத்திற்கு வந்து அந்த இயற்கை சூழலில் ஆகாரமின்றி மாலை 6 வரை யோசித்ததில், கடவுள் நம்மைச் சோதிக்கிறார் என்றும், எனக்கு முதல் கடவுள் என் தாயே என்றும், எனக்கு வந்திருக்கும் இந்த வாய்ப்பைப் பற்றி யாரிடமும் தெரிவிக்க வேண்டாம் என்று முடிவுசெய்து வீடு திரும்பினேன்.

அடுத்த நாள் கல்லூரி முதல்வரிடம் இந்த முடிவைச் சொல்லும் போது அவர் அடைந்த கோபம் என்னைமிகவும் படுத்தியது. நான் அழுவதைக் கண்ட அவர், நீ உத்தமமான மனிதன், நீ சொல்வதைப் போல் நீ வெளி நாடு செல்ல வேண்டாம். அந்த எல்லாக் கடிதங்களையும், என்னிடம் கொடுத்துவிடு, நான் வைத்திருக்கிறேன். இன்னும் 10 நாள் விடுமுறையில் சென்று, உன் தாய்க்கு வேறு எங்கும் மருத்துவம் பார்த்தால் நிலை முன்னேறுமா என்று பார்த்து விட்டு வா. அல்லா உனக்கு வைத்திருக்கும் சோதனையில் நீ வெற்றி பெற்று, நீ பிலிப்பைன்ஸ் செல்ல வேண்டும் என்று நான் அல்லாவை தினமும் வேண்டிவந்தேன். மேலும் வேண்டுகிறேன். நான் தயங்கியபோது, தாம் யாரிடமும் தெரிவிக்காமல் இருப்பதாகவும், என் வீட்டுக்கும் யாரையும் அனுப்பி இத்தகவலை சொல்லப்போவதாகவும் இல்லை என்றும் கூறி விரட்டிவிட்டார்.

ஆனாலும் என்னால் எடுத்த முடிவை மாற்றிக் கொள்ள இயலவில்லை. என் அம்மாவின், அப்பாவின், தம்பியின், தங்கைகளின் முகங்களே எப்போதும் என் நினைவில் இருக்கத் தொடங்கின. ஒரு மாதம் கழித்து, உலகவங்கிக்கு எனக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால், குறித்த நாளில் என்னால் சென்னை செல்ல இயலவில்லை என்றும், என் அம்மா நலமில்லாததால், என்னால் பிலிப்பைன்ஸுக்குச் செல்ல முடியாது என்றும், உலகவங்கியின் உதவிக்கு நன்றி என்றும் கல்லூரி முதல்வர் அறையிலேயே அவர் அனுமதியுடன் எழுதி, கல்லூரியின் செலவில் உலகவங்கிக்கும், நகல்கள் பிலிப்பைன்ஸுக்கும், சென்னையில் USIS க்கும் அனுப்பப் பட்டன. இந்த நிகழ்ச்சிக்குப் பின் என் மன நிலை தெளிவாகி விட்டது. எந்தவிதமான வருத்தமும் இல்லாமல் போயிற்று. வருத்தத்தையெல்லாம் நான் அன்று முக்கொம்புவில் காவிரிக்கரையில் 4 மணி நேரம் அழுகையில் தொலைத்து விட்டிருந்தேன்.

வேலை தேடும் முயற்சிகள்:

பின்னர் நான் பல நிறுவனங்களிலும் பணிக்காக விண்ணப்பிக்க ஆரம்பித்தேன். இரண்டு மாதத்தில் சுமார் 10 பணிக்கான தேர்வுகளுக்கும் 8 நேர்காணலுக்கும் சென்றேன்.

1976 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் எனக்கு வந்தது முதல் பணி நியமனக் கடிதம். அம்மாதத்திலேயே மேலும் 4 நியமனக் கடிதங்களும் வந்துவிட்டன: அவை (1) Bank of India – Probationary Officer – at Mandvi, Mumbai (2) McNeil & Magor, Management Trainee at Calcutta (3) MMTC, Management Trainee at New Delhi, (4) JK Group- Management Trainee at Mumbai (5) L&T – Trainee Manager at New Delhi. நமக்கும் வேலைக்குத் தகுதியிருக்கிறது என்று நான் மகிழ்ந்தாலும், இதில் ஒன்றில் சேர நாம் முதுகலை இரண்டாம் வருடத் தேர்வை முடிக்கும் வரை கால அவகாசம் கேட்போம் என்று ஐந்து நிறுவனங்களுக்கும் எழுதினேன். JK Group, L&T, McNeil & Magor இவற்றிலிருந்து 3 மாத கால அவகாசமும், மற்ற இரண்டில் 1 மாத கால அவகாசமும் கிடைத்தது. வீட்டில் இந்த வேலை கிடைத்தது பற்றி, (எல்லாமே வெகு தொலைவில் இருப்பதால்) சொல்லவில்லை. வேறு வாய்ப்புகள் தமிழ் நாட்டில் கிடைக்கும் என்று நம்பினேன்.

எங்கள் வீட்டில் தினமும் The Hindu வாங்குவோம். என் 8வது வகுப்பு முதல் எனக்காக என் தந்தை அதை வாங்க ஆரம்பித்தார். அதில் முதல்பக்கத்தில் கீழ்ப்பகுதியில் வலது பக்க கால் பக்கத்தில், ஒரு வாரத்துக்கு இரண்டு தடவையாவது இந்தியன் வங்கியின் புது கிளைகள் திறப்பு விளம்பரங்கள் வந்துகொண்டிருக்கும். வாரம் 1 முதல் 4 கிளைகளாவது புதிதாகத் திறக்கப்படும். வேறு எந்த வங்கியின் விளம்பரமும் அந்த அளவிற்கு வராது. (என் அப்பா 8 வது வரையும் என் அம்மா 10வது வரையும் படித்தவர்கள்) தினமும் அதைப் பார்த்திருந்த என் அம்மா, நாட்டிலேயே பெரிய வங்கி இந்தியன் வங்கிதான் என்று நினைத்து, அதில் விண்ணப்பம் செய்யுமாறு பணித்தார். அச்சமயம் நான் 4 வங்கிகளில் அதிகாரி பணிக்கும், 5 தனியார் நிறுவனங்களில் Management Trainee பணிக்கும் விண்ணப்பித்திருந்தேன். தினமும் இந்தியன் வங்கி வேலை வாய்ப்பு விளம்பரம் வெளியிடுகிறதா என்று பார்ப்பார். ஒரு சமயம் இந்தியன் வங்கியின் விளம்பரம் வந்தது. ஆனால் அதிகாரி பணிக்கல்ல, ஆனாலும் என்னை என் அன்னை வற்புறுத்தியதில், மனதில் அவ்வளவு விருப்பமில்லாமல் விண்ணப்பம் அனுப்பினேன். எனக்கு எதேனும் ஒரு வங்கியிலோ நிறுவனத்திலோ அதிகாரிப்பணி கிடைக்குமென்றும், அம்மாவை அப்போது சமாளித்துக் கொள்ளலாம் என்றும் என்னைத் தேற்றிக்கொண்டேன்.

வேலையில் சேர்ந்துவிட்டேன்:

இந்தியன் வங்கியிலிருந்து எழுத்தர் பணிக்கு நியமனக் கடிதம் வந்தது, அதில் நான் தஞ்சாவூர் கிளையில் சேரவேண்டும் என்றும் எழுதியிருந்தது. என் அம்மாவுக்கு மிக்க மகிழ்ச்சி. நீ MCom தேர்வுக்குப் பின் வேலைக்கு வருகிறேன் என்று தெரிவித்து விடு என்றார். நான் சென்று தஞ்சை சென்று விசாரித்ததில் இது அரசு வங்கி, இதில் எவ்வித மாற்றமும் கிளைமேலாளர் செய்ய முடியாதென்றும் கூறவே நான் வீட்டில் தெரிவித்து விட்டேன். நான் இதைத் தவிர்த்துவிடலாம் என்று நினைத்தேன். வேறு வேலைக்கான கடிதம் அதற்குள் வந்துவிடும் என்று நினைத்தேன். ஆனாலும் அம்மா என்னை உடனே சென்னை சென்று வங்கியின் தலைமையகத்திற்குச் சென்று அனுமதி பெற்றுவரச் சொல்லிவிட்டார். நானும் சென்னை வந்து வங்கியின் தலைமை அலுவலகம் சென்று அங்கு அப்போது Staff Superintendent (தற்போது அப்பதவி General Manager – HRM) ஆக இருந்த திரு செல்லையா அவர்களைச் சந்தித்துக் கேட்டதில், அவர் “தம்பி, நீ சென்று வேலையில் சேர்ந்துவிட்டுப் பின் விடுமுறை விண்ணப்பம் செய். உனக்கு தேர்வுக்காக விடுப்பு அளிக்கப் படும்” என்று கூறவே, வீடு திரும்பினேன். இதை வீட்டில் சரியாகச் சொல்லவில்லை. சரியான பதிலுக்குக் காத்திருக்கிறேன் என்று சொன்னேன். இந்தியன் வங்கியில் சேருவதற்கான கடைசி நாள்தான், MCom தேர்வுகளின் முதல் நாள். தயக்கத்துடனேயே இருந்தேன்.

ஒரு நாள் அம்மாவுக்கு நெஞ்சுவலி அதிகமாகி மருத்துவரிடம் செல்லவேண்டியதாயிற்று. அப்போது மருத்துவர்கள் அம்மாவின் இருதயம் மிகவும் பலவீனமாக உள்ளது என்றும் மிக எச்சரிக்கையுடன் பார்த்துக் கொள்ளவேண்டும் என்றும் கூறிவிட்டனர். நான் மறுபடியும் திருச்சி கிளம்பி, முக்கொம்புவில் எனக்குப் பரிச்சயமாகி விட்டிருந்த அந்த இடத்துக்குப் போனேன்.

அப்போது அங்கு 10 குரங்குகள் விளையாடிக் கொண்டிருந்தன. ஒரு குரங்கு பார்த்துக் கொண்டிருந்த ஒரு பெண்ணின் அருகே வந்து எதையோ பிடுங்க முயல, அருகிருந்த அவள்கணவர் ஒரு பெரிய தடியெடுத்து அதை நையப் புடைத்து விட்டார். அக்குரங்குக்கு எழுந்து ஓட முடியாமல் திண்டாடி, வேறு இரண்டு குரங்குகள் அக்குரங்கை இழுத்துப் போய் கரையருகே வைத்துவிட்டு, கீழே கிடந்த உடைந்த டப்பா ஒன்றை எடுத்துத் தண்ணீர் நிரப்பி காயம் பட்ட குரங்கின்மீது ஊற்றி அதைச் சுற்றி நின்றுகொண்டு அதைத் தொட்டுக்கொண்டே கத்திக் கொண்டிருந்தன. அங்கிருந்த 20 குரங்குகள் வேறு எங்கும் வராமல் மனிதர்களை ஒன்றும் செய்யாமல் அக்குரங்கைக் கவனிப்பதிலேயே அவ்விடத்தில் இருந்தன.

குரங்குகள் கோபத்தில் வந்து மனிதர்களைக் காயப் படுத்திவிடும் என்று பலரும் அச்சமுற்றிருந்தனர். பள்ளி ஆசிரியைகள் தங்களுடன் வந்த குழந்தைகளை அவசர அவசரமாக திரும்ப அழைத்துக் கொண்டு தாங்கள் வந்த பேருந்து வண்டியில் ஏறிச் செல்ல ஆரம்பித்துவிட்டனர். அவ்விடத்தில் தினமும் இளநீர் விற்கும் வியாபாரி ஒருவர் எல்லோரையும் அஞ்சவேண்டாம் என்றும், இம்மாதிரிச் சமயங்களில் குரங்குகள் தங்களுக்குள்ளும் சண்டை போடாது, மனிதரிடத்திலும் வராது, எதையாவது செய்து அந்த அடிவாங்கிய குரங்கை உள்ளே அழைத்துப் போய்விடும் என்று சொன்ன பின், சிலர் என்னதான் ஆகிறது பார்க்க முடிவு செய்ய நானும் அங்கேயே இருந்தேன்.

அங்கேயிருந்த மேலும் 1 மணி நேரத்தில் அங்குவந்த பெண்கள் (அனேகமாக அவ்விடத்தைச் சேர்ந்தவர்கள்), குரங்குகள் மனிதரை விட நம்பிக்கையானவை என்றும், மனிதன்தான் பத்துமாதம் சுமந்துபெற்ற தாயையும் காலால் உதைத்துவிட்டு வேறு ஊருக்குப் போய்விடுவான் என்று, அங்கு நின்றிருந்த 10 பையன்களைப் பார்த்துப் பேச, அந்தப் பையன்கள் திருப்பிப் பேச வாக்குவாதம் முற்றி ஒரே ரகளையானது. நான் சற்று நேரம் புல்லில் சாய்ந்து தூங்கிவிட்டேன். விழித்தவுடன் என் மனம் இலேசாயிருந்தது. அம்மா சொன்னதையே மனதாரச் செய்வோம் என்று தீர்மானித்தேன்.

உடனே கிளம்பிக் கல்லூரிக்குச் சென்று முதுகலை வணிகவியல் தமைமைப் பேராசிரியரான திரு N M நியமத்துல்லா அவர்களுடன் ஆலோசித்ததில், வேலையில் சேருவதே எனக்கு இருந்த மன நிலையில் சரியானது என்று முடிவுசெய்து, அடுத்த வாரம் தேர்வுக்குப் போகாமல், தஞ்சையிலுள்ள இந்தியன் வங்கிக்கிளையில் வேலையில் 01.04.1976 அன்று சேர முடிவு செய்துவிட்டேன்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.