ஒரு சாமானியனின் வரலாறு – 27

ஒரு சாமானியனின் வரலாறு – 27

ஃபஸ்லுர் ரஹ்மானும் ஹாஸன் மரைக்காயரும்

உயர்திரு ஹாஸன் மரைக்காயர்

இன்று திடீரென்று இவரது நினைவு வந்தது எனக்கு.

நான் நெல்லிக்குப்பம் கிளையில் பணி புரிந்தபோது என்னைக் கவர்ந்த நண்பர்களுள் ஒருவர் இந்தப் பெரியவர்.

உத்திரப்பிரதேசத்தில் உள்ள ஆக்ரா கிளையில் இருந்து நான் மாற்றல் ஆகி 1985ஆம் ஆண்டு மே மாதம் நெல்லிக்குப்பம் கிளையில் சேர்ந்தேன்.

இங்கு வரும்வரை ஏதோ ஒரு கிராமத்தில் உள்ள கிளை என்று நினைத்திருந்தேன்.

இங்கே வந்ததும் தான் இது பெரிய தேர்வு நிலை நகராட்சி என்பதும் இங்கே உள்ள போலீஸ் காலனியில் அப்போதே 45 வீடுகளுக்கும் மேல், பள்ளிகள் 8, EID Parry, Parry Confectionary  போன்ற தொழிற்சாலைகள், மெச்சும்படியான சிமெண்ட் சாலைகள், நல்ல மனிதர்கள் என்று பல விஷயங்களையும் அறிந்தேன்.

வங்கிக்கு அடிக்கடி வந்து செல்லும் முக்கியமான வாடிக்கையாளர்களில் இவரும் ஒருவர். அக்கிளையில் நான் சேர்ந்த நான்காம் நாள் மாலை முதன்முதலில் அவரைப் பார்த்தேன். மாலை நான்கு மணி வாக்கில் வந்த அவர் மேனேஜர் அறையில் அமர்ந்திருந்தார்.

நான் அந்தக் கிளையில் அக்கவுண்டண்ட். (தற்போதைய உதவி மேலாளர் பணி). ஆக்டிங் மேனேஜரும் கூட. ( பழைய மேனேஜர் மாறியபின் இன்னும் புது போஸ்டிங் வரவில்லை).

எங்கள் ஊழியர் ஒருவர் என்னை அழைத்துச் சென்று வந்தவரிடம் அறிமுகம் செய்துவைத்தார். வெள்ளைவெளேர் சட்டை, வெள்ளை லுங்கி, கையில் பொன் நிற கடிகாரம். புது வெள்ளை பனியன் அணிந்திருந்தார். நல்ல மலர்ச்சியான முகம். மகிழ்வை ஊட்டும் கண்கள்.

என் கையை இரு கைகளாலும் பற்றிக் குலுக்கினார். தன் பையில் இருந்து ஒரு பெரிய இனிப்புப் பெட்டியைத் திறந்து எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். நன்றி சொல்லிக் கொண்டே ஒன்று எடுத்தேன். நீங்கள் எங்கள் வங்கியின் விருந்தினர். நான்தான் தங்களுக்கு இனிப்பு தரவேண்டும் என்று அதை அவரிடம் நீட்டினேன். அவர் கண்ணில் மகிழ்ச்சியுடன் வாங்கி இரு பாதியாய் அதை விண்டு முதல் பாதியை எனக்கு ஊட்டிவிட்டார். மற்ற பாதியை அவர் உண்டார். இனிப்புப் பெட்டியை மூடி என்னிடம் கொடுத்து இது உங்களுக்குத் தான் என்றார்.

இன்னும் இரண்டு இனிப்புப் பெட்டிகளை எடுத்து உடன் நின்றிருந்த ஊழியரிடம் கொடுத்து “தம்பி, உங்க புது அக்கவுண்டண்ட் ஜாயின் செய்ததுக்கு நான் எல்லோருக்கும் ஸ்வீட் கொடுக்கிறேன் என்று சொல்லி எல்லோரிடமும் கொடு” என்றார்.

நான் சாப்பிட்ட இனிப்பை விட அவரது பேச்சு எனக்கு இனிப்பாய் இருந்தது. அவர் நான் இக்கிளையில் சேரும் நாளிலேயே என்னைக் காண நினைத்தது, அவசர காரியமாக ஊருக்குச் சென்றது, இன்று ஊருக்கு மூன்றரை மணிக்கு வந்து இறங்கிய போது நான் கிளைக்கு வந்துவிட்டது தெரிந்து இனிப்பு வாங்கிக் கொண்டு நேரே இங்கு வந்தது, இனிமேல்தான் வீடு செல்ல வேண்டும் என்று எல்லாம் சொன்னார்.

ஏதோ நெடுநாள் பழகிய நண்பர் பேசுவதுபோல் அவர் பேசியது கண்டு நான் அதிசயித்தேன். என்னைப் பற்றி என் வயது, என் குடும்பம், வங்கியில் நான் சேர்ந்தது முதல் அன்றுவரை எங்கெல்லாம் இருந்தேன் என்பன பற்றி எல்லாம் கேட்டார். இத்தகைய பேச்சு வங்கியில் பணிபுரியும் இரு நண்பர்கள் பேச்சு போலவே இருந்தது.

ஆக்ரா கிளையில் பணிபுரிந்துவிட்டு அதன் நிலைமையில் ஊறிவிட்டு நொந்துபோயிருந்த எனக்கு அவரது அன்பான விசாரிப்புகள் இன்பமூட்டும் இனிய தென்றலாய் இருந்தன. எங்கள் கிளையில் பணிபுரியும் (25 பேர் இருப்பார்கள்) அனைவரையும் நன்றாக அறிந்திருந்தார்.

இன்னும் அரைமணி நேரம் பேசிவிட்டுச் சென்றார். நான் உள்ளே சென்று என்னிடம் இருந்த இனிப்புகளை எல்லோருக்கும் கொடுத்தேன். “சார், நாங்க சாப்டுட்டோம் சார், நீங்க வீட்டுக்குக் கொண்டு போங்க” என்றனர். நான் வற்புறுத்தவே எல்லோரும் எடுத்துக் கொண்டனர்.

( நான் வாடிக்கையாளர் தரும் எந்தப் பரிசையும் – வருடத்திற்கு ஒரு டைரி தவிர – வீட்டுக்குக் கொண்டு போனதில்லை. இதை என் பணியின் 38 ½ வருட காலத்திலும் பின்பற்றி இருக்கிறேன். இது சில இடங்களில் சில நல்ல உள்ளம் படைத்த வாடிக்கையாளர்களின் மனத்தைப் புண்படுத்தி இருக்கிறது. அவர்களிடம் நான் எவ்வளவோ முறை மன்னிப்புக் கேட்டு மறுத்து விடுவேன். அவர்களது கோபம் பின்னர் சரியாகி விடும்.)

இப்படி முதல் சந்திப்பில் பிடித்துப் போன அவர் மறுபடி பலமுறை வங்கிக்கு வரும்போது பேசியதில், மற்ற வாடிக்கையாளர்கள் எங்கள் வங்கி ஊழியர்கள் இவர்களிடம் அவர் பழகும்போது அவரைக் கவனித்ததில் அவரைப் பற்றிய மதிப்பு கூடிக் கொண்டே போனது. எல்லோரும் அவரை மிகவும் மதித்தனர். சிலசமயம் ஊழியர்கள் இடையே அல்லது, வாடிக்கையாளர்-ஊழியர் இடையே அல்லது வாடிக்கையாளர்கள் இடையே ஏதாவது பேச்சுவார்த்தை சூடாக வந்தால், அது உயர்திரு மரைக்காயர் வந்திருக்கும் நேரம் என்றால், அந்தச் சூழ்நிலையில் இருவருக்கும் இடையே வந்து இருவரையும் சமாதானம் செய்து அமைதிப் படுத்துவது எப்போதுமே அவர்தான். சமூகச் சூழ்நிலையில் ஒரு அமைதியான தலைவராகவே எப்போதும் திகழ்ந்தார் அவர்.

இன்னொரு விஷயம். பல சமயங்களில் அவர் பேசும்போது கம்பராமாயணச் செய்யுள்கள் அழகுத் தமிழில் அவர் வாயினின்றும் உதிரும். இது நான் மிகவும் ரசிக்கும் விஷயம். பின்னாள் ஒருசமயம் இதைப்பற்றி நான் கேட்டபோது என்னிடம் அவர் பேசியது இது.

“ சார். நீங்க என் சகோதரர். நான் கேட்பதைக் குறித்து கோபிக்கக் கூடாது. நீங்கள் புலால் உண்பதுண்டா, மது அருந்துவது உண்டா”…

“இல்லையா, மன்னிக்கவும். அப்போ உங்களுக்கு சமஸ்கிருத மொழி தெரியுமா, வால்மீகி ராமாயணம் வாசித்து உள்ளீர்களா?”

“என்ன உங்களுக்கு சமஸ்கிருதம் தெரியாதா? பரவாயில்லை. வீட்டில் கம்ப ராமாயணம், மஹாபாரதம், பகவத்கீதை புத்தகங்கள் உண்டா?”

“பகவத்கீதை மட்டும்தானா உள்ளது ? என்ன இது. மகாபாரதம் படிக்கவில்லை என்றால் பகவத்கீதையின் ஆழமான கருத்துக்கள் எப்படிப் புரியும்? கம்பராமாயணம் தெரியும் ஆனால் புஸ்தகம் இல்லை என்றால் என்ன அர்த்தம்? தமிழ் படித்து கம்பராமாயணம் படிக்கவில்லை என்றால் தமிழ் படித்துத்தான் என்ன பயன்? தமிழைப் பிடித்துத்தான் படித்தீர்களா? ” என்றெல்லாம் கேட்டார்.

எனக்குத் தமிழ் பிடிக்கும், நான் உயர்நிலைப்பள்ளியில் 11ஆம் வகுப்பில் ஒரு ஆங்கிலக் கதையை மொழிபெயர்த்து என் நண்பன் திரு குணசேகரனுடன் சேர்ந்து 300 வெண்பாக்கள் இயற்றி பிரசுரம் ஆகி இருக்கிறது என்று கூறியபின் அவர் வேகம் குறைந்தது.

“சார் நீங்க மஹாபாரதம், கம்பராமாயணம் இரண்டும் வாங்கித் தினமும் படியுங்கள். இரண்டையும் ஒரு வருடத்திற்குள் குறைந்தது மூன்று முறையாவது படியுங்கள். தினமும் படித்ததை சிந்தியுங்கள். உங்களுக்குத் தேவையான  Business development, Human Relations, Personnel Management, Ethics, Social Behaviour, Moral Strength  என்று உங்களுக்குச் சொந்த வாழ்க்கையிலும் அலுவலகப் பணியிலும் தேவையான அனைத்து அறிவுச் செல்வங்களும் இவற்றில் உள்ளன. ஒரு இந்துவாய்ப் பிறந்த நீங்கள் பெருமையுடன் இவற்றை எல்லாம் பயிலவேண்டும். தினமும் படிக்கவேண்டும். ஒரு முஸ்லீம் ஆன நான் தினமும் படிக்கும் திருக்குர்ஆன் தவிர ராமாயணம் அல்லது மஹாபாரதம் தினமும் ஒரு மணிநேரம் வாசிப்பேன்” என்றார்.

“சார் உங்களைப்போலவே சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உயர்திரு எம் எம் இஸ்மாயில் அவர்களும் நான் படித்த ஜமால் முஹம்மது கல்லூரியின் முதல்வர் உயர்திரு இஸ்மாயில் அவர்களும் கம்பராமாயணம், மகாபாரதம், சிலப்பதிகாரம் இத்தகைய நூல்களில் மிகத் திறமை பெற்றவர்கள்” என்று சொன்னதற்கு அவர் “ஆமாம் ஆமாம், இதை எல்லாம் ஒரு முஸ்லீம்தான் உங்களுக்குச் சொல்லவேண்டும். முஸ்லீம்கள்தான் செய்து காட்டவேண்டும்” என்றார்.

“சார், நான் கூட பைபிளும் குரானும் வாசிப்பேன்” என்றதற்கு அவர் “முதலில் இந்த இரண்டையும் – அதாவது கம்பராமாயணம் மஹாபாரதம் வாசியுங்கள். இவற்றை வாசித்துவிட்டு பைபிளையும் திருக்குர்ஆனையும் படித்தால் தெளிவான விளக்கங்கள் கிடைக்கும்” என்றார்.

அன்று எனக்கு நான் இதற்குத்தான் – அதாவது இத்தகைய அறிவுரையைக் கேட்கத்தான் — நெல்லிக்குப்பம் வந்ததாகத் தோன்றிவிட்டது.

அவரை என்னால் மறக்க முடியவில்லை. அவர் தற்சமயம் இங்கேயே அல்லது மறுவுலகிலோ இருந்தாலும் என்னை அவர் ஆசீர்வதிக்கவேண்டும். அவரது பிள்ளைகள், அவரது குடும்பத்தினர் நல்ல ஆரோக்கியத்துடனும் மகிழ்ச்சியுடனும் வாழ அவர்களுக்கு வேண்டியதைச் செய்ய வேண்டும் என்று எல்லாம் வல்ல அல்லாவைப் பிரார்த்திக்கிறேன்.

அங்கிருந்த 3 ½ வருட காலத்தில் இன்னும் சில நட்புக்கள் கிடைத்தன, அவற்றில் ஒருவர் தற்போதும் என் முகநூல் நண்பராய் இருக்கும் திரு ( Mr Naziruddin Illauddin ) அவர்கள்.

ஆமாம் ஃபஸ்லூர் ரஹ்மானைப் பற்றிக் கூறவே இல்லையே என்று கேட்காதீர்கள். எனக்கு அவரைப் பற்றி அவ்வளவு அதிகம் தெரியாது. அவர் ஒரு வியாபாரி.

அவர் பெயர் என் நினைவில் உள்ளதற்குக் காரணம் சொல்கிறேன்.

அக்கிளையில் நான் வேலையில் சேர்ந்த அந்த நாளில் என் பார்வைக்கு வந்த முதல் க்ரெடிட் வவுச்சர் அது. OBC  ரியலைஸ் ஆகி அவர் கணக்கில் வரவு வைக்கவேண்டும். அதில் அவரது கணக்கு எண் இல்லாததால் நான் OBC Register ஐப் பார்த்தும் கிடைக்காததால் ஊழியர்களிடம் கேட்டேன். அன்று கிளையில் கூட்டம் அதிகம். அந்த  OBC வரிசை எண் 799.

மதியம் இரண்டுமணிக்கு என் சக ஊழியர் திரு நாராயணமூர்த்தி என்னிடம் இருந்த வவுச்சரைப் பார்த்துவிட்டு “சார் செலானில்தான் சரியாக நம்பர் இருக்கே சார்” என்றார். நான் “இல்லைங்க, 799 என்பது OBC நம்பர்ங்க” என்றதும் இன்னும் சரிவர அறிமுகம் ஆகியிராத என்னை ஒருமாதிரிப் பார்த்துக் கொண்டே சென்றுவிட்டார்.

( அன்று மாலையில் இருந்து நான் 3 ½ ஆண்டுகள் கழித்து அக்கிளையை விட்டுப் போனபின்னும் எனக்கு மிகவும் பிடித்த என் நெடுநாளைய சினேகிதர் திரு நாராயணமூர்த்தி அவர்கள். )

எஸ் பி லெட்ஜரை எடுத்துவந்தார் ( CBS System  அப்போதெல்லாம் பிறக்கவில்லை ). லெட்ஜரைப் புரட்டி என்னிடம் காண்பித்தார். அவர் சொன்னது சரிதான். திரு ஃபஸ்லுர் ரஹ்மானின் கணக்கு எண் 799தான்.

நான் OBC Register ஐப் புரட்டிக் காட்டினேன். அவர் வசூல் செய்யக் கொடுத்திருந்த அயலூர் செக்குக்கான வசூல் வரிசை எண்ணும் 799தான். இருவரும் சேர்ந்து அந்தச் செலானை மறுபடி பார்த்தோம். அதில் கணக்கு எண் என்று குறிப்பிடும் இடத்தில் காலியாக இருந்தது. செலானின் மேல்பகுதியில் ஸ்கெட்ச் பேனாவில் 799 என்று எழுதி இருந்தது.

மிகவும் அதிசயமாக இப்படி இரண்டு எண்களும் ஒன்றாகவே இருப்பது கண்ட ஊழியர்களிடையே எழுந்த சிரிப்புச் சத்தம் அடங்க வெகுநேரம் ஆயிற்று.

இதில் யார் தோற்றோம் யார் ஜெயித்தோம் ?. இருவரும் சேர்ந்து 5 மணிக்குச் சென்று கடைத்தெருவில் (ஏற்கனவே செய்த பந்தயத்தின் படி இருவருமே செலவு செய்து) இனிப்பு வாங்கிவந்து காத்திருந்த எல்லா அலுவலக நண்பர்களுக்கும் கொடுத்து மகிழ்ந்தோம்.

இனிப்பாய்த் தொடங்கிய அந்தக் கிளை வாழ்க்கை முழுதும் எனக்கு இனிப்பாகவே இருந்தது.

என் வாழ்வின் அந்த மூன்றரை வருட வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமானது, அலுவலில் மிகவும் சவாலாகவும் அமைந்தது, சாதனைகளும் நிறைந்தது. எப்போதுமே என்னால் மறக்க முடியாத பொன்னான 3 ½ வருடங்கள் அவை.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.