ஒரு சாமானியனின் வரலாறு – 26

ஒரு சாமானியனின் வரலாறு – 26

அலுவலகத்தில் ஒரு நாள்

என் கேபினில் அமர்ந்தேன். ஏதோ நடக்கப் போகிறது என்று உள்ளுணர்வு சொன்னது. மணி 8.45 காலை.  சோனா சுத்தம் செய்துவிட்டு “ சார், நான் டிபன் சாப்ட்டு வரேன்” என்று வெளியே போனார்.

அடடா, ஒரு டீ வாங்கிவரச் சொல்லி இருக்கலாம். வேறு யாரும் ஆபீஸில் இல்லை. ஏதாவது டிவிஷனல் ஆபீஸிலிருந்து கால் வரலாம். மார்ச் மாதம் வேறு.

எனவே என் சீட்டில் அமர்ந்தேன். சோனா வந்தவுடன் வெளியில் சென்று டீ சாப்பிடலாம் என்று நினைத்தேன்.

பெண்டிங் பேப்பர் பேட் எடுத்துப் பார்த்தேன். இன்று செய்யவேண்டிய to-do list பார்த்து, நாலைந்து கஸ்டமருக்கு ஃபோன் செய்தேன். ஒருவர் “நல்லவேளை நீங்க ஃபோன் செஞ்சிங்க சார், இன்று மதியம் ஒரு கோடி ரூபாய் கேஷாக வித்ட்ரா செய்யணும்” என்றார்.

ஸ்டாஃப் வந்தவுடன் கேஷ் ரெமிட்டன்ஸுக்கு அனுப்பவேண்டும் என்று குறித்துக் கொண்டேன்.  கரன்சி செஸ்ட்டுக்கு கால் செய்தேன்.

BMதான் எடுத்தார். “சார், இன்னமும் செஸ்ட் ஆபீஸர் வல்ல சார். என்ன வேணும், ஒருகோடி ரெமிட்டன்ஸ் அனுப்புறிங்களா?”

நான் “இல்ல சார், ஒருகோடி வேணும். 12 மணிக்குள் கஸ்டமருக்கு கொடுக்கணும்”

“சரி, சார், அனுப்புங்க, நான் செஸ்ட் ஆபீஸரிடம் சொல்றேன்”. ஃபோனை வைத்துவிட்டார்.

மணி 9.30. கஸ்டமர்கள் வர ஆரம்பித்து விட்டனர்.

வங்கி, பணம் செலுத்துதல், பணம் எடுத்தல், பணம் அனுப்புதல், வாடிக்கையாளர், போன்ற தமிழ் வார்த்தைகள்தான் நான் முன்னர் பயன்படுத்துவேன். அதாவது மல்லிக் குப்பம், வணங்கும்பாடி, மஸக்காளி கிளைகளில் பணிபுரிந்தவரை.

இந்த ப்ராஞ்சுக்கு வந்தது முதல் இங்குள்ள வழக்கங்களால் அது மாறிவிட்டது.

சொந்த ஊர் பக்கம் வந்துவிட்டால் சுதந்திரம் கிடைத்தமாதிரி.

எழுத்தும் பேச்சும் செந்தமிழில் இருந்தது மாறி தங்கிலிஷ் ஆகிவிட்டது.

நான் எழுதும்போது நல்ல தமிழில்தான் எழுதுவது வழக்கம்.

ஆனால் இது நடந்த ஒரு நிகழ்ச்சி ஆதலால் அப்போது புழங்கிய வார்த்தைகளையே எழுதுகிறேன். என் எழுத்தை ரசித்த படித்த நண்பர்கள் மன்னிக்கவும்.

முத்துக் குமார் வந்தார். “சார் 20 லட்சம் இருக்கிறது. கட்டவேண்டும். கேஷியர் 9.45க்கு வந்து விடுவார் இல்லையா. நான் ஒங்க ரூம்ல ஒக்காரலாமா” என்று அமர்ந்தார். “என்ன சார், ஏசி வேல செய்யலயா” என்று பணத்தை என்னருகில் வைத்துவிட்டு வெளியில் சென்றுவிட்டார்.

இம்தியாஸ் 9.35க்கு வந்தார். அவர்தான் சீஃப் கேஷியர். அவரிடம் இரண்டு விஷயத்தையும் சொன்னேன். அவருடன் சென்று ABM சேஃப் ரூமைத் திறந்து விட்டு வந்தார்.

இம்தியாஸ் வந்தவர் என்ன சார் ஸுட்கேஸ் என்றார். முத்துக்குமார் பணம் வைத்திருக்கிறார் கட்டுவதற்காக என்றேன். ஏன் சார் “அந்தாள இங்க வக்கச் சொன்னீங்க, கொடுங்க, நான் கேஷ் கவுண்டரில் வச்சிருக்கேன். வந்தா என்னிடம் அனுப்புங்க” என்றார். “நல்லவேளை பொட்டி பூட்டித்தான் இருக்கு” என்று சொல்லி விட்டு பெட்டியை உள்ளே எடுத்துச் சென்றார்.

ABM இண்டர்காமில் கூப்பிட்டு, இன்னிக்கு ரெண்டுபேர் லீவு சார். ஒருத்தர் காலேஜ் ஃபீஸ் கலக்ஷனுக்கு போவார். எப்படி யாரை ரெமிட்டன்ஸ் அனுப்ப ? ஒரு கோடி என்றால் செக்யூரிடி ரூல்ஸ் ப்ரகாரம் ரெண்டுமுணு தரம் போகணும்பாங்க, நம்ம செக்யூரிடி ஸ்டாஃப்க்கிட்ட இப்ப சொல்லாதிங்க. யோசிச்சி சொல்லுங்க என்று வைத்துவிட்டார்.

இம்தியாஸைக் கூப்பிட்டேன். சொன்னேன்.

அவர் சொன்னார்: “ சார் இன்னிக்கு ஸ்டாஃப் லீவு, ரெண்டு மூணு தடவை போக முடியாது. இன்று திங்கள் கிழமை. கூட்டம் தாங்காது. ATMலயே ரெண்டுதரம் பணம் வக்கவேண்டி வரும். அதனால இத வேறுமாரி செய்யலாம். ஒருதரம் இந்த ப்ரான்ச்சில் சாமுராய் மேனேஜராக இருந்தபோது இதுபோல நடந்தது. அவர் உடனே அந்த கஸ்டமரிடம் பேசி ஒரு 50 லட்ச ரூபாய் செஸ்ட் ப்ரான்ச்சுக்கு அனுப்பி ஒரு அக்கவுண்ட் தெறந்து கொடுத்தார். அந்த BM கிட்ட பேசுங்க, கஸ்டமரை பணத்தை அந்த அக்கவுண்ட்டுக்கு மாத்தி அதிலேருந்து எடுக்கச் சொல்லுங்க.” உள்ளே சென்று விட்டார். எவ்வளவுதான் நீங்கள் சின்சியராக வேலை செய்தாலும் இந்தமாதிரி நேரங்களில் ப்ராஞ்ச் எக்ஸ்பர்ட்டிடம் கேட்டால்தான் சில பிரச்னைகளை சமாளிக்க முடியும்.

கஸ்டமரிடம் பேசி, மற்றும் செஸ்ட் BM உடனும் பேசி ஏற்பாடு செய்தேன். நான் சொன்னபடி 11மணிக்கு செக்கை எங்கள் கிளைக்கு அனுப்பி விட்டு, அந்த ப்ரான்ச் செக்குடன் அங்கே சென்றார். நாங்கள் உடனே அந்த பணத்தை அந்தக் கிளையில் உள்ள அவரது அக்கவுண்டுக்கு மாற்றினோம். 11.30க்கு எங்கள் கஸ்டமர் அந்தக் கிளையில் பணத்தை பெற்றுவிட்டார். அந்தக் கிளையில் இவர் இப்போது இன்னொரு 25 லட்சத்தை அந்தக் கணக்கில் சேர்த்துவிட்டார்.

செஸ்ட் ப்ராஞ்ச் BM என்னைக் கால் செய்து பேசினார்: “நல்ல பார்ட்டி சார். எங்க ப்ரான்சுக்கு புது டெபாசிட் குடுத்திருக்கிறார். ரொம்ப நன்றி சார்.”

மல்லிகாபுரத்திலிருந்து மதியழகன் பேசினார். “சார் நீங்க அனுப்ச்ச லீகல் நோட்டீஸ் நல்லா வேலை செய்யுது சார். எங்க எல்லா ஸ்டாஃப் சம்பளத்திலும் இந்த மாதம் நிறைய பிடித்தம் செய்து விட்டோம். 94 பேரோட பழய பாக்கி முழுசும் பிடிச்சுட்டேன் சார். நாளைக்கு அனுப்பறேன் சார். மறுபடியும் ஒங்க ப்ராஞ்சில் லோன் உண்டா கேக்கறாங்க சார். நாளைக்கு வரேன்.” வைத்து விட்டார்.

நான் உள்ளே சென்று பேசிக்கொண்டிருந்தபோது, மெயின் லயனில் கால் வந்தது. ஃபோனை எடுத்த ABM ஃபோனைக் கையால் பொத்திக்கொண்டு “DM  கோபமா கூப்படறார் சார்”.

இண்டர்காம் வழியாக காலை மாற்ற, நான் எடுத்துப் பேசினேன். “என்னயா இது, ஒங்க ப்ராஞ்ச் எப்ப திறந்தீங்க, மகா மோசம். கம்ப்ளெயின்ட் மேல கம்ப்ளெயின்ட். ராத்திரி தூங்கும்போது கூட ஒங்க கஸ்டமர் ஃபோன் பண்ணி எதாவது கம்ப்ளெய்ண்ட் சொல்றாங்க.  நான் எத்தனை தடவை கூப்புட்றது, சீட்ல இருப்பதில்லையா? ஏன்யா நான் கேட்டதுக்கு பதில் சொல்லல” என்று சுட்டுப் பொசுக்கினார்.

வழிந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டு, “சார் ப்ராஞ்ச் 8.30க்கே திறந்து நான் 8.45க்கு வந்த்து முதல் என் ரூமில்தான் இருந்தேன். டி ஓ ஆஃபீஸ் கால் வரல்லயே சார். சொல்லுங்க என்ன கம்ப்ளெய்ண்ட் சார். “

“ஏன்யா, கஸ்டமர் சர்வீஸ்தான் சரியில்ல. லோன் ரெகவரியாவது பண்றிங்களா? போன மேனேஜர் மாதிரி லோனை அள்ளிக் கொடுத்துவிட்டு அடுத்துவர்ரவன் தலைக்கு வெடிவக்கிறீங்களா நீங்களும்”

எனக்கு சூடு ஏறிவிட்டது. “சார் மன்னிக்கணும். நான் வந்து 4 மாதம் ஆகிறது. கடந்த இரண்டு மாதத்தில் NPA ரெகவரி 31 லட்ச ரூபார் செஞ்சிருக்கோம். டெபாசிட் லெவல் 5% ரெண்டு மாசத்தில ஏத்தி இருக்கோம். கஸ்டமர் சர்விஸ் செய்யலனா இது சாத்தியமா சொல்லுங்க சார்.”

“சரி, காலை  BM கிட்ட கொடுங்க.”

“சார், நான் BM தான் பேசறேன் சார்.”

“எந்த ப்ரான்சு இது, தேரடி ப்ராஞ்ச் இல்லையா”

“இது சிவன் நகர் ப்ராஞ்ச் சார். என்ன சார் இது, இப்போதுதான் எனக்கு படபடப்பு நின்னுது சார். ஆடிப்போய்ட்டேன் சார்.”

“வெரி சாரி, நான் பேசனதயெல்லாம் மறந்துடுங்க. மனசுல வச்சுக்காதிங்க. உங்க ப்ராஞ்ச் நல்ல ப்ராஞ்ச்தான், PA கிட்ட 2 ப்ரான்ச் கனெக்ட் பண்ண சொன்னேன். ஒங்க ப்ராஞ்ச முதல்ல கொடுத்துட்டார். நல்ல ரிப்போர்ட் நெறய வருது ஒங்களைப் பத்தி. சாரி அகைய்ன். என் செலவுல எல்லாருக்கும் கூல்ட்ரிங்க்ஸ் வாங்கிக் கொடுங்க. நல்ல சர்விஸ் பண்றதுக்கு நான் தர்ரேன்னு சொல்லிக் கொடுங்க. அப்பறம் அதற்கான பணத்தை அனுப்பிடறேன்.”

நான் பின்புறம் சென்றுவிட்டு, மறுபடி ABM இடம் சொன்னேன் அது நமக்கான கால் இல்லை. ஆனால் நம்ம ப்ரான்ச் ஸ்டாஃப் எல்லாருக்கும் கோல்ட்ரிங்க்ஸ் வாங்கிக் கொடுத்துட்டு, பில்வாங்கி டிஓ ஆபீஸுக்கு அனுப்புங்க. அவங்க ரீஇம்பர்ஸ் செய்வாங்க.” ABM  ஒருமாதிரி என்னைப் பார்த்தார்.

கேபினுக்கு வந்தேன். சோனா வைத்து விட்டுப்போன டீ கூல்ட்ரிங்க் ஆக மாறி இருந்தது. காலையில் இருந்து இன்னமும் டீ சாப்பிடவில்லை.

ABM ஐ இண்டர்காமில் கூப்பிட்டு சோனாவை வரச்சொல்லுங்க என்றேன்.

சோனா க்ளியரிங் போயிருக்கார் சார் என்றார்.

நான் அவரிடம் எனக்கு அரை மணி நேரம் பர்மிஷன் தாங்க. வெளியில் போய் டீ சாப்பிட்டு வந்துர்ரேன் என்றேன்.

சார் நீங்கதான் BM சார்.

ஆமாம், நீங்கதான் ABM சார்.

“இப்ப சூடா ஒரு கப் டீ சாப்டலனா தல வெடிச்சிடும்” சொல்லிவிட்டு உடனே வெளியேறினேன்.

(பெயர்கள் மட்டும் கற்பனை)

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.