ஒரு சாமானியனின் வரலாறு – 25

ஒரு சாமானியனின் வரலாறு – 25
—————————————–
அன்பு எங்கே கிடைக்கிறது ?
காற்றுக்கும், நீருக்கும் அடுத்தபடியாக உலகிலேயே மிக முக்கியமான ஒன்று உண்டென்றால் அது அன்புதான்.
மனிதர் வாழ்விலும் அதுவே மிக முக்கியமான தேவை.
இதை நாம் ஒருவரிடத்தில் ஒருவர் பரிமாறிக் கொள்ளுவதும் மிக முக்கியம். ஆனால் இது மிகவும் குறைந்து கொண்டே வருகிறது.
இதற்கு ஒரு முக்கியமான காரணம் பெற்றோரிடத்தில் பிள்ளைகள் வைக்கும் அன்பு குறைவதுதான்.
அவர்களையும் குற்றம் சொல்ல முடியாது. “திரவியம் தேடு”வதற்காக அவர்கள் ஊர் கடந்து, மாநிலம் கடந்து, நாடு கடந்து செல்லவேண்டி உள்ளது.
பிள்ளைகளுக்காகத்தான் ஒரு அம்மா வலியையும் பிணியையும் தாங்குகிறாள்.
அவளுக்குள்ள வலியை எந்தப் பிள்ளையும் பெண்ணும் அவர்களுக்காக இவர்கள் பட முடியாது.
அவர்களுக்கு வளர்ந்த பிள்ளைகள் கொடுக்க வேண்டியது மலர்ந்த முகத்துடன் பேசுவதும், அன்புடன் அரவணைப்பதும்தான்.
இது எவ்வளவு விலை கொடுத்தாலும், பிள்ளைகளைத் தவிர வேறு யாரும் கொடுக்க முடியாது.
ஆனாலும் இன்றைய பிள்ளைகள் எவ்வளவு விலை கொடுத்தாலும் சரி, அந்த அன்பைப் பெற்றோருக்கு விலை கொடுத்து வாங்கித் தருகின்றனர்.
அன்று முதியவர்கள் நம் இல்லங்களில் இருந்து, நமக்குப் பாதுகாப்பாய் இருந்து, நமக்கு ஆறுதலும் உதவியும் தந்து நம் பிரச்சினைகளில் தோளோடு தோளாய் நின்றனர்.
நம் இல்லத்துக்கு தனிப்பட்ட மரியாதையும் கிடைத்து வந்தது.
இன்றோ நம் பெற்றோர் முதியவர் இல்லங்களில் இருந்து கொண்டு அந்நிறுவனங்கள் பணம் புரட்டும் சேவையில் உள்ளனர் – தங்கள் உலர்ந்த உள்ளத்துடன், சதா ஈரமாயிருக்கும் தம் கண்களுடன்.
இதைப் படிப்போர் கோபம் கொள்ளக் கூடாது. இந்தக் காலத்தில் தான் முதியோர் இல்லம் நடத்துவது, ஆசிரமம் நடத்துவது, பாடம் சொல்லித் தருவது எல்லாமே பணம் புரளும் புதுயுகத்தின் தொழிலாய் மாறி விட்டிருக்கின்றனவே. கல்லூரிப் படிப்பு பெற்றவர் அதிகரிக்க அதிகரிக்க இப்படி சமுதாயத்தில் புதுப் புதுத் தொழில்கள் பெருகுகின்றன.
அடிப்படை பண்புகளை மறக்கடிக்கச் செய்யும் பாடத்திட்டங்களை முதலில் மாற்ற வேண்டும். தகவல் அறியும் உரிமை, தனி மனித உரிமை, முதலிய உரிமைகளுக்கு என்றே பல இயக்கங்களும் நிறுவனங்களும் ஏற்பட்டிருக்கின்றன.
ஆனாலும் நாட்டில் எங்காவது கடமைகளை போதிக்க என்று இயக்கமோ அல்லது நிறுவனமோ இயக்கப்படுகிறதா?
Ethics, Culture, Moral Education என்பதெல்லாம் சுத்தமாகத் தேவையில்லாதவைகளாக இன்றைய அரசும், ஆசிரியர்களும், பள்ளிகளும், கல்லூரிகளும், பெற்றோரும் கூட கருதுகின்றனர்.
எது சரி, எது தவறு என்பது இப்போது சட்டங்களில் மட்டும்தான் உள்ளது.
அந்தச் சட்டங்கள் பலவகையில், சட்டம் இயற்றுவோர் ஒருவிதத்திலும், சட்டத்தைப் பராமரிப்போர் ஒருவகையிலும், சட்டத்தைக் காக்கும் நீதிமன்றங்கள் வேறுவகையிலும் பொருள்கொள்கின்றனர்.
சட்டத்தில் உள்ள விஷயங்களுக்கு எல்லோரும் சரியான பொருள் கொள்கின்றனரா என்பது இப்போது நம் நாட்டில் ஒரு பிரச்சினையே இல்லை.
சட்டம் இயற்றுவதால் சிலரும், சட்டத்தில் உள்ள விஷயங்களைக் கொண்டு சட்டம் சம்பந்தப்பட்ட எல்லோரும் நன்றாக சரியாக செமையாக பொருள் கொள்கின்றனரா என்பதே முக்கியமான சிந்தனையாய்ப் போய் விட்டது.
இதுவே நம் சமுதாயம் எது சரி, எது தவறு என்னும் மிக அடிப்படையான வாழ்வியல் பிரச்சினைக்கு அளிக்கும் மரியாதை.
அக்காலத்தில் தர்மமே நீதியாய் இருந்தது. “தர்மமே தலைகாக்கும்” என்ற வாக்கியத்தில் வரும் பொருள் அல்ல.
உலகத்தில் சமுதாயம் சரிவர இயங்கவென்று ஏற்படுத்தப்பட்ட விதிமுறைகள்.
இவை ஆயிரக் கணக்கான ஆண்டுகளாய் சமுதாயம் கண்டிருந்த பிரச்சினைகளைக் கண்டு, அவற்றைக் களைய ஏற்படுத்தப் பட்ட உண்மைகள்.
இவற்றைப் பற்றி இப்போது நினைவு கூறுவது நாகரீக உலகுக்கு ஒவ்வாதது என்று நினைப்பவர்கள் இருக்கலாம்.
அறிவியல் சார்ந்த விதிமுறைகள் மிக நீண்ட காலத்துக்கு முன் செய்தவைதானே என்று இவர்கள் அவைகளை விட்டுவிட முடியுமா ?
அறிவியல் துறையில் உள்ள அடிப்படை விதிகள் காலத்தால் அழியாதது. தொடர்ந்து செய்யும் ஆராய்ச்சியால் அவை மெருகூட்டப் படுகின்றனவே தவிர, அடிப்படை உண்மைகளை உருத் தெரியாமல் மாற்றி விடுவதில்லை.
சமூகவியல் என்பதும் ஒரு அறிவியல் துறைதான். அதிலும் அடிப்படை உண்மைகள் பல இருக்கின்றன. அவையும் காலத்தால் அழிக்க இயலாதவை.
நெருப்பு சுடும் என்பது போன்று நாம் வாழ்வியலில் மதிக்கத் தவறவிட்ட ஒவ்வொரு விதியும் சுடத்தான் செய்கிறது.
ஆனாலும் இந்தச் சூடும் அதனால் பிறக்கும் அவஸ்தையும் பிறருக்கு வந்தும் கூட நாம் திருந்த முயலாதது சுயநலத்தால் நாம் குருடர் ஆகியிருக்கிறோம் என்பதையே காட்டுகிறது.
சென்னையில் நாங்கள் வசிக்குமிடத்துக்கு அருகில் ஒரு முதியோர் இல்லம் உள்ளது. நான் பணி ஓய்வு 2014ல் பெற்று, என் அறுபது வயது நிறை நாள் அன்று “அறுபதுக்கறுபது கல்யாணம்” செய்துகொள்ளாமல், ரூபாய் 20000/-க்கு காப்பகங்களில் உள்ளவர்களுக்கு உணவளிக்க முடிவுசெய்து, எங்களுக்குத் தெரிந்த, சாய்பாபா கோவிலில் தினமும் 20 பேருக்கு சொந்த செலவில் தானே சமைத்து வழங்கும் ஒரு பெண்மணி மூலம், அவரையே சமைக்கச் செய்து, வெளியில் உள்ள சில இல்லாதவர்களுக்கும், காப்பகத்தில் உள்ள பெரியோருக்கும் வழங்கினோம்.
அதுதான் நான் முதல்முறை அவ்வில்லத்துக்குச் சென்றது.
நானும் என் மனைவியும், உணவை பாயசம், வடை, பழம், இனிப்புடன் நாங்களே தட்டுகளில் பரிமாறி ஒவ்வொரு முதியவருக்கும் அளித்து, சாப்பிட்டு முடியும்வரை நின்றிருந்து, பின் வணங்கினோம்.
அதில் இருந்த எல்லோரும் 70 வயதுக்கு மேலானவர்கள்.
நடக்க முடியாமலும், நிற்க முடியாமலும், படுக்க முடியாமலும் கூட சிலர் இருந்தனர்.
பல வயதானவர்கள் முழு நேரமும் கண்ணீருடன்தான் சாப்பிட்டனர்.
கையும் காலும் வற்றிய இவர்கள், உடல்கூறு அறிவியலில் கற்கும் சிறுபிள்ளைகளும் படங்கள் உதவியின்றி, எலும்புகளும் நரம்புகளும் ஆணுக்கும் பெண்ணுக்கும் எவ்வாறு அமைந்துள்ளன என்பதைத் திறமையாகக் கற்கலாம்.
யாராவது உண்மையான அன்பைத் தரமாட்டார்களா என்ற ஏக்கமும், சீக்கிரமே சாகவேண்டும் என்ற உறுதியும் அவர்கள் கண்களில் தெரிந்தது.
எனக்கும் என் மனைவிக்கும் அன்று கண்ணீர் பெருக்கும் நெகிழ்ச்சியான தருணங்கள் நிறைய ஏற்பட்டன.
பலரும் அவர்களுக்குத் தன் பெண்/பிள்ளை, மருமகன்/மருமகள் அன்புடன் உணவூட்டியதைப் போல இருந்தது என்றும், இதைத் தாம் சாகும்வரையில் மறக்கமுடியாது என்றும் உணர்ச்சியுடன் ததும்பிக் கூறினார்கள்;
கைகளில் எலும்பும் நரம்புகளுமே இருந்த ஒரு மூதாட்டி, என் கையைப் பிடித்துக் கட்டிலில் என்னை அமரவைத்து பெருமையாகத் தான் அக்காலத்தில் ஒரு புகழ்பெற்ற வீணை வித்வான் எனவும், நாடுமுழுதும் கச்சேரிகள் செய்திருப்பதாகவும், தன்பிள்ளையின் பெயரைச் சொல்லி அவர் தற்சமயம் சினிமாவில் மிகவும் பிரபலமாக இருப்பதையும் சொன்னார்.
இது போல சொன்னது 20 பேராவது இருக்கும்.
என் மனம் ஆயிரம் முள் தைத்த ஒரு கந்தலாயிற்று.
பலரும் வெற்றிகரமான வாழ்க்கையே நடத்தி, பிள்ளைகளை நன்றாக வளர்த்து, படிப்பித்து, நல்ல நிலைமைக்குக் கொண்டுவந்தவர்களாக இருந்தனர்.
தள்ளாமை என்று ஒன்று வந்துவிட்டதும், வீடுகளில் வைத்துக்கொள்ள முடியாதவர்களாகி, காப்பகங்களில்தான் தஞ்சம் புகுகிறார்கள்.
காப்பகங்களும் தற்காலத்தில் வியாபார நோக்கில்தான் இங்கெல்லாம் இயங்குகின்றன.
காப்பகங்களின் இன்னொரு பக்கத்தையும் அறியும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது.
தஞ்சையிலும் தஞ்சைக்கடுத்த ஊரிலும் சில முதியோர் காப்பகங்கள் இருக்கின்றன. அதில் ஒன்று அரசு நடத்துவது.
அதில் இருந்த ஒரு ஓய்வூதியம் பெறுபவர் எங்கள் வங்கியில் கணக்கு வைத்திருந்தார்.
முதலில் அறிமுகமாகும் போது, அவர் தன் பையன் மன்னார்குடியில் வேலை செய்வதாகவும், தன் குடும்பத்துடன் இருப்பதாகவும், தான்மட்டும் முதியோர் இல்லத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இப்படி முதிர்ந்த வயதில், பிள்ளைகள் பெற்றிருந்தும் முதியோர் இல்லத்தில் வாழ நேர்ந்ததே என்று நான் துயருற்றேன். கனிவுடன் விரைவினில் அவரின் வேலையை முடித்து அனுப்பினேன்.
மூன்று மாதம் கழித்து அவர் வங்கிக்கணக்கின் சான்று பெறுவதற்காக என்னைச் சந்தித்தார். அது அவரின் மனைவியின் கணக்கு.
கேட்டதில் அவர் மனைவி பள்ளி ஆசிரியையாக பணிபுரிந்து வருவதாகவும், அவர் பணி ஓய்வு பெற இன்னும் ஒருவருடம் இருப்பதாகவும், அவர் அலுவலகத்தில் கேட்டதாகவும் கூறி, சான்றைப் பெற்றார்.
என் அறையில் நான் காபி, தேனீர் அருந்துகையில் அங்கு அமர்ந்திருக்கும் அனைவருக்கும் அது வழங்கப்படும்.
தேனீரைக் குடித்து மகிழ்ந்த அவர் சொன்னது: “சார், மிக்க நன்றி சார். தினமும் ஆயிரம் வாடிக்கையாளர்களுக்கு மேல் வந்துசெல்லும் இப்பெரிய கிளையில், சீஃப் மேனேஜர் தாங்கள் தங்கள் அறையில் என்னை அமர்த்தித் தேனீரும் கொடுத்தும் உபசரிப்பு செய்கிறீர்களே.
“இதுவரை என் கணக்கில் அதிகப் பணம் இல்லை. ஆனாலும் என் பையனின் வீடு ஒன்று நான் கட்டிக் கொண்டிருக்கிறேன். அதனால் ஒரு ஐந்து லட்சம் ரூபாய் என்னிடம் இருக்கிறது. அதை அடுத்த மாதம் கணக்கில் ஒரு ஆறுமாதம் டெபாசிட் செய்கிறேன்.
“என் பையனும் சொந்த வீட்டில் தான் இருக்கிறான். எனக்கும் ஒரு பெரிய சொந்த வீடு மன்னார்குடிக்கு அருகில் உள்ளது. என் மனைவியின் பணி ஓய்வுப்பணத்தைக் கொண்டு அவளுக்கு கொஞ்சம் நகையும், இன்னொரு வீடும் வாங்குவதாகவும் உள்ளோம்.
“உங்களைப் பார்த்தால் மிக்க பண்பாளராய்த் தோன்றுகிறீர்கள். அந்த வீட்டின் கிரகப்பிரவேசத்துக்குத் தாங்கள் அவசியம் வந்து எங்களைக் கௌரவப் படுத்த வேண்டும்.” என்றார்.
அதிர்ச்சியடைந்த நான் அவர் எவ்வாறு முதியோர் இல்லத்தில் இருந்து கொண்டு இவ்வளவும் செய்கிறீர்கள் என்று கேட்க அவர் மேலும் கூறினார்.
“சார், இங்கு காப்பகத்தில் நாங்கள் கட்டுவது ஒரு சிறிய தொகையே . தஞ்சையில் வாடகைக்கு அவ்வளவு குறைந்த வாடகையில் இடம் கிடைக்காது. மேலும் எங்களுக்கு, அரசு நடத்தும் காப்பகம் என்பதால் உணவும் இலவசம். மேலும் இங்கும் ஒரு கட்டட வேலை நடைபெறுவதால், நான் மன்னார்குடி கிளம்ப இரவு 8 மணிக்கு மேல் ஆகும். எனவே தான் இக்காப்பகத்தில் நான் இருக்கிறேன்” என்றார்.
நானடைந்த அதிர்ச்சியிலிருந்து மீள எனக்கு ஒருவாரமாயிற்று.
ஒன்று தெரிந்துகொண்டேன். சிலர் விருப்பப்பட்டு வசதிக்காக காப்பகங்களில் இருப்பார்கள் என்பதை.
இந்த அறிவு எனக்கு என் 58 வயதில்தான் கிடைத்தது.
அரசு நடத்தும் காப்பகங்கள் இப்படியும் உபயோகப் படுத்தப் படுவதற்கு அனுமதிக்கின்றன.
Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.