ஒரு சாமானியனின் வரலாறு – 22

ஒரு சாமானியனின் வரலாறு – 22

இறைசக்தியும் நம் சக்தியும் தொடர்ச்சி

முறையாக ப்ராணாயாமம் தொடர்ந்து செய்தால் ஏற்படும் பயன்கள் குறித்து நூல்களில் படித்தும் பலசமயங்களில் தொடர்ந்து செய்தும் அறிந்திருந்தேன். மேலும்  Norman Vincent Peale, Napolean Hill மற்றும் Robert Schuller இவர்கள் எழுதி உலகமுழுதும் கோடிக்கணக்கில் விற்பனயான Positive Thinking குறித்த நூல்களைப் படித்திருந்தேன். அதில் Norman Vincent Peale அவர்களின் புத்தகத்தில் இடம்பெற்றிருந்த இரு நிகழ்வுகள் சிறுவயதுமுதலே என் நினைவில் இருந்துவந்துள்ளன.

புயலில் காத்த இறைவன்

ஒரு நிகழ்வு: தினமும் தனது 50 ஆடுகளை மேய்ப்பதற்கு அழைத்துப்போவார் ஒரு முதிய பெண்மணி. அவர் ஒரு நாள் தன் ஆடுகளுடன் மேய்க்கும் வெளியில் இருந்தபோது, திடீரென்று ஒரு பெரும்புயல் உருவாகி, பெருமழை வரப்போவதை உணர்ந்தார்.

நெடுந்தொலைவில் இருக்கும் தம்மிடத்துக்கு புயலில் அகப்படாமல் ஆடுகளைத் தன்னால் அழைத்துப்போக இயலாதே என்று மனம் நொந்தார். புயலிலும் மழையிலும் சிக்கி ஆடுகள் பரிதவிக்குமே, சில ஆடுகள் முடியாமல் இறப்பதற்கும் நேருமே என்று மிகக் கவலையுற்றார்.

எப்போதும் தன்னுடன் வைத்திருக்கும் புனித பைபிளை எடுத்தார். அதில் ஒரு பக்கத்தைத் திறந்து, “உன்னோடு புயலிலும் மழையிலும் நான் இருந்து உன்னையும் உன்னைச் சேர்ந்தவற்றையும் காப்பேன்” என்று இயேசுநாதர் கூறியுள்ள வசனத்தை, மிக நம்பிக்கையுடன் உரத்த குரலில் படிக்க ஆரம்பித்து, அந்த வசனத்தையே மீண்டும் மீண்டும் முழு நம்பிக்கையுடன் இரண்டுமணி நேரத்துக்கும் மேலாக ஜபித்தார்.

அவரும் ஆடுகளும் இருந்த சிறு பகுதியில் மட்டும் கொஞ்சம் காற்றும் சிறுமழையும், அவர்கள் இருந்த பகுதியைச் சுற்றி பலத்த காற்றுடன் மிக அதிகமாக மழையும் பெய்து, புயல் அடிக்கும்போது இவர்கள் முழுதும் எந்த உயிர்ச்சேதமும் இன்றி காக்கப்பட்டனர். அந்தப் பெண்மணியும் எல்லா ஆடுகளும் பத்திரமாக தம் இருப்பிடம் சேர்ந்தனர்.

புற்றுநோயை மாயமாக்கிய இறைவன்

இன்னொரு நிகழ்வு: மார்பகப் புற்று நோய் என்று மருத்துவர்களால் முடிவுசெய்யப் பட்டு, தன்னால் இன்னும் ஆறு மாதம் அல்லது அதிகபட்சம் ஒரு வருடம் மட்டுமே உயிர்வாழ முடியும் என்ற நிலையில் இருந்த ஒரு பெண், இயற்கையில் மிகுந்த இறை நம்பிக்கை கொண்டவள். மேலும் அவள் மருத்துவச் செலவு செய்ய பொருளாதார வசதி படைத்தவளல்லள்.

மிகுந்த நம்பிக்கையுடன் தன் உச்சந்தலை வழியே வெள்ளை ஒளியாக இறைசக்தி இறங்குவதாகவும், அது கொஞ்சம் கொஞ்சமாக தலையிலிருந்து கால் வரை வியாபித்து, உடலுக்குள்ளும் வெளியிலும் பரவி, கசிந்து, வழிவதாகவும், உடலின் உள்ளே சென்றுகொண்டிருக்கும் அந்த ஒளி தன் மார்பகப் பகுதிக்கு அதிக அளவில் வந்து, உள்ளேயுள்ள கரு நிறமுள்ள புற்று நோய்க் கிருமிகளுடன் போராடி, கரு நிறத்தை ஒவ்வொரு செல்லிலிருந்தும் வெளியேற்றி, எல்லாச் செல்களையும் இருள் நீக்கி ஒளியேற்றி, அந்த கரு நிற செல்கள் அங்கே மேலும் இருக்கமுடியாமல் மூச்சுக்காற்றுடன் கலந்து வெளியேறிவிடுவதாகவும், கொஞ்சம் கொஞ்சமாக அந்த நோயின் குறிகள் குறைந்துவிடுவதாகவும், தினமும் பலமுறை கற்பனை செய்து, அந்த கற்பனையின் மீது மிக்க நம்பிக்கையுடனும், எல்லாம் வல்ல இயேசுநாதர் தன்னை நிச்சயம் குணமாக்கிவிடுவார் என்ற நம்பிக்கையுடனும் 3 மாதம் த்யானம் செய்துவந்தார்.

அவர் மறுபடியும் மருத்துவரிடம் சென்றபோது நோய் மிகவும் குறைந்திருப்பதைக் கண்ட மருத்துவர்கள் ‘இது மிக ஆச்சரியம். என்ன மருத்துவம் செய்துகொண்டாய்” என்று வினவ, இவர் மருத்துவச் செலவு தன்னால் செய்ய இயலவில்லை, ஆனால் தான் இறைவனின் மீது நம்பிக்கைவைத்து தினமும் தியானம் செய்துவந்ததாகத் தெரிவித்தார். இன்னும் சிலமாதங்களில் இப்பயிற்சியைத் தொடர்ந்து செய்ய அவர் நோய் முற்றிலும் குணமாகி விட்டது.

 

நானும் அவ்வாறே முயற்சி செய்ய இறைவன் பணித்தார்

நாம் ஏன் அவ்வாறு செய்துபார்க்கக் கூடாது என்று யோசித்து, நான் ப்ராணாயாமமும் அந்த நம்பிக்கைகற்பனையையும் கலந்து தியானிக்க முடிவு செய்தேன்.

தினமும் 30 முறை ப்ராணாயாமம் செய்து, உட்செல்லும் மூச்சுக்காற்றின் மூலம் இறைசக்தி உடலில் ஒவ்வொரு பாகத்திலும் வியாபிப்பதாக தியானித்து, அது நோயின் காரணங்களை முற்றிலும் போராடி அழிப்பதாக நம்பிக்கையுடன் இரு மாதங்கள் செய்துகொண்டிருந்தேன்.

நோய் தீர்த்த இறைவன்

விடுமுறையில் வந்தபோது மருத்துவப் பரிசோதனை செய்ததில் ஏதோ பிழையிருக்கிறது, மருத்துவர் மறுபடியும் சோதனை செய்ய லீவ் போடச் சொன்னபோது, நான் வங்கிக்கிளை மேலாளராக இருப்பதால் நினத்தபடி லீவ் போடமுடியாது என்று மறுத்துவிட்டேன்.

மறுபடி சீர்காழி சென்றுவிட்டேன். இந்தத் த்யானத்தைத் தொடர்ந்து செய்துவந்தேன். ஒரு பத்து நாள் கழித்து எனக்கு என்னைப் பரிசோதித்த மருத்துவரிடமிருந்து தொலைபேசியழைப்பு வந்தது. தாங்கள் பிழையென்று கருதிய சோதனைகள் சரியாகவே செய்யப்பட்டுள்ளன என்றும், ஆனாலும் சோதனைமுடிவுகள் விசித்திரமாக உள்ளன என்றும் நான் மறுபடி விரைவில் சென்னைவந்து தன்னைப் பார்க்கவேண்டும் என்று ஆணையிட்டார்.

மறுபடி சென்றபோது பரிசோதித்ததில் எனக்கு எவ்வாறு 75% குணமாகியிருக்கிறது, நான் எவ்வூரில் யாரிடம் மருத்துவம் செய்துகொள்கிறேன் என்று வினவினார். நான் செய்துவரும் தியானத்தைப் பற்றிச் சொல்லியும்  நல்ல இறை நம்பிக்கை கொண்ட ஒரு கிறிஸ்தவராக இருந்தபோதிலும் அம்மருத்துவர் நம்ப மறுத்துவிட்டார். ஆனாலும் அன்புடன் தாங்கள் எந்த வைத்தியம் செய்துகொள்கிறீர்களோ அதையே தொடர்ந்து செய்துவாருங்கள். நீங்கள் சொல்வது உண்மையானால் இது மிகப் பெரிய அதிசயம் என்று கூறிவிட்டார். இன்னொரு 40 நாட்கள் கழித்து செய்த பரிசோதனையில் நோய் முற்றிலும் என் உடலில் இல்லை என்று அறிவித்து விட்டனர்.   நான் பல அச்சங்களுடன் இருந்ததால், எனக்கு நோய் இருந்ததாகவோ அது பின்னர் சரியாகி விட்டதாகவோ என்வீட்டில் யாரிடமும் இதுவரை சொல்லிக்கொள்ளவில்லை.

இவ்வாறு, என்னை பற்றிச் சரியாக அறிந்திராத அந்த கிறிஸ்தவ நண்பரிடம் எனக்குச் சொல்லச் சொல்லி, அவருக்கு இறைவன் தெரிவித்த அந்த ஐந்து செய்திகளுமே நிறைவேறின. இறைவன் இருக்கிறான் என்பதிலும், நமக்கு நன்மையே செய்கிறான் என்பதிலும் எனக்கு மேலும் மிக்க நம்பிக்கை வளர்ந்துவிட்டது.

21 நாள் ஜுரத்தைத் தீர்த்த அன்பு

முன்னொரு சமயம் நான் நெல்லிக்குப்பத்தில் பணிபுரிந்தபோது, நான் நோய்வாய்ப்பட்டு நீண்ட நாள் கழித்தும் சரியாகாத போது என் அலுவலகத்தில் பணியாற்றிய ஒரு கிறிஸ்தவ அன்பரும், அவருடன் ஊழியத்துக்குப் போகும் அவரது நண்பரொருவரும் என் வீட்டிற்கு வந்து என் அனுமதியுடன் தமிழில் கிறிஸ்துவிடம் மூன்று நிமிட பிரார்த்தனை செய்ய, எனக்கு வெகு அதிகமாக வியர்வைப் பெருக்கு ஏற்பட்டு 24 நாளில் பல மருந்துகள் உட்கொண்டும் தீராத என் நோய் அப்போதே விலகிவிட்டது.

பின்னாட்களில் சில கிறிஸ்தவ சகோதரர்களுடன் இந்த இரு நிகழ்ச்சிகளப் பற்றி பகிர்ந்து கொண்டபோது, இயேசு கிறிஸ்து என்னைத் தொட்டிருக்கிறார் என்பதற்கு இவைகள் அடையாளம் என்று கூறி அவர்கள் கண்ணீர் சொரிந்தனர்.

“அல்லாவின் அருள் பெற்றவர்”

ஓர் சமயம் நான் நாகூர் தர்காவில் உள்ளே, முக்கிய இடத்திற்கு நேரெதிரில் அமர்ந்து பிரார்த்தனை செய்தேன். ஐந்து நிமிடங்களுக்குப் பின் உள்ளிருந்து வெளியே வந்த தர்காவின் ஊழியர் ஒருவர், நான் அங்கே அமர்ந்து பிரார்த்தனை செய்யக் கூடாது என்றும், வேறு இடத்தைக் காட்டி அங்கே அமரும்படிக் கூறிப் பேசிக்கொண்டிருந்தபோது, உள்ளேயிருந்து வெளியே வந்த நீண்ட வெண் தாடியுடையவரும் அதே நிறத்தில் பைஜாமா ஜிப்பா அணிந்திருந்த 90 வயது முதியவர், அந்த ஊழியரிடம் ‘அவரைப் போகச் சொல்லாதே. இங்கேயே இருந்து பிரார்த்திக்கட்டும். அவர் அல்லாவிற்கு பிடித்தமானவர்’ என்று சொல்லியதும் நான் உணர்ச்சிப்பெருக்கால் அழுதுவிட்டேன். மறுபடியும் அந்தப் பெரியவர் உள்ளே சென்று வெளியே வந்து ‘அன்பானவரே, உமக்கு அல்லா என்றும் நல்லதே செய்வான்’ என்று கூறி என் உச்சந்தலையில் ஆசீர்வாதம் செய்யும்போது என் உடல் சிலிர்த்துப் போனது. அப்போது ஏற்பட்ட ஒரு நல்ல vibration மாற ஒரு மணி நேரத்துக்கும் மேலானது.

என் வாழ்வில்  இந்த இரு நிகழ்ச்சிகளையும், இன்னும் பல நிகழ்ச்சிகளையும் சில சமயங்களில் இறைசக்தி அருகிலேயே இருப்பதான சில உணர்ச்சிகளையும் ஏற்படுத்தி, எல்லாம் வல்ல அந்த அன்பு மயமான அந்த இறைசக்தி எல்லா மதத்தையும் மீறிய தன் தன்மையை வெளிக்காட்டி என்னறிவை வளர்த்துவிட்டிருப்பதாக நான் நம்புகிறேன். அதற்காக இறைவனிடம் நான் மிக நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.