ஒரு சாமானியனின் வரலாறு – 20

ஒரு சாமானியனின் வரலாறு – 20

இறைசக்தியும் நம் சக்தியும் தொடர்ச்சி

மனத்தை மாற்று

அப்படி மனத்தை மாற்றிவிட்ட மனிதன்தான் உலகில் பல புதுமைகளை, பல கண்டுபிடிப்புக்களை செய்கிறான்; தன் எண்ணத்தின் சக்தியால் ஒரு தலைவனாக உருவாகிறான். பல துறைகளிலும் சாதனைகள் புரிகிறான். தன் எண்ணத்தின் சக்தியால் பிரார்த்தனை மூலம் தன்னிலும் உயர்ந்த இறைசக்தியை வேண்டி, தன்னிடம் இல்லாத சக்தியையும் பெற்று, தன் சக்திக்கு மேல் உள்ள காரியங்களையும் சாதிக்கிறான். தன் எண்ணத்தின் சக்தியினால் தன் வாழ்க்கையில் வேண்டியவற்றைப் பெறுகிறான்; பிறருக்கு ஏற்பட்ட துக்கத்தையும், கஷ்டத்தையும், இல்லாமையையும், தன் பேச்சாலும் செயலாலும், பிறர் நோயை தன் இச்சையாலும் பிரார்த்தனையாலும் சரிசெய்கிறான். அதைப் போன்ற மனிதர்களைத்தாம் (மனிதர்கள் என்றால் இருபாலரும்தான்) நாம் நம் வாழ்வில் ‘என்னமோ தெரியவில்லை, எனக்கு அவர் சொன்னால்தான் நடக்கும், அவர் சொல்வதெல்லாம் எனக்குத்தான் சொல்கிறார் என்று தோன்றுகிறது’, ‘அவரைப் பார்த்ததும் நிம்மதி’, ‘அவர் ஒருமுறை என்னிடம் பேசி ஆசி வழங்கிவிட்டால் நான் பேறு பெற்றவன்(ள்)’  என்று நாம் குறிப்பிடுகிறோம்.

இயற்கையைப்  பற்றிப் பேசும்போது சில விஞ்ஞானிகள் ‘Universe is a self thinking entity and all the matter, materials, living beings are its parts’ என்றும் “ Earth is ‘Gaia’ , our mother’ , என்றும், ‘Quantum physics’ – என்ற துறையில் ‘non-local mind’ என்பதைப் பற்றி கூறப்பட்டுள்ள சோதனைகள் எல்லாம் இறுதியில் மனித மனம் என்பது தன்னை, தன் வாழ்க்கையை மட்டுமல்லாமல், பிறரை, பிறர் வாழ்க்கையை, சமுதாய நிகழ்வுகளை, இயற்கையை, எல்லா வகையிலும் பாதிப்பதை உணர்த்துவதாக பதிவுசெய்துள்ளனர். எனவே நம் மனத்தின் சக்தியினால், நம் எண்ணங்களால் உலகையே பாதித்துவருகிறோம்.  அப்படியிருக்கும்போது நம் எண்ணங்கள் நம் வாழ்க்கையிலும் நம் உடலிலும் செலுத்தும் ஆதிக்கம் எத்தனை வலிமையானது என்பதை உணர்ந்து எண்ணங்களை சீர்செய்து கொள்ளவேண்டும்.

மனம் சீரடைய இறைசக்தியை நாடு

அவ்வாறு எண்ணங்கள் சீரடைய நாம் இறைசக்தியை நாடவேண்டும். அதற்கு பிரார்த்தனைகள் செய்யவேண்டும். ‘கேளுங்கள் தரப்படும்’ என்று இயேசு நாதர் சொல்லியுள்ளார். ‘தான் தன் என்ற அகந்தையை விட்டு என்னைச் சரணடைந்தால், உனக்குத் தேவையான எல்லாவற்றையும் நான் தருவேன்” என்று ஸ்ரீகிருஷ்ணராகிய ஸ்ரீமந்நாராயணன் உத்தரவாதம் அளித்துள்ளார். ‘தாயினும் சாலப்பரிந்து’ நமக்கு வேண்டியதெல்லாம் சிவபெருமான் நமக்கு அளிப்பதாக மாணிக்கவாசகர் பாடியிருக்கிறார். எல்லாவற்றையும் தரக்கூடிய அந்த இறைசக்தி மிகவும் பெரியதென்று நாம் உணரவேண்டும். நாம் அன்பு வைத்தால் அதுவும் நம் மீது அன்பைப் பொழியும். இறைவனிடம் நாம் அன்பு வைப்பது என்பது,  நம் மனத்தில் உறைந்திருக்கும் இறைவன் மீதும், இறைவனின் வடிவாகிய எல்லாஉயிரினத்தின் மீதும், எல்லா மனிதர்களின் மீதும் அன்பு வைப்பதுதான். அவ்வாறு அன்பு வளர்க்கக் கற்றுக் கொண்டால், நம் மனம் மிகச் சிறந்த மிக வலிமையான ஒரு கருவியாக மாறிவிடும். அப்புறம் நம் எண்ணங்களின் சக்தியால் நாம் எதை வேண்டுமானாலும் (‘ஸர்வே ஜனா ஸுகினோ பவந்து’ என்ற கொள்கைக்கு விரோதமில்லாமல்) சாதித்துக்கொள்ளலாம்.

அவ்வாறு இறைசக்தியை நாடுவதற்கு பிரார்த்தனைகள் உதவுகின்றன. பல விதமான பிரார்த்தனைகள் நம் ஸ்லோகங்களில் கூறப்பட்டுள்ளன. கிறிஸ்தவர்களின் பிரார்த்தனை புத்தகங்களில், எல்லோரும் புரிந்துகொள்ளும் வண்ணம் பேசும்மொழியில் பல பிரார்த்தனைகள் அழகாகக் கூறப்பட்டுள்ளன. பைபிளில் சங்கீதம் எனப்படும் Psalms பகுதியில் உள்ள பிரார்த்தனைகளும்,  St Francis of Assissi அவர்களின் புத்தகங்களிலுள்ள பிரார்த்தனைகளும், மிக உயர்ந்த பிரார்த்தனைகள். தமிழில் உள்ள பல பக்தி இலக்கியங்கள் பிரார்த்தனைகளின் கருவூலம். தேவாரம், திருவாசகம், அபிராமி அந்தாதி, சகலகலாவல்லி மாலை, திவ்யப் பிரபந்தம் இவற்றில் உள்ள செய்யுள்கள் மிகச் சிறந்த பிரார்த்தனைகள்.

பிரார்த்தனை செய்யும்போது சொல்லும் சொல்லின் பொருள் உணர்ந்து சொல்லும்போதுதான் இறைசக்தியுடன் சேர்ந்து நம் மனத்தின் சக்தியும் பரிமளித்து ஒன்றி பிரார்த்தனையைப் பலனளிக்க வல்லதாய்ச் செய்யும். எனவே இயன்ற வரை நமக்கு நன்றாகத் தெரிந்த மொழிகளில் உள்ள ப்ரார்த்தனைகளையும், ஸமஸ்க்ருதம் போன்ற வேறு மொழியில் இருப்பதை, அதன் பொருளை நமக்குத் தெரிந்த மொழியில் சொல்லும் உரையுடன் வாசித்தே பிரார்த்தனை செய்யப் பழகவேண்டும்.

இவற்றில் மனிதரில் பேதம் காணக்கூடாது

மேலும் அன்பு, இறைசக்தி, இயற்கை, மனிதர்கள் என்ற இந்த நான்கு சொற்களையும் நான் உபயோகித்திருப்பதில், ஜாதி, மதம், நிறம், மொழி, அறிவுபெற்றவர்-பெறாதவர், தெரிந்தவர்-தெரியாதவர், உறவினர்-அல்லாதவர் என்ற வித்தியாசங்களைக் கருதக்கூடாது. தெரிந்தவர் மீது வைக்கும் அன்பை விட தெரியாதவர் மீது வைக்கும் அன்புக்கும், சுய நலம் இல்லாது பிறரிடம் வைக்கும் அன்புக்கும் சக்தி மிக அதிகம். எல்லோரின் உடலிலும் நாராயணன் இருப்பதை நாம் ஒப்புக்கொண்டால், மனிதர் எல்லோரும் ஒன்றே என்பதையும் இதில் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பேதம் உண்மையற்றது என்பதையும் அத்தகைய பேதங்கள் பாராட்டுவது மதியீனம் என்பதையும் நாம் உணருவோம்.

அதேபோன்று, மதப் பிரிவுகளும் மனிதரே தோற்றுவித்தவை. தனக்குத் தெரியாத எதையும் உண்மையென்று ஏற்றுக் கொள்ளாத மனிதன் தனக்குத் தானே அளித்துக் கொண்ட கொடை இந்த மதவாதம். ஆயினும் எல்லா மதங்களுமே இறைவனைச் சென்றடையும் வழிகள்தாம். உண்மையில் இறைசக்தி என்பது ஒன்றுதான். அது பலவழிகளில், பலரூபங்களில் தன்னை நம் மீது அன்பு கொண்டு நாம் உய்வதற்காக வெளிப்படுத்தியிருக்கிறது. ஸ்ரீகிருஷ்ணனோ, சிவனோ, அம்பாளோ, இயேசுநாதரோ, அல்லாவோ தாம் ஆசீர்வதிப்பவர்களில் தம்மை வழிபடுவர்கள், தம்மை வழிபடாதவர்கள் என்ற பேதம் பார்த்து சிலருக்குக் கொடுத்தும் சிலருக்குக் கொடுக்காமலும் இருப்பதில்லை. எல்லா வடிவங்களிலும் நாம் வணக்கும் அந்த இறைசக்தி, வேண்டுபவர் எல்லோருக்கும் தாம் வழிபடும் வடிவத்தின் மதத்தன்மையையும் மீறி நன்மையே செய்கின்றன.

நாம் எந்த வீட்டில் பிறக்கிறோமோ அந்த வீட்டில் உள்ள நம் பெற்றோர் எந்த மதமோ, ஜாதியோ, உருவமோ, நிறமோ அவைகளையே நாமும் அடைகிறோம். இதில் நாம் நம் அறிவைக் கொண்டு தேர்ந்தெடுத்தது எதுவுமே இல்லை.

பிரார்த்தனையின் பயன்கள்

பிரார்த்தனை செய்தும் தினமும் ஸ்லோகங்கள் சொல்லியும் அதனால் பலனடைந்தும் வருகின்ற எத்தனையோ குடும்பங்கள் இருக்கின்றன. என் மனைவியார் தினமும் இருவேளைகளிலும் கோயில்களுக்குச் செல்வதும், தினசரி அவர் வீட்டில் பூஜை செய்துகொண்டும், பலதினங்களில் விரதம் இருந்துகொண்டும், தன்னால் இயன்ற உதவிகளைப் பலருக்கும் செய்துகொண்டும் வருகிறார். அதனால் அவருக்குக் குடும்பத்தில் ஏற்பட்ட கஷ்டங்களுக்கு நிவாரணத்தையும், அவருக்கு ஏற்பட்ட பல சோதனைகளிலிருந்து மீட்சியையும், எப்போதுமே மற்றவர்களுக்கு உதவக்கூடிய பொன்னான இதயத்தையும் அந்த இறைவனும் இறைவியும் நல்கியுள்ளார்கள். அவர் அதைப்பற்றி என்னைப்போல் பெருமையாகப் பேசவோ இப்படி எழுதவோ செய்வதில்லை. ஆயினும் அவர் தான் வாழும் வாழ்க்கையில் எப்பொழுதும் இறைவனுக்கு நன்றியாக வாழ்ந்து அதன் அறிகுறியாக எல்லா மனிதர்கள் மேலும் பாசமழை பொழிந்து வருகிறார். பிரார்த்தனையும் இறைவன்மீதும் மற்ற மனிதர்மீதும் வைக்கும் அன்பும் நம்மைக் காக்கும் என்பதற்கு அவர் ஒரு முழு உதாரணம்.

எனக்கும்கூட ஸ்லோகங்கள் படித்ததனால் மன அமைதி கிட்டியுள்ளது. எனக்கு ஏற்பட்ட சில பிரச்னைகளத் தீர்த்துக் கொள்ள விரும்பி நான் சில ஸ்லோகங்கள் பாராயணம் செய்து எத்தனையோ முறை அந்தப் பிரச்னைகளும் அவற்றால் ஏற்பட்ட கவலையும் பயமும் தீர்ந்துள்ளன. கோவில்களில் செய்யும் ப்ரார்த்தனைகளும் வீட்டில் செய்யும் பூஜைகளும் நன்மை செய்திருக்கின்றன.

சோதனையில் தப்பிக்க வைத்த ஆஞ்சநேயர்

ஒருமுறை 2003ஆம் ஆண்டில் சென்னையில் என் அலுவலகத்தில் என் பொறுப்பில் இருந்து எனக்குத் தெரியாமல் மிக முக்கியமான கோப்பு (Corporate Tax Return/Appeals file) ஒன்று தொலைந்து போய்விட, கோப்பைத் தேட ஆரம்பித்து 40 நாட்களாகியும் கிடைக்காமல் போய் அது தொலந்துதான் போய் விட்டது என்ற முடிவில் அந்தக் கோப்பில்லாமல் எப்படி அந்தப் பிரச்சினையை சமாளிக்கப்போகிறோம் என்றே நாங்களும், எங்கள் கணக்கு மற்றும் சட்ட வல்லுனர்களும் விழி பிதுங்கிப்போக, அதற்குப் பொறுப்பதிகாரியான நான் 30 நாட்களுக்கும் மேல் புழுங்கித் தவித்தேன்.

ரூபாய் நாலரை கோடி அதிக வரிவிதிப்பு சம்பந்தமாக அந்த கோப்பில் உள்ள வருமானவரித்துறையின் விதிப்புஆணையின் அசலுடன் சேர்த்து, அப்பீல் பெடிஷன் தயார் செய்து உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் நெருங்கிவிட்டது.

செய்வதறியாது எல்லோரும் திகைத்துப் போயிருக்கையில், திடீரென்று ஒருநாள் அலுவலகத்தில் இருந்து திரும்பி வந்து, அருகிலிருக்கும் அம்மன் கோவிலில் உள்ள ஸ்ரீஆஞ்சநேயர் சன்னதியில் அவரை 108 முறை சுற்றிவந்து வேண்டி, மறு நாள் காலையில் அலுவலகம் கிளம்பும்முன்னும் தரிசனம் செய்து வேண்டி, எல்லோருக்கும் முன்னதாக 9 மணிக்குச் சென்றேன்.

அந்த நேரம் பார்த்து அன்று சீக்கிரம் வந்த என் மேலதிகாரி வேறொரு கோப்பைக் கேட்க, அவரும் நானும் இணைந்து திறக்கக் கூடிய பாதுகாப்பு அலமாரியில், அவர் கேட்ட கோப்பை எடுக்கும்போது என் உதவியாளன் அங்கேயிருந்த மற்றொரு கோப்பைக் கைத்தவறுதலால் கீழே தவறவிட, அது நாங்கள் 45 நாட்களாய்த் தேடிவரும் கோப்பாக இருந்தது.

பிறகு என் உதவியாளரைக் கேட்க, “சார், இந்த ஃபைலையா தேடினீர்கள். இது நீங்கள் ஒரு நாள் லீவ் போட்ட போது, உங்கள் பீரோவில் இருந்து எடுத்துவர அந்த சார் சொல்லி, நான் எடுத்துக் கொடுத்தேன். அன்று மாலை அவரிடம் அந்த ஃபைலை திரும்ப எடுத்த இடத்தில் வைத்து விடலாமா என்று கேட்டேன். அதற்கு அவர் ‘இல்லை, இங்கேயே இருக்கட்டும்’ என்று கூறி டேபிளின் வலப்பக்கம் வைத்தார். அடுத்த நாள் காலை அவர் டேபிளில் அதைக் காணவில்லை. எனக்கும் மறந்துபோய்விட்ட்து. நீங்கள் இத்தனை நாள் தேடிய ஃபைல் இதுதான் என்று எனக்குத் தெரியவில்லை” என்று வருத்தத்துடன் கூறினார்.

நெடு நாட்கள் தேடிக் கிடைக்காமல் சொல்லொணாத மனப்புழுக்கத்தை ஏற்படுத்திவிட்டு, என் பதவியில் எனக்கு என்ன தண்டனை கிடைக்குமோ என்று மிகவும் அச்சமுற்றிருந்த அந்த கடைசி நேரத்தில். அன்று அந்தக்கோப்பு அதிசயமாகக் கிடைத்தது சத்தியமாக அந்த ஆஞ்ச நேயரின் சக்திதான் என்று உணர்ந்தேன்.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.