ஒரு சாமானியனின் வரலாறு – 18

ஒரு சாமானியனின் வரலாறு – 18

உருபெறும் காலத்தில் கருத்துக்களில் மாற்றங்கள்

அக்காலத்தில் இத்தனை தொலைக்காட்சிகளும், தகவல் தொழில்நுட்பம், நவீன இணயத் தொடர்பும் இன்றி வாழ்ந்த காலத்தில், தான் வாசிக்கும் பத்திரிக்கைகள், தினசரித் தாள்கள், புத்தகங்கள் இவற்றை மட்டும் தன் அறிவு வளர்ச்சிக்காக நம்பியிருந்த காலத்தில் ஒரு சராசரி மனிதனின் தகவல் சேகரிப்பு என்பது ஒரு எல்லைக்குள்ளேயே இருந்தது. தன் குடும்பத்தின், தன் ஊரின், தன் ஆசிரியரின், தன் தலைவனின், தன் ஆன்மீக ஆசான்களின், தன் பெற்றோர் மற்றும் உறவினர்களின் வட்டத்தில் இருந்து கிடைத்த தகவல்களைக் கொண்டுதான் அவன் தன் அறிவு வாழ்க்கையைக் கைக் கொண்டான்.

தன் தொழில் நிமித்தம், தன் கல்வி நிமித்தம் தன் ஊரை விட்டு வெளியில் சென்றபோது கிடைத்த பல புதிய தகவல்களைப் பெறும்போது அவனது அறிவு பெருகியது. தன் ஊரை விட்டு, தன் பள்ளியை விட்டு, தன் கல்லூரியை விட்டு, தன் மாவட்டத்தை விட்டு, தன் மாநிலத்தை விட்டு, தன் நாட்டை விட்டு செல்லும் மனிதனுக்கு இவ்வகையில் அளப்பரிய தகவல்கள் கிடைப்பதால் அவனது அனுபவ அறிவு பெரிதும் வளர்கிறது.

என் கருத்துக்களும் காலம் செல்லச் செல்ல, விரிவான நம் நாட்டின் விரிவு பழகப்பழக புரியப்புரிய மாற்றம் அடைந்து கொண்டே இருக்கிறது என்று நான் உணர்கிறேன்.

ஆயினும் தகவல்களில் இருந்து சரியான அறிவைப் பெற்றுக் கொள்வது என்பது மிகவும் வேறுபட்ட ஒரு விஷயம். அறிவியல் வளர்ச்சி காரணமாக இன்றைய தொழில்நுட்பத்தில் ஒவ்வொரு மனிதனிடமும் தகவல்கள் அளவில்லாத அளவில், எல்லாத் திசைகளில் இருந்தும், எல்லாத் துறைகளில் இருந்தும், நாம் வாசிக்கும் தினசரிகள், பத்திரிக்கைகள், தொலைக் காட்சிகள், இணையவலை இவற்றின் மூலம் ஒவ்வொரு நொடியும் வந்து விழுகின்றன. மனிதன் தற்காலத்தில் தகவல் பேரலைகளால் தினமும் மூழ்கடிக்கப் பட்டுள்ளான். பல வண்ணப் பொடிகள் கலந்த ஒரு அருவியில் சதா சர்வ காலமும் நின்று வாழ்நாள் முழுவதும் குளித்துக் கொண்டே இருப்பது போன்றது இது.

இந்த தகவல் அலைகளில் சிக்கியுள்ள மனிதன் அதில் முழுவதுமாக மூழ்கித் தன்னை இழந்து, தன் சுற்றத்தை மறந்து, தன் வாழ்வின் நோக்கத்தை மறந்து, வெள்ளத்தில் சிக்கியுள்ள மரத்தின் கிளையில் தொங்கும் ஈரத்துணியைப் போல ஆகிவிடுகிறான். சிறிது நேரம் கையைக் கொண்டு அவ்வெள்ளத்தை விலக்கி, கண்ணைக் கொண்டு நன்றாகப் பார்ப்பது, தனது சுய வாழ்க்கையின் அழகுகளை அறிவது, அழகான இவ்வுலகை ரசிப்பது, அவனுக்கு இன்றைய தினம் இயலாத காரியமாக ஆகிவிட்டிருக்கிறது.

ஆரோக்கியம், நல்லெண்ணம், நற்பண்பு, உயர்நோக்கம், மனத் திருப்தி, மன நிம்மதி, உண்மையான சந்தோஷம், பரந்த மனப்பான்மை இவை மனிதனுக்கு நல்ல பழக்க வழக்கங்களும், தனிமனித கட்டுப்பாடுகளும், சமுதாய கட்டுப்பாடுகளும், பிறர்நலம் பேணுவதும் ஆகிய இந்த “அந்தக் கால வழக்கங்கள்” நமக்கு வழங்கிய பரிசுகள்.  கூட்டுக் குடும்பம், சமுதாய விழாக்கள், உறவினரின், நண்பரின் வீட்டு விசேஷங்கள், பண்டிகைகள் இவை ஆசைப்பட்டுக் காத்திருந்து ரசிக்க, ருசிக்க மனம் மகிழக் கிடைக்கும் சந்தோஷங்கள். தனக்குத் தானே ஒரு வலையைப் பின்னிக்கொண்டு தன் முகத்தை மட்டும் வெளியே காட்டும் மனிதனை சமுதாயம் நேசித்தது இல்லை.

தன் பெற்றோருடன் இருப்பதையும், தன் குழந்தைகளுடன் இருப்பதையும், தன் தாத்தா பாட்டி இவர்களுடன் இருப்பதையும், தன் நண்பருடன் இருப்பதையும், ஒரு சராசரி நிகழ்வாகவும், பெருமையான நிலையாகவும் கண்ட காலம் அது.

சிக்கி முக்கிக் கற்கள் கொண்டு தீயை ஏற்படுத்தி இரவிலும் ஒளிகண்ட ஆதிமனிதன் வாழ்வில் இருந்து நாகரீக முன்னேற்றம் இன்று பல மாறுதல்களைக் கண்டுவிட்டது. உணவு, உடை, உறைவிடம், கல்வி இவை அடிப்படைத் தேவைகள்.

அக்காலத்தில் மனித வாழ்வு என்பது மனத்தின் மொழிப்படி வாழ்தல், அதற்கு அறிவைப் பயன்படுத்திக் கொள்தல், பொருள் ஈட்ட உடல் உழைப்பு செய்தல், உழைத்த பின் பொழுது போக்க இல்லத்தில் இருத்தல், அத்தகைய ஓய்வுக் காலங்களில் கலைகளில் ஈடுபடுதல், விளையாட்டுப் பயிற்சிகளில் ஈடுபடுதல் என்பதாக இருந்தது. அனேகமாக நம் காற்றும், நீரும், மண்ணும், செடியும், கொடியும், தரையும், தோட்டமும் அசுத்தமானது என்று மனிதன் கருதவில்லை, நிறுவனங்களும் மருத்துவ உலகமும் சதா கத்திக்கொண்டிருக்கவில்லை.   உழைப்பும் நிம்மதியும், வெளிப்படையான தினசரி வாழ்வும் நமக்கு ஆரோக்கியம் விலைகொடுத்து வாங்க அவசியம் இல்லாதிருந்தது. இத்தகைய வாழ்வு ஒளி படைத்த வாழ்க்கை முறையாயும், சமுதாயக் குற்றங்கள் கட்டுப் பாட்டோடும் இருந்தது.

தனிமனிதப் பண்புகள், குணம் இவை தன் வாழ்க்கையில் இருந்தே கற்றுக் கொண்டான். தகவல்களால் பெறும் அறிவு தன் வாழ்க்கைக்குத் தேவையானதை மட்டும் தேடிக் கொண்டான். மனத்தால் சிந்தித்தான்.

ஆனால் இப்போது நம் வசதிகள், தேவைகள் என்பவற்றின் எண்ணிக்கைக்கு அளவே இல்லை. ஒவ்வொரு வசதியும் கிடைக்கக் கிடைக்க, ஒவ்வொரு தேவையும் நிறைவேற நிறைவேற இன்னும் பலவசதிகள் தேவைப்படுகின்றன. இன்னும் பல தேவைகள் ஏற்படுகின்றன. இது ஒரு முடியாத தொடர்கதையாக ஆகிவிட்டது.

இக்கால வாழ்வியல் முறையில் தன் தேவைகளும் தன் குடும்பத்தின் தேவைகளும் அதிகரிப்பதால், தன்னைப் பற்றிய அல்லது அதிகபட்சமாகத் தன் சிறுகுடும்பம் பற்றிய சிந்தனைகளே வளர்ந்து தன் சிந்தனையையும் தன் நெஞ்சத்தையும் முழுதாக ஆக்கிரமித்துவிட்ட ஒரு நிலைமையைத் தற்கால மனிதன் காண்கிறான். வாழ்வதும் வாழ்க்கைக்காக ஓடுவதும் உழைப்பதும் இத்தேவைகளுக்கே கூட போதுமானதாய் இல்லாவிட்டதாய் நினைக்கிறான்.

எனவே மற்றவர் பற்றிய, அதாவது தான், தன் மனைவி, தன் குழந்தைகள் இவர்களைத் தவிர வேறு யாருடைய தேவைகளும் பற்றிய எண்ணங்கள் பெரும்பாலான மனிதர்களுக்கு ஏற்படுவதில்லை. அப்படித் தப்பித் தவறி ஏற்படும்போது அவன் இருக்கும் குடும்பச் சூழலும் சமுதாயச் சூழலும் அச்சிந்தனையை ஒதுக்கி மறக்கடிக்கச் செய்கிறது.

எனவே அன்பு என்றால் சிறிய அளவில்தான் காண்கிறான். அதாவது அவன் கொடுக்கும் அன்பும் அவன் பெறும் அன்பும் அளவில் மிகக் குறைபட்டுப் போகிறது. தன் பெற்றோர் அல்லது தன் உடன்பிறப்புகள் யாரேனும் வாழ்வில் சோதனைகளை மேற்கொண்டு வந்தால் அதற்கு உதவும் அல்லது கவலைப்படும் அல்லது பிரார்த்திக்கும் மனநிலை மிகச் சிலருக்கே அமைகிறது.

இத்தகைய மாற்றங்கள் நம் நாட்டில் மிகவும் பரவலாக ஏற்பட்டுவிட்டன. குடும்பம் என்னும் தத்துவம் அல்லது கூட்டுக் குடும்பம் எனும் தத்துவம் நம்மிடையே நியதியாக இருந்தபோது கிடைத்த அன்பும், பிறர் நலம் காண விழைவதும், மகிழ்ச்சியும், பாதுகாப்பும் இக்காலத்திய யுவர்களுக்குக் கிடைக்கவில்லை. ஊர்க் கட்டுப்பாடு, நாட்டுக் கட்டுப்பாடு என்ற எழுதப்படாத கட்டுப்பாடுகள் இருந்த காலத்தில் சமுதாயத்திலும் அன்பும், அரவணைப்பும், பாதுகாப்பும் கிடைத்தன.

இக்காலம் இத்தகைய தத்துவங்களும் கட்டுப்பாடுகளும் தனிமனித சுதந்திரத்தைப் பறிப்பதாகக் கருதி, அதைக் காத்துக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு விட்டனர். ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு பெண்ணும் தன் வாழ்வில் தனிமனித சுதந்திரத்தைத் தேடி அதைக் காத்துக் கொள்ளும் முயற்சியில், குடும்ப உறுப்பினராய் இருந்தும், ஏன் கணவன் மனைவியாய் இருந்தும் கூட, மனத்தளவில் தன் வாழ்வில் தனிமனிதராகவே வாழ்கின்றனர்.

இத்தகைய அவலங்கள் ஏற்படுவது ஒன்றும் மனித வரலாற்றில் புதிதல்ல. ஆதியில் மனிதன் நாகரிகம் அடையாதபோது தனித்தனியேதான் வாழ்ந்தான். பொது ஆபத்துகள் வந்தபோது கூட்டமாய்ச் சேர ஆரம்பித்து பின்னர் பாதுகாப்பு கருதி, சமுதாய அமைப்புகள் ஏற்பட்டன. அதற்குப் பிறகுதான் குடும்பம் எனும் தத்துவம் உருவாயிற்று.

தனிமனித சுதந்திரம் மிஞ்சிப்போய் வளர்ந்துள்ள மேலை நாடுகளைப் பாருங்கள். அங்கு ஏற்படும் பாதுகாப்பின்மையும், ஆரோக்கியமின்மையும், மன அமைதியின்மையும் கண்டு அவர்கள் நம் நாட்டின் குடும்ப அமைப்பின் மகத்துவம் பற்றி அறிந்து அவ்வாறு வாழத் தலைப் பட்டுள்ளனர். எல்லாவற்றிலும் மேலை நாடுகளை நகல் செய்து வாழும் நாம் ஏன் இத்தகைய விஷயங்களையும் அறிய முயலவில்லை.

உங்களுக்குத் தெரியுமா ? இங்கிலாந்தில் 15 வருடம் முன்னரே ஒரு தன்சிந்தனை இயக்கம் ஏற்பட்டு, ஒவ்வொரு யுவனும் ஒவ்வொரு யுவதியும் தங்களது திருமணத்துக்கு முன் உடலுறவு கொள்வதில்லை என்ற கொள்கைகளைத் கைப்பிடித்துவரும் மக்களின் எண்ணிக்கை 8 வருடம் முன் அதாவது நான் இத்தகவலைப் படித்த காலத்திலேயே 15 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

இன்னொன்று தெரியுமா ? நாம் தினமும் உறவுகளையும், அன்பையும், ஆரோக்கியத்தையும் துறந்து வீட்டில் இருப்பதில் பெருநேரம் தொலைக் காட்சிப் பெட்டிக்கு அடிமையாகிக் கொண்டிருக்கிறோம். அதே ஐரோப்பாவில் இத்தகு தொலைக் காட்சியை idiot box  என்று கருதி, சர்வசதா காலமும் அதிலேயே மூழ்கியிருப்பது நம்மை முட்டாளாக்கிக் கொள்ளும் ஒரு செயலாகும் என்று உணர்ந்து, வீட்டில் தொலைக்காட்சிப் பெட்டிகளே இல்லாத பல ஆயிரம் குடும்பங்கள் உண்டு.

மேலும் முன்னேறிய நாடுகளில், தங்கள் கையில் உள்ள கைபேசியையும் அது Smartphone ஆக இருந்தாலும் வீட்டில் வைத்துப் பூட்டிவிட்டு, குடும்பத்துடன் விடுமுறை நாட்களில் வெளியே செல்லும் குடும்பங்கள் இலட்சக்கணக்கில் உள்ளன.

(என் வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளையும் என்னில் ஏற்பட்ட எண்ன அலைகளையும் நான் இதில் எழுதிவருகிறேன். எனவே சம்பவங்களின் தொடர்ச்சி என்பது எனக்கு நினைவில் வரும் அளவுக்கு முயற்சி செய்கிறேன். எனவே என் வரலாற்றை ஒரு கதை படிப்பது போல படிப்பவர் மன்னிக்க வேண்டுகிறேன். சில பதிவுகள் ஒரு குறிப்பிட்ட செய்தி அல்லது கருத்து தொடர்பான, பல நேரங்களில் நடந்த நிகழ்ச்சிகளையும் தாங்கி வெளிவரும். எனவே முதன்முதலில் நான் இவற்றை எழுதுவதால் கால அடிப்படை (chronological order) யில் எழுத முடியவில்லை.)

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.