ஒரு சாமானியனின் வரலாறு – 17

ஒரு சாமானியனின் வரலாறு – 17

சஃப்தர்ஜங் என்க்ளேவ் கிளை

உயர்திரு M S பார்த்தசாரதி, இவர்தான் 1981இல் நான் டெல்லியில் பதவி உயர்வில் சென்று சேர்ந்த சஃப்தர்ஜங் கிளையின் மேலாளர். இப்போதெல்லாம் இந்தப் பதவிக்கு கிளை மேலாளர் என்றே பெயர். ஏஜெண்ட் என்ற பெயர் யாருக்குமே பிடிக்காததால் மாற்றிவிட்டனர் என்று நினைக்கிறேன். இவருக்கு அடுத்தபடி உயர்திரு V S நாராயணன் என்பவர் உதவி மேலாளர்.

இந்த இரண்டு பதவியில் இருந்தவர்களும் நான் அக்கிளையில் பணிபுரிந்த 1981 பிப்ரவரி முதல் 1984 ஆகஸ்ட் மாத காலத்துக்குள் வழக்கமான பணிமாற்றம் அல்லது பதவி உயர்வு பெற்று மாற்றப்பட்டார்கள். மேலாளர் பதவியில் உயர்திரு பார்த்தசாரதி சாருக்குப் பிறகு கர்நாடகாவைச் சேர்ந்த திரு பாலசுப்ரமண்யா அவர்கள், பின்னர் உயர்திரு R சோமயாஜி சார் இவர்கள் பணி புரிந்தனர். உதவி மேலாளர் பொறுப்பில் திரு மாத்யூ என்பவரும் பின்னர் திரு V நாராயணன் என்பவரும் பணிபுரிந்தனர். இன்னொருவர் குறுந்தாடி வைத்திருந்த மற்றும் வங்கியின் கிரிக்கட் குழுவின் வீரர், தமிழர், பெயர் நினைவில் இல்லை.

அக்கிளையில் என்னுடன் பணிபுரிந்த மற்றவர்கள் (இப்போது நினைவில் உள்ளவரை) திரு K லக்ஷ்மணன் (பரமக்குடிக் காரர்), திரு G லக்ஷ்மிநாராயணன் (Ex-Serviceman), திரு ஷேக் பஷீர் அஹமது (ஆந்த்ரா), திரு சுனில் திவான் (ராஜஸ்தான்), திருமதி நிஷா கன்டல்வால், திருமதி சௌந்தரா, சிறிது காலத்துக்குப் பின் திரு R சுந்தரம், திரு N பலராமன், திரு பெரியண்ணன், திருமதி ரவீந்தர் குமாரி, திருமதி நீலம் வதேரா, திருமதி சுஷ்மா பாலசுப்ரமணியம், திருமதி ஆபா பன்ஸல் மற்றும் திரு ராகவன், திரு கிருஷ்ணன், திரு ராவத் போன்ற சில புதிதாகச் சேர்ந்தவர்கள் இவர்கள் அதிகாரிகள்.

நினைவில் இருக்கும் மற்ற ஊழியர்கள்: திரு அஷோக் குமார், குமாரி சுரிந்தர் குமாரி, திரு கம்லேஷ் பாந்த்ரி, திரு …. ஜோஷி, திரு சேஹ்கல், திரு ஸ்ரீராம், திரு அவிஜித் முகர்ஜி, திரு இந்தர்சிங்க் அஹ்லாவத், திரு ஷாம்லால், திரு S K சச்தேவா, திரு ராஜீந்தர் நேகி, குமாரி சுனிதா ஷர்மா, குமாரி பத்மா, குமாரி ஹேமாவதி (நான் தஞ்சைக் கிளையில் இவருக்குத் தான் அறிமுகம் செய்யப் பட்டேன்), திரு நரேஷ் குமார், திரு ஃபூல் சிங், என்று மொத்தம் அக்கிளையில் சுமார் 30க்கும் அதிக பேர் இருந்தனர்.

இவர்களில் திரு லக்ஷ்மணன், திரு லக்ஷ்மிநாராயணன், திரு V நாராயணன், திரு பஷீர் அஹமது, திரு ஸ்ரீராம், குமாரி பத்மா இவர்கள் தமிழ்க் காரர்கள். தமிழ் தெரிந்தவர்களிடம் சிறிது தமிழிலும், பொதுவாக எல்லோருடனும் ஆங்கிலத்திலேயே உரையாடுவேன்.

ஒரு முதல் மாதிரிக் கிளை

தஞ்சைக் கிளையைப் போலவே இக்கிளையிலும் நிறைய வாடிக்கையாளர்கள். அதிகமான வர்த்தக நிலையைக் கொண்டது. அக்காலத்தில் டெல்லி மண்டலத்தில் மாதிரிக்கிளை (Model Branch) என்று சில கிளைகளைத் தேர்வு செய்வார்கள். இக்கிளையும் பலவருடம் மாதிரிக் கிளையாகவே தேர்வு செய்யப் பட்டு வந்தது. வாடிக்கையாளர் சேவையில் மிகவும் உயர்ந்த தரமாகப் புகழ் பெற்ற கிளை. இக்கிளையின் ஊழியர் அனைவரும் ஒரே குடும்பம் போலவே செயல் பட்டனர்.

வாடிக்கையாளர் அனைவரும் அனேகமாக எல்லா ஊழியர்களையும் அறிந்திருப்பார்கள். மிகவும் நெருக்கமான நட்பு ஊழியர்கள் மத்தியிலும், ஊழியர்-வாடிக்கையாளர் இடையிலும் இருந்தது மிகவும் ஆச்சரியமான ஒரு விஷயம். இத்தகைய சூழலுக்கு முக்கியமான காரணம் உயர்திரு பார்த்தசாரதி சார் அவர்களின் பண்பும், பணி செய்யும் நேர்த்தியும், எல்லோரையும் உடன்பிறந்தவர்களாக நேசிக்கும் பரந்த மனப் பான்மையும், தனி மனித ஒழுக்கமும் கட்டுப் பாடான வாழ்க்கை முறையும்தான்.

இக்கிளையில் கிளை ஆரம்பிக்கப் பட்ட நாளை வருடாவருடம் மிகச் சிறப்பாகக் கொண்டாடுவார்கள். கிளை நாள் (Branch Anniversary), ஆங்கிலப் புத்தாண்டு நாள், தீபாவளி, ஹோலி, இவைகள் மிக விமரிசையாக, நூற்றுக் கணக்கில் வாடிக்கையாளர்களும் பங்கேற்றுக் கொண்டாடப்படும். இது தவிர எல்லா ஊழியரின் பிறந்த நாள், மணநாள் இவைகளும் சிறப்பாகக் கொண்டாடப்படும்.

எதையும் சமாளிக்கும் ஊழியர்கள்

இக்கிளையில் பணிபுரிந்த அதிகாரி திருமதி சௌந்தரா அவர்களின் தந்தை அக்கிளையில் முன்னர் ஒருசமயம் கிளைமேலாளராக இருந்தபோது அக்கிளையில் ஒரு பெரிய தீவிபத்து ஏற்பட்டது. அப்போது இருந்த எல்லா ஊழியர்களும் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு ஓரிரு நாட்களிலேயே கிளையை முழுசேவையையும் செய்ய வைத்து வாடிக்கையாளரின் ஏகோபித்த பாராட்டுதலையும் நன்றியையும் பெற்றிருந்தனர்.

இன்னொருமுறை அக்கிளையிலிருந்து க்ளியரிங்க் ஹவுஸுக்கு அனுப்பப்பட்ட சுமார் 1000 காசோலைகள் சாலைவிபத்தில் அழிந்துவிட்டன. எல்லா ஊழியர்களும் களத்தில் இறங்கி எல்லா வாடிக்கையாளரையும் பார்த்து அவர்களுக்குக் காசோலைகள் கொடுத்திருந்த நபர்களின் விலாசங்களைப் பெற்று அவர்கள் வசிக்கும் / பணிபுரியும் இடங்களுக்குச் சென்று அவர்களிடம் பேசி பிரச்சினையைப் புரியவைத்து மாற்றுக் காசோலைகள் பெற்று சுமார் 20 நாட்களில் அந்த வாடிக்கையாளர்கள் கணக்கில் வரவு வைக்கப் பட்ட பணம் சரி செய்யப் பட்டது. அந்த நேரத்தில் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கில் இத்தகைய தொலைந்துபோன காசோலைகள் மூலம் வரவுசெய்யப் பட்ட பணத்தை எடுப்பதில் எந்தவிதக் கட்டுப் பாடும் விதிக்காமல் இருந்தனர்.

வெளியூர் நிறுவனங்கள், வெளியூர் நபர்கள் கொடுத்திருந்த காசோலைகள், வெளியூர்களில் உள்ள வங்கிகளில் பெறப்பட்ட வரைவோலைகள் (demand draft) இவைகளை மிகவும் கடின உழைப்பால் அந்த ஊழியர்கள் 2 மாதங்களில் பெற்றுவந்தனர். மிச்சம் இருந்த 10 அல்லது 15 காசோலைகளைப் பெற மட்டும் 4 மாத காலத்துக்கும் அதிகமாகியது.

தமிழும் ஆங்கிலமும் இந்தியும்

வாடிக்கையாளருக்குச் சேவை என்பது எனவே இயல்பாக அந்தக் கிளையில் சிறப்பாக அமைந்து விட்டிருந்தது. அதிகாரிகள் வெளிமாநிலங்களில் இருந்து வந்ததால் பலருக்கும் வாடிக்கையாளர்கள் பற்றி முழு தகவலும் தெரியாது. மொழி மாறுதலும் ஒரு காரணம். என்னைப் போலவே குறிப்பாகத் தமிழ்நாட்டில் இருந்து சென்ற பெரும்பான்மையான அதிகாரிகளுக்கு இந்தி சுத்தமாகத் தெரியவே தெரியாது. கிளைமேலாளர்கள் அனேகமாக முழு இந்தி அறிவு பெற்றிருந்தனர்.

அவ்வூர் மக்கள் ஆங்கிலம் பேசத் தெரிந்தாலும் வங்கியில் வரும்போது இந்தியில்தான் பேசுவர். (நம் மாநிலத்தில் ஆங்கிலம் பேசத் தெரிந்தால், நாம் பேசுபவர் பாண்ட் ஷர்ட் போட்டவராய் இருந்தால் அவர் தமிழராய் இருப்பினும், தப்பான ஆங்கிலம் என்றாலும் மிக கர்வத்துடனும் டாம்பீகத்துடனும் தமிழை மறந்து ஒதுக்கி அல்லது உதாசீனப் படுத்தி ஆங்கிலத்திலேயே பேசி ஒரு மதிப்பை ஏற்படுத்திக் கொள்வதை நான் அதிகம் பார்த்திருக்கிறேன்.)

வாடிக்கையாளர் அனைவரும் பேசுவது இந்தியில் இருந்ததால் அவர்கள் நேரே அதிகாரிகளிடம் வந்து பேசிப் புரியவைத்து தங்களது தேவைகளைச் செய்துகொள்வது இல்லை. ஆங்கிலம் பேசும் சிலரைத் தவிர மற்ற வாடிக்கையாளர்கள் கிளையில் இருந்த ஊழியருடன்தான் பேசித் தங்கள் தேவைகளைத் திருப்தியாகப் பெற்றனர்.

இங்கிருந்து சென்ற அதிகாரிகளிடம் ஊழியர்கள் வந்து இதை சீக்கிரம் செய்யுங்கள், இந்தக் கிளை விரைவு சேவைக்குப் புகழ் பெற்ற கிளை என்று கூறி அதிகாரிகளிடம் வேலையை வாங்கிவிடுவர். நாம் ஆங்கிலத்தில் வினவினால் அந்த ஊழியர் முகம் சுழிக்காமல் மரியாதையுடன் நம்மிடம் விளக்குவர்.

சிலசமயம் சத்தமாகப் பேசும் வாடிக்கையாளருடன் யாரேனும் ஊழியர் நீண்ட நேரம் பேசினால், இந்தி தெரியாத அதிகாரிகள் அந்த வாடிக்கையாளரின் தேவையை விரைவில் செய்ய ஊழியருக்கு உத்தரவிட்டால், வாடிக்கையாளரும் சிரிப்பார்கள். பலநேரங்களில் அது அதிகாரி அவசரப்பட்டு மூக்கை நுழைத்தது என்று ஆகிவிடும். இதுபோன்ற நேரங்களில் வாடிக்கையாளர் முதலில் இந்தி தெரிந்த அதிகாரிகளைப் போடுங்கள் என்று மேலாளரிடம் கூறிவிடுவர்.

தலைநகரில் இருப்பதால் இக்கிளையின் வாடிக்கையாளர் நல்ல தனியார் நிறுவனங்கள், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகம், ரிஸர்வ் பாங்க், சிடிபாங்க், சுப்ரீம் கோர்ட் இவைகளில் பெரிய சிறிய பதவிகளில் இருப்பவர்கள். ஏதாவது ஒரு புதிய வாடிக்கையாளர் வங்கியில் கிடைக்கும் சேவை சரியாக இல்லை என்றால் உடனே இத்தகைய அமைப்புகளின் தலைவர்களிடம் இருந்து மேலாளருக்குத் தொலைபேசி அழைப்புகள் வந்துவிடும். சிலசமயம் வங்கியின் சென்னைத் தலைமை அலுவலகம், ரிசர்வ் பாங்க் இவர்களிடம் இருந்தும் அத்தகைய அழைப்புகள் வரும் ஆதலால் இத்தகைய எந்தஒரு பிரச்சினையும் ஏற்படாமல் அக்கிளையின் ஊழியர்கள் தாமாகவே உயர்ந்த சேவையை எப்போதும் அளித்துக் கொண்டிருந்தனர்.

எனவே எனக்கு அக்கிளை மிகவும் பிடித்துப் போனது.

அக்கிளை வாரம் 7 நாளும் வேலைசெய்யும். காலையும் மாலையும் இருவேளைகளில் வேலைநேரம். காலை 8.30 முதல் 12.30; மாலை 4 முதல் 7½ வரை (நடுவில் சாப்பிடச் செல்லலாம், வீடு சென்றுவரலாம்).

ஒருவருடம் கழித்து இந்த வேலை நேரம் மாற்றப்பட்டது, ஊழியர்கள் இரண்டு பிரிவாக வர வேண்டும். ஒருபிரிவுக்கு காலை 8.30 க்கு ஆரம்பித்து 3.30 வரை; மற்றொரு பிரிவுக்கு மதியம் 12.30 முதல் இரவு 7.30 வரை பணிநேரம். வாடிக்கையாளர் நேரம் 5 நாள் காலை 8.30 முதல் 12.30 வரை மற்றும் மாலை 3.30 முதல் 7.30 வரை. மாலையில் வரும் ஊழியருக்கு சனிக்கிழமையன்று மாலையில் மட்டும் அரைநாள், ஞாயிற்றுக் கிழமை விடுமுறை. காலையில் வரும் ஊழியருக்கு சனிக்கிழமை விடுமுறை, ஞாயிறு அன்று காலை முழுநாள் பணி.

இத்தகைய அதிகநேரம் வாடிக்கையாளர் நேரம், ஏழுநாளும் சேவை என்றிருந்த கிளைகள் இந்தியன் வங்கியில் மிகக் குறைவு. இந்தியன் வங்கியின் மொத்தக் கிளைகளில் இன்னும் இரண்டு மூன்று கிளைகள் தாம் அவ்வாறு இயங்கின. வேறு வங்கிகளில் இத்தகைய வசதிகள் இல்லை.

இந்தக் கிளை இருந்த வணிகவளாகத்தில் 9 வங்கிகள் இருந்தன. இருப்பினும் அதிக அளவில் வணிகமும் வாடிக்கையாளர் எண்ணிக்கையும் இந்தியன் வங்கியில்தான் இருந்தது.

கிளையில் எப்போதுமே ஜே ஜே என்று கூட்டம் இருக்கும். சச்சரவுகள் மிக மிக மிகக் குறைவு. இக்கிளையில் பணிபுரிவது ஒரு சுகமான அனுபவம். ஆனால் நிறைய வேலை செய்யவேண்டி இருக்கும். எவ்வளவு கடினமாக உழைத்தாலும் மிகவும் திருப்தியாக இருக்கும்.

சில கருத்துக்கள்

பொதுவாக நம்மூர்க் காரர்களுக்குத் தற்பெருமை அதிகம். உலகிலேயே சிறந்த அறிவுள்ள நாடு இந்தியா, இந்தியாவிலேயே சிறப்பாக அறிவும் பண்பும் உள்ள மாநிலம் தமிழ்நாடு, நமக்குத்தான் சிறப்பாகப் பணிபுரியத் தெரியும், உண்மையாக உழைப்போம் என்றெல்லாம் நம்மை மட்டும் உயர்வு படுத்தியும் மற்றவரை ஏளனமாகப் பார்க்கும் பார்வையும் நம் பள்ளிகளும், நம் பத்திரிகைகளும், நம் திரைப்படங்களும், நமது நாவல்களும், நம் அரசியல்வாதிகளும் வளர்த்துவிட்டிருந்த ஒரு பெரிய மாயையில் நாமெல்லாம் மூழ்கிப்போனவர்கள். உண்மையில் ஆங்கில அறிவு என்பது ஒரு வசதியான ஒன்றுதான். ஒரு மனிதனின் குணத்தையோ அவரது மதிப்பையோ ஆங்கிலத்தில் உள்ள மேதைமையை வைத்து எடைபோடுவது மிக முட்டாள்தனமானது.
இந்தக் கருத்துக்களும் கொள்கைகளும் எவ்வளவு தூரம் சரியானது அல்லது தவறானது என்ற புரிதல் என்பது ஒருபோதும் மாநிலத்தின் எல்லையைக் கடந்து சென்று படிக்கவோ அல்லது பணிபுரியவோ தேவை ஏற்படாத தமிழருக்கு ஏற்பட வாய்ப்புக்கள் அரிது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.