ஒரு சாமானியனின் வரலாறு – 16

ஒரு சாமானியனின் வரலாறு – 16

யார் அந்த மகான் ?  – 3

ஒரு மாதம் இப்படியே சென்றது. பிறகு இந்தக் கனவு தொடர்பாக ஒரு நிகழ்ச்சி நடந்தது.

அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்போது திருவாரூர் கிளையில் பணி புரிந்து வரும் என் நண்பர் திரு சந்திரமோகன் அவர்கள் என்னை தொலைபேசியில் அழைத்தார்கள். வங்கி உதவி மேலாளர் வெறுப்பாய் என்னை அழைத்து (அப்போதெல்லாம் செல்ஃபோன் தொழில்நுட்பம் இந்தியாவுக்கு வரவில்லை) பேசச் சொன்னார். அலுவல் நேரத்தில் வெளியில் இருந்து வரும் வாடிக்கையாளர் இல்லாதவரின் அழைப்புகள் வெறுக்கப்பட்டன. எனவே நான் அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு நண்பருடன் பேசினேன்.

திருத்துறைப்பூண்டி கிளையில் இருந்து அதிகாரியாய் மேற்பதவி கிடைத்த ஒரு நண்பர் தட்சிணாமூர்த்தி என்பவர் டெல்லிக்கு வருவதாகவும், அவை 10 நாள் கழித்து தமிழ்நாடு எக்ஸ்ப்ரஸ் ட்ரெயினியில் வரும்போது நான் சென்று அவரை அழைத்து வந்து வாடகை இடம் பிடித்துக் கொடுக்கவேண்டும். இந்தி மொழி அவருக்குத் தெரியாது என்பதால் நான் உதவ வேண்டும் என்று கூறினார். நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன்.

எனக்கும் இந்தி தெரியாது. எங்கள் ஊரில் 7ஆம் வகுப்புக்குப் போனவுடன் இந்திப் பாடம் இருந்தது. ஒரு ஆசிரியையும் வந்தார். கற்றோம் ஒருவாரம். இந்திப் பாட வீட்டுப்பாடத்தை எழுதி ஒப்படைத்தோம். தமிழ்நாட்டில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் விளைவாக இந்தி வகுப்புகள் நிறுத்தப்பட்டன. புதிதாக வேலைக்குச் சேர்ந்ததனால் அவருக்கு திருமண ஏற்பாடு ஆகியிருந்தது. வேலை போனதால் நடக்க இருந்த திருமணமும் நின்று போனதாய் பின்னர் தெரியவந்தது.

இப்போது Higher Secondary 2 வருடப் படிப்புக்குப் பதிலாய் அப்போது 11 வருடப் பள்ளிக்குப் பிறகு ஒரு வருடப் படிப்பு Pre_University Course (PUC). அந்தப் படிப்பிலும் இந்தி கிடையாது. ஏன் மொழிப்பாடமாக இருந்த ஆங்கிலத்துக்குப் பதிலாக “பொது வணிக அறிவு” எனும் பாடம் இருந்தது.

எனவே எனக்கும் இந்தி தெரியாது. ஒன்று முதல் பத்து வரை உள்ள எண்களைத் தான் இந்தியில் சொல்லத் தெரியும். இந்தி கற்றிருந்த என் மனைவியுடன்தான் கடைகளுக்குச் செல்வேன்.  தனியே ஒருமுறை காய்கறி வாங்கக் கிளம்பி, கடைக்குச் சென்று “யே தேதேனா”, “வோ தேதேனா” என்று பேசியே, அவர்கள் சொல்லும் காய்கறி விலை கால் கிலோவுக்குத் தான் சொல்லுவார்கள் என்பது புரியாமல். பல காய்கறிகளை ஒவ்வொன்றும் கால் கிலோ வீதம் வாங்கி வந்தது எங்கள் வீட்டில் மிக நாட்களுக்கு ஓடிக்கொண்டிருந்த ஒரு நகைச்சுவைத் தொடர்.

(இந்தியே புரியாது. இந்தி பேசுபவர் யாராய் இருந்தாலும் அவரை மரியாதை கலந்த புன்முறுவலுடன் பார்த்து உம், உம், ஹான் – ஜி மட்டும் சொல்லியே ஒரு வருடம் போனது. பிறகு கற்றுக் கொண்டேன்.)

பத்து நாள் ஆகிவிட்டது. அடுத்த நாள் காலையில் கிளம்பி புதுடில்லி ரயில்வே ஸ்டேஷனுக்கு முன்னதாகவே சென்றேன். முதல் ப்ளாட்ஃபார்மில் நுழைந்து எந்த நடைமேடையில் (!) இந்த வண்டி வருகிறது என்று விசாரிக்க ரயில்வே விசாரணை கவுண்டருக்குச் சென்று கொண்டிருந்தேன்.

திடீரென்று என் பின்னந்தலையில் எதோ ஒன்று மிகப் பலமாயும் வேகமாயும் தாக்கியது. வலித்தது. என்ன நடக்கிறதென்று ஒன்றும் தெரியவில்லை. கண் இருண்டு மயக்கமடைந்து விட்டேன்.

அனேகமாக 1 மணி நேரம் கழித்து நான் விழித்துப் பார்க்கும்போது என்னைச் சுற்றி 3 வடநாட்டு இளைஞர்கள் அமர்ந்திருப்பதைக் கண்டேன். அவர்கள் எனக்கு ஒரு குளிர்பானம் பருகத் தந்தனர். குடித்தேன். “ஒரு டிராலியில் ஏற்றி செல்லும் நிறைய பெட்டிகள் நடுவில் திடீரென்று நழுவி பலர் மேல் விழுந்தன. அதில் சிறிய கலவரம் ஏற்பட்டது. அங்கும் இங்கும் சிதறி ஓடிய மக்களில் ஒருவர்  தரை சுத்தம் செய்யும் துணிகள் கட்டிய நீண்ட பிரம்புக் குச்சிகள் (நம் ஊரின் ஒட்டடைக் குச்சி போல) விற்பனைக்காகத் தலையில் தூக்கிவந்தவர். அவர் தலையில் வைத்திருந்த குச்சிகள், அவர் ஓடியதில், என் தலையில் இடித்து நான் மயக்கம் ஆனேன்” என்று சொன்னார்கள். சிறிது ரத்தமும் தலையில் வெளி வந்திருந்தது.

(எனக்கு உள்ளூர ஒரு பயம். ஏற்கனவே நான் கால்பைத்தியம் என்று கூறியது உங்களுக்கு நினைவில் இருக்கலாம். ஏதடா இது வம்பாய்ப் போயிற்றே, அரைப்பைத்தியம் ஆக பதவி உயர்வு கிடைத்துவிடுமோ என்று அச்சம் வந்தது)

என்னால் சமாளிக்க முடியும் என்று தோன்றவே நான் அவர்களுக்கு நன்றி சொல்லி அனுப்பிவிட்டு எழுந்தேன். திரும்பிப் பார்த்தேன்.

என் கனவில் வந்த பெரியவரின் முகம் நூற்றுக் கணக்கில் என்னைப் பார்த்தது (அதாவது நூற்றுக் கணக்கிலான முகங்கள்). அது ஒரு புத்தகக் கடை. நம் ஊர் ஹிக்கின்பாதம்ஸ் மாதிரி அந்த ஊரில் A H Wheeler கடை. வேகமாகக் கடைக்குச் சென்று பார்த்தேன். அவை எல்லாமே சுவாமி சிவானந்தரின் முகம். அவர் எழுதிய ஆங்கில நூல்களின் அட்டையில்தான் அந்த முகங்கள் கண்டேன்.

இப்போதுதான் அவர் பெயரைத் தெரிந்து கொண்டிருக்கிறேன். கனவில் வந்த அதே உருவம், அதே முகம். எனக்கு மெய் சிலிர்த்துப் போனது. உண்மையில் இருக்கும் குரு ஒருவர்தான் என் கனவில் வந்திருக்கிறார் என்று தெரிந்தது. நான் எதற்காக ஸ்டேஷனுக்கு வந்தேன் என்பதே முற்றிலும் நினைவில் இல்லை.

அக்கடையில் சிவானந்தர் எழுதிய Concentration and Meditation  புத்தகம் வாங்கினேன். ஸ்டேஷனில் உள்ள கடையில் டீ அருந்திக் கொண்டு புத்தகத்தைப் புரட்டியபோது உத்தரப் பிரதேசத்தில் உள்ள ரிஷிகேஷ் எனும் ஊரில் சிவானந்த ஆசிரமம் இருப்பது தெரிந்தது. உடனே அங்கு செல்லவேண்டும் அவரைப் பார்க்க வேண்டும், பேச வேண்டுமென்று தோன்றிவிட்டது.

ஆங்கிலத்திலேயே விசாரித்துக் கொண்டு பேருந்து நிலையம் சென்று வண்டி ஏறி நான் ரிஷிகேஷ் சென்றேன். மாலைவேளை. ஹரித்வாரில் கங்கை நதியை கடக்கும் பாலம் கடந்து ரிஷிகேஷ் இறங்கினேன்.

அங்கு மலைப் பிரதேசம். சிவானந்த ஆசிரமம் செல்லும் வழிகேட்டுச் சென்றேன். அழகான நடைபாதையுடன் ஒரு குன்று. வழியெங்கும் கனவில் பார்த்த மாதிரி குட்டை குட்டையான பழ மரங்கள். நடுவில் ஒரு இளஞ்சாமியார் (!) வந்தார். ஆங்கிலத்தில் என்னை பார்த்து மரத்தின் பழங்கள் நீங்கள் உண்ணத்தான் வைத்திருக்கிறோம் என்றார்.

நான் ஒரு பழம்பறித்து உண்டேன். அந்த ருசி கனவில் எனக்குக் கிடைத்த ருசியாகவே இருந்தது.

இன்னும் சிறிது மேலே ஏறியதும் தென்பட்ட இன்னொரு துறவி எங்கே செல்கிறேன் என்று இந்தியில் என்னைக் கேட்டார். கையில் உள்ள படத்தைக் காட்டி அவரைப் பார்க்கத்தான் என்றேன். அவர் வழி காட்டியதும் அந்த வழியில் சென்றேன்.

ஒரு மூத்த துறவி வந்தார். எங்கே செல்கிறாய் என்று தமிழில் கேட்டார். நான் அவரிடமும் புத்தகத்தைக் காட்டி சுவாமியைத் தரிசனம் செய்ய வேண்டும், அவரிடம் பேச வேண்டும் என்றேன். அவர் சொன்னார் தரிசனம்தான் கிடைக்கும் பேச முடியாது என்று.

நான் கட்டிடத்துக்குள் நுழைந்து அந்தப் பெரியவர் கூறிய மன்றத்துக்குச் சென்றேன். அங்கே பெரிய அளவில் சுவாமி சிவானந்தரின் படம் மட்டும் இருந்தது. படத்தின் கீழே அவர் பிறந்த தேதியும் மறைந்த தேதியும் எழுதி இருந்தது.

எனக்கு அதிர்ச்சியில் அழுகை வந்து விட்டது. வெளியே வந்தேன். என்னைச் சந்தித்த பெரிய துறவி இருந்தார், அவரிடம் சென்று அழுது கொண்டே நான் சிவானந்தரைப் பார்க்கத்தான் வந்தேன், அவர் இறந்து போய்விட்டாரே, அவர் இறந்ததை இப்புத்தகத்தில் ஏன் தெரிவிக்கவில்லை என்று கேட்டேன்.

அவரிடம் நான் 7 நாள் கண்ட ஒரே கனவையும், எப்படி நான் எதேச்சையாய் டெல்லியில் இருந்து கிளம்பி ரிஷிகேஷ் வந்தேன் என்பதையும் கூறி முடித்தேன்.

அவர் சொன்னது, சிவானந்தர் உடல்மட்டுமே இல்லை, அவர் இப்போதும் வாழ்கிறார் என்று கூறி என்னை மறுபடியும் உள்ளே அழைத்துச் சென்றார். சிவானந்தர் படத்தின் முன் மண்டியிட்டு அமர்ந்தார். என்னையும் அவ்வாறே அமரச் சொன்னார்.

சிறிது நேரம் தியானம் செய்தார். பிறகு என்னைப் பார்த்து என்னிடம் “குரு பிறந்த தேதியில்தான் நீ பிறந்திருக்கிறாயாமே” என்றார். எனக்கு தூக்கி வாரிப் போட்டது. அப்போதுதான் அவர் பிறந்த தேதியை சரியாகப் பார்த்தேன்.  செப்டம்பர் 8 தான் அவர் பிறந்த தேதி.  தியானத்தில் எவ்வாறு மூத்த துறவி இதைக் கண்டு பிடித்தார் என்பது மிக ஆச்சரியமாக இருந்தது எனக்கு.

அவர் உன் கனவில் வந்தது உன் தாய் மறைந்த சோகத்தில் இருந்து உன்னைக் காக்கத்தான் என்று குரு சொல்கிறார் என்றார். (நான் என் தாய் மறைவு குறித்து ரிஷிகேஷில் யாருக்கும் தெரிவிக்கவில்லை.) உன் மேல் அன்பாய் இருக்கிறார். அவர் உனக்கு எப்போதும் உன் உணவுப் பசிக்கும் அறிவுப் பசிக்கும், உன் மூத்த வயதில் ஞானப்பசிக்கும் போதிய உணவு தருவதாகச் சொல்கிறார். இன்னும் அரைமணி நேரம் நீ இங்கிருந்து அவரைப் பற்றித் தியானம் செய்துவிட்டு ஊர் போகச் சொல்கிறார் என்றார்.

அரை நாத்திகமும் அரைப் பைத்தியமும் ஆன நான் திக்குமுக்காடிப் போனேன்.

கண்ணில் வர ஆரம்பித்த நீர் அடங்கவே இல்லை. என்மேல் இவருக்கு இவ்வளவு அன்பா என்று அதிசயித்து தியானத்தில் அமர்ந்தேன். தியானம் செய்வது என்றால் என்ன என்று எனக்குத் தெரியாது. எனவே எனக்கு நடந்த இந்த ஆச்சரியமான நிகழ்ச்சிகளைக் குறித்தே அந்த அரைமணி நேரமும் மனம் அசைபோட்டுக் கொண்டிருந்தது.

பின்னர் டெல்லி திரும்பி விட்டேன்.

வீட்டில் ஆபீஸ் விஷயமாய் ஸ்டேஷனில் இருந்தே வெளியில் சென்று விட்டேன் என்று பொய் சொன்னேன்.

இந்த நிகழ்ச்சி உண்மையென்று பிறர் நம்ப மாட்டார்கள் என்றுதான் இத்தனை வருடமும் சொல்லவில்லை. இப்போதும் அப்படித்தான். நம்புபவர்களும் இருக்கலாம். நம்பாதவர்களும் அதைவிட அதிகமாக இருக்கலாம்.

நான் அதைப் பற்றி எல்லாம் இப்போது பொருட்படுத்துவதாய் இல்லை. எனவே இதைப் பற்றி எழுதி விட்டேன்.

மூன்று நாள் கழித்து என் அலுவலகம் வந்த திரு தட்சிணாமூர்த்தி தான் புதுடெல்லி பிரதான கிளையில் சேர்ந்து விட்டதாய்க் கூறினார். சந்திரமோகன் அவர்கள் நீண்ட நாள் என்னுடன் பேசவில்லை.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.