ஒரு சாமானியனின் வரலாறு – 15

ஒரு சாமானியனின் வரலாறு – 15

யார் அந்த மகான் ?  – 2

அந்த வருடம் 1981. நான் என் குடும்பத்தை மே மாதம் டெல்லிக்கு மாற்றியிருந்தேன். ஜூன் மாதம் தஞ்சையில் என் தாய் இறந்தவுடன் திரும்பவந்து என் தங்கையைத் தந்தையிடம் விட்டுவிட்டு நான் மனைவியுடன் திரும்பி டெல்லி வந்தேன்.

எனக்கு என் தாயார் இறந்த துக்கம் தாங்கமுடியவில்லை. அவர்களுடனேயே இருந்து எனக்குக் கிடைத்த பல அதிகாரிப் பணிகளுக்கும் செல்லாமல் தஞ்சையில் வங்கி எழுத்தர் பணியில் இருந்தேன்.

அந்த வங்கியில் பதவி உயர்வு பெற்று டெல்லி சென்றதும் என் தாயார் இறந்தது என்னால் என் தாய் கொலை செய்யப்பட்டு விட்டார்களோ என்ற அச்சத்தைத் தந்தது.

சரியான உறக்கம் மன நிம்மதி இல்லாமலேயே வாழ்ந்து வந்தேன்.

செப்டம்பர் மாதம் அல்லது நவம்பர் மாதம் என்று நினைக்கிறேன். ஒரு நாள் இரவில் உறக்கம் வராமல் நெடுநேரம் விழித்திருந்தேன். எப்போது உறக்கம் வந்தது என்று தெரியவில்லை.

ஒரு கனவு ஏற்பட்டது. அதில் நான் ஒரு மிக அழகிய சோலையில் இருப்பதாக உணர்ந்தேன். மெதுவாக வீசிக் கொண்டிருந்த தென்றல் காற்றும் அதனால் அசைந்து நடனமாடிய செடி கொடிகளும் மிக அழகான காட்சியைத் தந்தன.

நடக்க ஆரம்பித்தேன். நீண்ட நேரம் நடப்பதாய் உணர்ந்தேன்.

அந்த வனப்பான சுற்றுச் சூழல் மற்றும் செடி, கொடி, மரங்களில் பூத்திருந்த மலர்களில் இருந்து வீசிய மிக நல்ல மணம் இவற்றை ரசித்துக் கொண்டே பசி கூட அறியாது பல நாட்கள் அந்த சோலையில் நடந்தேன்.

திடீரென்று ஓய்வெடுக்க வேண்டும் போல தோன்றியதால் அங்கே தென்பட்ட ஒரு பாறையில் அமர்ந்தேன். கண்ணை சிறிது மூடினேன்.

பாறையில் சாய்ந்து அரை மணி நேரம் உறங்கி எழுந்தேன்.

என் துக்கம் எல்லாம் போய் விட்டது போல மனம் அமைதியாய் இலேசாய் இருந்தது.

மிகுந்த பசியாய் இருந்தது. சுற்றுமுற்றும் பார்த்தேன்.

அந்த இடத்திலோ அதுவரை நான் நடந்த வழியிலோ நான் எந்த மனிதரையும் காணவில்லை.

எழுந்து இன்னும் சிறிது தொலைவு நடந்தேன்.  ஒர் ஆற்றின் ஓசைகேட்டது. அருகில் ஒரு குன்றும் தெரிந்தது. குன்று நோக்கி நடந்தேன்.

செல்லும் வழியில் குட்டை குட்டையாய் பழ மரங்கள். என்ன பழம் என்பது நினைவில்லை. பறித்துச் சாப்பிட்டு விட்டு நடந்தேன்.

ஒரு பெரிய பாறையில் ஒருவர் அமர்ந்திருந்தார். ஒரு காலை மடக்கியும், ஒரு காலை தொங்கவிட்டும் அமர்ந்திருந்தார். தலையில் முடி இல்லை. முகமும் முழுதாய் மழிக்கப் பட்டிருந்தது. மெலிதாய் வெள்ளைத் துணியை உடலில் போர்த்தி இருந்தார்.

இவர் ஒருவேளை யாராவது சாமியாரோ என்று நான் அச்சப் பட்டதால் நான் சற்றுத் தொலைவில் இருந்த பாறையில் அவருக்கு எதிரில் அவர் முகம் பார்த்தவாறு அமர்ந்தேன்.

எனக்குச் சாமியார் என்றால் அச்சம். கோவிலுக்குக் கூட சரியாகப் போக மாட்டேன். பொய்ச் சாமியார்கள் பலர் மக்களை ஏமாற்றி வருவதைப் பலமுறை பத்திரிகைகளில் படித்ததால் எனக்கு சாமியார் என்றாலே பிடிப்பதில்லை.

அவரையே உற்று நோக்கினேன். நீண்ட நேரம் கழித்து அவரது கண் திறந்தது. கண் திறந்தாலும் அவரது பார்வை யாரையும் பார்ப்பதாய்த் தெரியவில்லை.

இன்னும் அவரது கண்ணை நோக்க நோக்க எனக்குள் இருந்த அச்சம் நீங்கி அருகில் செல்ல முயற்சித்து நெருங்கி 25பேர் உள்ள க்யூவில் கடைசி ஆளாக நின்றால் எவ்வளவு தூரமோ / நெருக்கமோ அந்த இடத்தில் உள்ள பாறையில் அமர்ந்தேன்.

பார்த்தேன் மீண்டும் அவரை. ஆனால் அவரது கண்கள் மூடி இருந்தன. அவர் மீண்டும் கண்ணைத் திறக்க மாட்டாரா, அவராக ஏதாவது பேச மாட்டாரோ அல்லது நம்மையேனும் பேச விடுவாரோ என்று காத்திருந்தேன்.

கடைசியில் அவர் கண் திறந்தது. இம்முறை பார்வை வித்தியாசமாய் அன்புள்ளதாய் இருந்தது. என்னைப் பார்த்தார். நானும் பார்த்தேன். பேச நா எழவில்லை. அவரும் பேசவில்லை.

பின்னும் அவரையே பார்த்திருந்தேன். சிறிது நேரம் கழித்து சிறு புன்முறுவல் செய்தார்.

என்னைப் பார்த்து தன் வலக்கையை உயர்த்தி ஆசி செய்வது உணர்ந்தேன். நான் என் இருகரம் கூப்பி அவரையே பார்த்தேன்.

திடீரென்று ஒரு வாசனைப் புயல் என்னை நோக்கி வந்து என்னுள் புகுந்தது.

அது என்ன வாசனையாய் இருக்கலாம் என்று யோசித்தபோது கனவு கலைந்து விட்டது.

இதுதான் நான் யாரிடமும் சொல்லாமல் விட்ட முதல் நிகழ்வு.

இதுவரை படிக்கும்போது இது ஒரு சாதாரண கனவு போன்ற தோன்றலாம். எனக்கும் அப்படித்தான் தோன்றியது.

சிலநாள் கழித்து சொல்லலாம் என்று நினைத்தேன்.

ஆனால், மறுநாள், மறு நாள், மூன்று நாள் கழித்து என்று மீண்டும் மீண்டும் இதே கனவு ஒரு மாற்றமும் இல்லாமல் மொத்தம் ஏழு தடவை எனக்கு வந்தது.

இப்போது அது சாதாரண கனவு அல்ல என்று உணர்ந்தேன்.

இனிமேல் இதை பற்றி யாரிடமும் மூச்சு விடக் கூடாது என்பதில் மிக கவனமாய் இருந்தேன்.

இதன் காரணமாக என்னை யாரும் ஒரு பைத்தியக்கார வைத்தியரிடமோ (அதாவது பைத்தியங்களைச் சரிசெய்யும் வைத்தியர்) அல்லது ஒரு பேயோட்டும் மந்திரவாதியிடமோ அழைத்து செல்வது எனக்குப் பிடித்தமாய் இல்லை.

சொல்லலாமா, கூடாதா என்ற குழப்பத்தில் ஒரு கால் பைத்தியமாய் ஆனேன். (இன்னும் அரைப் பைத்தியம் ஆகவில்லை).

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.