ஒரு சாமானியனின் வரலாறு – 14

ஒரு சாமானியனின் வரலாறு – 14

யார் அந்த மகான் ?  – 1

இது நடந்து 35 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதை வெளியில் சொல்லலாமா வேண்டாமா என்று பல ஆண்டுகள் யோசித்தும் ஒரு முடிவுக்கும் வரவில்லை. பிறர் நம்மைப் பற்றி என்ன நினைத்து விடுவார்களோ என்ற அச்சமும் அந்த நினைப்பு எவ்வாறு நம் நிலையைப் பாதிக்கும் என்ற இனம் புரியாத குழப்பமும் நாம் பல வேளைகளில் நமக்கு நடக்கும் பல உண்மைகளை வெளியில் சொல்வதில்லை. நானும் இதுவரை சொல்லவில்லை.

இப்போது ஏன் சொல்கிறேன் என்பதும் எனக்குப் புரியவில்லை. ஒருவேளை வாழ்க்கை முழுவதும் நம்மைப் பற்றி பிறர் என்ன நினைப்பார்களோ என்று பல முடிவுகளையும் மாற்றி மாற்றி வாழ்ந்து வாழ்ந்து அதுவே சலித்துப் போனதோ அல்லது 60 வயதுக்கு மேல்தான் தைரியம் வந்திருக்கிறதோ என்ற இந்த காரணங்கள் இருக்கலாம்.

நாம் பேசுவதை எழுதுவதை வைத்து பிறர் நம்மை மதிக்க அல்லது மிதிக்க உரிமை இருக்கிறது என்று நான் இப்போதும் நம்புகிறேன்.

ஆனாலும் நாம் என்ன பேச வேண்டும் அல்லது எழுத வேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமை எல்லோருக்கும் இருக்கிறது.

அந்த உரிமை எனக்கும் இருக்கிறது என்று நம்புகிறேன்.

இன்னும் ஒரு காரணம் இருக்கிறது. உலகில் நாம் யாவரும் ஒருவர் மற்ற ஒருவரைப் பார்த்து ரசித்து அல்லது மதித்து அல்லது பொறாமைப்பட்டு அவரைப் போல இருக்க செய்யும் முயற்சியில் நம் சுயத்தை இழந்து விடுகிறோம்.  இந்தத் தவறு என் தலைமுறையில் எங்களாலேயே செய்யப் பட்டது. அதாவது நாங்கள் சுயமாகவே விரும்பி எங்கள் சுயத்தைத் தொலைத்து இருக்கிறோம்.

தற்கால இளைஞர்களின் தலைமுறைக்கு பல காரணங்கள் இருக்கின்றன – சுயத்தைத் தொலைத்துவிட. ஆனாலும் பெரும்பாலோரின் முதற் காரணம் அவர்களின் பெற்றோரே. தங்கள் கொள்கைகள், குணங்கள், அச்சங்கள், தங்களது நிறைபெறாத நோக்கங்கள் இவற்றால் தங்களின் குழந்தைகளின் சுயம் வெளிப்பட இயலாதவாறு செய்கிறார்கள். அவனைப் போல அவளைப் போல இரு, படி, முன்னேறு என்று அன்புடனும் கண்டிப்புடனும் தங்கள் குழந்தைகளை ஊக்குவிப்பதாகக் கருதி இந்த சுயத்தை இழக்கும் பாதையில் அழைத்துச் செல்கிறார்கள்.

பிறகு, பள்ளி, கல்லூரி, நண்பர்கள், சமுதாயம், சினிமா, தொலைக் காட்சி, இணையவலை, அறிவுள்ள தொலைபேசி இவற்றால் எல்லாம் இளம் பிராயத்தில் இவர்கள் புயல் காற்றிலும் கொடுமழையிலும் 360 டிகிரி சுழலும் பந்து போல ஆகி தாம் அறியாமலேயே சுயத்தை இழக்கின்றனர்.

அப்படி சுயத்தை இழப்பதால் என்ன நன்மை என்று ஒரு நாளாவது நின்று நிதானித்து யோசிப்பது மிகச் சிலர்தான். அப்படிச் சிந்தித்து தன்னைப் பற்றி ஒரு சுய மதிப்பீடு செய்து தன் வழிமுறைகளை மாற்ற முடிவு எடுப்பவர் அதனினும் மிகக் குறைவு.

எதற்கு எல்லாவற்றிலும் ஒரு சுற்றுப் புறத்தோடு ஒத்துப் போதல் வேண்டும் (conformity with others) என்று எனக்குள் பல நேரங்களில் தோன்றிக் கொண்டே இருந்ததால் அப்படி சில விஷயங்களில் ஒத்துப் போகாமல் நான் சற்று வித்தியாசமாகவே இருந்திருக்கிறேன்.

இது கூட எனக்கு மட்டும்தான் தெரியும்.

இது பல நேரங்களில் நண்பருடன் இருந்த உறவின் நெருக்கத்தைத் தளர்த்தி விலக்கி இருக்கிறது. காசு குறையும் போது ஏற்படும் வருத்தத்தை விட நமக்குக் கிடைக்கும் அன்பு குறையும்போது ஏற்படும் இழப்பு அதிகமானது.

ஆனாலும் பல விஷயங்களில் நான் வேறுபட்டது என்பது நான் சிறு வயதில் குடும்பத்திலும் பள்ளியிலும் என் பெற்றோர் என் ஆசிரியர்கள் இவர்கள் போதித்த பாடங்கள் என் மனதில் ஆழமாகப் பதிந்து விட்டதனால்தான் ஏற்பட்டது. நல்லொழுக்கப் படிப்புகள் அன்றைய பாடத்திட்டத்தின் கட்டாயம். இதனால் என் மனத்தில் நான் வேறுபட்டு நின்றாலும் தவறில்லை, அதுதான் நல்ல நடைமுறை என்னும் முடிவு ஏற்பட்டு விட்டது.

இது எனக்கு 35 வருடத்திற்கு முன் ஏற்பட்ட ஒரு நிகழ்வைப் பற்றி நான் எழுத ஆரம்பித்து முன்னுரையே இவ்வளவு நீளம் ஆகி விட்டது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.