ஒரு சாமானியனின் வரலாறு – 13

ஒரு சாமானியனின் வரலாறு – 13

டெல்லிக்கு வந்தது

21.02.1981 அன்று நான் தஞ்சைக் கிளையில் இருந்து பதவி உயர்வுக்காக ரிலீவ் செய்யப் பட்டேன். 24ஆம் தேதி புதுடெல்லி ரயில்வே ஸ்டேஷனுக்கு அன்று தஞ்சை வந்த இந்தியன் வங்கி ஊழியரான அந்தப் பெண்ணும் அவரது மூத்த சகோதரரும் வந்தனர்.

டெல்லிக் குளிர் எனக்குப் புதிது. கைகள் சில்லிட்டு, குரலில் இருந்து பேச்சே வரவில்லை. நல்லவேளையாக இந்தியன் பாங்க் பெண்ணின் அண்ணா எங்களுக்கு சூடான டீ வாங்கித்தந்தார். நீண்டநேரம் கையில் பிடித்து அதை வெப்பத்துடன் குடித்தபிறகுதான் உயிர் வந்தது.

என் மைத்துனரும் என் நண்பனும் கூட ஸ்டேஷனுக்கு வந்திருந்தனர். ஆனால் இந்தியன் பாங்க் பெண்ணும் சகோதரரும் வற்புறுத்தவே நானும் என் மைத்துனரும் அந்தப் பெண்ணின் வீட்டிற்குச் சென்றோம்.

அவர்கள் வீட்டிலும் எங்கள் தாய் மொழியில்தான் பேசிக் கொண்டனர்.

இரண்டு நாட்கள் அந்த வீட்டில் இருந்து விட்டு, 26.02.1981 அன்று டெல்லி கிளையில் நான் வேலையில் சேர்ந்துவிட்டேன்.

அன்று மாலை அவர்களின் வீடு சென்று என் துணிமணிகளை எடுத்துக் கொண்டு கிளம்பி லோடி காலனியில் இருந்த என் நண்பனின் அறைக்குச் சென்றேன். ஒருமாதம் என் நண்பனுடன் தான் இருந்தேன்.

நண்பன் உதவியுடன் தெற்கு டெல்லியில் உள்ள மாளவியா நகரில் வீடு கிடைத்தது.

தாய் என்ற தெய்வத்தின் மறைவு

1981 மே மாதம் திரும்பிவந்து, மனைவியையும், என் சிறிய தங்கையையும் தில்லிக்கு அழைத்துச் சென்று குடித்தனம் வைத்தேன், எங்களை டெல்லிப் பயணத்திற்கு வாழ்த்தி அனுப்ப சென்னை வந்திருந்த என் தந்தை ஒருவிதமான மகிழ்ச்சியில்லாத முகத்துடன் இருந்தார். நாம் முதன் முதலாய் பிரிந்து நீண்ட தொலைவு செல்வதால் ஏற்படும் மன வருத்தம் கொண்டுள்ளார் என்றுதான் நான் நினைத்தேன்.

டெல்லிக்கு நாங்கள் சென்ற ஒரு மாதத்துக்குள், 20.06.1981 என்று என் தெய்வம் மாதருள் மாணிக்கமாகிய என் தாயார் எங்களை விட்டுப் பிரிந்துவிட்டார்கள். என் அலுவலகத்திற்கு என் மனைவி தொடர்பு கொண்டு தந்தி வந்த தகவலைத் தெரிவித்தார். அது சனிக்கிழமை, வங்கி மேலாளரின் அனுமதியுடன் விடுப்பு பெற்று, வீடு வந்தேன். டெல்லியிலிருந்து உடனே திரும்பிவர கையில் காசில்லை.

நாங்கள் டெல்லியில் மாளவியா நகரில் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் பஞ்சாபிக் காரர் திரு ரெலியா அவர் மனைவி என் மனைவியிடம் 600 ரூபாய் கொடுத்து உதவினர். அச்சமயம் டெல்லியில் நேரு ப்ளேஸ் அருகில் உள்ள கால்காஜியில் வசித்துவந்த என் உற்ற உறவினர் என் அத்தை பெண்ணும் அவர் கணவரும் வந்து, எங்களுக்கு விமான டிக்கெட்டு எடுக்க முயற்சி செய்தும், டிக்கெட் கிடைக்காததால், உடனே கிடைத்த Summer Special Train  ஏறினோம்.

தாய்க்கு மகன் ஆற்றும் கடமையை ஆற்றவில்லையே

Summer Special Train  என்றால் ஒன்றும் Special இல்லை. வழக்கமான வண்டிகளுக்கு மேலாக இயக்கப்படும் அதிகப்படியான வண்டி என்றுதான் அர்த்தம் என்பது நாங்கள் வண்டியில் வந்த பிரயாணத்தின் போதுதான் அறிந்தோம். பல பெட்டிகளில் மின்சாரம் இல்லை. கூட்டம் மிக அதிகம். அநேகமாக பெரிய சிறிய நகரங்களில் ஒவ்வொன்றிலும் நின்றுதான் வந்தது. இப்படி சென்னை வந்தபோது அது திங்கள்கிழமை இரவாகி விட்டது.

தஞ்சை செல்ல இன்னும் 10 மணி நேரம் ஆகிற்று. என் தாயாரின் உடலைப் பார்க்கக் கூட எனக்குக் கொடுத்துவைக்கவில்லை.

என் இளைய சகோதரன்தான் கொடுத்துவைத்திருந்தார். அவர்தான் என் அம்மாவுக்கு ஒரு மகன் கடைசியாக செய்ய வேண்டிய கடமைகளை செய்தார்.

அம்மாவின் கடைசி காலத்தில் அவருடன் கூட இருந்து அன்புடன் எல்லாக் கடமைகளையும் செய்துவந்த அவருக்கு அம்மா உயிருடன் இருக்கும் வரை அருகில் இருக்கும் வரமும், இளையவனாய் பிறந்த போதும், தாயின் சடலத்திற்கு சிதையூட்டும் வரை, அவர் உடலுடனும் கடைசி வரை இருக்கக் கூடிய  பெரும்பேறும் கிடைத்தது.

அம்மா விரைவில் எங்களை விட்டுப் பிரிந்து விடுவார் என்பது பிரபலமான ஜோசியரான என் தந்தைக்கு முன்னரே தெரிந்துதான் இருந்தது.

அதனால்தான் எங்களை டெல்லிக்கு அனுப்பவந்தபோது அவர் முகம் களையிழந்து காணப்பட்டது என்று அறிந்தவுடன் என் துக்கம் மிகவும் அதிகமாகி, தந்தையின்மேல் நான் வைத்திருந்த மதிப்பு இன்னும் அதிகமாகி, என் மனதில் அவர் ஒரு தெய்வம்தான் என்ற உணர்ச்சி ஏற்பட்டுவிட்டது.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.