ஒரு சாமானியனின் வரலாறு – 12

ஒரு சாமானியனின் வரலாறு – 12

கடன் பிரிவில் வேலை

கடன் பிரிவில் எனக்கு வேலை கொடுக்கப் பட்டது. அங்கே ஓய்வூதியப் பிரிவும் இருந்தது. எங்கள் கிளையில் சுமார் 2000 பேர் ஓய்வூதியம் பெற்றுவந்தனர். அது தவிர தஞ்சை மாவட்டத்தில் இருந்த எல்லாக் கிளைகளுக்கும் ஓய்வூதிய லிங்க் ப்ராஞ்சாக தஞ்சைக் கிளை இருந்தது. நான் நிறைய வேலைகளைத் திறமையாகச் செய்ய நன்றாகக் கற்றுக்கொண்டேன். உயர்திரு நாகராஜன் அவர்களும் வெவ்வேறு தொழில்களுக்கு எவ்வாறு கடன் வழங்குவது என்பது குறித்தும் தலைமை அலுவலகத்தின் கேள்விகளுக்கு எவ்வாறு பதில் அளிக்க வேண்டும் என்பது குறித்தும் கற்றுத் தந்தார்.

கிளையின் வருடாந்திர சோதனை ரிப்போர்ட்டுக்கு நான் தனியே பதில்கள் தயார் செய்தேன். அதனால் அப்போது கிளையில் நான் பார்த்திராத பிரிவுகளின் வேலையைப் பற்றியும் நல்ல அறிவு ஏற்பட்டது.

பின்னர் நான் CAIIB Part-IIவிலும் தேறினேன். ஆனால் இரண்டுமுறை 2 பேப்பர்கள் எழுதவேண்டியாயிற்று. இதற்கு முன்னர் 1977ஆம் ஆண்டு மே மாதத்தில்  MCom இரண்டாம் ஆண்டு தேர்வையும் எழுதி முடித்துவிட்டேன்.

வேலையில் சேர்ந்து மூன்று ஆண்டுகளுக்குள் பிப்ரவரி 1979இல் எனக்கு திருமணம் நடந்தது. புன்னைநல்லூர் என்னும் மாரியம்மன் ஆட்சிசெய்யும் ஊரில் பிறந்த எனக்கு, மாரியம்மன் ஆட்சிசெய்யும் இன்னொரு ஊரான சமயபுரத்தில் திருமணம் நடந்தது. நண்பராகப் போய்விட்ட எல்லா அதிகாரிகளும் ஊழியர்களும் வங்கி மேலாளரும் எங்கள் கிராமத்தில் நடந்த என் திருமண வரவேற்பில் கலந்து கொண்டனர்.

புது உறவு ஏற்படுத்திய மாறுதல்கள்

திருமணம் முடிந்து வேலைக்குப் போன சில நாட்கள் பக்கத்தில் அமர்ந்திருந்த பெண் ஊழியரைத் தவறுதலாக என் மனைவியின் பெயரைச் சொல்லி அழைத்து விட்டேன். நல்லவேளையாக அவர் கோபிக்காமல் சிரித்துவிட்டார். நான் வெட்கம் அடைந்தேன். இனிமேல் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும் என்று தோன்றியது. இரண்டு நாள் கழித்து மற்றொரு ஊழியரையும் அவ்வாறு அழைக்கவே அவர் கோபம் கொண்டுவிட்டார். இந்த விஷயத்தில் நான் திருந்த ஒரு வாரகாலம் ஆயிற்று.

எனக்கு ஒரு வருஷத்துக்கு எந்தத் திருமணத்துக்குச் சென்றாலும் அங்கே மணமேடையில் நானும் என் மனைவியும் அமர்ந்து இருப்பதாகத் தோன்றும். ரேடியோவில் நாதஸ்வர இசை கேட்கும்போதெல்லாம் என் திருமணம் நினைவு வந்துவிடும். இப்போது நினைக்கையில் இது மிகவும் வேடிக்கையாகத் தோன்றுகிறது.

பதவி உயர்வு

சக்தியுள்ள அந்த புன்னை நல்லூர் முத்து மாரியம்மன் என்னைக் கைவிடவில்லை. என் தாயாரின் உடல்நிலை தேறிவந்தது.

நான் BCom படிக்கும்போது TVS Trust கொடுத்த உதவித் தொகைப் பணத்தை நன்றியுடன் திரும்பவும் அவர்களுக்கு அனுப்பிவிட்டேன்.

1979ஆம் ஆண்டு நடந்த பதவி உயர்வு தேர்வில் பதவி உயர்வு கிடைப்பதாக இருந்தது. கும்பகோணம் வட்டார மேலாளர் எங்கள் கிளை மேலாளருக்கு பேசி, அந்த வருட பதவி உயர்வு பெறுபவர் பட்டியலில் என் பெயர் 10ஆம் இடத்தில் இருக்கிறது என்று சொல்லவே கிளை மேலாளர் என்னை வற்புறுத்தி ஒரு இனிப்பு, காரம், காபி எல்லோருக்கும் வாங்கித் தர சொன்னார். நானும் வாங்கிக் கொடுத்தேன். ஆனால் அந்த ஆண்டு கல்கத்தாவில் ஹிமாத்ரிகோஷ் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கின் எதிரொலியாக தேர்வு மறுபடி மற்ற சிலருக்கும் நடத்தப்பட்டு இறுதியில் வெளியான பதவி உயர்வுப் பட்டியலில் என் பெயர் இருக்கவில்லை.

1980 ஆம் ஆண்டு நடந்த தேர்வில் நான் வெற்றிபெற்றேன். 1981 ஜனவரி மாதம் எனக்குப் பதவி உயர்வு கிடைத்தது. இப்போதெல்லாம் போல் இல்லாமல் அந்தக் கால இந்தியன் வங்கியில் பதவி உயர்வுக் கடிதத்திலேயே எந்தக் கிளைக்கு மாற்றல் என்பது பற்றிய விவரமும் இருக்கும்.

புதுடெல்லியில் உள்ள சஃப்தர்ஜங் எங்க்ளேவ் என்ற கிளையில் நான் 28.02.1981க்குள் பணிசேரவேண்டும்.

Welcome to our Branch

ஒருநாள் ஒரு பெரியவரும் ஒரு பெண்ணும் வந்து மேலாளரைச் சந்தித்து, தாங்கள் வாங்கிவந்துள்ள பயணியர் காசோலைகளை இரண்டு மூன்று நாட்கள் சிறிதுசிறிதாக பணமாக மாற்ற வேண்டும் என்றும் கூடவந்திருந்த அந்தப் பெண்ணுக்குத் தஞ்சையில் திருமணம் என்றும் திருமணப் பத்திரிகையும் கொடுத்து அந்தக் காசோலைகளை மாற்ற உதவிசெய்யுமாறு கேட்டு மேலாளரிடம் கொடுத்தனர்.

மேலாளர் அவர்களை அந்த பயணியர் காசோலைகளில் சிலவற்றில் கையெழுத்திடச் சொல்ல, அதை வாங்கிப் பார்த்த மேலாளர் அந்த காசோலைகளை அவர்கள் வாங்கும்போது  Ballpoint  பேனாவால் போட்டிருந்த கையெழுத்து செல்லாது என்று சொல்லி அவர்கள் எவ்வளவோ வாதாடியும் அந்தக் காசோலைகளை பணமாக மாற்ற மறுத்து விட்டார்.

மேலாளரிடம் நான் சென்று அப்படி ஒன்றும் விதிமுறை கிடையாது என்றும், அவர்கள் கேட்டது போல அவர்களது பயணியர் காசோலைகளைப் பெற்றுக்கொண்டு நாம் பணத்தைத் தரவேண்டும் என்றபோது வாக்குவாதம் ஆகி வந்திருந்த பெரியவரும் அந்தப் பெண்ணும்  அடுத்த நாள் வருவதாகக் கூறிச் சென்றுவிட்டனர்.

அடுத்தநாள் காலை ஒன்பதரைக்கு நான் உள்ளே நுழையும்போதே மேலாளர் அறையில் சத்தமான குரல்கள் கேட்டன. உள்ளே நேற்றுவந்த பெரியவரும் இன்னொரு பெண்ணும் அமர்ந்திருந்தனர். மேலாளர் அந்தப் பெரியவரைப் பார்த்து “ நான் சொன்னேனே இந்தப் பையன் தான் சார்” என்றார். நான் பெரியவருக்கு வணக்கம் சொன்னேன். அந்தப் பெண்ணும் எனக்கு வணக்கம் சொன்னார். பெரியவர் என்னிடம் “Brother, I have come from Delhi to Thanjavur to conduct my elder daughter’s wedding. Your Branch Manager has agreed to exchange our Travellers Cheques. She is my younger daughter.” என்றார்.

அந்தப் பெண் எழுந்து நின்று என்னிடம் “Welcome to our Branch, New Officer Sir” என்று சொல்லி கைகுலுக்கினார். மேலாளர் அந்தப் பெண் டெல்லியில் நான் செல்லப் போகும் கிளையில்தான் பணி புரிகிறார் என்று சொன்னார். இது மிகுந்த ஆச்சரியமான நிகழ்ச்சியாக இருந்தது.

அந்தப் பெரியவர் எனக்கு டெல்லியில் யாரையாவது தெரியுமா என்றதற்கு என் நண்பன் ஒருவன் இருக்கிறான். அவன் அனுமதித்தால் நான் அவனுடன் சென்று இருப்பேன். இல்லை என்றால் என் பெரிய மைத்துனர் வேலைகிடைத்து அடுத்தவாரம் டெல்லிசெல்கிறார். அவருடன் இருப்பேன் என்றேன். ஆனால் அப்பெரியவர் என்னிடம் அங்கெல்லாம் தங்கக் கூடாது. எனக்கு நல்ல வாடகை இடம் கிடைக்கும் வரை  நான் அவரது வீட்டில்தான் இருக்கவேண்டும் என்று கூறிவிட்டார். வந்திருந்த பெண்ணும் “Sir, don’t hesitate, come and stay with our family”  என்றார். இது அதைவிட ஆச்சரியமாக இருந்தது.

நாம் பதவி உயர்வு பெற்றுப் போய் சேரப்போகும் வடமாநிலத்தில் உள்ள ஒரு  அலுவலகத்தில் இருந்து அங்கு வேலை செய்யும் ஒருவர் இப்படி என்னிடம் வந்து “வருக வருக” என்று அழைப்பது உண்மையிலேயே என் வாழ்வில் நடந்த ஒரு அதிசயம் தான்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.