ஒரு சாமானியனின் வரலாறு – 11

ஒரு சாமானியனின் வரலாறு – 11

இன்னொரு சோதனை (தொடர்ச்சி)

அடுத்த நாள் கிளையில் இருந்த வேறு யாரும் அதற்கு முன்வராதது கண்டு நானே மேலாளரிடம் சென்று இந்த வேலையை நான் செய்கிறேன் என்று சொல்லி அன்றே அந்த நிறுவனத்தின் தொழிற்சாலைக்கு சென்று நிறைய விவரங்களைப் பெற்றேன்.

அந்த நிறுவனத்தின் அதிகாரிகள் இன்னும் 3 நாளில் விண்ணப்பம் சமர்ப்பிப்பதாகவும் திரு நாகராஜன் அவர்களிடம் இதைத் தெரிவிக்குமாறும் சொன்னார்கள். நான் அவர்களிடம் திரு நாகராஜன் அவர்களுக்கு நானும் துணையாக இருந்து இந்த ப்ரபோசலை ப்ராசஸ் செய்கிறேன் என்றேன்.

கிளை மேலாளர் எனக்கு 25 நாள் காலக்கெடு தருவதாகவும் அந்த விண்ணப்பத்துக்கான ப்ரபோசலை முடித்துக் கொடுக்கவேண்டும் என்றும், இதை நான் செய்தால் எனக்குத் திமிர் இல்லை திறமைதான் இருக்கிறது என்றும், முடியாவிட்டால் திறமை இல்லை, திமிர்தான் இருக்கிறது என்று கிளை அறிந்துகொள்ளும் என்றும் சொன்னார்.

நான் ஒருவாரம் விடுப்பு கேட்டவுடன் எதற்காக என்றார். இந்தக் கடன் விண்ணப்பம் பரிசீலிப்பது குறித்து அறிந்து கொள்ளத்தான் என்றேன். அப்படி என்றால் நீ லீவ் போடவேண்டாம். அலுவல் ரீதியாகவே வெளியே செல்லலாம் என்றார்.

அந்தத்  தொழிற்சாலைக்கு சென்று மேலும் சில தகவல்கள் சேகரித்துக் கொண்டு நான் மதுரைக்குச் சென்றேன். எனக்கு அறிமுகமாகி இருந்த  Madura Coats  மற்றும்  Meenakshi Mills  இவற்றின் பொறியாளர்ளைப் பார்த்து இந்தத் தொழில் குறித்தும், இத்தகைய இயந்திரங்கள் குறித்தும் இன்னும் சில விவரங்கள் அறிந்துகொண்டேன்.

மதுரை, கோவை உலா

நான்  MCom இரண்டு ஆண்டுப் பயிற்சியிலும் Industrial Relations and Personnel Management எங்களுக்குச் சிறப்புப் பாடமாக இருந்ததால், அந்தத் துறை பற்றிய ஆராய்ச்சிக்காக 25 தொழிற்சாலைகளுக்குச் சென்றிருக்கிறோம். மதுரையில்  Madura Coats  நிறுவனத்தின் MD ஆக ஆங்கிலேயர் ஹென்றி என்னும் பொறியாளர் இருந்தார். இந்த ஆராய்ச்சிக்காக நான் சென்றபோது திரு ஹென்றியுடன் 2 நாட்கள் அவர் வீட்டிலும் அலுவலகத்திலும் தொழிற்சாலையிலும் அவருடன் கூடவே இருந்தேன். அவரையும் அவரது தொழிற்சாலையிலும் பலரையும் பேட்டி கண்டு நான் எழுதியதே ஒருகுயர் நோட்டுப் புத்தகத்துக்கும் அதிகம். அந்தவகையில் மதுரையில் இருந்த இந்த இரண்டு நிறுவனங்களிலும் இரண்டு மூன்று நாட்கள் தங்கியிருந்து ஆராய்ச்சி செய்தபோது சிலருடன் நட்பு ஏற்பட்டிருந்தது.

அங்கிருந்து கிளம்பி கோயம்புத்தூர் சென்று மூன்று நாள் தங்கி South India Textile Research Association  சென்று அங்கு இந்த தொழிற்சாலைகள் இயங்கும் விதம், இத்தகைய இயந்திரங்கள் எவ்வாறு தேவைப்படுகின்றன, இவற்றை உலகில் எந்தெந்த நிறுவனங்கள் தயாரிக்கின்றன என்பது போன்ற இந்த விண்ணப்பம் தொடர்பாக பல தகவல்கள் பெற்றேன். பிறகு திரும்பி திருச்சி வந்து கன்டோண்மெண்ட் அருகில் உள்ள job typing  நபரிடம் சென்று நான் சொல்லச் சொல்ல அவரைத் தட்டெழுத்து செய்துதரச் சொல்லி, மூன்று நாட்கள் இருந்து 60 பக்கத்துக்கும் மேல் ஒரு அறிக்கையைத் தயார் செய்தேன். சில தாள்களில் தவறுகள் இருந்ததால் அவற்றை மறுபடி தட்டச்சு செய்ய வேண்டியதாயிற்று.

அதனுடன் நான் கோவையில் சேகரித்திருந்த நெசவுத்தொழிற்சாலை செயல்முறைகள், தேவைப்படும் இயந்திரங்களின் பட்டியல், தயாரிப்புச் சூழலில் (role of the machines in the production process chain) அவை எவ்வாறு தேவைப்படுகின்றன, தஞ்சை நிறுவனம் வாங்க உத்தேசித்த இயந்திரங்களைப் போன்ற மற்ற நிறுவனங்கள் தயாரிக்கும் இயந்திரங்கள் பற்றிய படங்களுடன் கூடிய விவரத்தாள்கள் இவற்றை சேர்த்துக் கோத்து 200 பக்கத்துக்கு மேல் கொண்ட ஒரு அறிக்கையைத் தயார் செய்தேன்.  இரண்டு நகல்களாகத் தயாரித்துக் கொண்டு அடுத்த நாள் அலுவலகம் சென்றேன்.

சோதனையில் வெற்றி

அங்கே சென்றவுடன் வந்திருந்த அந்த நிறுவனத்தின் விண்ணப்பத்தைக் கொடுத்தனர். நான் ஒரு ஆறு பக்கம் ஒரு ரிப்போர்ட்டைக் கையால் எழுதி மேலாளரிடம் காண்பித்து அவர் அனுமதியுடன் இன்னொரு ஊழியரை வைத்து குறிப்பிட்ட வடிவத்தில் லோன் ப்ரபோசலாகத் தயார் செய்து கொடுத்டேன். என் மதுரை, கோவை பயணத்துக்கும் தட்டச்சு செலவுக்கும் ஆன தொகையை வங்கி எனக்குக் கொடுத்துவிட்டது.

மேலாளர் குறிப்பிட்ட கெடுவுக்கு முன்னரே நான் ப்ரபோசலைக் கொடுத்து விட்டேன். அதை எடுத்துக் கொண்டு என்னையும் அழைத்துக் கொண்டு கும்பகோணத்தில் இருந்த வட்டார அலுவலகம் சென்றோம். அங்கே வட்டார மேலாளராக உயர்திரு சுப்பையன் என்பவர் இருந்தார். உலகப்புகழ் பெற்ற நாதஸ்வர வித்வான் திரு TR ராஜரத்தினம் பிள்ளை அவர்களின் நெருங்கிய உறவினர் அவர். 3 மணி நேரம் அந்த அலுவலகத்தில் இந்த விண்ணப்பம் குறித்துப் பேச்சு நடந்தது. நாங்கள் இரவு ஊர் திரும்பினோம்.

இருவாரம் கழித்து இந்த விண்ணப்பம் குறித்து சென்னை தலைமை அலுவலகத்தில் இருந்து ஆறு கேள்விகள் கேட்டு கடிதம் வந்த அன்று, திரு நாகராஜன் அவர்கள் விடுப்பு முடிந்து வேலைக்கு வந்தார்.

என்னையே அதற்கான பதிலைத் தருமாறு அவர் கூறிவிட்டார். நான் அன்றே அந்த நிறுவனம் சென்று எல்லாக் கேள்விகளுக்கும் அவர்கள் சரியான சான்றுகளுடன் அளித்த விளக்கங்களைப் பெற்று, அடுத்த நாள் கிளையில் இருந்து பதில் தலைமை அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது.

அடுத்த வாரம் சென்னையில் தலைமை அலுவலகத்தில் இருந்து இரண்டு நிபுணர்கள் வந்து தஞ்சைத் தொழிற்சாலை சென்று பார்த்துவிட்டுச் சென்றனர். அதற்கடுத்த சில நாட்களில் அந்த விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு அந்த நிறுவனத்திற்கு இரண்டுகோடி கடனளிக்க ஒப்புதல் வந்துவிட்டது.

இது வந்த நாள் நான் கல்லூரி வேலையாய் விடுப்பில் சென்றிருந்தேன். அடுத்த நாள் நான் வந்ததும், மேலாளரும் அவர் அறையில் அமர்ந்திருந்த திரு நாகராஜன் அவர்களும் எழுந்து என் கையைப்பிடித்து குலுக்கினர். கட்டிப் பிடித்துக் கொண்டனர். இவ்வளவு விரைவாக இவ்வளவு பெரிய கடன் இவ்வளவு குறைந்த கேள்விகளுடன் தலைமை அலுவலகத்தின் அனுமதி பெற்றது மிக அரிதானது என்றும் இந்த வட்டாரத்தில் இதுவரை நிகழவில்லை என்றும் கூறினர். வட்டார மேலாளர் மிகவும் என்னைப் பாராட்டியதாகவும் தெரிவித்தனர்.   எனக்குப் பரிசாக இரண்டுசெட் பாண்ட்ஷர்ட் துணிகளைக் கொடுத்தனர். அன்று மாலை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் நிறைய பாராட்டுகள் கிடைத்தன.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.