ஒரு சாமானியனின் வரலாறு – 1

ஒரு சாமானியனின் வரலாறு – 1

(இது ஓர் ஆரம்பம். ஒரு மனிதனின் கதையில் எவ்வளவோ விஷயங்கள் நடக்கின்றன. சில நிகழ்ச்சிகள் அவனை மேம்படுத்தக் கூடிய குணநலன்களைக் கற்றுக் கொடுக்கின்றன. சில நிகழ்ச்சிகள் அவனது இயல்பை மாற்றிவிடக்கூடிய சக்தியுடையவை. என் வாழ்வில் என் நினைவில் நிற்கும் சில விஷயங்களை மறக்கும் முன்னர் எழுதிவிடவேண்டும் என்பதால், இதை எழுத முயற்சி செய்கிறேன். இது இறைவனின் அருள் பார்வை கிடைத்தால், ஒரு தொடராகவோ அல்லது ஒரு முழு வரலாறாகவோ மலரும். பழைய நிகழ்ச்சிகள் நினைவுக்கு வரவர இது மேலும் சிற்சில மாற்றங்களுடன் வளரும். முழுமையில்லாத பகுதிகள் பின்னர் விரிவு படுத்தப்படும்

ஒவ்வொரு மனிதனும் தனித்துவம் பெற்றிருப்பதால், தனித்துவம் பெற்றிருந்த என் பெற்றோர் வளர்த்த நானும், பல விஷயங்களில் உலகோடு ஒத்துப் போகாமல், தனித்துவமாகவே இருக்கிறேன். நாம் வாழ்வில் ஒவ்வொரு முடிவையும் எடுக்கும்போது, நம் மனது அப்போது நம்பிருக்கும் கொள்கைகள், மற்றவர்களின் மற்றும் நமது நிலைமைகள், நம் அறிவு அதுகாறும் வளர்ந்திருக்கும் நிலை, நாம் அடைந்திருக்கும் பக்குவம், நமது தைரியம் அல்லது அச்சம், இதைப்போன்ற பல விஷயங்களைக் கொண்டுதான் முடிவு எடுக்கிறோம். எனவே, என் நிகழ்ச்சிகளைப் பற்றிப் படிப்பவர்கள், இதை ஒரு மாற்றமுடியாத வரலாறாகவே படிக்க வேண்டும். நான் வேறு வகையான முடிவுகள் எடுத்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்ற கற்பனையில் இறங்கிவிடவேண்டாம்.)
——————————————————————————————————————————

ஆரம்பம்

தஞ்சை அருகிலுள்ள ஒரு கிராமம் நான் பிறந்த பூமி. உலகையே காக்கும் தாய் மாரியம்மன் கோவில் கொண்டுள்ள தலம் அது. எங்கள் குடும்பம் ஒரு சராசரியான கிராமத்துக் குடும்பம். என் தந்தையும் தாயும் தம் உயிரினும் மேலாக எங்களை அக்கறையுடன் வளர்த்து உருவாக்கினார்கள். அவர்கள் தங்களை சரிவரக் கவனித்துக் கொண்டார்களா என்பது சிறுவயதில், ஏன் வளர்ந்துவிட்ட பின்னரும் கூட என் சிந்தனையில் பதியாத ஒன்று. எங்களை எப்போதும் மகிழ்ச்சியுடன் வளர்த்தனர்.

பிறந்தவுடன் பஞ்சுக்கூடையில் வளர்ந்தது:

நான் குறைப் பிரசவத்தில் பிறந்ததால் என்னை மிக நன்றாகவே கவனிப்புடன் வளர்க்க வேண்டியதாய் விட்டது. மிகவும் நலிவாக இருந்ததால், உயிர்பிழைப்பேனோ என்று தெரியாமல், நான்கு மாதங்கள் நான் பஞ்சு நிரப்பிவைத்த தட்டியிலும் கூடையிலும் வளர்க்கப் பட்டேன். என்னை என் தாய்மாமா எப்போதும் ‘பஞ்சுக்கூடைப் பையன்’ என்று எப்போதும் வர்ணிப்பார். நான் பிறந்தவுடன் அம்மா உடல்நிலை சரியில்லாமல் ஆகிவிட்டது. அடிக்கடி நோய்வாய்ப் பட ஆரம்பித்து விட்டார்.

சிறுவயதுகளில்:

என் வாழ்க்கை சிறுவயது முதலே மிகுந்த சோதனைகளைக் கண்டது. கிராமத்துப்பள்ளியில் நல்ல ஆசிரியர்கள் அமைந்ததால், பள்ளி வாழ்க்கை நன்றாகவே இருந்தது. ஆயினும் என் தாயாருக்கு பிறப்புக் காலகெடுவிற்கு ஒன்றரை மாதம் முன்னரே நான் பிறந்ததால் அதுமுதலே உடல் நிலை நலிவாகப் போனது. என் தந்தையார் மிகவும் சிரமப் பட்டு என் தாயாரைக் கவனித்துக் கொண்டதோடு, என்னையும் என் தம்பியையும் முதுகலைப்பட்டப் படிப்பு வரையிலும், என் இரு தங்கைகளை பட்டப்படிப்பு வரையிலும் பயிற்றுவித்தார். இதற்காக அவர் இருந்த வீட்டையும், நிலங்களையும் விற்கவேண்டியிருந்தது. என் பள்ளி அடுத்தடுத்த தெருவில் இருந்ததால் சென்றுவர செலவில்லை. சிறுவயதுகளில் வீட்டில் மூன்று வேளைகளிலும் சாப்பாடு என் தாயார் என் தந்தையின் உதவியுடன் அளித்துவந்தார்கள். சாதத்தைத் தவிர வேறு எதுவும் அவ்வளவாக சிறுவயதில் உண்பதில்லை. பள்ளியில் அரைக்கால் டிராயர் மற்றும் சட்டையும் அணிந்தும், 10-11 வகுப்புகள் படிக்கும்போது வேட்டியும் சட்டையும் அணிவேன். ஆனால் அப்போது மனதில் வித்தியாசம் ஒன்றும் தெரியாது, அவ்வயதுக்குரிய மகிழ்ச்சியுடன் வளர்ந்து வந்தேன்.

நல்ல ஆசிரியர்கள் முக்கியமாக, தலைமையாசிரியர் திரு ராமசாமி அய்யர், திரு அப்பாத்துரை, திரு மாரியப்ப மன்னையர், தலைமையாசிரியர் திரு கோவிந்தன், திரு சுப்ரமணியன் (இவர்களை நான் அப்பொழுதும் இப்பொழுது நினைக்கும்போதும் தெய்வங்களாகவே மதிக்கிறேன்) இவர்களின் அன்பும் மாணவர்களின் படிப்பு, அறிவு மட்டுமல்லாது அவர்களது பண்புகளையும் வளர்த்தவர்கள். அவர்களால் நான் கல்வியில் மிகுந்த ஆர்வம் செலுத்திப் படித்தேன். படிப்பில் ஆர்வம் இருந்ததால், பல விருதுகளும் கிடைத்தன. இருப்பினும் எப்போதுமே அம்மாவிற்கு உடல் நலம் குன்றியே இருக்கிறதே என்று அழாத நாளில்லை.

பட்டப்படிப்பு:

அடுத்த ஊரிலுள்ள புஷ்பம் கல்லூரியில் நான் சேரும்போது, அப்பாவின் நண்பர் திரு தங்கவேல் முதலியார்தான் துணைக்கு வந்து என்னைக் கல்லூரியில் சேர்த்துவிட்டுப் போனார். நான் முதலில் அணிந்த முழுக்கால் சராய் என் உறவினர் ஒருவர் உபயோகப் படுத்தியதுதான், பல மாதங்களுக்கு, அப்படிக் கிடைத்த இரண்டு சராயும் சட்டையும்தான் உபயோகித்தேன். கல்லூரியிலும் நல்ல ஆசிரியர்கள் அமைந்ததால், அங்கும் விருதுகள் கிடைத்தன. எனக்கு கல்லூரியில் படிக்கும்போது டிவிஎஸ் டிரஸ்டின் திருப்பிச் செலுத்த வேண்டாத உதவித்தொகை பட்டப் படிப்பின் பின்னிரு ஆண்டுகளிலும் கிடைத்தது. அம்மாவின் உடல் நிலை தேறாமலேயே இருந்தது. ஒவ்வொரு இளைஞனுக்கும் முழு சந்தோஷம் என்று ஒன்று இருக்கிறது என்றால் எனக்கு அது கிடைத்ததில்லை. எதேனும் சோதனை இல்லையென்றால் அந்த நாளே எனக்குச் சந்தோஷமானது. என் சந்தோஷத்தின் அளவு, நான் படிப்பதிலோ, மற்றவர் பாராட்டுவதிலோ இல்லாமல், என் அம்மாவின் உடல் நிலையின் அளவுக்கு சுருங்கி, அவரையே சார்ந்திருந்தது. என் இளம்பருவத்தில் சகோதர சகோதரிகளுடனான உறவு வழக்கமான குடும்பங்களில் உள்ளது போலவே சில நேரங்களில் சிறு சச்சரவுடன், ஆனாலும் அன்புடனே இருந்தது. அவ்வகையில் எவ்வித வருத்தமும் இல்லை. என் தந்தை எங்களுக்காகவே தான் எந்த சுகமும் படாமல் உழைத்தவர். உடல் பொருள் ஆவி இவற்றினால் அவர் ஆற்றிய செயல்கள் சாதாரண மனிதர்கள் செய்யக்கூடியவை அல்ல. எனக்கு அவரைப்பற்றி இப்படிப்பட்ட ஒரு அபிப்பிராயம் ஏற்பட்டதே நான் வேலையில் சேரும் காலத்தில்தான்.

மேல்பட்டப்படிப்பு:

நான் பட்டப்படிப்பில் வணிகவியல் எடுத்திருந்தேன். ICWA படித்துக்கொண்டே ஏதாவது வேலையில் சேர்ந்துநான் வேலை தேடலாம் என்று யோசித்தவேளையில், என் அம்மா என்னை மேல் படிப்புப் படிக்கவேண்டும் என மிகவும் வற்புறுத்தினார்கள். நான் எவ்வளவோ மறுத்தும்கூட, என் தந்தையின் சிபாரிசினால் மறுக்கச் செய்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை. நாங்கள் இந்த தர்க்கத்திலேயே இருந்தகாலத்தில், விண்ணப்பத்தைச் சமர்ப்பிக்க இன்னும் 3 நாட்களே இருந்த நிலையில் எப்படியும் மேல்படிப்பில் சேர்ந்தாகவேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. எங்கள் கல்லூரியில் முது நிலைப் படிப்பு வணிகவியலில் இருக்கவில்லை. எனவே எந்தக் கல்லூரி என்று யோசித்தபோது, அருகில் உள்ள ஊரான திருச்சியில்தான் முடியும் என்று தோன்றியது.

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில் நான் வந்து இருமுறை பலகல்லூரிகள் கலந்துகொண்ட போட்டிகளில் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளதால், அந்தக் கல்லூரி எனக்கு ஓரளவுக்கு பரிச்சயமானது. அங்கு சென்று விசாரித்ததில் வணிகவியலில் முதுகலைப் படிப்பு திருச்சியில் ஜமால் முகம்மது கல்லூரியில்தான் இருப்பது தெரிந்து, உடனே அங்கே சென்றால், அவர்கள் விண்ணப்பங்கள் 3 படிவங்கள் கொடுத்து, மூன்றையுமே சமர்ப்பிக்க வேண்டும் என்றும், விண்ணப்பத்தில் கண்டிருந்த படிக்க விருப்பமான மூன்று கல்லூரிகள் என்ற இடத்தில் தங்கள் கல்லூரியை முதல் அல்லது இரண்டாம் இடத்தில் எழுதி, அந்த விண்ணப்பத்தினை அடுத்த இரண்டு நாட்களுக்குள் சென்னை சேப்பாக்கத்தில் இருக்கும் சென்னைப் பல்கலைக் கழகத்தில்தான் சமர்ப்பிக்க வேண்டும், அதில் பல்கலைக்கழக இலச்சினை பெற்று ஒரு நகலைத் தங்கள் கல்லூரியில் ஒரு வாரத்துக்குள் கொடுக்கவேண்டும் என்று சொன்னார்கள்.

திருச்சியிலிருந்து தஞ்சை செல்லும் ஒரு நண்பனை அவன் தஞ்சையிலிருந்து 6 கி.மீ. தொலைவிலுள்ள எங்கள் கிராமத்துக்குச் சென்று, என் தந்தையிடம் நான் சென்னைசெல்வதாகச் சொல்லிவிடும்படி வேண்டி, அன்றிரவே சென்னைக்குப் புறப்பட்டேன்.

சென்னைக்குச் சென்று எந்தக் கல்லூரிகளில் வணிகவியல் முதுகலை உள்ளது என்றும் அதன் குறியீட்டு எண் பற்றியும் விசாரித்த போது, சென்னைப் பல்கலைக்கழகத்தில் அப்போது திரு. தர்மராஜன் என்பவர் Student Counsellor அவருக்குதான் தெரியும் என்று சொல்ல, அவரிடம் கேட்டறிந்து விண்ணப்பத்தைப் பூர்த்திசெய்து வேறு இடத்தில் சமர்ப்பிக்கச் சென்றபோது, அவர்கள் அங்கேயிருந்த ஒரு சீல்வைத்த பெட்டியில் (ஓட்டுச்சீட்டு போல்) விண்ணப்பங்களை போட்டுவிட்டுச் செல்லுமாறும், இலச்சினையொன்றும் வைத்துக் கொடுக்க முடியாது என்று சொல்லவே, அவர்களுக்குத் தெரியாமல் ஒரு நகலை மறைத்துவைத்துக்கொண்டு, இரு நகல்களை, இணைத்துப் போடாமல் தனித்தனியே பெட்டியில் போட்டுவிட்டேன்.

அன்று இரவே கிளம்பி காலையில் திருச்சிவந்து காலை 7.30 முதல் ஜமால் முகம்மது கல்லூரியில் யாராவது தென்படுவார்களா என்று காத்திருந்தேன். அது ஒரு வெள்ளிக்கிழமையாக இருக்கவே, நிறைய முகம்மதியர்கள் கல்லூரிக்கு அருகில் உள்ள முகம்மதிய பள்ளிவாசலுக்குத் தொழுகைக்கு வர ஆரம்பித்தனர். அவர்களில் ஒருவர் என்னைப்பார்த்து வகுப்புகள் விடுமுறையானதால் கல்லூரி 10 மணிக்குத்தான் திறக்கும் என்று கூறினார். நான் அங்கேயே காத்திருந்தேன்.

8.45 மணியளவில் தொழுகையிலிருந்து வந்த மற்றொரு கண்ணியவான் என்னைப்பார்த்து, என்னருகில் வந்து எதற்காக நிற்கின்றேன் என்று வினவ நான் கல்லூரியில் விண்ணப்பம் சமர்ப்பிக்க நிற்கிறேன் என்று கூற, சரியென்று சொல்லிச் சென்று விட்டார். 9 மணியளவில் ஒரு கார் வந்ததும் கல்லூரிக்கதவுகள் திறக்கப்பட்டன. ஆசிரியர் ஒருவர் வந்து என்னை கல்லூரி முதல்வர் அழைக்கிறார் என்று கூற நான் பிரின்சிபாலின் அறைக்குள் சென்றேன். என்னைப் பார்த்த அதே கண்ணியவான்தான் கல்லூரி முதல்வர் உயர்திரு இஸ்மாயில் அவர்கள்.

 

அவர் அன்று வரவேண்டியதில்லை என்றும், என்னைப் பார்த்ததும் நான் காலையில் நெடு நேரம் நிற்பதை அறிந்ததால், வீட்டுக்குச் சென்று மறுசாவியை வைத்திருக்கும் இன்னொரு ஆசிரியரையும் அழைத்துவந்து, கல்லூரியில் என் விண்ணப்பத்தைப் பெறவே வந்ததாகக் கூறினார். விண்ணப்பத்தை வாங்கி எடுத்துச் சென்ற ஆசிரியர், திரும்பிவந்து, “என்ன இது, பல்கலைக்கழக இலச்சினை இல்லையே” என்று சொல்லி விண்ணப்பத்தை என் கையில் திருப்பிக் கொடுக்க, அச்சமயம் கல்லூரி முதல்வர் அவர்கள் நான் அவரிடம் எதனால் இலச்சினை இல்லை என்று விளக்கிவிட்டதாகக் கூறி, அவ்விண்ணப்பத்தின் மேல் அவர் கையொப்பமிட்டு, அவரை உள்ளே எடுத்துச் சென்று கல்லூரி முத்திரையிட்டு, வரிசை எண்ணை ஒரு கல்லூரித்தாளில் எழுதி என்னிடம் அளிக்குமாறும் உத்தரவிட்டார்.

பின்னர் “தம்பி, என்ன நடந்தது” என்று கேட்க, நான் அனைத்தையும் சொல்லிவிட்டேன். என்னைப் பற்றியும் என் படிப்பைப் பற்றியும் என் குடும்பத்தை பற்றியும் கேட்டு விட்டு, எப்படியும் தங்கள் கல்லூரியில் பல்கலைக் கழகத்தின் பரிந்துரை வந்துவிடும், அது வந்த பின்னர், என் விலாசத்துக்கு 3 மணி நேர Entrance Test, மற்றும் நேர்காணலுக்கான தேதிபற்றிக் குறிப்பிட்ட கடிதம் அனுப்பப்படும் என்றும், அந்தத் தேர்விலும் நேர்காணலிலும் வெற்றிபெற்றால் கல்லூரியில் இடம் உண்டு என்றும் சொன்னார். நன்றிகூறி வணங்கிவிட்டு நான் வெளியே வந்த உடனேயே கல்லூரியின் கட்டடக் கதவுகள் மூடப் பட்டன.
பின்னர் அத்தேர்விலும் நேர்காணலிலும் முதல்மாணவனாகத் தேறி, வந்திருந்த 100 மாணவர்களில், 16 பேரை மட்டும் தேர்ந்தெடுத்ததில், நானும் தேர்ந்தெடுக்கப்பட்டு, கல்லூரியில் ரூபாய் 750 கட்டி (ஒருவருடக் கட்டணம்) சேர்ந்துவிட்டேன்.

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.