திடீரென்று நல்லவராய் மாறிய நம்மவர்கள்

என்ன இது அதிசயம். கடவுளே வந்து நம்மவர்களிடம் இனிமேல் நல்லவராய் இருங்கள் என்று எச்சரித்தாரா ?

இது நமது பிரதமரால் விளைந்தது என்று சொல்லிவிடாதீர்கள்.

நமது நெருங்கிய தலைவர்களும், உத்தமபுத்திரரான நமது ( “உங்கள்” ) தொலைக் காட்சிகளும் நிச்சயமாக பிரதமர் செய்தது தவறு – அதாவது இமாலயத் தவறு – என்றுதானே செப்புகிறார்கள் !

வடநாட்டில் ஒரு நல்லவர் இருக்கிறார். அவரைப் போல பலர் இருக்கிறார்கள். “சார், என் மனைவியை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். எனக்கு அவசரமாக ஒரு 10000 ரூபாய் கடனாகத் தாருங்கள். என் சம்பளத்தில் பிடித்துக் கொள்ளுங்கள்” என்று காலில் விழுந்து கெஞ்சியும் அசராத மனிதர் அவர்.

பன்னிரண்டாம் தேதி அன்று அந்த ஊழியரைக் கூப்பிட்டு மிகவும் கரிசனமாக “உன் மனைவி இப்போது எப்படி இருக்கிறார் ? அன்று ஏதோ கோபத்தில் நீ கேட்கும்போது உதவவில்லை,”  என்று கேட்டார். “சார் பரவாயில்லை சார், இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்கிறார்கள் சார், “ என்றவரிடம் முதலாளி “இந்தா இதை வைத்துக்கொள். இதை உன் சம்பளத்தில் பிடிக்க மாட்டேன்.” என்று சொல்லி அவர் கையிலிருந்த ஒரு பொட்டலத்தை ஊழியரிடம் கொடுத்தார்.

தன் இடம் வந்து அந்த பொட்டலத்தை அவிழ்த்துப் பார்த்த ஊழியர் மிகவும் அதிகமாகப் பணம் இருந்த்தைக் கண்டவுடன் முதலாளியிடம் ஓடிப்போய், “சார், ரொம்ப இருக்கே சார்” என்றார். அதற்கு முதலாளி “உன்னுடைய 12 மாதச் சம்பளம் இது” என்றார்.

உடனே அழுதுவிட்ட ஊழியர், “என்ன சார் இது, என்ன சார் இது, முந்தாநாள் உங்களிடம் பணம் கேட்டு விட்டு, உடனே நான் ஃபாக்ட்ரியில் இருந்து கிளம்பியது ஃஃபோர்மேன் சொன்னாரா சார். மன்னித்து விடுங்கள் சார். தயவு செய்து என்னை வேலையில் இருந்து எடுத்து விடாதீர்கள்,” என்று கதறினார்.

முதலாளி “எழுந்திரப்பா, உன்னை வேலையை விட்டு நீக்கவில்லை. நீ வேலைக்கு வா. இந்தப் பனத்தை உடனே எடுத்துக் கொண்டு நகர்” என்று அதட்டிவிட்டார்.

வெளியே வந்து கேன்டினுக்குப் போய் அந்த ஊழியர் டீ குடித்தார். அருகில் இருந்த மற்றவரிடம், “நம் முதலாளி மிகவும் நல்லவர். என் மனைவியின் வைத்தியத்துக்காக நான் கேட்ட பணத்தை மறுத்த அவர், இன்று அவராகவே என்னைக் கூப்பிட்டு தன் செயலுக்கு வருந்தினார். என்னிடம் 12 மாதச் சம்பளம் இன்றே மனைவியின் மருத்துவச் செலவுக்குக் கொடுத்திருக்கிறார். சம்பளத்தில் இருந்தும் பிடித்தம் செய்யமாட்டேன் என்றுகூட சொன்னார். கடவுள் கண் திறந்து விட்டார்” என்று மிக்க உணர்ச்சியுடன் கூறினார்.

“சர்வமுட்டாள். உனக்குக் கொடுத்த பணம் எப்படிக் கொடுத்தார், எந்த எந்த நோட்டுக் கொடுத்தார் ?”

“எல்லாம் ஆயிரம் ரூபாய் நோட்டுதான்.”

“நம் தொழிற்சாலையில் உள்ள 1200 பேருக்கும் நம் முதலாளி 12 மாதச் சம்பளம் இன்று கையில் கொடுத்துவிட்டார். உண்மையிலேயே நம் முதலாளி மிகவும் நல்லவர் ஆக மாறிவிட்டார். எல்லோருக்கும் ஐநூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுத்தான். “

‘ரொம்ப ஆச்சரியம் அண்ணே”.

“ஆமாம், நேத்து ராத்திரி அவர் கனவிலே கடவுள் வந்தாராம், இனிமேல் நீ நல்லவனாய் இரு” என்று சொல்லிவிட்டார். ஆமாம், நீ என்ன பண்ணப் போறே?”

“நான் ஒரு மணி நேரம் பர்மிஷன் எடுத்துக்கறேன். பாங்கு திறந்ததும் போய் அக்கவுண்ட்ல கட்டிட்டு வந்துர்ரேன் அண்ணே”

“நீ எதுக்கும் ரெண்டு நாள் லீவ் போட்டுடு.அப்பத்தான் பணத்தை பாங்குல போடமுடியும்.”

“ஏண்ணே, அரைமணி நேரம்தானே ஆவும் ?”

“டேய், நீ எந்த நாட்ல இருக்க ! 4 நாளா நாடே அவதிப்படுது. நீ என்ன செஞ்சிட்டிருந்தே? பேப்பர் பாக்கல்லே ? டிவி பாக்கல்லே?”

“என்னண்ணே இப்படிக் கோவிச்சிக்கிறே? ஆஸ்பத்ரிலதானே இருந்தேன்.  பொண்டாட்டியை பாத்துக்கறதா, இல்லை டிவி பாக்கறதா”

“பைத்தியம்! ஞானசூனியம்! 500 ரூபாய் 1000 ரூபாய் நோட்டு செல்லாதுன்னு கவன்மண்ட்ல சொல்லிட்டாங்க. நாளைக்கு முடிஞ்சா பாங்குக்குப் போய் பணத்தைக் கட்டிப்பாரு. அப்பதான் உனக்குத் தெரியும்.”

“சரிண்ணே.”

“அப்பறம், இன்னொரு சமாசாரம், இன்கம் டாக்ஸ்னா என்னன்னு தெரியுமா?”

“இல்லண்ணே, தெரியாது”

“கவலைப்படாதே, அடுத்த மாசத்துக்குள்ளே உன்னை இன்கம் டாக்ஸ்காரங்க கூப்பிட்டா போய்ட்டுவா. ஸ்வீட் காரம் காபி கொடுப்பாங்க. அத்தோட உனக்குத் தெரியலன்னு சொன்னேல்ல. அந்த இன்கம்டாக்ஸ் பத்தியும் சொல்லிக் கொடுப்பாங்க.”

“ரொம்ப நன்றிண்ணே.”

***********

தமிழ்நாடு எந்த விதத்திலும் சளைத்ததல்ல. நாமெல்லாம் வீரப் பரம்பரைதானே. சேர சோழ பாண்டிய வம்சம் நாம். இன்றைய நாளேடுகளில் சென்னைப் பொறியியல் கல்லூரியில் அனைத்து பேராசிரியர்கள், ஊழியர்களுக்கும் அந்தக் கல்லூரியின் நிர்வாகம் தாராளமாக 500, 1000 ரூபாய் நோட்டுகளில் பரிசுமழை வழங்கிவிட்டதாகவும், நாளை, அடுத்த நாள் தரவிருந்த ரூபாய் 8 கோடியையும் வருமான வரித் துறையினர் பிடித்து விட்டதாகவும் ஒரு செய்தி பிரசுரம் ஆகி இருக்கிறது.

 

கரு: பத்திரிகை செய்திகள்

உரு: ந கணபதிசுப்ரமணியன்.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.