கனவில் காதில் விழுந்தது:

கனவில் காதில் விழுந்தது:

***************************************

“நமது பிரதமர் இன்று ஆற்றிய அதிர்ச்சி உரையால் நம்மில் பலருக்கு உறக்கம் இல்லாமல் செய்துவிட்டார். நாம் வைத்திருக்கும் ஐந்நூறு ஆயிரம் ரூபாய்  நோட்டுக்கள் செல்லாத நோட்டுக்கள், வங்கியில் சென்று கணக்கில் போட்டு மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவித்து விட்டார்.

ஒரு கட்சித் தலைவர் என்ற முறையில் நான் உங்களிடம் சொல்லிக் கொள்ள வேண்டிய சில செய்திகளும் அறிவுரைகளும் உள்ளன.

முதலில் நம் அங்கத்தினர் அனைவரும் ஒன்று புரிந்து கொள்ளவேண்டும். இது எதிர்க் கட்சிகளை ஒடுக்க அவர் எடுத்த சூழ்ச்சி என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இரண்டாவது நம் கட்சிவசம் நம் தனித்தனி அங்கத்தினர் வசம், இருக்கும் அத்தகைய நோட்டுக் கட்டுகள் எல்லாம் அரும்பாடு பட்டு மக்களுக்கிழைத்த தொண்டினால் பெறப் பட்டுள்ளன என்பது அறிவீர்கள்.

எத்தனை முயற்சிகள், எத்தனைத் திட்டங்கள், எத்தனைப் போராட்டங்கள், எத்தனை அறிஞர் பெருமக்களின் ஆலோசனைகள், எத்தனை சமாளிப்புகள், எத்தனை ………, எத்தனை …… என்று ஒரு பட்டியலில் அடக்கி விட முடியாதபடி நம் உபதலைவர்கள், அங்கத்தினர்கள், தொண்டர்கள் என அத்தனை பேருடைய சீரிய உழைப்பும் சிந்தனையும் தோய்ந்துள்ளவைதான் நம்மிடம் இருக்கக் கூடிய நோட்டுக் கட்டுகள்.

தமிழகத்தில் சமீப காலம் முன் நடக்க விருந்த தேர்தல் களத்தில் பாயத் துடித்த போது, நாம் எடுத்த பாதுகாப்பு நடவடிக்கைகள் நமக்கு மிக்க பல பயன்களைப் பெற்றுத் தந்துள்ளன.

நம் அங்கத்தினர் முகத்தினில் நான் காணும் அச்சமும் மிரட்சியும் என்னால் காணச் சகிக்கவில்லை. ஏன் இத்தனை மிரட்சி ? ஏன் இத்தனை துயரம் ? கப்பல் ஒன்றும் கவிழ்ந்து விடவில்லை.

தியாகம் என்ற கொள்கையையே தலைசிறந்த கொள்கையாகப் பின்பற்றிவரும் நம் கட்சியின் பாரம்பரியம் நமக்கு எப்போதும் பெருமை சேர்க்கும்.

கூடுதனில் ஒளித்திருந்த பணந்தனை ஏடுதனில் ஏற்றிவைத்துக் காத்திட உதவிய நம் அன்பர் அறிஞர் பெருமக்களுக்கு நம் கட்சி எப்போதும் கடமைப் பட்டு உள்ளது.

எனவே யாரும் அச்சம் கொள்ளாதீர்கள். தமிழரின் இலக்கணமான அஞ்சாநெஞ்சத்தைக் கைவிடாதீர்கள். உங்களுக்கு ஒன்றும் நேர்ந்துவிடாது.

உங்களைக் காப்பதில் எனக்குள்ள பங்கு நானறிவேன். நீங்களும் நன்கறிவீர்கள்.

நம் கட்சி வரலாற்றில் கடைமட்டத் தொண்டனுக்கும் கட்சி உதவி செய்தே வந்திருக்கிறது.

மாற்றுக் கட்சிகளின் ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட விலையேற்றத்தால் நம் கட்சி அங்கத்தினர் திண்டாடியபோது அவர்தம் நிலைமை எனக்குக் காண இயலவில்லை.

என் இதயம் கசியவிட்ட இரத்தத்தின் அளவு உங்களுக்குத் தெரியாதது அல்ல.

அத்துயர் துடைக்க என்றே, பணம் சேர்ப்பதில் நிபுணரான சிலரைத் தலைமை தேர்ந்தெடுத்து கட்சியில் உயர்பதவி அளித்து கட்சியின் மேல்மட்ட நிலையில் பொருளாதார வளர்ச்சி ஏற்படச் செய்தோம்.

அது இன்று நமக்கு, அதாவது நம் கட்சிக்குக் கை கொடுக்கிறது.

எனவே அஞ்சவேண்டாம். மாற்றுக் கட்சி நடத்தும் மத்திய ஆட்சியைக் கண்டு மருளவேண்டாம். உறக்கம் தவிர்க்க வேண்டாம்.

ஒருக்காலும் மசிந்து விடாதீர் இந்தச் சலசலப்புக்கெல்லாம்.

ஒரு நாளுக்கு நாலாயிரமாம். யாருக்கு வேண்டும் இந்த அற்பக் காசு? மிச்சத்தை வங்கிக் கணக்கில் போட்டு மாற்றலாமாம் !

இந்த மாயவலையைக் கண்டு மயங்கி அதில் விழுந்து விடாதீர்கள். உங்கள் பணத்தை அவர்களிடம் ஒருபோதும் ஒப்புக் கொடுத்துவிடாதீர்கள்.

நியாயமான பணம் நாம் ஒரு நாளும் இழக்கத் தேவையில்லை என்று நிதியமைச்சர் நம்மை ஆறுதல் படுத்திகிறார். இப்படி எல்லாம் சொல்லி நம்மை ஏமாற்ற இடம் தராதீர்கள். மயங்கி விடாதீர்கள் ஒரு நாளும்.

மாற்றாக அவர்களின் சதி உரையை நம்பி அவர்கள் சொல்வதைச் செய்ய எத்தனித்தால் அடுத்தடுத்து மிக்க பல சங்கடங்கள் உங்களுக்குக் காத்திருக்கும் என உணருங்கள். உங்களுக்கு சங்கடம் நேர்ந்தால் அது எனக்கும் சங்கடந்தான் என்பதை உணருங்கள்.

எனவே நெஞ்சை நிமிர்த்தி நில்லுங்கள். நான் சொல்வதை மட்டும் செய்யுங்கள். உங்கள் இழப்புக்களை நீங்கள் ஒருநாளும் இலட்சியப் படுத்த வேண்டாம். அவற்றை முக்கியமாகக் கருத வேண்டாம். நமக்குப் பெருமை ஒன்றே முக்கியம், இழப்புக்கள் நம்மை ஒன்றும் செய்யாது என்று உணர்த்துங்கள்.

எப்போதும் நான் உங்களுக்காகவே இருக்கிறேன் என்பதை உணர்ந்து வழக்கம்போல் இந்தத் தலைமையை சிந்திக்காமல் நம்புங்கள்.

நான் இருக்கிறேன் உங்களுக்கு எப்போதும்.
++++++++++ கனவு கலைந்தது. நான் எந்தக் கட்சியிலும் இல்லை. என்னை அந்த இறைவன் காப்பாற்றினார். நல்லவேளை என்னிடம் எந்தக் கணக்கில் வராத பணமுமில்லை.++++++++++++++++++++++++++++

——————————————————————————

கனவிலும் கற்பனை வரலாம். இந்தக் கற்பனைக்கு யாரும் உருவம் தரவேண்டாம்.

—————————————————————————–

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.