சிவஞான போதம்   —  ந. இரா. சென்னியப்பனார்  உரை – பகுதி பதினொன்று

பத்தாம் நூற்பா உரை

நூற்பா :

 “அவனே தானே ஆகிய அந்நெறி
      ஏகனாகி இறைபணி நிற்க,
      மலம் மாயை தன்னொடு வல்வினை இன்றே”   (சிவஞான போதம்-10)

உரை :

பாசங்களை விட்டு நீங்கிப் பதியின் திருவடியை அடைய முயல்வதே உயிரின் நோக்கம் ஆகும்.

முன்பு ஏழாம் பகுதியில் சாதிக்கும் அதிகாரி உயிர் என்று கூறப் பெற்றது. எட்டாம் பகுதியில் உயிராகிய அதிகாரி செய்ய வேண்டியது உலகப்பற்று நீக்குவதாகிய சாதனம் என்பதும், பெற வேண்டியது பதிஞான அறிவு என்பதும், இறைவனே குருவாக வந்து உணர்த்துவான் என்பதும் கூறப்பெற்றன.

ஒன்பதாம் பகுதியில் பாசத்தை விட்டு இறைவன் திருவடியை அடைய வேண்டும் என்று சாதிக்கும் முறை கூறப்பெற்றது.

சாதனத்தால் சாதிக்கும்போது கிடைப்பது பயன் எனப்பெறும். முற்கூறிய முறையில் சாதிக்கும்போது பாசத்தை விட்டு இறைவன் திருவடியை அடைதல் என்ற பயன் உண்டாகும்.

பாசநீக்கம், சிவப்பேறு என்று பயன் இருவகைப்படும். பாசத்தைப் பசுக்கள் விட்டுப் பதியை அடைதல் முத்தி என்று சிவஞான சித்தியார் குறிப்பிடுகின்றது.

உயிர், பதி ஞானத்தால் இறைவனை அறிந்தது. அவ்வாறு அறியப் பெற்ற இறைவன், பொருள் தன்மையால் உயிர்க்கு வேறாக இருப்பான். அவ்வாறு வேறாக இருந்தாலும் வேறு காணப்படாமல் நானே கண்டேன் என்று கூறும் முறையில் இறைவன் உயிராகவே கட்டு (பெத்த) நிலையில் இருப்பான்.

அதுபோலவே வீட்டு (முத்தி) நிலையில் உயிர் என்று வேறு காணப்படாமல் இறைவனாகவே ஒற்றுமைப்பட்டு இருப்பான். இந்நிலை உயிர்க்குத் தான் பணி நீத்தலும், இறைபணியிலே சலியாது நிற்றலும் ஆகும்.

அவ்வாறு உயிர், இறைவனுடன் ஒற்றுமைப்பட்டு நிற்கும்போது ஆணவம், மாயை, கன்மம் ஆகிய மும்மலங்களும் இல்லாமல் நீங்கும். இதனைச் சிவபோதம் ஏகனாகி இறைபணி நிற்றல் என்று கூறும்.

ஏகனாகி ஒற்றுமைப் படுதலைச் சிவஞான முனிவர் விரித்துக்கூறி விளக்கம் செய்துள்ளார்.

 1. குடம் உடைந்தால் குடத்துக்குள் இருந்த வெளியும், ஆகாய வெளியும் ஒன்றாதல் போல் ஒற்றுமைப்படுவதா?
 1. மரக்கட்டையைக் கள்வன் என்பது போல் திரிபுக் காட்சியில் ஒற்றுமைப் படுவதா?
 1. மண்ணே குடம் ஆயிற்று என்பது போல் ஒன்று திரிந்து மற்றொன்றாய் ஒற்றுமைப்படுவதா?
 1. வெண்தாமரை என்பதில் வெள்ளை நிறமும், தாமரையும் போல் குணகுணித் தன்மையால் ஒற்றுமைப்படுவதா?
 1. தீயும், இரும்பும் போல் ஒன்றினொன்று கலத்தலால் ஒற்றுமைப் படுவதா?
 1. பாலும் நீரும் போல் பிரிக்கப்படாது ஒன்று சேர்ந்ததைப் போல் ஒற்றுமைப் படுவதா?
 1. கருடனும், மாந்திரிகனும் போல் பாவனை மாத்திரையால் ஒற்றுமைப் படுவதா?
 1. காய்ச்சிய இரும்பின் நீர்போல் ஒன்றின் ஒன்றின் சேர்ந்து சுவறி (வற்றி) ஒற்றுமைப்படுவதா?
 1. பேயும் பேய்பிடிக்கப்பட்டவனும் போல் ஆவேசத்தால் ஒற்றுமைப்படுவதா?
 1. விறகில் தீயைப் போல் விளங்காமையால் ஒற்றுமைப்படுவதா?
 1. சூரியன் ஒளியில் விளக்கொளி போல் சத்தி கெட்டு நிற்றலால் ஒற்றுமைப்படுவதா?
 1. தலைவனும், தலைவியும் போல் இன்ப நுகர்ச்சியால் ஒற்றுமைப்படுவதா?
 1. நட்புடைய நண்பர் இருவர்போல் நட்பின் மிகுதியால் ஒற்றுமைப்படுவதா?
 1. ஊர்களில் உள்ள பசுவும் காட்டுப்பசுவும் போல் ஒப்புமை மாத்திரத்தால் ஒற்றுமைப்படுவதா?

என்று அவ்வச் சமயத்தார் கூறும் ஐயப்பாடுகள் எல்லாம் பொருந்தா.

சிவபெருமான் உயிர்க்கு வேறாக இருந்தாலும் பெத்த காலத்தில் அவ்வுயிராகவே ஒற்றுமைப்பட்டு இருப்பான். அதுபோல முத்திக்காலத்தில் உயிர், சிவமே ஆகி ஒற்றுமைப்பட்டு, ஏகனாகி இறைபணி நிற்றல் வேண்டும்.

ஞானக்கண்ணால் காணப்பெற்ற இறைவன் பெத்த நிலையில் உயிரோடு உடனாகி நின்று அறிந்தாலும் உயிரின் வேறாகக் காணப்படாமல் உயிர், தானே அறிந்தேன் என்று எண்ணும் முறையில் ஒற்றுமைப்பட்டு, உயிர் முன்னாக இறைவன் பின்னாக நிற்பான்.

அதுபோலவே முத்தி நிலையில் இறைவனோடு உடனாகி நின்று உயிர் அறிந்தாலும் வேறாகக் காணப்படாமல் ஒற்றுமைப்பட்டு இறைவன் முன்னாக, உயிர் பின்னாக நிற்கும்.

அவ்வாறு ஒற்றுமைப்பட்டு ஏகனாகி நின்றால்தான் உயிரை யான் எனவும் இறைவனை எனது எனவும் பகுத்துக்காணும் மயக்க அறிவிற்குக் காரணமாகிய ஆணவமலம் நீங்கி, இறைவன் திருவடிப் பேறாகிய சிவானந்தத்தை அடைய முடியும்.

இறைவனை மறந்து எல்லாவற்றையும் நானே செய்கிறேன் என்று நினைப்பவரிடத்தில் நான் என்னும் தற்போதம் (அகந்தை) இருக்கும்.

அவரைப் போலன்றி எந்தப் பணியிலும் நானும் இறைவனும் சேர்ந்தே உள்ளோம் என்று நினைப்பவரிடத்திலும் நான் என்னும் தற்போதம் இருக்கும்.

எனவே நானும் அவனும் என்று அறிபவரிடத்திலும் சிவன் புலப்படாமல் அந்த உயிராகவே இருப்பான்.

நான் என்ற ஒரு முதல் இல்லை. எல்லாம் அவனே என்று எண்ணுகின்றவர்களிடத்தில் தற்போதம் இல்லாமல், அவர்களின் வேறாக இல்லாமல், தன் திருவருள் பரப்பினுள் அடக்கித் தானாகவே இருப்பான் இறைவன். “என் செயலன்றி யாவும் நின் செயலென்று எண்ணுவேன்” என்பார் தாயுமானவர்.

இறைவனுடைய அறிவே அல்லாமல் உயிராகிய தனக்குத் தனியறிவு இல்லையென்றும் இறைவனுடைய செயலே அல்லாமல் தனக்குத் தனியாகச் செயல் இல்லை என்றும் உணர்ந்து இறைவனுடைய ஞானப்பரப்பினுள் அடங்கிப் பேரின்பத்தைப் பெற்றேன் என்று கருத வேண்டும்.

திருவடி நில்லாமல் விட்டு நீங்கினால் உலக வாதனை வந்து தாக்கும். அது தாக்கவே வேண்டுதல் வேண்டாமை தோன்றும். அவை தோன்றவே பிறவிக்குக் காரணமாகிய பெத்தநிலை மீண்டும் தோன்றும். இந்நிலை வாராதிருக்க, இறை பணியில் சலியாது நிற்றல் வேண்டும். “பார ஈசன் பணியலாது ஒன்று இலார்” என்பது பெரியபுராணம்.

செவி, வாய், கண் முதலிய கருவிகள் அறிவு விளங்குவதற்குத் துணைசெய்கின்ற கருவிகளேயாகும். அவை மாயையின் காரியங்கள். நாம் அல்ல. அவற்றின் செயல்பாடுகளும் இறைவன் விருப்பத்தின் படியல்லாமல் நம் விருப்பத்தின் படியல்ல.

வினை வருவதற்கு வழியாக உள்ள நுகர்ச்சிப் பொருள்களும் மாயையின் காரியங்களே. நாம் ஆவன அல்ல, நம் விருப்பப்படி செயல்படுவனவும் அல்ல. வினை ஈட்டியும் நுகர்ந்தும் வருகின்ற நாமும் இறைவன் வழியே நிற்றற்குரியராவோம். நமக்கெனத் தனி உரிமை இல்லை.

இவ்வாறு உள்ளபடி உணர்ந்து இறைவன் அருள்வழி அடங்கி நிற்பவர்க்கு, எந்த உடலில் நின்று எந்த வினையைச் செய்தாலும் அவ்வினை ஆகாமியமாக ஆகாது. பிரார்த்த வினையும் உரிய நுகர்ச்சியாயிருக்கும், உயிரைத் தாக்காது, ஊட்டும் இறைவன் முன்னிலை உடல் ஊழாக வந்து நீங்கும்.

“தன்னை யடைந்தார் வினை தீர்ப்பதன்றோ தலையாயவர் தங்கடன்” என்று திருநாவுக்கரசர் பாடியுள்ளார். அடைக்கலம் என்று சார்ந்தாரை அவர்க்குரிய இடையூறுகளை நீக்கிக் காத்தல் உயர்ந்தோர் கடமையாகும்.

இறைவன் பிறரை விட்டு விட்டுத் தன்னைச் சார்ந்தவரைப் பாதுகாப்பார் என்றால் நடுநிலை நீங்கியர் என்று ஆகுமே? என்ற தடைவரும். தன்னைச் சார்ந்து இறைபணி நிற்பாரைத் தானே ஆக ஆக்கித் துன்பம் வராமல் காப்பார். இறைபணி நிற்காதவரை ஆகாமிய வினையை ஒழுங்கு செய்து அவர்களையே நுகருமாறு செய்வார். இறைபணி நிற்போர், இறைபணி நிற்காதவர் ஆகிய இருவருக்கும் நுகர்ச்சிக்கு வரும் நிகழ் வினைகளை அவ்வவர் செயலுக்குத் தக்கவாறு நுகரச் செய்வார்.

இறைபணியில் நிற்போர்க்கும் பிரார்த்த வினையின் தாக்குதல் உண்டு. அது வாசனை அளவே ஆகும். பெருங்காயம் வைத்திருக்கும் பாத்திரத்திலிருந்து அதை எடுத்துவிட்டால், வாசனை பாத்திரத்தில் சிறிதளவே இருக்கும். அதுபோலச் சிவஞானியிடத்தில் மலவாசனை இருக்கும். அதனால் அவரிடத்தில் சில சமயம் யான், எனது என்னும் தற்போதம் உண்டாகும். அது காரணமாகப் பிரார்த்த வினையும், அதற்குரிய உடம்பும் கருவிகளும் உலகப் பொருள்களும் ஆகிய மாயா காரியங்கள் மெல்ல வாசனையளவாகத் தாக்கும்.

அவ்வாறு தாக்கும்போது சோர்வால் செய்யப்பெறும் ஆகாமிய வினை முன்புபோல் அடுத்த பிறப்பிற்குக் காரணமாய் வலிமை பெற்று நில்லாமல் விரைவில் கெட்டழியும்.

வண்டியின் சக்கரத்தை வேறு வழியில் செல்ல விடாமல் தன்னிடத்திலேயே சுழலச் செய்கின்ற அச்சினைப் போல இறைவன் தன்னைச் சார்ந்தவரைத் தன்னை விட்டு நீங்க விடாமல் தன்னோடு சேர்த்து நிற்பான். அவரும் சிவோகம்பாவனை செய்து சிவமாகவே நின்று சிவத்தை விடாது நிற்பர். அதனால் ஒளி இருளை ஓட்டுவதைப் போல சிவஞானம் ஆகாமிய வினையை ஓட்டிவிடும்.

திருநாவுக்கரசர் திருப்புகலூரில் தங்கி உழவாரப்பணி செய்து கொண்டிருந்தார். அவருடைய பற்றற்ற நிலையை உலகத்திற்குக் காட்ட எண்ணிய இறைவன், பரற் கற்களோடு சேர்த்துப் பொன்னும் நவமணியும் மிளிர்ந்து ஒளிரச் செய்தான்.

திருநாவுக்கரசருக்கு அப்பொன்னும், மணியும் எவ்வித வேறுபாடுகளையும் உண்டாக்கவில்லை. அவையும், கற்களும் ஒன்றாகவே தோன்றின. உழவாரப்படையால் அவற்றைக் குளத்தில் தூக்கி எறிந்தார். சிவஞானியர்க்கு மலவாசனை தாக்காது என்பதற்கு இச்செய்தி சான்றாகும்.

“ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவர்” என்பது பெரியபுராணம்.

இறைவன் திருவடியாகிய ஞானத்தைப் பற்றியவர்கள் ஐம்புல வேட்கையில் சென்றாலும் பந்தம் அடைய மாட்டார்கள். நெருப்பின் நடுவில் நிற்கும்போது, நெருப்பைக் கட்டுப்படுத்தும் மந்திர ஆற்றல் உடையவரைச் சுடுவதில்லை. குதிரையைக் கதியறிந்து செலுத்தும் ஆற்றல் உடையவர் குதிரையின் மேல் அமர்ந்து விரைவாகச் சென்றாலும் குதிரையின் வேகத்தால் பாதிக்கப்பட மாட்டார்கள்.

இவ்விரு தன்மையர்களைப் போல இறைபணி நிற்போர் நுகர்ச்சியின் பயனாகச் சில சமயம் பொறிவழிச் சென்று புலன்களை நுகர்ந்தாலும் முக்தியடையும் சிறப்பிலிருந்து நீங்க மாட்டார்கள். இறைவன் திருவடியாகிய அச்சினை விடாமல் பற்றியிருப்பதால், சில சமயம் புலன்வழிச் சென்றாலும் ஞான நிலையிலிருந்து மாறுவது இல்லை.

ஐம்புலன்கள் தமக்கு வியாப்பியமாய் அடங்கத்தாம் அவற்றை வியாபித்து மேற்பட்டு நிற்கும் முறையை ஆராய்ந்துதாம் அரனடியாகிய அச்சினை இறைபணியின் நின்று உணர வல்லோர் அவ்வைம்புலனிற் சென்றும் அதனானே தம்திறம் நீங்குதல் இலர் என்க என்பது சிவஞானமாபாடியம்.

சத்தைச் சார்ந்து சத்தாகவும், அசத்தைச் சார்ந்து அசத்தாகவும் நிற்றலே உயிரின் இயல்பு என்பது முன்பு (பகுதி 7&இல்) கூறப்பெற்றது. அம்முறை ஞானிக்கும் பொருந்தும்.

ஆதலால் ஞானியர் அசத்தாகிய புலன்களில் சென்றால் அவற்றில் தொடக்குண்டு நில்லாமல், தம் திறனே உடையவராக இருப்பது எவ்வாறு என்ற வினா எழும்.

சத்தோடு கூடியபோது சத்தாகவும், அசத்தோடு கூடியபோது அசத்தாகவும் நிற்றல் தன்னுடைய இயல்பு என்பதை உணர்ந்த ஞானி என்பவன், திருவருளே கண்ணாகச் சிவத்தைக் கண்டவன் ஆதலால் அந்நிலையில் எதனை நோக்கினும் அவ்வருட் கண்ணாலே நோக்குவான். அசத்தாகிய உலகம் சத்தாகிய இறைவன் முன்னர் வேறாக விளங்கி நிற்காது.

கொழுந்து விட்டு நன்றாக எரிகின்ற நெருப்பின் முன்னால் இருள் வேறாக நிற்காது. அதுபோல அசத்தாகிய உலகம் வேறாகத் தோன்றாது.

ஞானியிடத்தில் சத்தாகிய இறைவன் பிரகாசித்த பின்னர், அவன் முன்னும் அசத்தாகிய உலகம் எரிமுன் இருள்போல முனைந்து நின்று தோன்றாது. ஆகையால், வாசனை மாத்திரத்தால் ஐம்புலன்களில் செல்கின்ற அவன், முன்பு போல அவற்றில் பற்றுக்கொண்டு நிற்கமாட்டான்.

அருள் வழியாகச் சத்தாகிய இறைவனை அடைந்தோர் அனைவரும் அசத்திடத்துச் செல்லார். சில சமயம் சென்றாலும் அதனிடத்தில் நில்லார். சத்தினிடத்திலேயே நிலை பெற்று நிற்பார்.

     “அவனே தானே ஆகிய அந்நெறி
      ஏகனாகி இறைபணி நிற்க,
      மலம் மாயை தன்னொடு வல்வினை இன்றே”   (சிவஞான போதம்-10)

 1. ஏகன் ஆதல் – நான் என்ற தற்போதம் இழந்து இறைவனோடு ஒன்றுபடுதல். அதனால் ஆணவ மலம் நீங்கும்.
 1. இறைபணி நிற்றல் – எந்தச் செயலைச் செய்தாலும் இறைவன் திருவருளால் நடைபெறுகின்றது என்ற உறுதியான மனநிலை. அதனால் மாயையும் வினையும் நீங்கும்.
 • To be continued.

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.