சிவஞான போதம்   —  ந. இரா. சென்னியப்பனார்  உரை – பகுதி பதின்மூன்று

பன்னிரண்டாம் நூற்பா உரை

நூற்பா :

  “செம்மலர் நோன்தாள் சேரல் ஒட்டா
      அம்மலம் கழீஇ அன்பரொடு மரீஇ
      மால்அற நேயம் மலிந்தவர் வேடமும் 
      ஆலயம் தானும் அரன் எனத் தொழுமே”   (சிவஞான போதம்-12)

உரை :

இறைவன் திருவடிப் பேரின்பத்தை உடலுடன் கூடியிருக்கும்போதே பெற்றிருப்பவரைச் சீவன் முத்தர் அல்லது அணைந்தோர் என்று கூறுவது சைவ சித்தாந்த மரபு. சீவன் முத்தர் இறைவனை இடைவிடாமல் சிந்தித்துக் கொண்டே இருப்பர். அவ்வாறு இருப்பினும் அவருடைய அறிவும், இச்சையும், தொழிலும் சில சமயங்களில் வெளியே செல்லும். புறத்தே செல்லும்போது இறைவனுடைய செந்தாமரை மலர் போன்ற திருவடிகளைச் சிந்திக்க வேண்டும்.

சீவன் முத்தர் திருவடியை அடைய முடியாமல் மும்மலங்கள் திருவடி ஞானத்தை மறக்கச் செய்யும். மும்மலங்களாகிய அழுக்கினை ஞான நீரால் கழுவுதல் வேண்டும். அன்பு செய்யும் அடியாருடன் கூட வேண்டும். மலங்களாலான மயக்கம் நீங்கியதால், அடியார் திருவேடங்களையும் சிவன் திருக்கோயிலையும் இறைவன் என்றே கண்டு வழிபட வேண்டும்.

மலமாகிய அழுக்கினை ஞான நீரால் கழுவுவதனால் சீவன் முத்தரின் அறிவு தொழில்படும். அடியாருடன் கூடுவதனால் சீவன் முத்தரின் இச்சை நிறைவுறும். அடியார் திருவேடங்களையும், சிவன் திருக்கோயிலையும் இறைவன் என்றே வழிபடுவதால் சீவன் முத்தரின் தொழில் செயல்படும்.

ஆணவம், மாயை, கன்மம் ஆகிய மும்மலங்களும் சீவன் முத்தரிடத்தில் ஏதேனும் ஒரு வழியில் நுழைந்து மெய்யுணர்வைக் கீழ்ப்படுத்தும். பிறவிக்கு வித்தாகிய தீய எண்ணங்களை உயர்த்தும் நிலையில் கருத்தைச் செலுத்தும். ஆதலால் சீவன் முத்தர்க்கு அம்மூன்று மலங்களும் ஆகா. அவற்றைக் களைய வேண்டும்.

புண்ணிய பாவப் பலன்களாயும், அவற்றிற்குக் காரணமாயும் உள்ள விருப்பு, வெறுப்புக்களின் நிலையே வினை (கன்மம்) எனப்படும். நிலம் முதல் அசுத்த மாயா தத்துவம் முடிய உள்ள தத்துவக் கூட்டம் தனு, கரண, புவன போகங்களாகிய மாயா மலமாகும். அஞ்ஞானத்தைக் காட்டுவது ஆணவமாகும். இம்மூன்றும் மெய்ஞ்ஞானிக்கு ஆகா விடு என்பது சிவஞானபோத வெண்பா.

பக்தியினால் இறைவனை எந்நிலையிலும் மறவாதவர் சிவஞானியர் ஆவர். சிவனருள் பெற்ற சீவன் முத்தர்களே சிறந்த சிவஞானியர் ஆவர். மலங்கள் திருவருள் ஞானத்தை மறைக்கச் செய்து தீய வழிக்குக் கொண்டு சென்று பிறவிக் குழியில் விழுமாறு செய்யும். மலங்கள் வாய்ப்புக் கிடைக்கும் போதே தீமையைச் செய்யும். அடியர் அல்லாதார் எப்பொழுதும் தீமையைச் செய்வார். சிவபத்தரிடத்தில் அன்பு செய்து அவர் வழியில் நிற்போர், உலக மயக்கம் நீங்கிச் சிவ அனுபவத்தில் மேம்பட்டு நிற்பர்.

சிவ அனுபவத்தில் திளைத்து நிற்பதால், பூத உடல் உள்ளவரை நீங்காது நின்ற நுகர்வினை (பிராரர்த்த கன்மம்) அதிகம் துன்புறுத்தாது. சிவபத்தரோடு சேர்ந்தால் அல்லாமல் பாச நீக்கமும் சிவப்பேறும் உண்டாகா. மாணிக்கவாசகரும், அடியார் நடுவுள் இருக்கும் அருளைப் புரியாய் என்று பாடியுள்ளார்.

சிவஞானிகளையும், சிவலிங்கத்தையும் சிவன் என்றே கருதி வழிபடவேண்டும். அடியார் திருவேடத்தையும் சிவன் என்றே கருதி வழிபட வேண்டும். சிவாலயத்தையும் சிவன் என்றே வழிபட வேண்டும். சிவபத்தரையும், சிவாலயத்தில் உள்ள திருவுருவத்தையும் வழிபடுதல் முறை. அவ்வாறில்லாமல் அடியார் திருவேடத்தையும், சிவாலயத்தையும் சிவன் என்றே கருதி வழிபட வேண்டும் என்று கூறுவது ஏன்?

காமக்கிழத்தியராகிய விலைமகளிரின் ஆடை, அணிகலன்கள், சந்தனம் முதலானவற்றைக் காணப்பட்டவுடன் காமுகரை வசப்படுத்தி இன்பத்தை விளைவிக்கும். அதுபோலச் சிவபத்தர் அணிந்திருக்கும் திருவேடமும் இறைவன் எழுந்தருளியிருக்கும் ஆலயமும் கண்டவுடனே மெய்யுணர்வுடையவரை வசப்படுத்தி அவருக்கு இன்பம் விளைவிக்கும். ஆதலால் திருவேடத்தையும் சிவாலயத்தையும் சிவன் என்றே கருதி வழிபட வேண்டும்.

பெரியபுராணத்தில் திருநாவுக்கரசரின் வேடத்தைக் கண்டு திருஞானசம்பந்தர் மகிழ்ச்சி அடைந்த நிகழ்ச்சியைச் சேக்கிழார் பெருமான், கண்ட கவுணியக் கன்றும் கருத்தில் பரவு மெய்க் காதல், தொண்டர் திருவேடம் நேரே தோன்றியது என்று தொழுதே என்று பாடியுள்ளார்.

பரம்பொருளாகிய இறைவன் உலகத்தவர் தம்மை அறிந்து கொள்ள வேண்டிக் கருணை கொண்டதால் தம்முடைய திருவேடமாகிய திருநீறு, கண்டிகை முதலிய அடையாளங்களைத் தம்முடைய அடியார்களுக்கு அளித்துள்ளார். அத்தகைய அடியார்கள் இடமாக நின்று இறைவன் உலகத்தவருக்கு விளங்கிக் காட்டுவான். தம்மை உள்ளவாறு உணரும் தொண்டர்களாகிய அடியார்கள் இடத்தில் தயிரின் கண் நெய் போல விளங்கித் தோன்றுவான்.

ஆதலால் திருவேடம் உடையவர் சிவமாகவே கருதப்பெறுவர். திருவேடம், பாவனை, செயல், தன்மை ஆகிய நான்காலும் திருவேடம் உடைய மெய்யன்பர்கள் சிவமாகவே தோன்றுவர். அவர்களே சிவன் என்று வழிபடுதற்கு உரியவர். பந்தபாசம் உடைய ஏனையோரிடத்தில் சிவபெருமான் பாலில் நெய்போல் விளங்காது நிற்பான், அவருடைய சேர்க்கை கூடாது என்பதாம்.

வேடத்தானும், பாவனையானும், செயலானும், தன்மையானும் திருவேடம் உடைய மெய்யன்பர் சிவமேயாதல் தெளியக் கிடத்தலின் அதுபற்றி அவரை அரன் எனவே தேறி வழிபடுக, ஏனைய பாசப்பற்று உடையாரது பற்று விட்டு ஒழிதற் பொருட்டு என்று சிவஞானமுனிவர் சிவஞான சித்தியாரில் எழுதிய உரை இச்செய்தியை நிலைநாட்டுகிறது.

சிவனடியார் திருவேடம் சிவபெருமானைச் சுட்டுவதால், சிவபெருமானால் தரப் பெற்றதாகவே எண்ணி வழிபட வேண்டும். திருவேடத்தில் சிவபெருமான் விளங்கித் தோன்றுவான் என்பது பொருந்தும். அத்திருவேடத்தைக் கொண்டுள்ள சிவனடியார், சிவபெருமானை உள்ளவாறு உணரும் தகுதி உடையவர். ஆதலால் சிவமாகக் கருதி வழிபடலாம்.

ஆனால், திருக்கோயிலில் உள்ள திருவுருவங்கள் தாவர வடிவம் ஆதலால் அவற்றுக்கு அவ்வாறு உணரும் இயல்பு இல்லை. தாவர வடிவுடைய திருவுருவங்களில் மந்திரம், கிரியை, பாவனை முதலியவற்றைப் பிறர் செய்யும் செயலுக்கு ஏற்ப விளங்கித் தோன்றுவானேயல்லாமல், அவையில்லாதவிடத்து விளங்கித் தோன்றமாட்டான். ஆதலால் திருவுருவங்கள் உள்ள திருக்கோயிலைச் சிவபெருமானே என்று வழிபடுவது எவ்வாறு பொருந்தும்? என்று தடையுண்டாகும்.

விறகிடத்தில் தீ நீங்காது எக்காலத்தும் இருக்கும். என்றாலும் தீக்கடை கோலினால் கடைந்தபோது விறகிலிருந்து தீ வேறாக விளங்கித் தோன்றும். கடையாத போது தோன்றுவது இல்லை. விளக்கமும் இல்லை. அவ்வாறு தோன்றாததால் விறகில் தீயில்லை என்று கூற முடியாது. அதுபோல் உயிர்களுக்கு இம்மையின்பம், மறுமையின்பம் ஆகியவற்றைக் கொடுப்பதற்காகக் காணப்பெற்ற தாவர வடிவான திருவுருவங்களில் இறைவன் கலப்பினால் அவ்வடிவமே தானாயும், பொருளின் தன்மையால் அவ்வடிவின் வேறாயும் இருக்கும் இயல்பு உடையவன். இத்தகைய இரண்டு நிலைகளையும் அவ்வடிவில் காண வேண்டும்.

அவ்வாறு காணவியலாதவருக்கு மந்திரம், கிரியை முதலியவற்றைக் கொண்டு செய்யும் நிலையில் விளங்கித் தோன்றுவான். திருவுருவங்களில் இறைவன் திருவருள் இருப்பதை ஞானியர் தாமே உணர்வர். திருவருள் இருப்பதாகக் கருதி வழிபாடு செய்வர். ஞானியர் அல்லாதவர்க்குத் திருவுருவில் இறையருள் இருப்பது தெரியாது. அவர்களுக்காகவே கிரியை, மந்திரம் முதலியவற்றால் எழுந்தருளச் செய்ய வேண்டும். உலகத்தார்க்குப் பயன்படுவதற்காகவே இறைவன் இவ்வாறு அருள் செய்கின்றான்.

சிவனடியார் திருவேடம், சிவலிங்கம் ஆகிய இரண்டையும் மறவாமல் வழிபட வேண்டும்.

உடலில் உள்ள நரம்பு, நாடி முதலியவற்றில் உயிர் அது அதுவாகவே வேற்றுமையில்லாமல் கலந்து நிற்கும். ஆனால், ஆராய்ந்து பார்க்கும் போது உயிர் அந்நரம்பு, நாடி முதலியன ஆகாது. அவற்றின் வேறு என்பது தெரியவரும்.

அதுபோல இறைவன் உலகத்தில் உள்ள எல்லாப் பொருள்களிலும் அது அதுவாகவே வேற்றுமையில்லாமல் கலந்து நின்றாலும் பொருள் தன்மையால் அப்பொருள்களின் வேறாகவே நிற்பான். இறைவன் அவையே ஆக நிற்கின்ற நிலையில், சீவன் முத்தர்க்குச் சிவனடியார் திருவேடமும் திருக்கோயிலும் சிவமாகவே தோன்றுவதால், அவற்றை வழிபாடு செய்வது இயல்பு. சிவன் அவற்றின் வேறாக உள்ளான் என்ற போதும் அவற்றை வழிபாடு செய்ய வேண்டும். அது சீவன் முத்தர்க்குச் சிறப்பாகும்.

இறைவன் உயிர்ப்பொருள், உயிரில்லாத பொருள் ஆகியவற்றோடு கலந்துள்ள நிலையை உணர்ந்தவர்களுக்கு 1. கண் ஒளியும் சூரிய ஒளியும் போல வேறாக (பேதம்) நிற்பவனும் அல்லன். 2. உடலும் உயிரும் போலக் கலப்பினால் ஒன்றாக (அபேதம்) நிற்பவனும் அல்லன். 3. குணம், குணித்தன்மை போல ஒன்றாகவும் வேறாகவும் கூறப்படாமல் (பேதாபேதம்) உள்ள நிலையும் அல்லன்.

இம்மூன்று தன்மைக்கும் பொதுவாக அத்துவிதமாகக் கலந்து நிற்பான். உயிரின் அறிவும் கண் ஒளியும் போல ஒன்றாயும், வேறாயும், உடனாயும் நிற்பான். அத்து விதி அன்பில் தொழு &- அத்துவிதச் சித்தாந்தத்தைப் பெற்றுடையோய்! அன்பு விளையும் இடத்தில் வழிபடுவாயாக- என்பது சிவஞானமாபாடியம்.

பசுவின் உடலில் எப்பகுதியிலும் வெளிப்பட்டுத் தோன்றாத பால் அதனுடைய மடியில் சுரக்கின்றது. அதுபோல இறைவன் உலகத்துப் பொருள்கள் எல்லாவற்றிலும் நிலை கொண்டிருந்தாலும் சிவனடியார் திருவேடத்திலும் திருக்கோயிலில் உள்ள உருவத் திருமேனியிலும் வெளிப்பட்டுத் தோன்றுவான்.

உடல் உள்ளவரை நுகர் வினையாகிய பிராரர்த்த வினையின் வாசனையும் நீங்காது. பிராரர்த்த வினையின் தாக்கலால் விருப்பு, வெறுப்புக்கள் நிகழ்ந்து கொண்டேயிருக்கும். பிராரர்த்த வினை நீங்கினால்தான் சிவம் காட்சிப்படும். அத்துவித ஞானம் தோன்றும். அவ்வினையின் வாசனை நீங்குதற்காக மெய்ஞ்ஞானத்தை உடைய சிவனடியாரை நாடிச்சென்று வழிபட்டு வந்தால், மெய்ஞ்ஞானம் நிலைபெற்று விளங்கித் தோன்றும் ஆதலால் சிவனடியாரை அன்பால் தொழ வேண்டும்.

உயிர் கேவல நிலையில் இருட்டறையில் கிடந்த குருடன் போல அறியாமையில் மூழ்கிக் கிடந்தது. இறைவன் உயிரிடத்தில் கொண்ட கருணையால் உயிர்க்கு நுண்ணுடலையும் அறிவையும் கொடுத்துப் படிமுறையில் உயரச் செய்து தானாகும் வண்ணம் செய்தருளினான். உயிர் கேவல நிலையில் இறைவனை மறந்திருந்தது மன்னிக்கும் குற்றமே. இறைவன் கருணையால் படிமுறையில் உயர்ந்த உயிர் இறைவனை மறத்தல் கூடாது. மறந்தால் அது மன்னிக்கும் குற்றம் அன்று.

இறைவன் உயிரைச் சிவமாகச் செய்தாலும் என்றும் இறைவனுக்கு அடிமையாகிய உயிர் பெத்தம், முத்தி இரண்டிலும் அடிமையே. சுந்தரமூர்த்தி நாயனார் மீளா அடிமை உமக்கே ஆளாய் என்று பாடியுள்ளார்.

இறைவன் ஆணவ மலம் மட்டும் உள்ள விஞ்ஞானகலர்க்கு அவருடைய அறிவில் அறிவுக்கு அறிவாய் நின்று உணர்த்துவான். ஆணவம், கன்மம் ஆகிய இருமலம் உடைய பிரளயாகலர்க்கு நான்கு தோள், நீலகண்டம் முதலிய வடிவம் உடையவனாகத் தோன்றி முன்னிலையில் அருள் செய்வான். மும்மலம் உடைய சகலர்க்கு இவ்வுலகில் ஞானகுருவால் சிவஞான போதமாகிய இந்நூல் போதிக்கப்படும்.

இங்கு ஒண்குருவால் இன்று இந்நூல் மும்மை மலர்க்கு என்று மெய்கண்டார் சிவஞானபோதத்தை நிறைவு செய்துள்ளார்.

     “செம்மலர் நோன்தாள் சேரல் ஒட்டா
      அம்மலம் கழீஇ அன்பரொடு மரீஇ
      மால்அற நேயம் மலிந்தவர் வேடமும் 
      ஆலயம் தானும் அரன் எனத் தொழுமே”   (சிவஞான போதம்-12)

மெய்கண்டார் திருவடி வாழ்க!

(சிவஞான போதம் முற்றும்)

 

  • CONCLUDED

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.