சிவஞான போதம்   —  ந. இரா. சென்னியப்பனார்  உரை – பகுதி பன்னிரண்டு

பதினொன்றாம் நூற்பா உரை

நூற்பா :

   “காணும் கண்ணுக்குக் காட்டும் உளம்போல்
      காண உள்ளத்தைக் கண்டு காட்டலின்
      அயரா அன்பின் அரன்கழல் செலுமே”   (சிவஞான போதம்-11)

உரை :

துன்பமான பாசத்தில் கட்டுண்ட உயிர் அப்பாசத்தினின்று விடுபட்டு நீங்கும் பாசநீக்கம் முன்பு கூறப்பெற்றது. பாசத்தின் நீங்கி இன்பமான இறைவனை அடைதலைக் கூறுவது இப்பகுதி.

இறைவன் எப்பொழுதும் உயிர்க்குயிராய் நின்று உதவி செய்து வருகின்றான். இறைவன் செய்யும் உதவி 1. காட்டும் உதவி 2. காணும் உதவி என இருவகைப்படும்.

உயிர் அறிவித்தாலன்றித் தானாக எதனையும் அறியாது. உயிர் அறியும் பொருட்டு இறைவன் உயிர்க்குயிராய் நின்று அறிவித்தலைச் செய்கிறான். இந்நிலை காட்டும் உதவியாகும். ஐந்தாம் நூற்பாவில் கூறப்பெற்றது.

இறைவன் காட்டும் நிலையில் நில்லாமல், உயிர் ஒன்றை அறியும்போது தானும் உடன் நின்று அப்பொருளை அறிவான். அதுவே காணும் உதவியாகும். காணும் உதவியே இங்கு கூறப்பெறுகிறது.

காட்டக் காணுகின்ற தன்மையுடைய கண்ணுக்குக் காணவேண்டிய பொருளைக் காட்டித் தானும் காணும் தன்மையுடையது உயிர். அதுபோல உணர்த்த உணரும் தன்மையுடைய உயிர்க்கு, இறைவனும் உலகப் பொருள்களை உயிர் உணருமாறு செய்து தானும் உணர்வான். அவ்வாறு ஒன்றுபட்டு உதவி வருகின்ற இறைவனுடைய கருணையை மறவாமல் உறுதியாகக் கொண்டு அன்பு செய்ய வேண்டும். அத்தகைய அன்பினால் இறைவன் திருவடியாகிய சிவப்பேற்றை உயிர் அடையும்.

கண் உயிரின் அறிவுக்கலப்பு இல்லாமல் உருவத்தைக் காணமாட்டாது. உயிரின் அறிவும் கண்ணின் ஒளியும் கலந்து உருவத்தைக் காணும்போது உயிரின் அறிவும், கண்ணின் ஒளியும் தனித்தனியாகக் காண முடியாது. ஒன்றாகவே பிரிப்பின்றி நிற்கும். உயிரின் துணையால் கண் கண்ட உருவத்தைக் கண் கண்டது என்றும், கண்ணை இடமாகக் கொண்டு உயிர் கண்டது என்றும் பிரித்தறிய முடியாது.

கண்ணின் காணுதல் தொழிலும், உயிரின் காட்டுதல் தொழிலும் ஒன்றனையொன்று விடாமல் இரண்டற்று ஒன்றாகவே இருக்கும். அதுபோல் இறைவனையின்றித் தனித்து நில்லாத உயிர் ஒருபொருளை அறியும்போது, இறைவனின் ஞானம் உயிரின் அறிவோடு கலந்து இறைவன் ஞானம் என்றும், உயிரின் அறிவு என்றும் பிரித்தறிய முடியாது உடனாய் நிற்கும்.

இறைவனும் உயிருடன் அவ்வாறு கலந்து உயிர்க்கு அறிவித்த பொருளை அவ்வுயிர் அறிந்தது என்றும், அவ்வுயிரை இடமாகக் கொண்டு இறைவன் அறிந்தது என்றும் பிரித்தறிய வாராமல் உயிரின் அறிவும் இறைவன் ஞானமும் ஒன்றையொன்று விடாமல் இரண்டற்று ஒன்றாகவே நிற்கும். இறைவன் இவ்வாறு உயிர்க்குக் காட்டியும் கண்டும் உதவி செய்து வருகின்றான்.

இறைவனும் உயிரால் உணரப்படும் பொருள்களை உடன் நின்று உணர்வான். கட்டு நிலையில் உயிர் உலகத்தை உணரும். வீட்டு நிலையில் உயிர் சிவத்தை உணரும். இவ்விரு நிலையிலும் உயிர் உணர்வதற்காக இறைவன் தானும் உடன் நின்று உணர்வான்.

இறைவனின் ஞானம் உயிரிடத்தில் கலந்து விளக்கம் செய்தாலன்றி உயிரால் ஒன்றை அறிய முடியாது. ஆதலால் உயிர் இறைவனை இன்றியமையாததாயிற்று. உயிர் அறிவு இறைவன் ஞானத்தால் விளக்கம் பெற்றாலும் இறைவன் தன்னுடன் நின்று பொருளை அறிவித்தாலன்றி உயிர் தானாக எதனையும் அறிய முடியாது. ஆதலால் இறைவன் உதவி இல்லாமல் உயிர்க்கு எது வரினும் நிகழாது என்பது உறுதியாயிற்று.

உயிர் சுவை, ஒளி, ஓசை, ஊறு, நாற்றம் ஆகிய ஐந்து வகையான நுகர்வுகளை உணரும்போது ஒரு காலத்தில் ஒருங்கே உணர மாட்டாது, ஒவ்வொன்றாகவே உயிர் அறிந்து அனுபவிக்கும். அந்நுகர்வுகள் ஒவ்வொன்றிலும் அது அதுவாய் அழுந்தி நின்று உயிர் அனுபவிக்கும்.

அவ்வுயிர் போலச் சார்ந்ததன் வண்ணமாயக் பலவிதப் படுதல் இல்லாமல் என்றும் ஒரே இயல்பாய் இருக்கும் இறைவன் எல்லா நுகர்வுகளையும் ஒன்றாக ஒருங்கே உணர்ந்து நிற்பான். அவ்வவ்வுயிர் உணரும் நுகர்வினைத் தானும் உடனாய் நின்று சிறப்பாக உணர்வான்.

இறைவனைச் சார்ந்து அவனைப் போலவே ஒருதன்மைத்தாய் நிற்கும் உயிர்,

அவ்விறைவனுடன் ஒன்றாகி நின்று அவனுடைய திருவடிகளை உணர்வதால் இறைவன் அவ்வுயிர்க்குப் பேரின்பமாய்த் தோன்றுவான். அப்பேரின்பம் எல்லையில்லாமல் புதிது புதிதாய் விளைந்து கொண்டேயிருக்கும்.

அத்தகைய உயிரினிடத்தில் இறைவன் ஒன்றாகி அவ்வுயிர் அறிவினின்றும் ஒருபோதும் நீங்காது நிற்பான். அந்நிலையில் கருதுவார் கருதியவற்றை அவருடைய அறிவோடு பொருத்தி நின்று அறிய மாட்டானோ? உறுதியாக அறிவான்.

இறைவனை மறவாமல் அன்பு செய்ய வேண்டும். அவ்வாறு அன்பு செய்தால் இறைவன் திருவடியின்பத்தை நுகர்ந்து அவனுடன் ஒற்றுமைப் பட்டிருக்கலாம். ‘அன்பு, பக்தி, காதல் என்பன இச்சை மீதூர்தல் பொருள்’ என்பது சிவஞானமாபாடியம். ஒரு பொருளை அறிந்த அளவிலேயே அதனிடத்தில் இச்சை நிகழ்வதைப் போல, இச்சை நிகழ்ந்த அளவிலேயே அப்பொருளைப் பெற வேண்டும் என்று உடனே முயற்சி செய்வது உலகத்தில் இல்லை. உயிர்க்கு இச்சையாகிய பத்தி வந்ததும் திருவடியைச் சென்று சேரும் என்பது எவ்வாறு என்ற வினா எழும்.

இறைவன், உயிரில் கலந்து நின்று உயிர்க்குச் சிவானந்தத்தை உண்டாக்குவான். சிவானந்தத்தை உயிர் அறிந்தது என்றும், உயிருடன் கலந்து நின்று இறைவன் அறிந்தான் என்றும் பிரித்தறிய வாராமல் இருவகை அறிவும் ஒன்றனை ஒன்று விடாமல் ஒருங்கு நின்று நிகழுமாறு உதவியை இறைவன் செய்வான். அந்த உதவியை உயிர் மறவாமல் இருக்கத் திருவருள் கூட்டும். அத்திருவருளுடன் நிற்றலால் இச்சை நிகழ்ந்ததும் திருவடியை உயிர் சென்று சேரும்.

சூரியன் அனைவருக்கும் ஒரே தன்மையாக இருப்பான். அப்படியிருந்தாலும் ஒளி மழுங்கிய கண்ணுக்கு இருட்டேயாகும். ஒளி விளங்கிய கண்ணுக்கு நன்றாகத் தோன்றுவான். அதுபோல இறைவன் பெத்தர் (பாசக்கட்டு உடையவர்), முத்தர் (பாசக்கட்டு நீங்கியவர்) இருவரிடத்தும் ஒரே தன்மையாக இருப்பான்.

பெத்தர் முப்பாச ஞானம் இருத்தலால் விளங்கித் தோன்றான். முத்தர்க்குப் பாசம் நீங்கியதால் விளங்கித் தோன்றுவான். முத்தர், சீவன் முத்தர், அணைந்தோர் என்பன ஒரே பொருளன.

உலகத்தவரைப் போலச் சீவன் முத்தரும் உடம்புடன் இருத்தலால் பாசம் உடையவர் ஆவார் அல்லவா? அவர்க்கு எப்படி விளங்கித் தோன்ற முடியும்? என்று தடை எழும். சூரியன் உதித்து வரும்போது தடாகத்தில் தாமரைகள் பலவிருந்தாலும் பக்குவம் உடைய தாமரைகளே சூரியனால் மலரும். மற்ற தாமரைகள் மலரா. பாசக்கட்டு உடைய பெத்தர்களாகிய சீவன் முத்தர் உடம்போடு இருந்தாலும் பத்தியினால் இறைவனை மறவாமல் வழிபடக்கூடியவராதலால் இறைவன் திருவருட் பார்வையால் பாசம் நீங்குகிறது, இறையருள் கிட்டுகிறது.

இறைவன் தன்னைப்போல உயிரை ஆக்கிக் கொள்ள வேண்டும் என்ற கருணையுடையவன்.

“தம்மைப் போலத் தம் அடியார்க்கு இன்பு அளிப்பவர்” என்பர் திருஞானசம்பந்தர்.

அனாதி காலந்தொட்டு மலத்தோடு கூடிய உயிருடன் தானும் அனாதி காலந்தோட்டே உடனிருந்து உதவி செய்து வருபவன் இறைவன். நிலைபெற்றிருக்கும் இருளை வளர் பிறைச்சந்திரன் நாள்தோறும் சிறிது சிறிதாக முறையாக நீக்கி நிறை (பௌர்ணமி) நிலா அன்று முழுவதும் ஓட்டி விடுகின்றான். இறைவனும் உயிரினிடத்து உண்டாகும் பக்குவத்திற்கேற்பப் பருவந்தோறும் சிறிது சிறிதாக மல ஆற்றலைக் குறைத்து முதிர்ந்த பக்குவத்தில் முழுவதுமாக நீக்கி விடுவான்.

காந்தக்கல் தன் முன்னிலையில் இரும்பைத் தன்னிடத்து இழுத்துக் கொண்டு தன் வசமாகச் செய்யும். எனினும் காந்தக்கல்லுக்குச் சலிப்பு உண்டாவதில்லை. அதுபோல இறைவனும் திருவருட் சத்தியை உயிரிடத்துப் பதிக்கச் செய்வான். அவ்வாறு செய்தாலும் இறைவனுக்குச் சலிப்பு ஏற்படுவதில்லை. உயிரைத் தன்பால் இழுத்துத் தன்வசம் ஆக்குவான்.

இறைவன் திருவடியை உயிர் அடைந்து ஒன்றாகுங் காலத்து உயிர் கெட்டு ஒன்றாகுமா? கெடாது ஒன்றாகுமா? என்ற வினா எழும். உயிர் கெட்டு ஒன்றாகும் என்றால், உயிர் கெட்டு ஒன்றாகும்போது கூடும் பொருள் இல்லை. ஆதலால் உயிர் கெட்டு ஒன்றாகும் என்பது பொருந்தாது.

உயிர் கெடாது ஒன்றாகும் என்றால், கெடாதவிடத்து உயிரும் இறைவனும் வேறு வேறு பொருளாய் இருப்பதனால் ஒன்றாவதில்லை. உப்பு தன்னிடத்துள்ள கடினத் தன்மை கெட்டு நீரைச் சேர்ந்து ஒன்றாய்ப் போவதைப்போல உயிர் சிவானந்தத்தைத் தலைப்பட்டுச் சிவபெருமானுக்கு அடிமையாக உயிரும் சிவமும் பிரியாமல் இயைந்து நிற்பர்.

காலை நேரத்தில் சூரியன் மேகக் கூட்டத்தினுள் புகுந்து மறைந்து நிற்கும். அதனுடைய ஒளி சிறிதும் வெளிப்படாமல் இருக்கும். அதுபோல உயிர் அனாதியில் ஆணவ மலத்துள் மறைந்து தன் இயல்பு சிறிதும் வெளிப்படாமல் கிடக்கும். அந்நிலையில் உயிர் அறிவு ஒரு சிறிதும் விளங்கவில்லை. இந்நிலை கேவல அவத்தை என வழங்கப்பெறும்.

முன் உள்ள மேகக்கூட்டம் சிறிதே நீங்கினால் சூரிய ஒளி சிறிது விளங்கித் தோன்றும். அதுபோல உயிர்க்கு மாயா கருவிகள் கூடியபோது ஆணவ மலம் சிறிது நீங்கும். உயிர் உலக இன்பத் துன்பங்களை நுகரும். இந்நிலை சகலாவத்தை என வழங்கப்பெறும்.

பெருங்காற்றால் அம்மேகக் கூட்டம் முழுவதும் கலைந்து போனபோது அச்சூரியன் ஒளி எங்கும் விளக்கமாகத் தெரியும். அதுபோல இறைவன் திருவருளால் ஆணவ மலத்தின் ஆற்றல் முழுதும் நீங்கி உயிர் அறிவு விளங்கித் தோன்றுகின்றது. உயிர், இறைவன் திருவடியை அடைந்து பேரின்பத்தில் திளைக்கும். இந்நிலை சுத்தாவத்தை என வழங்கப்பெறும்.

சூரியன் மேகத்துடன் கூடிய பொழுதும், மேகம் சிறிது நீங்கிய பொழுதும், மேகம் முழுதும் நீங்கிய பொழுதும் தன் இயல்பு கெடுவதில்லை. மேக நீக்கத்திற்கேற்ப ஒளி வெளிப்படும். உயிரும் கேவலம், சகலம், சுத்த ஆகிய மூன்று அவத்தைப்பட்ட போதும் சார்ந்ததன் வண்ணத்தில் வேறுபடுவதில்லை. உயிர்க்கு ஏற்படுநிலை வேறுபாடு அவத்தை எனப்படும். 1. காரண அவத்தை, 2. காரிய அவத்தை என இருவகைப்படும்.

காரண அவத்தை, 1. கேவலாவத்தை 2. சகலாவத்தை 3. சுத்தாவத்தை என மூவகைப்படும்.

  1. கேவலாவத்தை :உயிர் ஆணவத்தோடு மட்டும தனியாக இருக்கும் நிலை. கேவலம்- தனிமை. இந்நிலையில் அறிவுப் பொருளாகிய உயிர் அறிவு என்பது ஒரு சிறிதும் இல்லாமல் கிடக்கும். உயிர் தன்னையும் உணராது, இருள் நிலை எனப்படும்.
  2. சகலாவத்தை :கருவி கரணங்களோடு சேர்ந்து உடம்பைக் கொண்டு உலகில் வாழும் வாழ்க்கை நிலை. ச + கலை – கலையோடு சேர்ந்தது. கலை – மாயை ஈண்டுத் தனு கரண புவன போகங்கள். மாயையின் காரியங்களாகிய இவை உயிரின் அறிவையும் செயலையும் விளக்கம் செய்யும். இவற்றால் ஆணவ மல மறைப்புச் சிறிது நீங்கும். மருள் நிலை எனப்படும்.
  3. சுத்தாவத்தை:உயிர் – கேவலம், சகலம் இரண்டு நிலையும் நீங்கி இறைவனைச் சார்ந்து இன்பம் துய்க்கும் நிலை. தெருள் நிலை எனப்படும்.

உயிர் உடம்போடு கூடி வாழும் நிலையில் நாள்தோறும் நடைபெறும் அவத்தைகள் காரிய அவத்தையாகும். 1. நனவு (சாக்கிரம்) 2. கனவு (சொப்பனம்) 3. உறக்கம் (சுழுத்தி) 4. பேருறக்கம் (துரியம்) 5. உயிர்ப்பு அடங்கல் (துரியாதீதம்) என ஐவகைப்படும்.

     “காணும் கண்ணுக்குக் காட்டும் உளம்போல்
      காண உள்ளத்தைக் கண்டு காட்டலின்
      அயரா அன்பின் அரன்கழல் செலுமே”   (சிவஞான போதம்-11)

காட்டும் உளம்போல் என்பதனைக் காட்டிக் காணும் உளம்போல் எனக் கொண்டு பொருள் செய்ய வேண்டும். கண்டு காட்டலின் என்பதனைக் காட்டிக் காண்டலின் எனக்கொண்டு பொருள் செய்ய வேண்டும். உள்ளம் – உயிர், அயராமை – மறவாமை, அயரா அன்பு – இறைவன் உதவியை மறவாமையால் தோன்றுகிற அன்பு.

  1. அயராமை (மறவாதிருத்தல்) – அறிவு,
  1. அன்பு செய்தல் – இச்சை,
  1. அரன்கழல் செல்லுதல் – செயல்.

முத்திக்காலத்தில் உயிரின் அறிவு, இச்சை, செயல் ஆகிய மூன்றும் சிவானந்தத்தில் மூழ்கியிருக்கும்.

  • To be continued.

 

***************************************************************

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.